Vallalar Groups
"பேருபதேசம்" - கேள்வி,பதில்கள்

பேருபதேசம்

ஸ்ரீமுக வருஷம், ஐப்பசி மாதம், 7ஆம் நாள், புதவாரம், பகல் 8 மணிக்கு, மேட்டுக்குப்பம் என்னும் சித்திவளாகத் திருமாளிகையில் முதல் முதல் கொடி கட்டினவுடனே நடந்த விவகாரத்தின் குறிப்பு.

வள்ளலார் கடைசி அறிவிப்பு (எச்சரிக்கை):
இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண் டிராதீர்கள்.

இது முதல் சாலைக்கு ஆண்டவர் போகிற - பத்துத் தினமாகிய கொஞ்சக் காலம் - வரையில், நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டிருங்கள். அந்த விசாரணை எது வென்றால்: நம் நம்முடைய நிலை எப்படிப்பட்டது? நமக்கு மேல் நம்மை அதிஷ்டிக்கின்ற தெய்வத்தினுடைய நிலை எப்படிப்பட்டது? என்று விசாரிக்க வேண்டியது.

விசாரணை எவ்வாறு செய்வது?
அதற்குத் தக்கபடி, நீங்கள் ஒருமித்தாவது, அல்லது தனித்தனியாகவாவது, உங்களறிவிற்கும் ஒழுக்கத்துக்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது, அல்லது - வேலாயுத முதலியாரைக் கேட்டால் மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் சொல்லுவார் - அவரிடம் அப்படிக் கேட்டாவது நல்ல விசாரணையி லிருங்கள். அல்லது, தனியாகவும் விசாரிக்கலாம்.

விசாரணையின் பயன் என்ன? / நாம் ஏன் விசாரணை செய்ய வேன்டும்?
இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது.

விசாரணை எப்பொழுது செய்வது?

இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், "தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்".

உண்மை விசாரணை து?
அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது.

ஆன்மாவைத் மூடியிருக்கின்ற திரைகளை எவ்வாறு நீக்குவது?
ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது.
அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது.


எப்பொழுது அதிக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்?
அந்த விசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.

எவ்வளவு நேரம் விசாரணை செய்ய வேன்டும்?
எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்.

விசாரம் என்பது என்ன?

ஆதலால், இவ்வுலகத்தில் வி-சாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது - துக்கமே விசாரமென்கின்றது - அது தப்பு; அவ்வர்த்தமுமன்று. சார மென்கின்றது துக்கம். விசார மென்கின்றது துக்க நிவர்த்தி. வி உபசர்க்கம். சாரமென்கின்ற துக்கத்தை நிவர்த்தித்தது வி ஆதலால், விசாரமென்கின்றது முன் சொன்னபடி பரலோக விசாரத்தையே குறிக்கின்றது. ஆதலால் இடைவிடாது நாம் விசார வசத்தராயிருக்க வேண்டியது. மேலும் வி - சாரமென்பது: வி விபத்து; சாரம் நீக்குதல், நடத்தல். ஆதலால் இடைவிடாது நன் முயற்சியின்கண் பயிலுதல் வேண்டும்.

ஆண்டவர் வருவாரா ?
மேலும், சிலர் "இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?" என்று வினவலாம். ஆம், இஃது - தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான்.

திரைகள் எவ்வாறு உள்ளது ?
ஆனால், முன் சொன்ன ராக சம்பந்தமான பச்சைத்திரை இரண்டு கூறாக இருக்கின்றது. யாவெனில்: அசுத்தமாயாதிரை சுத்தமாயாதிரை யென்னும் இரண்டுமாம். இவை கீழ்ப்பாகத்திலொருகூறும் மேற்பாகத்திலொரு கூறுமாக இருக்கும். கீழ்ப்பாகத்திலுள்ளது அசுத்தமாயாதிரை. மேற் பாகத்தில் சுத்தமாயாதிரை இருக்கும். இவற்றில் அசுத்தமாயாதிரை இகலோக போக லக்ஷியமுடையது. சுத்தமாயாதிரை பரலோக சாத்தியத்தையுடையது.

ஆண்டவர் வந்தவுடன் எந்த திரையை நீக்குவார் ?
இவற்றில் - ஆண்டவர் வந்து அனுக்கிரகஞ் செய்கின்றபோது, முயற்சியில்லாத சாதாரண மனுஷ்யர்களுடைய கீழ்ப்பாகத்திலிருக்கிற அசுத்தமாயை யென்னும் பச்சைத்திரையை மாத்திரம் நீக்குவார். ஆதலால், அக்காலத்தில் நாம் அத்திரை நீங்கியவுடன் கூடியவரையில் சுத்தமாய்ப் புனிதர்களாக இருக்கலாமேயல்லது, பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுகிறதற்குக் கூடாது. மேலும், பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.

