www.vallalarspace.com/durai
நேற்றைய (12.03.2017) வள்ளலார் மிஷன் (USA), நேரலை நிகழ்வில் திருச்சியிலிருந்து அருட்செல்வர் இரா.கோகுலகிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்து கொண்ட நற்செய்திகளின் சுருக்கம்!
தஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

அருள் நிலையில் எம்மார்க்கமும் சன்மார்க்கமேயாம்
அருள் மிகுதயவுடையார் எல்லோரும் சன்மார்க்கிகளே
அருள் நாடும்நம் சன்மார்க்கிகள் ஒருசிலரேயானாலும்
அருள் இணைப்பில் இணைந்திட அகிலமிதுஓரணுவே!

உயிர்வாழ்வது உணவைச் சதாஅளவுகடந்து உண்பதற்காகஅல்ல
உயிர்நிலைக்க வாழ்வதற்கு அரைவயிற்றுணவும் அதிகமேஅறிக
உடல்செழிக்க நம்வயிற்றில் காற்றோடுநீருக்கும் இடம்வேண்டும்
உடல்நிலைக்கும் உயிர்களிக்கும் உண்ணும் சத்துணவைஅறிகவே.

இல்லறமே சீவகாருண்யத் தவத்திற்கு நல்லாசிரமம்
இல்லாலோடு இன்புற மிதபோகமே சாலச்சிறந்ததாகும்
இல்லாலோடு இருவாரத்திற்கு ஒருஉடலுறவே உத்தமம்
இல்லாலோடு இருக்கையிலும் இமைநடுவே மனம்வை.

சொந்தபந்தமெலாம் முன்செய்த கர்மாவால் முளைத்ததுவே
சொந்தபந்தமெலாம் கர்மாமுடிவில் கானலின் அனுபவமாகும்
சொந்தபந்தமெலாம் மனஞ்சூழ் மாயையால் மலர்ந்துஉதிரும்
சொந்தபந்தமெலாம் அருளால் ஆனதுவே கனிந்தநற்சொந்தம்.

தூக்கம்நம் இறப்பிற்கு அன்றாட ஒத்திகையே
தூங்கியெழ இயலாதாரே இறப்பிடம் தோற்றவர்
தூங்காமல் தூங்கி மரணதூக்கத்தை வெல்கவே
தூங்குமுன் எழுமுன் திருவருளையே நினைமின்.

தன்னை எப்போதும் மதியாது இருந்தால்
தனக்காக எப்போதும் எதுவும் கேளாதிருந்தால்
தன்னை நட்டம்செய் வெட்டிப்பேச்சை விடுத்தால்
தன்னகத்தில் அருட்சக்தி சுடர்பரப்பும் காண்கவே.

தானும் தன்சுற்றச்சூழலும் திருவருளே என்றறிந்திட்டால்
தனக்குறும் துன்பம்நம்மை நெறிபடுத்தவே புரிந்திட்டால்
தனக்கும் தம்பதிக்கும் பேதமில்லாததைத் தெரிந்திட்டால்
தன்னகத்தே ஒருவருக்கு ஒருபோதும்பயமிலே களிக்கவே!

(தமக்கும் தம்தலைவனுக்கும் பேதம்காண்பது அறியாமையே
தமக்கும் தலைவனுக்கும் பேதம்காண்பது அனுபமின்மையே
தமக்குள் தலைவன் தலைவனுள்தாம் காண்பதேஅகவுண்மை
தமக்கும் தலைவனுக்கும் அபேதம்ஆகிட அகலுமேநம்சிறுமை!)

“அறையாத மிகுபெருங்காற் றடித்தாலும் சிறிதும்
அசையாதே அவியாதே அண்டபகி ரண்டத்
துறையாவும் பிண்டவகைத் துறைமுழுதும் விளங்கத்
தூண்டாதே விளங்குகின்ற ஜோதிமணி விளக்கே
மறையாதே குறையாதே களங்கமும் இல்லாதே
மயக்காதே பனிக்காதே வயங்குகின்ற மதியே
இறையாய்எவ் வுயிரகத்தும் அகப்புறத்தும் புறத்தும்
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.” – ஆ.தி - அருள்விளக்க மாலை

தன்சுற்றங்களின் குற்றங்களை விசாரியாது இருப்பார்கள்
தன்நலத்தில் மோசம்செய்தவன் நாசமாவான் அறிவார்கள்
தன்போலப் பிறவுயிர்நேசமே தன்பாவநாசம் தெரிந்தார்கள்
தன்முன்வினையும் பின்வினையும் தீண்டாது இன்புறுவரே!

தவங்களிலே சிறந்தது தானதவம்! இந்தத்தான
தவத்தினும் உயர்ந்தது ஞானதவமே! இதில்தான
தவம்என்பது சீவகாருண்யம்! உயர்மிகும் ஞான
தவம்என்பது சத்துவிசாரமே! அறிந்து ஓங்குகவே!

தானதவமே உலகத்தவங்களிலே சிறந்தது செயல்படுவோமாக
தானதவமே உலகுயிர்களில் நம்மைக்காணும் ஐக்கியானுபவம்
தானதவமானது எவ்வுயிர்க்கும் இரங்கிச்செய் சீவகாருண்யமே
தானதவமாகிய சீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோலாம்.

(தவமென்பது வாசியோகமென வாசித்துமதியிழந்தார் கோடிக்கோடி
தவமென்பது ஊனையுருக்கி உள்ளொளிபெருக்கலெனக் கோடிக்கோடி
தவமென்பது தன்னையறிவதெனக்கூவி ஆவிதளர்ந்தார் கோடிக்கோடி
தவமென்பது தன்னுயிர்போல எவ்வுயிர்க்கும்இரங்குதலே அறிகிலாரே!)

“உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும் புற்றெழுந்தும்
ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப்
பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய
பயல்களினும் சிறியேற்குக் கிடைத்த பெரும்பதியே
நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே
நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான்
எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே
இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே.” - ஆ.தி - அருள்விளக்க மாலை

“மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
விளங்கும் உதிணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே.” ஆ.தி - திருவருட் பேறு

"என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே "

ஞானயோகமே தவங்களிலே உயர்ந்தது தெரிந்திடுவோம்
ஞானயோகம் மற்றதவம்போல் சாதனமல்ல சாத்தியமுகம்
ஞானயோகம் என்பது சத்துவிசாரமென்றே அறிந்திடுவோம்
ஞானயோகத்தின் முடிவானபலன் நிராசை அடைதலேயாம்.

தனித்தோ தனக்கு ஒத்தகருத்து உடையவர்களிடமோ
தன்னிலைக்கும் மேம்பட்ட பெரியோர்களிடமோ சதா
தயவுநெகிழ்வில் தடையறாது சத்துவிசாரம் செய்தால்
தனதுஅஞ்ஞானமகல ஞானயோக நிராசை ஏற்படுமே.

நிராசை வந்தவர்க்கு நிர்மலம் வாசிக்கும்
நிர்மலம் வாய்த்தலே முத்திக்கு மூலமாம்
முத்திநிலை கண்டும் முயன்றால் சித்தியே
சித்திநிலை கண்டால் சித்தனான நித்தனே!

(ஒத்தகருத் துடையோர் உளமிகும் அன்போடு
ஒருமித்துப் புரிகின்ற நல்லசத்து விசாரத்தால்
சித்தசுத்தி சித்திக்கும் திடதேகமும் நீடிக்கும்
சுத்தநற்சூடு நம்முள்ளே ஊற்றெழு மதனாலே.)

புறம்விட்டு ஓடியொதுங்குவது சன்மார்க்கம் அல்லவே
புறத்திலே தண்ணீரில் தாமரைஇலைபோல ஆகனுமே!
அகத்திலே பற்றிய தம்பற்றையெலாம் பற்றறவிடுத்து
அருளம்பலம்பற்றி அனகமாய் ஓங்கலே சன்மார்க்கம்.

“மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை
எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்
இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.” – ஆ. தி. ஞானசரியை

“கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.” - ஆ. தி . ஞானசரியை

மெய்மை உரைப்பதன்றி நானிங்கு வேறுகருதியே
பொய்மை உரைக்க ஒருபோதும் நினைந்தறியேன்
வாய்மையே உலகை வெல்லும் மென்றறிந்தேநற்
தூய்மை பொருந்திய சுத்தசன்மார்க்கர் வாழ்கவே!

அருட்செல்வர் இரா.கோகுலகிருஷ்ணன் ஐயா
அவர்களுக்கு எங்களின் அன்புகெழமிய உயர்மிகும்
நன்றிகளைப் பணிவன்புடன் சமர்ப் பிக்கின்றோம்
நல்வளமெலாம் பெற்றுஅவர் இன்புற்று வாழ்கவே!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்
வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா
Vallalar Universal Mission, USA
vallalaruniversalmission@gmail.com
www.facebook.com/duraisathanan
www.vallalarspace.com/durai
2 Comments
ஸ்வாமி  இராஜேந்திரன்
அய்யா, “சத்துவிசாரத்தின் சிறப்பு குறித்த பதிவிற்கு நன்றி. சத்துவிசாரத்தினை எப்படிச் செய்வது என்பது குறித்து திரு கோகுலகிருஷ்ணன் அவர்களின் விளக்கம் இன்னும் இருந்தால் அதனை இங்கே பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி!
Thursday, March 16, 2017 at 21:12 pm by ஸ்வாமி இராஜேந்திரன்
Durai Sathanan
நன்றி ஐயா. அவரது ஒலிப்பதிவை விரைவில் வெளியிடுகிறோம். வளமோடு இன்புற்று எக்காலத்தும் வாழ்க! அருட்பெருஞ்ஜோதி...
Friday, March 17, 2017 at 06:03 am by Durai Sathanan