Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருக்கதவம் திறத்தல்....சுவாமி சரவணானந்தா.
திருக்கதவம் திறத்தல்..பாடல் எண்.2. உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.

மணிக்கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே
   மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ
கணிக்கறியாப் பெருநிலையில் என்னோடுநீ கலந்தே
   கரைகடந்த பெரும்போகம் கண்டிடச்செய் யாயோ
தணிக்கறியாக் காதமிகப் பெருகுகின்ற தரசே
   தாங்கமுடி யாதினிஎன் தனித்தலைமைப் பதியே
திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே
   சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

விளக்கம்.
     இச்செய்யுளின் முடிந்த கருத்தும் முன்னதையே குறிப்பதாகும். ஆனால் இதில், சொல் நயமும், அற்புத அலங்கார வாசக அமைதியும், உயர் பொருட் செறிவும் கண்டு கண்டு, ஓதி ஓதி பயன் கொள்ளத் தக்கனவாய் அமைந்துள்ளதை, ஆய்ந்து தெளிந்து கொள்ளவே சற்று விரிவுரை செய்யப்படுகின்றது.

     இதில் நம் அருட்பெருஞ்ஜோதி நடன பதியைத் தான், சிவம் ஆக, எல்லாக் கலைகளையும், தன்னில் அருகி ஒடுங்கிக் கிடக்கச் செய்தும், கால காலத்தே எக்கலையையும் வெளிப்படுத்திப் பக்குவான்மாக்களின் சிக்கலை எல்லாம் அறுத்தொழிந்து, அருள் பாலிக்கும் ஆண்டவர் ஆகவும் குறிப்பிடுகின்றார் நம் வள்ளற் பிரான்.

     இதில் வந்துள்ள வேண்டுகையும், முன் போன்றதே எனலாம். வண்ணமும் வனப்பும் வேறானாலும், சுட்டும் பொருள் வேறாவதில்லை.

     மணிக்கதவம் திறக்க வேண்டப்படுகின்றது முதற்கண்.   இது, மனோன்மணியொளிர் நுதற்  கண்ணைத் திறக்கப் பெறுதலேயாம். தயா குருவின் அருளாலேதான் இக்கண் திறக்கப்படுவது. அந்த குருவும் உள்வளர் அருட்பெருஞ்ஜோதியே ஆகும். இதுவே எவர்க்கும், எக்காலத்தும் சொந்த குருவாம். இந்த மணிக்கதவம் திறக்கப் பெற்றுக் கொண்டால், உள்ளொளிக்கும் நமக்கும் இடையில் இல்லாதே இருக்கும் மாயா மறைப்புத் திரைகள் யாவும் ஒழியும். அப்போது, உள்ளோங்கு அருட்பெருஞ் ஜோதியின் மாற்றறியா பொன்னொளிக் காட்சியால் மாட்சி பெறுவோம்.

     என்ன மாட்சி என்றால், தனிப்பெருங்கடவுளின் பெருமை எந்த விதத்திலும் அறியக் கூடாததாய் உள்ளதை, அதோடு கலந்து நின்று அனுபவிப்பதால் மட்டும் உணரக்கூடிய பேரனுபவப் பெரும்போகமாய் இருக்கின்றதாம். அவ்வனுபவத்தை இப்போதே எனக்கு அருள்வாயாக. ஏனெனில், இது சமயம் அந்தப் பேரின்பப் பேராசையாம் தெய்வக் காதல் என்னில் பெருகிப் பொங்கி எழுகின்றது; இதனை என்னால் அடக்கவும் முடியாது...தாங்கவும் முடியாது..ஆகவே, எனக்கு இப்பவே கருணைபாலி, தயவு செய், அப்படிச் செய்யத் தனித்தலைமைப் பெரும்பதி ஆகிய உன் ஒருவனால் மட்டும்தான் முடியும் என்பதை நின் தனிப்பெருந்தயவே உணர்த்த உணர்ந்து கொண்டிருக்கின்றேன்.

     மற்றபடி நின் தனிப்பெருங்கருணையால் பெற வல்ல எந்த ஒரு சித்திப்பேறாம் கலாவல்லப சித்தி வாழ்வும் நான் விழைகின்றேனில்லை.

     இப்படித்தான் நாமும் அக ஞான சபைக்கண் உற்று அருட்பேரின்பப் பேறு பெற்று வாழ வேண்டும் என்பதே திருவுள்ளமாம்.
20150325_085241.jpg

20150325_085241.jpg