www.vallalarspace.com/durai
ஆறாம் திருமுறை 004. பதி விளக்கம் என்ற அருட்பதிகத்தின் அரும்பொருள் சுருக்கம்
சராச்சரங்கள்அல்லது இயற்கையில் தானேஅவர்அஆறாம் திருமுறை / 4. பதி விளக்கம்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்

1. அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப்
பகுதிகள்அங் கனைத்தினுக்கும் பதங்கள்அனைத் தினுக்கும்
இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும்
எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி எவைக்கும்
சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

2. வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா
வகுக்குமடி வெளிகளெலாம் வயங்குவெளி யாகி
எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல்
இசைத்தபர வெளியாகி இயல்உபய வெளியாய்
அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய்
அமர்ந்தபெரு வெளியாகி அருளின்ப வெளியாய்த்
திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

3. சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம்
தத்துவங்கள் விளக்கமெலாந் தருவிளக்க மாகி
நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி
நிலைத்தபரா பரைவிளக்க மாகிஅகம் புறமும்
பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப்
பெருவிளக்க மாகிஎலாம் பெற்றவிளக் கமதாய்ச்
சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

4. இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
இன்பம்உயிர் இன்பம்முதல் எய்தும்இன்ப மாகித்
தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம்
சத்தியப்பே ரின்பம்முத்தி இன்பமுமாய் அதன்மேல்
நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம்
ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

5. எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
எல்லாந்தான் ஆனதுவாய் எல்லாந்தான் அலதாய்ச்
சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும்
துணிந்தளக்க முடியாதாய்த் துரியவெளி கடந்த
வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும்
மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய் அணுவும்
செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

6. அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய்
மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை
மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த்
துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

7. அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள்
ஆனஎலாம் இடங்கள்எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும்
கொள்வதற்கே இடங்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்தவெளி யாய்அதுவும் கடந்ததனி வெளியாம்
ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

8. பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப்
பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய்
இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
நித்தியமாய்ச் சத்தியமாய் நிற்குணசிற் குணமாய்
ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

9. இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்
இலேசமதாய் எண்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்
பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி
விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பே ரொளியாய்
உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

10. ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம்
அணியோகா னந்தம்மதிப் பருஞானா னந்தம்
பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்
பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்
இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
ஊற்றமதாம் சமரசா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

11. வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம்
விதித்திடுமற் றவைமுழுதும் ஆகிஅல்லார் ஆகி
உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

12. இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

13. ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.


மெய்யன்பர்களே, இப்பொழுது, இந்தப் “பதிவிளக்கம்” - என்கின்ற அருட்பதிகக்தின் அரும்பொருளை அருளால் ஆர்ந்து பார்க்கும்போது நாம் அறிந்துகொள்வது யாதெனில், அனந்த காலம் நெடுங்குகைகளில் நுழைந்து தனித்திருந்து தவம் இயற்றினாலும், கோடான கோடி ஏடுகளில் புகுந்து ஆய்வுசெய்தாலும் காணக்கிடைக்காத தனிப்பெருங்கடவுளை, நம் கருத்திலே அங்கையிற் கணிபோல் கண்டுகளித்திட, அருளால் இந்த அருட்பதிகம் அருளப்பட்டுள்ளது என்பதே!

"அகரமுதல் அத்தனைக்கும் ஒளிவழங்கும் எல்லாம்வல்ல, எல்லாம்முடைய தனிப்பெருங்கடவுளாகிய இயற்கையுண்மை வடிவினரே அண்டபிண்ட சராச்சரங்கள் அத்தனைக்கும் அருட்சத்தாக இருக்கின்றார்." - என்கின்றது இந்த அருட்பதிகம். அந்த அருட்சத்தின் சொரூபமானது அருளின்பத் தனிஇயற்கை உண்மை வெளியாம்.

இதுவே, நாம் அறிந்த, அறியாத அனைத்து வெளிகளும், பூதங்களும் மற்றும் எண்கடந்த தத்துவங்களும் தோன்றுவிக்கப்பட்டு விளக்கம் பெருவதற்கு மகாகாரணமான இயற்கை விளக்கமாகிய அருட்சித்தாகவும் இருக்கின்றது. இந்த அருட்சித்துதான் அருட்சத்தின் ரூபமாம்.

