Anandha Barathi
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - செங்கீரைப்பருவம் - பாடல் 09 - மூலமும் உரையும்
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் அல்லது  வள்ளலார் பிள்ளைத்தமிழ்:

நற்புலவர் மா.க. காமாட்சிநாதன் அய்யா அவர்கள்

எளிய உரை - ‍ ஆனந்தபாரதி

1. செங்கீரைப்பருவம்:

பாடல் 09:

திருவருளு மருதூரில் இராமையா பிள்ளையவர்
செய்திருப் பணியினாலும்
செந்தமிழ் நாடுமெஞ் சின்னம்மை யார்செய்த
தெய்வநன் நோன்பினாலும்
உருவளரும் உலகுயிகள் ஆற்றுந்த வத்தாலும்
ஊனுடம் பேந்திவந்தே
ஒளியுடம் பாக்கியிவ் வுலகெலாம் உய்ந்திட
உயர்வழியெ லாம் உரைத்தாய்
கருவளரும் வழியொழிய எண்ணிமனம் நையுமவர்
கண்ணினீர் தன்னின் மூழ்கிக்
கருணையொடு தோன்றிநின் றஞ்சிடே லென்றுகை
காட்டுங் கருணை வடிவே
தெருவளருஞ் சென்னைசேர் திருவருட் பிரகாச
செங்கீரை யாடியருளே
சிதம்பரந் திருராம லிங்கநற் றேசிக
செங்கீரை யாடியருளே.



எளிய உரை:

திருவருளால் மிகச்சிறந்து செழிப்புடன் விளங்கும் திருமருதூர் சீலர் இராமைய்யா அவர்கள் செய்த தெய்வத் திருப்பணியின் புண்ணியத்தாலும்,

செம்மையாம் ஒழுக்கம் நிறைந்த இந்த தமிழ்நாட்டின் தெய்வப் பெண்ணாம் சின்னம்மையார் மேற்க்கொண்ட்ட கொல்லாமை, பசிதவிர்த்தல் முதலிய நோன்பினாலும்,

வளர்ச்சி என்னும் மேன்மைத்தன்மை உடைய உலக உயிர்கள் தொடர்ந்து முயன்று ஆற்றிய பெரும் தவத்தின் பலனாகவும்,

இராமலிங்கப்பெருமானாரே! நீர் இந்த உலகத்திற்க்கு ஊனுடம்போடு வந்து, பிறகு இந்த ஊனுடம்பை, அழியாத ஞானதேகமாக மாற்றும் வழியை எம்போன்ற சிறுமையோர்க்கும் நின் கருணையால் உரைத்து அருளீனீர்,

இப்பிறவி என்னும் துன்பமாம் கருப்பையில் கிடந்து நாம் துயர் உருவது தகுமோ ?என்று எண்ணி இறைவனின் திருவடிகளை உண்ணி உவந்து கண்ணீர் பெருக்கும் அன்பர்களின் கண்ணீரீல் மூழ்கி, பிள்ளாய் "நீ அஞ்சற்க" என்று அபயம் செய்து அருளும் கருணை வடிவானவரே!

விரிவடையும் தகுதியை உடைய சென்னையில் இருந்து அன்பர்களுக்கு அருளிய பெருமானே நீர் செங்கீரை ஆடி அருளுக!

சிதம்பரம் திருராமலிங்கம் என்னும் இயற்பெயரையுடைய‌ நல்தேசிகனே! நீர் செங்கீரை ஆடி அருளுக!