Gangadharan Thangavel
ஆணவத்திலும்  கொட்டியது  அகங்காரம்
அகங்காரத்தின் கொடுமைகளை வரிசைப் படுத்தி ,அருட்பெருஞ்ஜோதியின் அருளைப் பெற்றால் ஒழிய அங்காரத்தை ஒழிக்க இயலாது என்று நமக்கு வழி காட்டுகின்றார் தாயுமானவ அடிகள்.
ஆங்கார மானகுல வேடவெம் பேய்பாழ்த்த
வானவத் தினும்வலிது காண்
அறிவினை மயக்கிடு(ம்) நடுவறிய வொட்டாது
யாதொன்று தொடினுமதுவாய்த்
தாங்காது மொழி பேசும் ; அரிபிரமாதி
தம்மோடு சமானமென்னும்
தடையற்ற தேரிலஞ் சுருவாணி போலவே
தன்னிலசை யாதுநிற்கும்
ஈங்கா ரெனக்குநிகர் ? என்னப்ர தாபித்
திராவணா காரமாகி
இதயவெளி யெங்கணுந் தன்னரசு நாடு செய்
திருக்கும் ; இத னொடெ நேரமும்
வாங்கா நிலா தடிமை போராட முடியுமோ?
மௌனோப தேசகுருவே !
மந்த்ர குருவே ! யோக தந்த்ரகுரு வே !மூலன்
மரபில்வரு மௌன குருவே !

அங்காரமாகிய குலவேடரை யொத்த வெவ்விய பேயானது , பாழாகிய ஆணவப் பேயினும் வலியது.
அது 01. அறிவை மயக்கிவிடும் .
02. நடுநிலையை அறிய வொட்டாது .
03.யாதொரு பொருளைப் பற்றினும் , அது தானே யாகி நின்று சகிக்காத வார்த்தை சொல்லும் .
04. விண்டு ,உருத்திரன் ,பிரம்மாதிகளோடு நான் சமமானவேனென்று சொல்லும்.
05. தடையின்றி நடத்துகின்ற தேரினிடத்து அச்சாணி போல தன்னிடத் தசைவில்லாம
லிருக்கும்.
06. இவ்வுலகத்தில் எனக்கு நிகர் யார் என பலரறிய பிதற்றி மனவெளியில் தன்னரசு நாடாக
செய்து கொண்டிருக்கும்.

இதனுடன் நீங்கி நில்லாமல் உனது அடிமையாகிய நான் உன்னருள் இல்லாமல் போராட முடியாது.

அதை செயல்படுத்தி காட்டியுள்ளார் நம் வள்ளல் பெருமான் .

ஓங்கார அணைமீது நான் இருந்த தருணம்
உவந்தெனது மணவாளர் சிவந்த வடிவகன்றே
ஈங்காரப் பளிக்குவடி வெடுத்தெதிரே நின்றார்
இருந்தருள்க எனஎழுந்தேன் எழுந்திருப்பதென் நீ
ஆங்காரம் ஒழி என்றார் ஒழித்தனன்அப்போ
தவர்நானோ நான்அவரோ அறிந்திலன்முன்குறிப்பை
ஊங்கார இரண்டுருவும் ஒன்றானோம் ஆங்கே
உறைந்தஅனு பவம்தோழி நிறைந்தபெரு வெளியே. (தனித்திரு அலங்கல் / 6 - ஆம்திருமுறை)

வள்ளல் பெருமான் அகங்காரம் ஒழிந்த பின் அருட்பெருஞ்ஜோதியுடன் ஒன்றான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.