balamurugan
திருக்கதவம் திறத்தல் பாடல் எண்.9க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.
கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்
   கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக
மலைவருசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறஎவ் வுலகும்
   வாழ்ந்தோங்கக் கருதிஅருள் வழங்கினைஎன் றனக்கே
உலைவரும்இப் பொழுதேநற் றருணமென நீயே
   உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மையுரைத் தவனே
சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருஅமுதம் அளித்தோய்
   சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.                                        (பாடல் எண்.9)

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

(விளக்கம்)

     இந்த உலகில் கால தத்துவம் எவ்வளவு வேகமாக, ஒரு கணப்பொழுதும் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது ! அப்படி ஒரு கணம் என்று சொல்லுகிறோமே, அதாவது நிலைத்த ஒன்றாய் முழுத் தோற்றங்கொண்டு விளங்குகிறதா என்றால், இல்லை என்றுதான் கூற வேண்டும். அதாவது ஒரு கணத்தின் உட்கூறாக எத்தனையோ ஆயிரம் ஆயிரம் பகுதி நேரம் நிலையற்று ஓடிக்கொண்டே இருக்கின்றனவாம் ! இந்த அரிய கால தத்துவத்திற்கு சற்றும் கட்டுப்படாமல் எக்காலும் நிலைத்து உள்ளவர், காலாதீதர் ஆகிய நம் அருட் ஜோதிப் பெரும்பதியாவார். அவருடைய அருள் பெற்று அவரை அண்டி விட்டால் கால எல்லையைக் கடந்து விளங்கலாம் என்பது உண்மையாம்.

     அப்படிக் காலாதீத நிலை பெற்றுக் கழிவிலாது வாழற்காம் வாய்ப்பு இது சமயம்தான் வெளியாகியுள்ளது. ஆகையால் இந்த உடல் உலைந்து கெட்டு அழிந்து ஒழியுமுன் திருவருளைப் பெற்று உய்வதற்கு உரிய தருணம் என, அடிகளார்க்கு உணர்த்தினார் ஆண்டவர். “நற்றருணம் என நீயே உணர்த்தினை, உண்மையுரைத்தவனே (இப்போதே) வந்து அணைந்து அருள்வாய்” என வேண்டுகின்றார்.

     அப்படி வேண்டியபோது, இவரது கல்நெஞ்சு கரைக்கப்பட்டுவிட்டதாம்; அருள் அமுதம் அளிக்கப்பட்டும் விட்டதாம். கருங்கற் பாறை போன்ற கடின சித்தம் கரைந்தால் தான் அருளமுதம் பெற முடியுமாம். மனம் அபக்குவத்தில் கடின்மாய் இருப்பதால் கல்மனம் அல்லது கல்நெஞ்சு எனப்படுகின்றது. உண்மையில், ஆண்டவர் திருவருளே நம் மனமாக இருப்பதால், அது, “அருட்பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை” யாம். பதின்மூன்று அசையால் இசைந்து, அருள் நிலை உண்மையைச் சுட்டுகின்றதாம். பக்குவம் உறும்போது அந்தக் கல்மனம் அருள் அமுத ஜோதி மயமாக மாற்றப்பட்டு விடுவதாம். மனம் இறக்க வேண்டும் என வேண்டினர் முன்னோர். இவரோ மனம் இருக்க வேண்டும். ஆனால் அது அமுத ஜோதியாக மாறி இருக்க வேண்டும் என்கின்றார் மரணம் இல்லா வாழ்வு பெற்ற வள்ளல். வாழ விரும்பாத, பிறவியே எடாது இருக்க வேண்டினோர், தான் இறக்க வேண்டும் என்று வேண்டிப் பெற்று மடிவுற்றுப் போனார்கள்.

     மனத்தின் அருள் உண்மையை அறியாதார், மனிதப் பிறப்பின் மகிமையை உள்ளபடி அறியாதாரே, அருளால் வாழாது, மருளால் மடிந்தனர் என இன்று நாம் அறிகின்றோம். மனம், அருள் மயமான அமுத ஜோதி வடிவுற்று விளங்குதலே, சகல கேவலமற்ற, நினைப்பு மறப்பு அற்ற, பிறப்பு இறப்பு அற்ற நித்திய நிறைவுற்ற அனுபவ வாழ்வு நிலை ஆகும். அருட் பெரும்பதி, வள்ளலாரின் கல் மனத்தைக் கரைத்து திரு அமுதம் அளித்து விட்டார் என்பது நான்காம் அடியில் காண்கின்றோம்.

