சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை
சுவாமி சரவணானந்தா.
1968.
முன்னுரை
- மனித தேகத்தில் மறைந்திருந்து வெளிப்படும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் விளக்கம்.
உயர்வுடைய இம் மனித தேகத்தில், மெய்யறிவு விளக்கத்தால், எல்லாஞ் செய்ய வல்ல, இறைவனின் உண்மை அறியக் கூடியதா யிருக்கின்றது. நம்மில் இம் மெய்யறிவு விளங்கும் இடம்,
நமது சிரோமத்திய
1. ஓங்கார மூளைத்தலமாம். (Medulla oblongata).
இதற்கு முன்னும் மேலும் அமைந்துள்ளது 2. பெருமூளை (Cerebrum)
பின்புறம் கீழமைந்துள்ளது 3. சிறு மூளை. (Cerebellum)
இவற்றில், பெரு மூளையின் கண் இந்திரியக் காட்சி, இந்திரிய அறிவும், சிறு மூளையின்கண், கரணக் காட்சி, கரண அறிவும், ஓங்கார மூளையின்கண், ஜீவக் காட்சி ஜீவ அறிவும் இச்சீவ அறிவு கொண்டு, ஓங்கார மூளையினின்று வெளிப்பட்டு விளங்கும் தெய்வ ஒளியின்கண், ஆன்மக் காட்சியும் ஆன்ம அறிவும் பெறப்படுகின்றன. இந்த ஒளி நிலையே மெய் யறிவுத் தலமாக குறிக்கப்படும். இது நமது உச்சிக்குங் கீழே யுண்ணாவுக்கு மேலே யுள்ளதாகும். அன்றியும், நம் புருவ மத்திக்கு நேர் உட்பாகத்தில் திகழ்வதாகும். இச் சிரோமத்திய தெய்வ ஜோதியே நமது அழிவற்ற அருட்பெருஞ் ஜோதி ஆண்டவராகும். இவ் வருட்பெருஞ் ஜோதி மேற்படி ஓங்கார மூளையின் மீது விளங்கி நின்று தனிப்பெருங் கருணையால் நம்மைத் தன் நிலைக்கு ஈர்க்கின்றதாம். நாம் இந்திரிய அறிவுங் கரண அறிவுங் கடந்து ஜீவ அறிவில், நின்று ஜீவ தயா உணர்ச்சியால் திருவருளாகிய ஆன்ம அறிவு பெறக்கூடியதாயிருக்கின்றோம். ஜீவ தயவு, ஒருமையும் விளங்கும்போதுதான், இவ் வான்ம அறிவு துலங்கும். நம்மில் தயவும் ஒருமையும் விர்த்தியாகும்போது, நமது ஆன்ம அறிவு, அருட்பெருங் கடவுள் உணர்வு, நன்கு மிளிரும். இவ் ஒருமை உண்டாவதற்கு நம் மனதைப் பிற சிந்தனையினின்று ஈர்த்து, புருவ மத்தியினின்று, அக நோக்கத்தால் நம் அருட்பெருஞ் ஜோதியில் நாட்ட வேண்டும். அருள் உணர்வு பெற்றுக் கொண்டு, மேல் சுத்த தேகம் பெற வேண்டும்.
Write a comment