Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.40க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
செங்கேழ்க் கங்கைச் சடையார்வாய் திறவார் ஆக ஈண்டடைந்தார்
எங்கே இருந்து எங்குஅணைந்ததுகாண் எங்கள் பெருமான் என்றேன்என்
அங்குஏழ் அருகின் அகன்றுபோய் அங்கே இறைப்போ(து) அமர்ந்தெழுந்தே
இங்கே நடந்து வருகின்றார் இதுதான் சேடி என்னேடீ.............             (இங்கிதமாலை)

----------------------------------------------------------------------------------------------------------------------

         இங்கே அருட்ஜோதி அண்ணல் வெண்ணிற கங்கை சூடிய செம்பொருட் சிவமாகப் பகரப்படுகின்றார். இவர் இன்று பிச்சைப் பெருமானாக ஈண்டு எழுந்தருளியுள்ளார். மெளன நிலையில் இருக்கின்றார். இப்படி இருக்கும் இவர் ஆதியில் எங்கே எப்படி இருந்தது, இங்கு எந்தக் காரணத்திற்காக வந்துள்ளது என்று கேட்கப்படுகிறது. இதற்கு அவர் கொடுக்கும் பதில் சொல்லால் அல்ல, தொடுக்கும் செயலால் காணலாகின்றது. அந்த பதில் செயற் பொருளைக் காண்போம்.

        தலைவியின் முன் இருந்த அவர் ஏழு அடி அகன்று சென்று, அங்கே சற்றே தங்கி இருந்து விட்டு, மறுபடியும் எழுந்து நடந்து வருகின்றார். ஒற்றி இருந்து வருகிறேன் என்பது கருத்தாம்.

         இதில் பிரபஞ்சப் படைப்பின் ஆரம்ப நிலையிலிருந்து இறை நிறையுண்மை வெளியீட்டின் பொருட்டு நிகழ்ந்து வரும் அருள் நியதிச் செயல்முறை அறிய வருகின்றது. கடவுள் இயல் உண்மை நிலையைப் பற்றி இப்போது நம்மில் ஏற்பட்டுள்ள விளைவினைக் கொண்டுதான் அறியலாகின்றது. இந்த பக்குவ ஆன்மத் தலைவி, பிச்சைப் பெருமானை எங்கேயிருந்து, எங்கே அடைந்தது என்று கேட்கிறாள். அதற்கு அவர் ஏழடி அகன்று போய், அங்கு சிறிது இருந்து விட்டுத் திரும்ப வருகிறார். இதன் கருத்து என்னவெனில், கடவுள் உண்மை, ஆதியில் சூன்ய நிலையிலிருந்து, பின்னர் அருட்செயல் வெளிப்பட ஆரம்பித்து தொடங்கி, ஜடமூட நிலையைவிட்டு, ஓரறிவுத் தாவரப் பிறவி முதல், மனிதப் பிறப்பின் ஆறாவது மன அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட ஏழாவதாகிய கடவுள் ஆன்ம நிலைக்கு வந்துள்ளதாய் இந்த ஆன்மத் திருவொற்றியில் கண்டுகொள்ளப்பட்டிருக்கின்றது. இதனையுணர்த்தத்தான், அப்படி ஏழடி சென்று ஒற்றிப் போய் இருந்து, வந்து காட்டினார்.

         இந்தப் பக்குவ மனிதப் பிறப்பில், கடவுள் உண்மை அனுபவப் படவே எல்லாம் நிகழ்ந்துள்ளதாம். ஒன்றாகப் பிரிவற இருக்கும் நம் பதி உண்மை, ஆன்ம சிற்றணு வடிவாய் கருவிலே தோன்றி இந்நிலவுலகில் பிறந்து வந்து, தன் ஞானம் பெற்று அகநிலையுற்றுக் காணும்போது, இம்மேனிலையில் விளங்கும் கடவுள் பூரணமாய்த் திகழக் கீழ் நிலையிலே ஆறு ஆதாரங்களிலே ஓர் ஒரு திருவடி உண்மையைக் காட்டி முடிவிலே, இந்த ஏழாம் நிலையில், ஆறும் கடந்த ஏழாம் திருவடி அனுபவத்தால் அந்தக் கடவுள் நிறை இன்பம் அடைவிக்க உள்ளதை அறிவிக்கப்படுகின்றோம். இந்த நிலையில்தான் கடவுள் ஆன்ம அனுபவம் திருவொற்றியில் கண்டு கொள்ளப்படுவதாக இங்கிதமாய் இசைக்கப்பட்டுள்ளது, இந்த இங்கித செய்யுளிலே.
New Doc 2018-07-06 (4)_1 (1).jpg

New Doc 2018-07-06 (4)_1 (1).jpg

Thangaraj Aru
ஐந்தறிவு உயிர்களுக்கு மேலான ஆறாவது அறிவு படைத்த நாம் ஏழாவது தன்மையதான கடவுள் நிலையை அடைவது எப்படி என்பதை ஆறாதாரத் தத்துவத்தை கடந்து ஏழாவது மேல் நிலையை அடைதல் மூலம் விளக்குகிறார்
Wednesday, August 29, 2018 at 02:43 am by Thangaraj Aru