இங்கு (உலகில்) ஏற்படும் பிரச்சினைகளுக்கு காரணம் என்ன?
மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின.

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் உண்மையா ?
இதற்கு மேற்பட, நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.

கைலாசபதி,வைகுண்டபதி உண்மையா ?
யாதெனில்: கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதியென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள். "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள். ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.

சித்திகள் உண்மையா?ஆண்டவரிடத்தில் ஏன் லட்சியம் வைக்க வேண்டும் ?
அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளையடையலாம்.
அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும். ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது. முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனையென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.

நான் அனைத்து நூல்களையும் கற்கலாமா?
இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனேநீ நூலனைத்தும் சாலம்என அறிக

நான் அனைத்தையும் "எவ்வாறு" தெரிந்து கொள்வது?(அருளொளியால்)
செயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
திருவுளம்பற் றியஞான தேசிகமா மணியே
அயல்அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந் தருளே.

- திருஅருட்பா 4176

"சைவம் வைணவம்" முதலிய சமயங்களிலும்," வேதாந்தம்,சித்தாந்தம்" முதலிய மதங்களிலும் தெய்வத்தைப் குறிக்கவில்லையா ?
இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன்.

முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது ஏன்?
நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது "இவ்வளவென்று அளவு" சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு "கொஞ்சம் அற்ப அறிவாக" இருந்தது.


"வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம்" முதலியவைகளில் எவ்வாறு குற்றம் சொல்லலாம்?
இதுபோல் வியாகரணம், தொல்காப்பியம், பாணிநீயம் முதலியவைகளில் சொல்லியிருக்கின்ற இலக்கணங்கள் முழுவதும் குற்றமே. அவைகளில் குற்றமே சொல்லியிருக்கின்றார்கள். எவ்வாறெனில்: தொண்ணூறு தொள்ளாயிரம் என்கிற கணிதத்தின் உண்மை நான் சொன்ன பிறகு தெரிந்து கொண்டீர்களல்லவா? இப்படியே ஒன்று இரண்டு முதல் நூறு முதலான இலக்கணங்களுக்கும் உகர இறுதி வருவானேன்? ஒருவாறு சித்தர்கள் காரணப் பெயராக இட்டிருக்கிறார்கள். தொல் - நூறு தொண்ணூறென்றும், தொல் - ஆயிரம் தொள்ளாயிரமென்றும் வழங்குகின்றன. தொல் என்பது ஒன்று குறையத் தொக்கது. தொன்மை தொல்லெனப் பிரிந்தது. வழக்கத்தில் தொள்ளாயிரம் தொண்ணூறு என மருவியது. இதற்குப் பத்திடத்திற்கு ஓரிடம் குறைந்த முன் ஆயிரமென்றும், ஒன்று குறைந்த பத்தென்றும் ஒருவாறு கொள்க. இப்படி நான் சொன்னதுபோல் சொன்னால், சிறு குழந்தைகள் கூட அறிந்து கொள்ளும்.

திரைகள் எப்போது நீங்கும்?அதனால் பயன் என்ன ?
ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

நாம் எதனில் லட்சியம் வைக்க வேண்டும் ? எவ்வாறு எல்லன்வற்றையும் பெற்று கொள்ள முடியும் ?
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது "எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம்" இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ * என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன்.

ஆண்டவர் "வள்ளலாருக்கு" தெரிவித்தது என்ன ?
மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான்.

வள்ளலாரை ஏற்றி விட்டது எது ?
என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

பிள்ளையார் , முருகன் , சிவன் மற்ற தெய்வங்களை கூறி இருப்பது பற்றி ?
* மாயையாற் கலங்கி வருந்திய போதும்

வள்ளல்உன் தன்னையே மதித்துன்

சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்

தலைவவே றெண்ணிய துண்டோ

தூயபொற் பாதம் அறியநான் அறியேன்

துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்

நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே

நன்றருள் புரிவதுன் கடனே.

- திருஅருட்பா 3635

** கருணையும் சிவமே பொருள்எனக் காணும்

காட்சியும் பெறுகமற் றெல்லாம்

மருள்நெறி எனநீ எனக்கறி வித்த

வண்ணமே பெற்றிருக் கின்றேன்

இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்

எய்திய தென்செய்வேன் எந்தாய்

தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்

சிறுநெறி பிடித்ததொன் றிலையே.

- திருஅருட்பா 3503

தயவு எப்போது வரும் ?
அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.

நான் எவ்வாறு மற்றவர்களை உண்மை வழிக்கு கொண்டு வருவது ?
என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும்,
அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்;
மிரட்டிச் சொல்லுவேன்;
தெண்டன் விழுந்து சொல்லுவேன்;
அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்;
அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.
இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன்.

ஏன் எல்லா ஜனங்கள்க்கும் விண்ணப்பம் செய்ய வேண்டும் ?
அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன். ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.

நாங்கள் இப்போது நல்ல ஒழுக்கத்தில் இல்லையே ? என்ன செய்வது ? கடவுகளை அறிய வாய்ப்பு உள்ளதா?
இப்போது நீங்கள் - இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் - சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது - அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.

நாம்
ஏன் தெய்வத்தை அறிந்து கொள்ள முடியவில்லை ? காரணம் என்ன ?
சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள். ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. "தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்: ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது. ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.


"விசாரத்தை" எவ்வாறு செய்வது என்று விளக்கி கூறுங்கள் ?
அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் - இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன?
இவை முதலான அண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்?
இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் - இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்?
நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன?
கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் -
இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள்.
இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின்கணுள்ள ஜனங்கள் அதைக்குறித்து ஏளனமாக சொல்லுவார்கள். அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம். ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.

எப்போது "நிராசை" எனும் படி உண்டாகிறது ?
இப்படியே "காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் - ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் - காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா" என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலக்ஷியம் தோன்றினால், நிராசை உண்டாம், ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில், மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம் செய்கின்ற பலனாகிய "நிராசை" யென்னும்படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.

எப்போது "ஆண்டவர்" உண்மை தெரிவிப்பார் ?
இவ்விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார்.
ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை. இது முதல் - கொஞ்ச காலம் - சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.

சுவர்க்க,நரக (புண்ணிய , பாவம்) என்பது என்ன ? "சிவாயநம" ,"நமசிவாய" என்பது என்ன ?
மேலும், சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது. அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்.... நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை. இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை - எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.


ஆண்டவர் கட்டளையிட்டது எது ?
நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே, ஆண்டவர் முதற்சாதனமாக

வள்ளளார் கூறிபிப்பது(கூறுவது) என்ன?

"அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி "

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.

* தாயுமான சுவாமிகள் - கருணாகரக்கடவுள் - 7.

எது "சன்மார்க்க" காலம்?
மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

"சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது" என்பதின் விளக்கம் என்ன ?
இதற்குச் சாக்ஷியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது. அக்கொடி உண்மையில் யாதெனில்: நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது; இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

ஆண்டவர் எப்போது "உண்மையை" தெரிவிப்பார் ?
அனைவருக்கும் கோடி, கோடி பங்கு நன்மை கொடுக்கும் இடம் எது ?
ஆண்டவர் கட்டளை எது?
உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை. கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள். முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள். அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம். இஃது ஆண்டவர் கட்டளை.

எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம். இது ஆண்டவர் கட்டளை.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

8 Comments
Ramanujam jam
கேள்வி பதில் முறையில் தெள்ளத் தெளிவாக சந்தேகமின்றி அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் வகைப்படுத்தி, வெளியிட்டமைக்கு நன்றி.
தயவு.
Thursday, July 3, 2008 at 11:01 am by Ramanujam jam
Muthukumaaraswamy Balasubramanian
ஐயா பேருப தேசத்தை மிக நன்றாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். அருமை.
ஆண்டவர் எப்போது வந்து திரைகளை நீக்குவார்?ஆண்டவர் புறத்திலே வருவாரா அகத்திலே வருவாரா? கொடி அனுபவத்தில் விளங்கும் என்றார்.யாராவது அதை அனுபவித்திருக்கின்றார்களா? ஆரம்பத்தில் சைவத்தில் எனக்கு பற்று இருந்தது என்று வள்ளலார் கூறியது உண்மை என்றால் ஜாதியும் சமயமும் பொய் என்று ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி என்ற அகவல் வரியை நினைவில் கொள்ளவேண்டும்.எனக்கு அவ்வளவு அற்ப அறிவாக இருந்தது என்று கூறியது உண்மைதான் என்று நீங்களும் நம்புகின்றீர்களா? இவ்வளவுதூரம் தாங்கள் ஆய்வு செய்துள்ளதால்தான் நான் இதை எழுதத் துணிந்தேன். தயவு செய்து என்னைத் தவறாக என்னாதிர்கள் நன்றி வந்தனம்..
Thursday, April 14, 2011 at 05:04 am by Muthukumaaraswamy Balasubramanian
Durai Sathanan
Dear Vallalar Group,
My Joy knows no bound to see such a cool posting, which is simply great!

Asking any question on this posting is just like asking a question to Vallalar only. Because, this Divine Sermon came from Vallalar for our soul benefits by His Grace. So, it is always good to avoid unnecessary questions/comments on such posting. This is my humble request.

Please keep up doing more and more like this for all our soul benefits.
All Possible, Exalt Him Only!
Arut Perum Jyothi
Tuesday, March 25, 2014 at 02:09 am by Durai Sathanan
Badhey Venkatesh
good article

can anyone write details about :

1. Uyir anubhavam

2. Arul anubhavam

3. Suththa siva anubhavam

becoz these three experiences are the most important and one has to achieve to enter into chitrambalam and attain grace and triple deathless body
Tuesday, March 25, 2014 at 04:02 am by Badhey Venkatesh
Badhey Venkatesh
எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம், மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால்,

JAMAM = how many minutes or hours ?? I have this doubt for quite a long time ?? anyone knowing , pl reply
Tuesday, March 25, 2014 at 08:46 am by Badhey Venkatesh
Durai Sathanan
Here is the answer: 18 winks = 1 kashtam, 30 kashtam = 1 kala, 30 kala = 1 vinadi, 60 vinadi = 1 naazhigai / ghati = 24 minutes, 2 naazhigai / ghati = 1 muhurtha, 30 muhurtha = 1 day = 24 hours
or 60 naazhigai or 60 ghati = 1 day.

Another way is to take 'truti' as the basic unit. (Truti is the time taken for a needle to prick a lotus leaf): 60 truti = 1 prana (1 inhale + 1 exhale = 1 prana), 6 pranas = 1 vinadi, 60 vinadi = 1 naazhigai (and the rest continues as before.)

Another way of calculation is like this. 1 day = 10 jaamam.
10 jaamam = 30 muhurthas = 60 ghatis or 60 Naazhigai
1 jaamam = 3 muhurthas = 6 ghatis or 6 Naazhigai
1 jaamam = 6 x 24 = 144 minutes = 2 hours, 24 minutes.

The further division of time until the basic unit is like this.
1 ghati / naazhigai = 60 vinadi / vighati = 24 minutes, 1 vinadi = 60 lipta, 1 lipta = 60 viliptas,1 vilipta = 60 para, 1 para = 60 tatapras.
So, a day was divisible into 60 x 60 x 60 x 60 x 60 x 60 =3,60,00,000 basal units of tatapara according to Our Ancient System!

All Possible, Exalt Him Only! Anban, Durai
Tuesday, March 25, 2014 at 14:56 pm by Durai Sathanan
Durai Sathanan
Best Greetings to all!

1. Uyir anubhavam starts with the Feel of Love, Compassion, Pakthi, and then, that feel leads to do compassionate services to all to experience or attain Mukthi as the maturity of Compassion. This experience is like the pupa state of a butterfly.

2. Arul anubhavam is like the experience of the state of divine pregnancy of a Soul Or, the wakeful transition state of a Soul while it is in the state of Mukthi, by the power of unlimited Grace already developed in it, This Anubavam is like the existence of light energy and Space simultaneously and cannot be seen separately, but, they are still different. That means, the soul is still wakeful, by the nature power of unlimited Grace achieved by the soul in it by itself without getting completely dissolved in Almighty Grace. This is like the growth and development of a butterfly while it is in its pupa stage.

3. Suththa siva anubhavam: This is the Ultimate Sithi Anubavam of a Soul to live an Anaha Life like Vallalar. This state is called the state of Deathlessness or Godliness to live a blissful divine life forever. This is like an Adult Divine butterfly, who came out of its pupa(Mukthi) state by the Power of Almighty Grace, and can perform limitless divine miracles as Vallalar can perform forever.

Our human compassion needs to get developed into Limitless Grace to achieve wakefulness in Mukthi and then to attain Sithi!

All possible, Exalt Him only! Anban, Durai
Tuesday, March 25, 2014 at 15:46 pm by Durai Sathanan
Palani muthu
Very good article.
Thank you
Regards,
M.Palani
Wednesday, March 26, 2014 at 13:32 pm by Palani muthu