SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
இறைவன் எவ்வாறு விளங்குகிறான்
இறைவன் எவ்வாறு விளங்குகிறான்
ஆகாசம் அநாதி.அதுபோல அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அநாதி. (சிருட்டி நியாயம் உரைநடை பக்கம் 353)
ஆகாசம் என்றால் வெளி. பரமாகாசம் என்றால் மேலான வெளி. ஆக புறத்திலே இறைவன் பரமாகாச சொரூபனாய் அதாவது வெளிக்குக் காரணமான வெளியாய் இருக்கின்றானாம். இதையே மகாதேவ மாலையிலும் வெளிப்படுத்துகிறார்.மாணிக்க வாசகர் வரலாற்றில் அவர் வெளியோடு வெளியாய்க் கலந்தார் என்பதை வள்ளலார் உறுதிப்படுத்துகிறார் .பாடலைப் பாருங்கள்.
மெய் உணர்ந்த வாதவூர் மலையைச் சுத்த
வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே முற்றும்
பொய் உணர்ந்த எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
புரிந்தருளும் கருணை வெள்ளப் பொற்பே அன்பர்
கையுறைந்து வளர் நெல்லிக் கனியே உள்ளம்
கரைந்து கரைந்து உருக அவர் கருத்தினூடே
உய்யு நெறி ஒளி காட்டி வெளியும் உள்ளும்
ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத்தேவே ....பாடல் எண் 164
நிறைய பாடல்களில் திருச்சிற்றம்பலத்தே ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் என்று பாடியிருக்கின்றார்.திருச்சிற்றம்பலத்தே இறைவன் எவ்வாறு விளங்குகின்றான் என்றும் வள்ளலார் விளக்குகின்றார்.
தானலாது இறையும் உயிர்க்கசை வில்லாத் தலைவனே திருச்சிற்றம்பலத்தே வானலால் வேறொன்றில்லை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே ஊனலால் உயிரும் உளமும் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள்ளமுதே
ஞான நாடகம் செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே ...
வான் என்பது வெளியே. திருச்சிற்றம்பலத்தே வானலால் வேறு ஒன்றிலை என்றால் இறைவன் வெளியாக இருக்கிறான் என்பதே வள்ளலார் தரும் விளக்கமாக உள்ளது.

இறைவனைப் பொது என்றும் ,பொதுவில் நடம் புரிகின்ற பூரண சிற்சிவம் என்றும், போதானந்தமது என்றும்,பிரமம் என்றும், பரமம் என்றும் சொல்லுகின்றோர் சொல்லிக்கொள்ளட்டும். அதுதான் இதுதான் என்று சுட்ட முடியாது.அதனால் சும்மா இருப்பதுவே நல்லது.
பொதுவென்றும் பொதுவில் நடம் புரியா நின்ற
பூரண சிற்சிவம் என்றும் போதானந்த
மதுவென்றும் பிரமம் என்றும் பரமம் என்றும்
வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும்
இதுவென்றும் சுட்டவொண்ணா ததனால் சும்மா
இருப்பதுவே துணிவு எனக்கொண்டிருக்கின்றோரை
விதுவென்ற தண்ணளியால் கலந்துகொண்டு
விளங்குகின்ற பெரு வெளியே விமலத்தேவே(178)12
திரு மூலரும் இறைவனை வெளி என்றும் அந்த வெளியை நெற்றிக்கண்ணைத் திறந்து கொண்டுதான் அறியமுடியும் என்கிறார்.
விளக்கை ஏற்றி வெளியை அறிமின் விளக்கின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கின் விளங்கும் விளக்கவர் தாமே.
இறைவன் அனுபவமே
இறைவனைப் புறத்தே வெளியாகக் காட்டிய வள்ளலார் அனுபவத்திலே அவன் ஒளியாகவே தோன்றுவான் .என்கிறார்
அருட்பெருஞ்சோதி என்று இறைவனுக்கு வள்ளலார் பெயர் இட்டிருந்தாலும் அந்த அருட்பெருஞ்சோதி என்பது நம் உடம்பில் உள்ள இந்திரியங்களும் ,கரணங்களும் கடந்து அறியக்கூடிய ஓர் அனுபவமே என்கிறார்
.
தனு கரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர்
அனுபவமாகிய அருட்பெருஞ்சோதி (அகவ ல்)

இறைவனை மனிதராகிய நம்முள்ளேதான் காண முடியுமே தவிர வெளியிலே யாராலும் காண முடியாது என்கிறார் வள்ளலார்.

பொது உணர் உணரும் போதலால் பிரித்தே \
அது எனில் தோன்றா அருட்பெருஞ்சோதி (அகவல் வரி 122 )14

புறத்தே தோன்றாத இறைவனை நம்முள்ளே எப்படிக் காண்பது?
தவம் செய்தால் மட்டுமே இறைவனைக் காணமுடியும்.

1 தவம் என்பது மனதை எந்தவித செயல்பாடும் இல்லாமல் நிறுத்துவதே.. ஏன் என்றால் எங்கே மனம் செயல்படுகின்றதோ அங்கே இறை அனுபவம் தோன்றாது
உரை மனங்கடந்த ஒரு பெரு வெளி மேல் அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்சோதி.
{அகவல் வரி 12 )15