Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.33க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
பேர் வாழ் ஒற்றி வாணர் இவர் பேசா மெளன யோகியராய்ச்
சீர்வாழ் நமது மனையினிடைச் சேர்ந்தார் விழைவென் செப்புமென்றேன்
ஓர்வாழ் அடியும் குழலணியும் ஒருநல் விரலால் சுட்டியும்தம்
ஏர்வாழ் ஒருகை பார்க்கின்றார் இதுதான் சேடி என்னேடீ.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

        கடவுளுக்கு நித்தியமான ஒரு குறிப்பிட்ட வடிவமும் இல்லை. அதற்கே உரிய பெயரும் இல்லை என்பர். ஆனால் இப்போது, அவர் அந்த ஒற்றியிலே, பிச்சாடணமூர்த்தி என ஒரு புகழ் பொருந்திய பேரும் வடிவும் கொண்டு வந்து எதிர் நிற்கின்றார். மெளன விரதம் பூண்ட ஒரு யோகியாய் விளங்குகின்றார். நமது செல்வ மனை இடத்தே அடைந்து நிற்கின்றார். “உங்களுக்கு என்ன தேவை, சொல்லுங்கள்” எனக் கேட்கின்றாள் ஆன்மச் செல்வி. அவர் வாய் திறவாமலே, தனது திருவடியையும், அவளது தலையில் அணிந்துள்ள உச்சி ஆபரணமாகிய சில்லையும் சுட்டிக் காண்பித்து விட்டு, தன் திருக்கரத்தை விரித்துக்காட்டி அதனை நோக்குகின்றார்.

     ஆன்ம பக்குவம் ஏற்பட்டுள்ள காரணத்தாலே, இத் தருணம், இப்படி நம் வாயிலில் வந்து பேசாமல் நிற்கின்றார். அவர் என்ன வேண்டுகிறார் என்று கேட்டால், அடியையும், சில்லையும் சுட்டிக் காட்டினார். அடிசில் (அதாவது) சோறு, அன்னம் வேண்டும் என்ற குறிப்பு.  அதனைத் தனது ஏர்வாழ்க்கையில் இடும்படி சாடை செய்கின்றார்.

        ஆன்மத்தலைவி வாழிடம் இதயம்; இது, கடவுள் சீர் அல்லது புகழ் குணம் வெளியாம் இடமாகக் கூறுவர். இவளது பக்குவ வசத்தால், பேசாப் பிச்சை ஆண்டி தோன்றி, தன் அடியையும், அவள் தலைச்சில்லையும் சுட்டிவிட்டு, தனது கரபாத்திரத்தில் இடும்படியாகக் குறிக்கின்றார்.

     அக அனுபவ வாழ்வில், ஆன்மா மேனிலையில் திகழும்போது, அவரது திருவடியும், தன் தலையும், பிரிவறப் பொருந்தி, தாள்-தலை....தாடலை ஆகித் திகழ்வதை உணர்த்துகின்றார். அந்த தாடலை ஆகிய இறை அனுபவம் கைவரப் பெற வேண்டும் என்பது குறித்தே தனது கையை நோக்குகிறார்.

          ஜீவான்ம சக்தியாகிய மன அறிவுதான் இம்மனிதப் பிறப்பின் சிறப்புக்குக் காரணம். அந்த மன அறிவோடு கூடி ஜீவான்மா விளங்கும் இடம் இதயமாக இருக்கின்றதால், அது சீர்வாழ் இடமாகக் கூறப் பெற்றுள்ளது. அடுத்து, ஆண்டவர் திருவடி இருக்கிறதே அதுதான் எல்லோரையும் உய்வு பெற்று உலவா இன்பிலே வாழச் செய்வது என்ற காரணத்தால் “ஓர் வாழ் அடி” என்று மூன்றாம் அடியில் அமைந்துள்ளது. இவ்வளவு உண்மையும் நன்கு அறிந்து அடைந்து வாழ்வது தலை இடத்திருந்துதான் அமைவது என்ற கருத்தையுணர்த்தவே ஏர் வாழ் கரம் என்று வெளியிடப் பட்டுள்ளதாம்.

            மனம், உண்மையில் மேனிலையில் கடவுள் அருட் சக்தியே. அருட் ஜோதியாகப் பிரிவற்றுள்ள ஆண்டவர்தானே கடவுளான்ம அணுவாய் தலைநடு விளங்கிக் கொண்டிருப்பது. அது உலகியலில் தோன்றி வாழ்ந்து அனுபவம் பெறவே ஜீவான்மாவாய் மன அறிவோடு தோன்றி இதயத்தேயுள்ளது. அருட் பக்குவம் அடையும் போது மனம் மணியாகிப் புருவநடு மனோன்மணியாய், ஜீவான்மாவோடு இரண்டறக் கூடி விளங்குவது.  பின் நிறையருளால், சிர நடு சிற்றம்பலத்தே இறையருட் ஜோதி மயமாய், கடவுள் என்றும், ஆன்மா என்றும், தான் என்றும் பிரித்தறியற்கில்லா ஒரு வடிவாய்த் திகழ்வது இதுவே முடிந்த அருட்பெருநிலை. இந்நிலை பொருந்தி நித்தியமாய் வாழ்வதுதான் சுத்த சன்மார்க்க நித்தியானந்த வாழ்வு ஆகும்.
New Doc 2018-07-06 (4)_1 (1).jpg

New Doc 2018-07-06 (4)_1 (1).jpg