Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
8.4.2020 Thiru Arutpa Arutperunjothi Agaval Lines 1163-1164 Explanatory Note by Swami Saravanananda of Dindigul.
திரு அருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகள் 1163-1164.

-------------------------------------------------------------------------------------

திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வரைந்த உரை விளக்கம்

-------------------------------------------------------------------------------------.

1163. இனிப்பிற வாநெறி யெனக் களித்தருளிய
1164. தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே.

-------------------------------------------------------------------------------------

உரை விளக்கம்.

அகக் கடவுளான்ம வடிவம் பிறப்பும், இறப்பும் இல்லாதது இந்த ஆன்மாவைச் சூழ, ஓர் ஒரு தேகம் தோன்றி, விளங்கிப் பின் மறைவதுமாய் இருக்கின்றதாம். ஆன்மாவைச் சூழ உடல் ஆக்கப் பெற்று விளங்குவதுதான் பிறப்பு எனவும், அவ்வுடல் நீக்கப்பெற்று விடுவதுதான் இறப்பு என்றும் கூறப்படுகின்றன. ஆன்மாவுக்கு இந்தப் பிறப்பு இறப்பும் ஏன் வந்து கொண்டேயிருக்கின்றன ? உண்மையையுள்ளபடி அறியாதவர்கள், இப்பிறப்புகளுக்குக் காரணம் ஏதேதோ சொல்லுவர்; அவை எல்லாம் மாயா தோற்ற மனோகற்பனா கூற்றுகளேயாம். திருவருளாலே உண்மையைக் காண முடியும்; அது இதுவாம்.

கடவுள் அருட்பெருஞ்ஜோதியாய் எங்கணும் நிரம்பி என்றும் இருந்து கொண்டுள்ளார். அந்தக் கடவுளின் அருளே உள்ளீடாய் இருந்து புறஜோதி நிலையைப் பலபல பொருள்களாக, ஆற்றல்களாக, உணர்ச்சிகளாக, அறிவு விளங்கங்களாக அருள் அனுபவங்களாக உருவாகிச் சூழ்வதும், மறைவதுமாய் இருக்கின்றனவாம். இப்படி விளங்கிக் கொண்டிருக்கிறது, அந்த அருட்பெருஞ்ஜோதி கடவுளின் இயல்பாம். இந்த இயல்புப்படி ஒவ்வொரு அணுவுக்கும் உள்ளீடாய் அருள் இருந்து கொண்டு சூழ் அருள் ஒளியைப் பலவேறு தோற்றங் கொள்ளச் செய்து கொண்டுள்ளதாம்.

இப்பொழுது ஓர் ஆன்ம அணுவை எடுத்துக் கொள்ளுவோம். இதன் உள்ளும் புறமும் அருளும் பெருஞ்ஜோதியும் இருந்து கொண்டுள்ளன. அவ்வக அருள், புற ஒளியைப் பலவேறு தோற்றங் கொள்ளச் செய்து வருகின்றதாம். புற வடிவம் இம்மனித தேகமாக ஆகின்றபோது, பகுத்தறிவுக்கு அப்பால், அருள் உணர்வு வெளியாகி, அது கொண்டு அக அருளின் பெருந்திறனை அறியவல்லானாகித் தோற்றி சூழ்ந்து கொண்டுள்ளதாம். அவ்வருட்பெருஞ்ஜோதி இப்பொழுது அகமும் புறமும் என்ற இருநிலை போய்ப் பிறிவற்ற ஒன்றாய் விளங்குகின்றது. இதுவே, கடவுள் வடிவே ...மனித வடிவாய் அனுபவப்பட்டு விளங்குநிலை. இந்த மனிதன், கடவுள் வடிவுற்றிலங்குவதாகும். இது, மேற்கொண்டு அழிவதில்லை. மாறுவதில்லை. ஆகவே, இந்த அருள் ஒளி மனிதன், தன்னுருவைப் பிரியாது அப்படியே நிலவுகின்றவனாகி விட்டதால், இறப்பும், பிறப்பும் தொடருவதில்லையாம்.

மாற்றமுற்றுக் கொண்டேயிருக்கின்ற ஜோதியாலான தேகம் அகஅருளின் சேர்ப்பால், அருட்ஜோதி தேகமாகி விட்டதால், அப்போது முதல் அந்த தேகம் மாற்றமில்லா நிலை அடைந்து விடுகின்றதாம். இது, இனிப்பிறவா நெறி ஆம். இப்படி மாற்றமில்லா அருட்ஜோதி தேகம் அடையாதவரை அந்த ஆன்மாவுக்கு அகமும் புறமுமான இருநிலை இருக்கும்; புறவடிவப் பிறப்பும், இறப்பும் இருக்கும். பிறவித் தொல்லை வேண்டாம். பிறவியே வேண்டாமென்று கடுந்தவ முயற்சியாலோ, தீவிர பக்தியாலோ, திடசித்த சமாதியாலோ உள்ளொடுங்கிப் போனாலும், அந்த ஆன்ம அணுவைச் சூழ இருக்கும் ஜோதி, மனித வடிவோ, பிற உயிரின வடிவோ ஆகாது. சூனியமாய் இருந்து கொண்டுதான் இருக்கும். ஆன்மாவுக்கு இச்சூன்யச் சூழலால் எந்த விதமான வாழ்வும் பயனுமில்லை; அது திருவருட் சம்மதமுமல்ல. ஆகையால், அந்த ஆன்மா எவ்வளவு காலம், என்ன வரம் பெற்று பிறவா நிலையிற் கிடந்தாலும், மறுபடியும் திருவருளால், அருளனுபவ வாழ்வு வழங்கப்படற்கு மனிதப் பிறவி அருளப்படுவதாம். ஆகவே, ஆன்மா கடவுள் ஐக்கியத்தில் மறைந்து கிடப்பது முடிவல்ல. அது இனிப்பிறவா நெறி ஆகாது. அவசியம்,…. பிறக்க வேண்டியதே, கடவுள் ஆணை.

இனிப் பிறவாதிருக்க வேண்டின், இப்போது உள்ள இந்தப் பிறப்புருவத்தை எவ்வகையிலும் இழந்து விடக் கூடாது. இதன் அசுத்த அநித்தியத் தன்மையை அருள் ஒளி நிறைவால், சுத்தவுடம்பாக்கிக் கொண்டு நித்தியமாய் விளங்கிடச் செய்திடல் வேண்டும். மற்ற விதத்தில், தேகம் நித்தியத்துவம் அடையாது. நித்திய நிலை ஏற்பட்டுவிட்டால் மரணமில்லை. இறப்பில்லை. எனவே, இனிப் பிறவாதிருக்க வேண்டின், இப்பிறப்பே இறவாமையுற்றிடுதல்தான் முறை. இதனையே, நம் வள்ளல், அருட்பெருஞ் ஜோதித் தந்தையாரால் வழங்கப் பெற்றுள்ளது உண்மை !! உண்மை !!

 

vlcsnap-2018-08-24-20h52m10s836.png

vlcsnap-2018-08-24-20h52m10s836.png

20150520_154927.jpg

20150520_154927.jpg

Download: