Anandha Barathi
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - தாலப் பருவம் - பாடல் 10 - மூலமும் உரையும்
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - தாலப் பருவம் - பாடல் 10 - மூலமும் உரையும்

வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் அல்லது வள்ளலார் பிள்ளைத்தமிழ்:

இயற்றிவர் - மா.க. காமாட்சிநாதன்

எளிய உரை: ஆனந்தபாரதி



பாடல் 10:


அஞ்சிடு மாசையை அஞ்சவ டித்திடும்

அஞ்செனும் மந்திரமே

ஆறிட வெகுளியை நூறியொ ழித்திடும்

ஆறெனும் மந்திரமே

எஞ்சிடு வினைமேல் எழுதல் அடக்கிடும்

எட்டெனும் மந்திரமே

இருளற ஒளியுற இனிமைப யந்திடும்

இம்மெனும் மந்திரமே

தஞ்செய லற்றப ரஞ்சுடர் என்பது

தத்பத மந்திரமே

தருதுவ மாவது நியே; ஆமெனல்

தானசி* மந்திரமே

சஞ்சல மற்றிரு வென்றுபு கன்றவ

தாலே தாலே தாலேலோ

தனையுணர் கென்றருள் வள்ளல்பெ ருந்தகை

தாலே தாலேலோ.

* தத்துவமசி

எளிய உரை:

உயிர்களுக்கு அச்சத்தை தருகின்ற மாயையை முற்றும் தொலைத்து நல்வழிகாட்டுவது அஞ்செழுத்தாகிய "சிவயநம" என்னும் மந்திரம்.

கோபம் முதலிய தீய குணங்களை எல்லாம் முற்றும் ஒழித்து தூய்மையைத் தருவது
ஆறெழுத்தாகிய "சரவணபவ" என்னும் மந்திரம்.

சஞ்சிதவினையானது மேலும் எழுந்து பிறவிப்பிணியை தராவண்ணம் காப்பது, " ஓம் நமோ நாராயணாய" என்னும் மந்திரம்.

நமது மலமாயைகளின் இருள் நிலை அழிந்து போகும் படியாக உயிருக்கு இனிமையைத் தருவது "ஓம்" என்னும் மந்திரம்.

தன்செயல் முற்றும் அற்று, எல்லாம் பரஞ்சுடராகிய இறைவன் செயல் என்று உணரவைப்பது "தத்பதம்" என்னும் மகாவாக்கியம் ஆகும்.

நீயே இறைநிலை என்னும் நிலையை உணர்த்துவது "தத்துவமசி" என்னும் வேதவாக்கியம் ஆகும்.
மேற்கண்ட எல்லா மந்திரங்களும் அருட்பெருஞ்ஜோதியாகிய பதியையே குறிக்கும், எனவே மனத்தில் சஞ்சலம் ஒன்றும் இன்றி அப்பதியை சிந்தித்து இருப்பாயாக என்று எங்களுக்கு தெளிவளித்த அருட்கடலே வள்ளல்பெ ருந்தகை தாலே தாலேலோ.