Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
இங்கித மாலை பாடல் எண்.42க்கு உரை விளக்கம்...சுவாமி சரவணானந்தா.
பொன்னைக் கொடுத்தும் புணர்வுஅரிய புனிதர் இவர்ஊர் ஒற்றியதாம்
முன்னைத் தவத்தால் யாங்காண முன்னே நின்றார் முகமலர்ந்து
மின்னில் பொலியும் சடையீர்ஏன் வேண்டுமென்றேன் உணரச் செய்யாள்
இன்னச் சினங்காண் என்கின்றார் இதுதான் சேடி என்னேடி.                        (இங்கித மாலை)

----------------------------------------------------------------------------------------------------------------------

    கடவுள் எவ்வளவு பொன் பொருள் கொண்டும் கிடைக்கப் பெறார். திருவருளாலேதான் கிடைக்கப் பெறுவார். அப்படி அரிய பரம் பொருள், தனக்குரிய ஊராய், நம் திருவொற்றியாம் ஆன்மாவைக் கொண்டுள்ளார். ஆன்ம ஒற்றியில் மறைந்திருப்பவர் இன்று நம் தவப்பயனால் நம் முன்னாலே பிச்சை எடுப்பவனாய் வந்து நிற்கக் காண்கின்றோம்.

     ஒவ்வொரு ஆன்மாவையும், ஆதிமுதல் அருட் ஜோதியே சூழ்ந்திருந்து, அறிவுப் படிகளில் மேலே மேலே ஏற்றி வந்துள்ளது, தன்னை அறியாமலே, ஜோதிச் சூழலில் இந் நெடுங் குறிப்பிட்ட ஆன்மா, வாழாமல் வாழ்ந்து வந்திருப்பதே அதன் முன்னை நெடுந் தவத்தால் விளைந்த பலனாய் இஞ்ஞானப் பிறப்பில் இப்பிச்சைப் பெருமானைக் காணும் பாக்கியம் ஏற்பட்டுள்ளது.

     “கற்பங்கள் பல கோடி செல்லத் தீய கனலில் நடு ஊசியின் மேல் காலையூன்றி, பொற்பற மெய்யுணர்வின்றி, உறக்கமின்றி, புலர்ந்தெலும்பு புலப்பட ஐம்பொறியை ஓம்பி’ நிற்கின்றார்களாம் இந்த மனித ஆன்மாக்கள் ! இயற்கையில் ஜோதிச் சூழலில் இருந்த ஆன்மாவையுணர்ந்து, அது தானாய்ப் பாவித்து, புறத் தவத்தால் எத்தனை பெரியார்கள் இதுவரை மடிந்து போய் இருக்கின்றார்கள் ! மிக நுண்ணிய ஆன்ம அணுத்துவ நிலையையுணர்த்தவே, அது ஊசியின் மேல் கால் ஊன்றி ஜோதிச் சூழலில் தவஞ் செய்வதாக மொழியப் படுகின்றது. அருள் ஞான பக்குவத்தால் முன்னைத் தவப் பயனாய்க் கடவுளை இப்போது இந்தப் பிச்சை பெருமானைக் காண்கின்றோம். அவரது ஜடாமுடி, மின்னலைப் போல ஒளிவீசுகின்றதாம். முடிநிலை ஞானத்தையும், அடிநிலை அருளையும், நடுநிலை இன்பத்தையும் வழங்குவதாக கடவுள் உண்மையை வகுத்துக் கூறுவர்.

        சத்விசாரத்தில் ஞான விளக்கமும், திருவடிப் பற்றால் அருள் அனுபவமும், அனக நிறை வாழ்வால் நித்தியானந்தமும் கிடைக்கப் பெறும்.

     மெய்ஞ்ஞானம் அடைந்துள்ள இவ் ஆன்மத்தலைவி, ஞான பித்தரை யாது வேண்டுமென்று வினவுகிறாள். அதற்கு அவர் சொல்லுகிறார்.. “உணச் செய்யாள், இல் நச்சினம்” என்று உண்ணுவதற்கு செய்யாள் இல் மிக விரும்புவதாக குறிக்கின்றார். சிவஜோதி ஆம் அருள் ஒளிதான் ஒருவர்க்கு அகமும் புறமும் இருந்து வழங்கிடப் பெறுகிறது.  செய்யாள் இல்--என்பது திரு உறையும் இடம், அது எது, எங்கே..

       நமது அருள் அக அனுபவத்தில் திரு என்பது, நம் சிரநடுத் தகர ஆகாசம். இ என்னும் அருட் பிரணவ சக்தியோடு கூடிச் சிற்றம்பலமாக உள்ளது. இந்த அம்பலத்திலே, உருத்திராம்ச, ர்--என்னும் ரகர மெய் ஜோதி, ருகர ஐஞ்சக்தியோடு விளங்குவதைக் குறிக்கும். ஆகவே, இத் திரு நம் சிரநடு செம்பொருட் ஜோதியே., இதுவே,ஒருவர்க்கு, உலகியல், அருளியல், சுத்த சன்மார்க்க, மரணமில்லாத் திரிதேக சித்தி எல்லாம் தருவதாம். இங்குதான், அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையுடன் நச்சிச் சேர்ந்து தங்கியுள்ளதால், ஆன்மத் தலைவிக்கு இன்பானுபவ இல்லமாகத் திகழ்வது.

     மேலும், செய்யாளாகிய, திருமகள் தோன்றிய பாற்கடல் ஒன்று, செய்யாள் வாசம் பண்ணுகிற தாமரை இரண்டு, செய்யாளாகிய அருள் ஒளித்திரு மூன்றும் நமக்கு, ஞான, சுத்த, பிரணவ தேகத்தை வழங்க உள்ளன., ஆகையால்தான், நம்பதி, இப்போது இங்கு நச்சிச் சேர்ந்துள்ளார்.
IMG_20180218_105218.jpg

IMG_20180218_105218.jpg