Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
Arutperunjothi Agaval Lines 1243-1244. Explanatory Note by Swami Saravanananda.
திரு அருட்பா.. அருட்பெருஞ்ஜோதி அகவல்.வரிகள் 1243 மற்றும் 1244.

திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களின் உரை விளக்கம்.

----------------------------------------------------------------------------------------

1243. ஆக்குறு மவத்தைகள் அனைத்தையுங் கடந்துமேல்
1244. ஏக்கற நிறைந்த வென்றனி இன்பே.

-----------------------------------------------------------------------------------------

உரை விளக்கம்.

        அவத்தைகள் என்றால் துன்பங்கள், துன்பானுபவ நிலைகள். இத்துன்பாவத்தைகள் புறத் தோற்றத்தில் தயவின்மையால் நிகழுகின்ற கொடுஞ்செயல்கள் போல் காணப்படும். உண்மையில் இது கடவுளரின் மறக் கருணைச் செயலே. இதனால், உயிர்கள், அறிவனுபவத்தில் மேலே மேலே ஏறி, உயர் ஞான நிலையுறவும். அருள் நிலை பெறவும் ஆனந்தானுபவம் அடையவும் கூடியதாயிருக்கிறதாம். அதனால் இந்த அவத்தைகள், ஆக்குறும் அவத்தைகள் என்று குறிக்கப்பட்டுள்ளது.

        மனிதப் பிறப்பில்தான், அறிவு, புலன் உணர்வு நிலை கடந்து மனோ பகுத்தறிவு நிலையை அடைந்துள்ளது. இதனால், உயிர் உணர்விலே உண்டாகின்ற அவத்தைகள் மக்களால்தான் அதிகம் துய்க்கப்படும். மற்ற உயிரினங்களுக்குத் துன்பாவத்தைகள், அவ்வளவு அதிகம் பாதிக்கின்றனவல்லவாம். இதனால், உயிர்களின் வாழ்வுக்குத் தாவரங்களையே உணவாக அமைக்கப்பட்டுள்ளது என்று அறியலாகும். மனிதன் இத்தாவர உணவு ஏற்பதும். அவ்வுணவு விளைத்தலில் ஏற்படுகின்ற விஷ ஜந்துக்கள், எலி பாம்பு முதலிய பிராணிகள் அழிக்கப்படுவதும், ஜீவ காருண்யச் செயலேயன்றி, ஜீவ ஹிம்சைச் செயலென்று நினைந்து கலக்கமடைய வேண்டியதில்லையாம். கடவுளே எவ்வுயிரையும் மேனிலைகேற்றத்தான் எவ்வுயிரையும், இந்த அவத்தை நிலைகளைக் கடந்திடச் செய்கின்றார். ஆகையால் மனிதன் உள்ளத்தில் உண்மை தயா நெகிழ்ச்சியோடு வாழ வேண்டும். அருளனுபவ இன்ப லட்சியத்தோடு, உயிர் வாழ்வு மேற்கொண்டால், புலனின்பத்திற்கு ஆளாகிடான். புலையுணா முதலியன ஏற்பதை அடியோடு விட்டுவிடுவான். அப்போதுதான் சுத்த இன்பம் வளர் உயர் நிலையுற்று வாழற்கு உரியவனாவான். அந்த மேனிலையில்தான் சுத்த சுகானந்தம் பரிபூரணமாய் இருந்து கொண்டிருக்கின்றதாம். இந்நிலைபேறு எய்திடுமுன் மேற்கூறிய ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்திடவேண்டும். இந்த அவத்தையின் அனுபவம் மனிதனில்தான் உச்ச கட்டத்திற்குச் சென்று, திருவருள் பெற்றவுடன், ஏக்கமெல்லாம், உளச்சோர்வெலாம் நீங்கிடப் பெற்று அவன் நிறைதனி இன்ப அனுபவம் ஏற்கிறான்.

        மேற்படி, சுத்த இன்பம், அருள் ஒளி நிலையுற்று, அகமிருந்தவண்ணம் விரிந்து, அனக வாழ்வு மேற்கொள்ளுவதால்தான் ஒருவனுக்கு, இவ்வின்பம் இன்னதெனவும் விளங்கும். இதனால் அவன் இந்த இன்பத்துடன் மரணமில்லாது வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையும் எய்துவான்.

1432804918974.jpg

1432804918974.jpg

Download: