Anandha Barathi
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - சப்பாணிப் பருவம் - பாடல் 1 - மூலமும் உரையும்
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - சப்பாணிப் பருவம்  - பாடல் 1 - மூலமும் உரையும்

வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் அல்லது வள்ளலார் பிள்ளைத்தமிழ்:

இயற்றிவர் - புலவர் மா.க. காமாட்சிநாதன் அய்யா அவர்கள்

எளிய உரை: ஆனந்தபாரதி

சப்பாணிப்பருவம் குழந்தையின் ஒன்பதாம் திங்களில் நிகழ்வதாகும். ஒன்பதாவது மாதத்தில் குழந்தை உட்காரத் தொடங்கிய பிறகு மகிழ்ச்சியால் கை கொட்டுதல், கையாட்டுதல் போன்ற விளையாட்டுகள் அதனிடம் இயல்பாகத் தோன்றும். பெற்றோரும் மற்றோரும் கைதட்டிக் காட்டி குழந்தையை அழைப்பதோடு குழந்தையையும் கை படி வேண்டுவர். குழந்தை அதற்கேற்ப " சப்" என்ற ஒலி உண்டாகும் படி "பாணி" யைக் (கையைன) கொட்டி முழக்கும். இதுவே சப்பாணிப் பருவம் ஆகும்.

குழந்தை நிமிர்ந்து அமர்ந்திருக்கும் அமைப்பை 'சப்பாணி' என்று கூறும் வழக்கம் உண்டு. அதனால் இப்பருவம் சப்பாணி என்றும், 'சக + பாணி= சப்பாணி' (சக=உடன், பாணி=கை ) இரண்டு கைகளையும் உடன் சேர்த்துக் கொட்டுதலால் சப்பாணியாயிற்று என்றும், ' ச' என்றால் சேர்த்தல் எனப் பொருள் கொண்டு, கைகளைச் சேர்த்து ஒலி எழுப்புதல் என்றும் பொருள் கொள்வர்.


பாடல் 01:


கரையிலா இன்பவா ரிதியிற் குளித்துயிர்

களுக்கன்பி லாதசமயக்

காடுகளை யறவழித் துச்சைவ நெறியாங்

கவின தருவ னூடுபோகிப்

பரவுவே தாகமத் தொலிமன யிரட்டுறப்

பண்ணொடன் புங்கலந்த

பாடல்சால் முத்தமிழ் மதம்பொழிந் தறுவகைப்

பகையரண் சிதைய நூறிப்

பரவெளியில் நாதயாழ் ஒலிசெவிப் படவுலாய்ப

பசுபேத மாம்பாடூப்

பசுரொன் றிரண்டாம் படித்தலாச் சிவபோக

பாற்கவளம் உண்டுதேக்கித்

தருதலைவன் அடிமலர்ச் சேர்கைகொள் சிவக்களிறு

சப்பாணி கொட்டியருளே!

தன்னேரி லாவருட் பிரகாச வள்ளலே

சப்பாணி கொட்டியருளே!

எளிய உரை:

கரைகாண இயலாத இன்பப்பெருங்கடலாகிய அருட்கடளில் குளித்து, உயிர்களுக்கு பேரின்ப வழியைக்காட்டாத போருற்ற சமயமாம் காடுகளை அழித்து, அழகிய நெறியாம் கருணையின் பாற்சென்று, இந்த உலகெங்கும் பரவிக்கிடக்கும் வேதாகமம் என்னும் கடின நெறியின் மன இருள் நீங்குமாறு, இனிய பண்ணோடு அன்பு கலந்த முத்தமிழ் பாடல் என்னும் மத நீர் சுரப்ப, அறுவகையாகச் (குண வேற்றுமைகள்) சொல்லப்பட்ட பல்வேறு பகை சிதைந்து போகும்படியாக,

பரவெளியில் நாதயாழ் ஒலிசெவிப்பட நடைபயின்று, உயிரின் மல இருளாகிய ஆணவ இருள் நீங்கிமாறு சிவபோதமாம் பால்சோற்றுக் கவலங்களை உண்டு என்னாலும் இப்ப நிலையில் இருந்து, அருட்பெரும் தலைவனின் அடிகளில் என்னாலும் உறையும் சிவக்களிறு போன்றவரே! சப்பாணி கொட்டியருள வேண்டும்,

தனக்கு உவமையில்லாத அருட்பிரகாச வள்ளலே! சப்பாணி கொட்டியருள வேண்டும்!