Anandha Barathi
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - சப்பாணிப் பருவம் - பாடல் 3 - மூலமும் உரையும்
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - சப்பாணிப் பருவம் - பாடல் 3 - மூலமும் உரையும்

வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் அல்லது வள்ளலார் பிள்ளைத்தமிழ்:

இயற்றிவர் - புலவர் மா.க. காமாட்சிநாதன் அய்யா அவர்கள்

எளிய உரை: ஆனந்தபாரதி

பாடல் 3:

திருஅருட்பாவின் பெருமை:

பொங்கிடு மின்பந் தங்கிடு சொல்லணி
பொருளணி கள் பலவும்
பொற்புட னிற்பநி றைந்தசெ ழுஞ்சொல்
பொதிந்த அருட்பாடல்
மங்கல மொழியே எங்கும் நிறைந்திட
வந்ததி ருப்பாடல்
வாக்கிது போலினி துண்டுகொ லோவென
வந்தித் திடுபாடல்
துங்க மிகுந்தவர் உள்ளுதொ றின்பந்
துள்ளுத மிழ்ப்பாடல்
சொன்னவ ருள்ளத் தின்னலொழித்துச்
சுகமே தருபாடல்
கொங்குல வும்பா மழைபொழி கொண்டல்!
கொட்டுக சப்பாணி!
குலவும் அருட்பிர காசப் பெருமலை
கொட்டுக சப்பாணி.

கொங்கு = இனிமை, தேன், மணம்



எளிய உரை:

பொங்கிப் பெருகுகின்ற இன்பங்கள் பலவும் தங்கும்படி, தமிழுக்குரிய சொல் அணி, பொருள் அணி முதலிய இலக்கிய இலக்கண வளங்கள் மிக நிறைந்தும், செழுமையான சொற்கள் பல நிறைந்தும், இறைவனின் நல்லருளை பெற்றுத்தரும் பாடல்களே திருஅருட்பா பாடல்கள், அம்மட்டோ?

மங்கல மொழியானது எங்கும் நிறைந்து வளம் பொருந்திட வந்து விளங்கிடும் பாடலே திருஅருட்பா, அதோடு கூடவே,

இப்படிபட்ட அருள் நிறை வாக்கு இனி யார் உரைக்கக்கூடும் என்று கல்லாரும் கற்றவரும் வியந்து கூறும்படியாக வந்து உதித்த திருப்பாடல்களே திருஅருட்பா, பின்னும்,

மனத்துயரம் கொண்ட மக்கள் இத்திரு அருட்பாவினை மனத்தில் நினைக்க அந்த மனத்துயரத்தை மாற்றி அக்கனமே இன்பம் தரும் மருத்தே இத் திருஅருட்பா, அதனோடு புறஇன்னல் மட்டுமன்றி அக இன்னல்களையும் (ஆணவம் முதலிய குற்றங்கள்) நீக்கி பரமானந்த சுகம் தரும் பாடல்களே திருஅருட்பாவாம்,
 
தேன்போன்ற இத்திருஅருட்பாவினை எமக்கு மழையாக பொழிந்த அருள் மேகம் போன்றவரே! சப்பாணி கொட்டுக!

எவ்விடத்தும் இயங்கும் அருட்பிரகாசப் பெருமலையே சப்பாணி கொட்டுக!