     இந்த அருட் பே;ரனுபவ நிலை நம் பெருமானார்க்கு எதற்கு வழங்கினார் என்றால், அவர் மட்டும் ஆனந்த பரவசத்தில் அமிழ்ந்து ஆழ்ந்து கிடத்தற்கு அல்லவாம். உலகத்தாரை எல்லாம் பக்குவப்படுத்தி அம் மேனிலையை அடைந்து உய்யச் செய்வதற்கே ஆம். இக்குறிப்பு தான் முதல் ஈரடிகளில் நன்கு வெளியாக்கப் பெற்றுள்ளது.

     கலையுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கம் எல்லாம் மண் மூடிப் போகச் செய்தல் வேண்டும் என்பதுதான் கடவுட் சித்தமும், இவரது திருவுள்ளமும் ஆம். இதுகாறும் உலகம் அருட் பெருஞ் ஜோதி உண்மை நிலையை அறியாது, மாயா தத்துவ சாலக் கற்பனா கலைகளில் மயங்கிக் களித்திருந்து இறுமாந்து அழிந்து கொண்டிருந்தது. எவ்வளவோ காலமாக இப்படி பழகிப் போய் நெடுநாளைய வழக்கமாகிவிட்டிருக்கும் வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது மிகக் கடினம்தான். அம்முறை சரி அல்ல, தவறானது என்று எவ்வளவுதான் சொன்னாலும், அப்படித் தவறானவையே என்று ஓரளவு தெரிந்து கொண்டாலும் கூட, அவற்றை விட்டு மெய்ந் நெறிக்கு வர இலேசிலே இசையாதவர்களாய் இருக்கின்றார்கள் இந்நாள் மக்கள்.

     நம் இராமலிங்க வள்ளல், இந்த மக்களின், மிகத் தடிப்பேறிக் கல்லாய் இறுகிப் போன உள்ளங்களை, மென்மையுடையதாக்கி இளகச் செய்து ஒளி நெறியில் உண்மை கண்டு வாழ்வை முற்றும் புதுப்பித்துக் கொள்ளச் செய்ய முயன்றார். இதற்காகவே, திருவருளைப் பெற்றார். அவ்வருளால், தெளிவான சுத்த சன்மார்க்கத்தையும் பெற்றார்.  இந்நெறி ஒன்றே உலக முழுமைக்கும் நிலையான இன்ப வாழ்வைக் கொண்டு வருவதாய் இருக்கின்றது. சூழ்நரைச் சுத்த ச்ன்மார்க்கிகளாக ஆக்கிவிடலாம் என, எவ்வளவு ஆசைப்பட்டார் முதலில். ஆனால் ஒருவர்கூட தன் வழிக்கு வராதது கண்டு மிகப் பரிதாபப்பட்டார். எதிர்பார்த்தபடி உலகம் அவ்வளவு சீக்கிரம் பக்குவப்பட்டுவிடாது என நாளடைவிலே கண்டு தான், தனது முயற்சியை மாற்றிக்கொண்டு விட்டார்.

     இந்த உலக மக்களின் கண்மூடிப் பழக்க வழக்கம் இப்போதைக்கு நீங்கிவிடப் போவதில்லை. அருள் அற்புதத்தால், திடீர் என மாற்றப்படுவது கூடாது. அது திருவுளச் சம்மதமல்ல. கொஞ்சம் கொஞ்சமாககப் படிப்படியாகத்தான், தினசரி வாழ்க்கையின் மூலம் தான் பக்குவம் உண்டாகும் என்பதைக் கண்டு கொண்டார். அப்படிப் பக்குவம் வருவிக்கப் புறத்திலிருந்து நேரடியாகச் சொல்லியோ, தந்திர உபாய நெறிகளாலோ, சுத்த தயவுடையவர்களாக எல்லோரையும் மாற்றிவிட முடியாது. அருளால் அகமிருந்து சிறிது சிறிதாக உணரவும், தெளிவுறவும் செய்து தன் நெறிக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுப் புரிந்து கொண்டுள்ளார்.

     இந்த அருட் பெருஞ் செயலின் விளைவு, சுத்த சன்மார்க்க வெளியீடு முதலில் கொஞ்சம் கொஞ்சமாகத் தோன்றியும், தோன்றாததாய் இருந்து வரவர பெருக்கமும் விரைவும் அடைந்துப் பின் அதிவிரைவில் எங்கும் நிரம்பி, நிறை பயன் வழங்கப் போவது உண்மை. இது ஆண்டவரின் அருள் ஆணை.


1432741756728.jpg

1432741756728.jpg