அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
இறை நிலை -II
மக்களின் அறியாமை அதிகமாக அதிகமாக,பரம்பொருள் அவ்வறியாமையை போக்க எண்ணினார்,ஆம் எல்லாமாகிய அருட்பெருஞ்சோதி ஆண்டவர் வள்ளலார் மூலம் உண்மை இறை நிலையை உணர்த்தினார். அவர் கண்ட உண்மையை உலகமெல்லாம் அறியும் பொருட்டு திருவருளால் உணர்த்தப் பட்ட பாடல்கள் “திருவருட்பா’’என்று வழங்கலாயிற்று. அதற்கு வள்ளலாரே சான்று தருகிறார்.
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன் சொல் வார்த்தை அன்றி
நான் உரைக்கும் அன்று நாட்டீர் நான் – ஏன் உரைப்பேன்
நான்ஆர் எனக்கென ஓர் ஞான உணர்வேது சிவம்
ஊன் நாடி நில்லா உழி.
திருவருட்பா-5504
அருணகிரிநாதரும் பின்வருமாறு கூறுகிறார். இதுவும் ஈண்டு ஒப்புதற்கு உரியது.
யாம் ஒதிய கல்வியும் அறிவும், என் அறிவும்
தாமே பெற, வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய், அறம்மெய்ப் புணர்வீர்
நாமேனடவீர், நடவீர் இனியே
-கந்தர் அனுபூதி 17
எனவே, சித்தர்கள், நாயன்மார்கள், மற்றும் சில அருளாளர்கள் உண்மை இறை நிலையை உணர்ந்திருக்கிறார்கள். அதனை மறுப்பதற்கில்லை. ஆனாலும் அவர்களிடத்தில் முக்தி வேண்டும் என்ற மன நிலையே அதிகமாக இருந்தது. பிறவி வேண்டாம் என்பதே அவர்களுடைய குறிக்கோள். எனவே வள்ளலாருக்கும் மற்ற சித்தர்கள் மற்றும் அருளாளர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் முக்தியும் இறவா பெருநிலையுமே ஆகும்.
வள்ளலார் கண்ட இறை நிலை தாமே எல்லா சக்திகளையும் பெற்று எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் ஒன்றி-ஐக்கியமாகி -இறவா பெருநிலைப் பெற்று- ஐந்தொழில்களையும் எல்லாமாகிய எல்லாம் வல்ல ஸ்ரீ அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால் நடத்துவது.
பரம்பொருளோடு ஐக்கியமாகி தன்னை இறையுடன் இணைத்துக் கொண்டதிற்கான ஆதாரம்;
என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான்
தன் உடலும் தன்பொருளும் தன் உயிரும்-என்னிடத்தே
தந்தான் அருட்சிற் சபையப்பா என்றழைத்தேன்
வந்தான் வந்தான் உள் மகிழ்ந்து.
மேலும்,
எல்லாம் வல்ல சித்து எனக்கு அளித்து எனக்குனை
அல்லாதிலையெனும் அருட்பெருஞ்சோதி
– அகவல் 298
எனவே வள்ளலார் தன்னை பரம்பொருளோடு ஐக்கியப்படுத்திக் கொண்டும் தன்னிலையிலே அவர் அருளாற்றல் புரிகிறார். அவர் இவ்வாறு இறையருளை பெற்றதற்கு காரணம் “ஜீவகாருண்ய ஒழுக்கமே’’ ஆகும்.
வள்ளலார் ஜீவ காருண்ய ஒழுக்கம் மூலம் இறை நிலையைக் கண்டு, அனுபவித்ததை கீழ் வருமாறு சொல்கிறார்.
கட்டமும் கழன்றேன் கவலை விட்டொழிந்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சிட்டமுமடைந்தேன் சிற்சபையுடையான் செல்வ மெய்ப்பிள்ளை என்றொரு பேர்ப்
பட்டமுந் தரித்தேன் எனக்கிது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே!
-திருவருட்பா: 4736
காலத்தால் மூத்த நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் பாடலும் இங்கு ஒப்புதற்கு உரியது.
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரியது ஒன்று.
அற்புத திருவந்தாதி- 10
விளக்கம்:
எனக்கு இனிய எம்பிரானை! ஈசனை யான் என்றும் மனத்தினுள் இனிய பெருஞ்செல்வமாகக் கொண்டேன். என் உயிர்ப்பிரானனாகவும் கொண்டேன்; அதனால் மாறாத இன்பம் கொண்டேன். இனி எனக்குக் கிடைத்தற்கரிய பொருள் ஒன்றேனும் உண்டோ? இல்லை.
வள்ளலார் கண்ட இறை நிலை மேலும் தொடரும்..,
குறிப்பு:
1. எல்லாமாகிய, எல்லாம் வல்ல, ஞானகுரு ஸ்ரீ வள்ளல் பெருமானின் தனிப்பெருங்கருணை
2. பெரிய ஞான கோவை சித்தர் பாடல்கள்.
3. அற்புத திருவந்தாதி- காரைக்கால் அம்மையார் இயற்றியது.
4. அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதி
வந்தனம்.வள்ளலார் எவ்வாறு மற்ற பெரியார்களிடமிருந்து உயர்ந்து நிற்கிறார் என்பதை என்னை போன்றவர்களுக்கு உணர வைத்தது சிறப்பு..இரக்கத்துக்கு மேலானது எதுவும் இல்லை அல்லவா.
கருணை-இரக்கம்-தயவு-அன்பு-விசுவாசம் எல்லாம் ஒன்றே. இது தான் மிகப்பெரிய சாதனம் என்று வள்ளல் பெருமானார் கூறுகிறார்.
கருணை-தயவு இல்லாமல் மனிதகுலம் இருக்குமேயானால் அது மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொள்ளும். மேலும் மனித எண்ணங்களின் ஓட்டத்திற்கு ஏற்ப இயற்கை சீற்றமும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆன்றோர் பெருமக்கள் கூறுகின்றனர்.
எங்கும் கருணை மேலோங்க வேண்டும். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும்.
இதுதான் மிகப்பெரிய தவம், வள்ளலார் மேற்கொண்டதும் இதுவே.
நன்றி.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி