ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
குறிப்பு – திரு. குமரேசன் என்ற அன்பர் இணையதளத்தில் கேட்டமைக்காக இந்த விளக்க கட்டுரை மலர்ந்துள்ளது.
இதில் சுயம் ஜோதியாக இறைவன் அனாதி நிலையில் உள்ளதையும் அந்த சுயமான ஜோதி ஒளி நிலையில் இந்த பிரபஞ்சம் முழுவதும் பரந்து உள்ளது. ஒரு ஒளி மிக உயரத்தில் இருந்து பரவி வரும் பொழுது, அது அனைத்து இடங்களையும் சென்றடைவது இயற்கை. எனவே “பரம்” என்பது மிக உயரத்தில் மிளிர்கின்ற ஜோதி எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜோதி ஜோதி அருள் எனப்படுவது – இவ் உலகத்தில் அண்ட விரிவுகளையும், அதாவது பஞ்சபூதங்களாகிய வெளி, காற்று, தீ, நீர், நிலம் என்ற விரிவாகவும், அதனுட் தோன்றிய ஓரறிவு முதல் ஆறு அறிவு படைத்த மனித இனம் வரை உள்ள உயிரினங்கள் யாவையுமாக தோன்றி உள்ளதையும் குறிக்கும். அருள் என்பது ஆன்மா செயல்பட வேண்டி பிண்ட தத்துவத்தில் இறைவன் செயலாக்கம் செய்வது. பிண்ட தத்துவம் என்பது பஞ்சபூத நிலைகளின் கூட்டுப் பொருளாய் நமது கண்ணுக்குத் தெரியும் உயிரினங்களின் தூல தேகமாகும்.
ஜோதி ஜோதி சிவம் – என்பது, இந்த ஆன்ம நிலையில் உள்ள உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் மனித தேகம் பெற்று, பின் அதன் விளைவாக ஆன்ம லாபத்தை சிந்தித்து தெளிவடைந்து ஆன்மாவில் உள்ள ஐந்து மலங்களாகிய, ஆணவம், கன்மம், மாயை, மாமாயை, திரோதயம் ஆகியவற்றை நீக்கி, கடவுள் நிலையாக உணர்த்தப்படும் ‘ஒளி நிலையை’ உணர்ந்து, அம்மயமாதல். ஆக ‘சிவம்’ என்பது முற்றிலும் மலமற்றது. இதுவே இந்த உயிரினங்கள் பெறும் முழுமையான ஆன்மலாபமாகும்.
வாம ஜோதி – சோமஜோதி – வானஜோதி – ஞானஜோதி
மாகஜோதி – யோகஜோதி – வாதஜோதி – நாதஜோதி
ஏமஜோதி – வியோமஜோதி – ஏறுஜோதி – வீறுஜோதி
ஏகஜோதி – ஏகஜோதி – ஏகஜோதி – ஏகஜோதி
ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே
வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே.
என்ற இந்தப் பாடலையும், முன்பு உள்ள ஜோதி ஜோதி ஜோதி சுயம் என்ற பாடலையும் மிகவும் ஆழ்ந்து சிந்தித்தால் சில உண்மைகள் விளங்கும். இந்த நில உலகில் நமக்கு வெளிப்படையாக வாழ்வின் ஆதாரமாய் திகழ்வது ஒன்று சூரியன், சந்திரன். இதில் சூரியனுக்கு 12 கலைகள் என்பர். அதாவது சூரியன் தன்னிடம் உள்ள அருள்சக்தியை பிற உயிரினங்களுக்கு 12 நாட்களில் கொடுக்கிறது. அதில் அதிகமாக ஒளியை கிரகிக்கும் தன்மை ‘சந்திரனுக்கே’. எனவே சந்திரனுக்கு 16 கலைகள் என்பர். அமாவாசை முதல் நிலவு தான் சூரியனிடம் பெற்ற அருள்ஒளிசக்தியை இந்த உலக உயிர்களின் மீது செலுத்தும் அல்லது வாரி வழங்கும். இதில் பௌர்ணமி அன்று முழு சக்தியையும் வெளியிடும்.
இந்த யோகநிலை அனுபவத்தில் சந்திரகலை (இடதுநாசி) மூச்சு 16 அங்குலம் என்றும், சூரியகலை மூச்சு 12 அங்குலமூச்சு எனவும், அக்கினி கலை அல்லது சுழுணை சுவாசம் 8 அங்குலம் என்றும் யோகிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சந்திரகலை மூச்சில் 16 அங்குலம் உள்வாங்கி 12 அங்குலம் வெளியிடுவதால் நஷ்டம் 4.
சூரியகலையில் சுவாசத்தை 12 அங்குலம் உள் இழுத்து 10 அங்குலம் வெளி விடுவதால் நஷ்டம் 2 அங்குலம். அக்கினி கலையில் 10 அங்குலம் காற்று உள் வாங்கி, சுமார் 8 அங்குலம் வெளிவிடுவதால் நஷ்டம் 2.
யோக நிலை அனுபவத்தில் ஒவ்வொரு நிலை அனுபவமும் பெற 8 முதல் 12 வருடம் வரை ஆகும். அதற்கு நமக்கு காலம் இல்லை என பெருமான் உரைநடைப் பகுதியில் கூறியுள்ளார். எனவே இந்த ஆறு நிலைகளை கடந்து செல்வது மிகக்கடினமானதாகும். சுத்த சன்மார்க்கத்தின் அனுபவநிலை ‘கண்டத்திற்கு மேல்’ என பெருமான் கூறியுள்ளதை கருத்தில் கொண்டு, நாம் புலை, கொலை, சாதி, சமய பேதங்களைத் தவிர்த்து எவ்வுயிரையும் தம்முயிர்போல பாவிக்கும் உணர்வை வரவழைத்துக் கொண்டால் அதி சீக்கிரமாக சுத்த சன்மார்க்க அனுபவ நிலைகளுக்கு செல்லலாம். எனவே சன்மார்க்க அன்பர்கள் ஆறு நிலை அனுபவமான யோக நிலை அனுபவத்தில் முயற்சிப்பது தேவையற்றது. மனதை எப்பொழுதும் புருவ மத்தியில் வைத்துப் பழகுதல் வேண்டும். மனம் அடங்கினால் காற்றும் அடங்கும், காற்று அடங்கினால் அருள் அனுபவம் கூடும்.
இதற்கு உபாயமாக திருவருட்பா பாடல்களை மெல்லெனப்பாடுதல், தியானம், தெய்வபாவனை போன்றவை செய்தல், மேலும் உண்மையான உயிர்இரக்க உணர்வோடு ஜீவகாருண்யப் பணி செய்தாலும் அருள் நிலை அனுபவம் உண்டாகும்.
யோக நிலை அனுபவங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா என்ற ஆறு நிலைகளிலும் யோக நிலை அனுபவங்கள் ஏற்படுவது இயல்பு என சித்தர்களும், யோகிகளும் கூறியுள்ளனர். இந்த யோக நிலை அனுபவங்கள் ஒவ்வொன்றும் பல சித்துவேலைகளைச் செய்யத்தூண்டும். அப்படி சித்து வேலைகளை செய்தால் சன்மார்க்கத்தின் மேல் நிலை அனுபவமான ‘மரணமில்லாப் பெரு வாழ்வு பெற’ தடை ஏற்படும். எனவே தான் சமாதிப்பழக்கம் பழக்கம் அல்ல சகஜப்பழக்கமே பழக்கம் எனவும் பெருமான் கூறியுள்ளார். ஏனெனில் யோக நிலை அனுபவத்தில் “சமாதியில்” சென்று தான் முடிவடையும்.
*****
2 Comments
Nice Explanation.. Plz continue your service...
Endrum Anbudan..