"இந்த அருட்சத்தான சுத்த அருள்வெளியில் அருட்சித்தான சுத்த அருள்விளக்கமானது எல்லா இன்பானுபவங்களும் பொருந்தித் திடம்பெற ஓங்கும் இயற்கை உண்மைத் தனியின்ப மயமாகவும் இருக்கின்றது." - என்கின்றது இந்த அருட்பதிகம். இந்த இயற்கையுண்மைத் தனியின்பமயமானது அருட்சத்தின் சுபாவமாகும்.

இந்த அருட்சத்தின் சொரூப-ரூப-சுபாவம் எக்காலத்தும் எவ்விடத்தும் எல்லாவற்றிலும் வியாபகமாய் நீக்கமற நித்தியமாய் இருப்பதே இயற்கையுண்மை அருட்பூரண அகஅனுபவமாம்.

எல்லாம்வல்ல எல்லாம்முடைய இயற்கை உண்மையாகிய அருட்சத்தின் சொரூப-ரூப-சுபாவ-வியாபக அனுபவத்தை அருளால் உள்ளதை உள்ளபடி விவரிக்கின்றது இந்தப் பதிவிளக்கமெனும் அருட்பதிகம்.

சுத்த அருள்வெளியாய், சத்திய அருளறிவு ஒளியாய், நித்தியப் பேரின்பமயமாய் இருக்கின்ற எல்லாம்வல்ல எல்லாம்முடைய அருட்பூரணர் மகாகாரணராகிய இயற்கையுண்மை வடிவினரே எண்கடந்த அண்டபிண்ட தேகங்களாகவும், உயிர்த்திரள்களாகவும், அவற்றின் பல்வேறு வடிவங்களாகவும், குணங்களாகவும், செயல்களாகவும் இருந்தாலும், அவர் இந்த எந்த ஒன்றும் இல்லாதவராகவும் இருக்கும் வல்லமை உள்ளவர் என்பதையும் படம்பிடித்துக் காட்டுகிறது இந்த அருட்பதிகம் நமக்கு!

“இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள்
ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார்
வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய்
உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.” - என்கின்றது இந்த அருட்பதிகம்.

இங்கே, தனிப் பெருங்கடவுளானவர், “இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார்” – என்பது, இயற்கையிலேயே நிர்மலமானவர் அல்லது அதிபரிசுத்தமானவர் என்பதாகும்.

அந்த அதிபரிசுத்தமானவர் சுத்த சிவானந்தசபை தனிலே ஓங்குகின்றார் என்கின்றது. இதில் சுத்த சிவானந்தசபை என்பது அதிபரிசுத்தமாகிய நமது ஆன்ம சிற்சபையேயாகும். அந்த நம் அதிபரிசுத்தமாகிய ஆன்ம சிற்சபையைத் "திருச்சிற்றம்பலம்" - என்னும் அருட்பதத்தாலும் அருளாளர்கள் குறிப்பிடுவார்கள்.

அந்த நம் திருச்சிற்றம் பலத்தே ஓங்குகின்ற ஒன்றான தனிப் பெருங்கடவுளானவர்;

“ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
ஒன்றுறுதாம் ஆகிநின்றார்!” - என்கின்றது இந்த அருட்பதிகம்.

இதில்,

“ஒன்றிரண்டு” - என்பது “சத்-சித்”,

“உருஅருவம்”- என்பது “அரும்பெருஞ்சோதி”,

“கனல் மதி” - என்பது “ஞானாக்கினி அல்லது அருளறிவு”,

“யாவும்இலார்” - என்பது “சுத்த அருள்வெளி”,

“யாவும்உளார்” - என்பது “எல்லாம்முடையவர்”,

“யாவும்அலார்” - என்பது “தோற்றுவிக்கப்பட்ட தத்துவ-தத்துவி, அல்லது சத்தி-சத்தரான எந்த ஒன்றும் அவர் அல்ல” - என்பதாகும்,

“ஒன்றுறுதாம்” - என்பது “அவர் இயற்கையில் தானே இருந்து விளங்குகின்ற, அல்லது இயற்கையில் தானே விளங்கி இருக்கின்ற தனித்த ஒன்றானவர்” – என்று,

அருளால் அறிந்துகொண்டு, நம்முடைய இயற்கையுண்மை ஆன்மானுவப் பேரின்பப் பெருலாபம் பெற்றிட விரைந்து முயலுவோமாக!

நன்றி, வணக்கம், சுபம்!

வளமோடு இன்புற்று வாழ்க!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

அன்புடன்,
உங்கள் அன்பன் துரை சாத்தணன்