Anandha Barathi
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - சப்பாணிப் பருவம் - பாடல் 2 - மூலமும் உரையும்
வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் - சப்பாணிப் பருவம் - பாடல் 2 - மூலமும் உரையும்

வள்ளற்பெருமான் பிள்ளைத்தமிழ் அல்லது வள்ளலார் பிள்ளைத்தமிழ்:

இயற்றிவர் - புலவர் மா.க. காமாட்சிநாதன் அய்யா அவர்கள்

எளிய உரை: ஆனந்தபாரதி



பாடல் 02:

ஒன்றினொ டொன்றிரு திங்கள் கடந்திட
உறுமக வாகியபோ
துந்தையு மம்மையு முந்திந டந்துனை
ஒண்கர மேந்திடவே
அன்றவண் நின்றவர் இன்றிஃ ததிசயம்
அதிசய மென்றிடவே
அரகர சிவசிவ நமவென முனிவரர்
அகமுக மலர்ந்திடவே
என்றென நின்றொளிர் மன்றினி லன்றிறை
எழின்மிகு மொளிகண்டே
இதய மலர்ந்திட முகமும லர்ந்திட
எமதிரு வினையான
குன்றற நின்றுகை கொட்டிந கைத்துவ
கொட்டுக சப்பாணி
குலவும் அருட்பிரகாசப் பெருமலை
கொட்டுக சப்பாணி.




எளிய உரை:

வள்ளல் அருட்பிரகாசப் பெருமானே!

இராமய்யன் என்ற தவனிறை பெரியோர்க்கும், சின்னம்மை என்ற மாதரசிக்கும் நீ மகனாக அவதரித்தப் பின், ஐந்துமாதம் நிறைவுற்ற நிலையில் நின்னை அவர்கள் கரத்தில் ஏந்தியவராய் தில்லைச் சிதம்பர தரிசனம் செய்ய சென்ற அன்று,

அரகர சிவசிவ நம என்று முனிவர்கள் பலரும் அகமும், முகமும் மலர்ந்து போற்றி நிற்க, ஒளி பெருந்திய சிற்றம்பலத்தில் ஆனந்த நடமிடும் அம்பலவாணன் ஆடும் அழகியத் திருக்கோலம் கண்டு நீ புரிந்த புன்னகையைக் கண்ணுற்ற பலரும் இஃது என்னே அதிசயம், அதிசயம் என்று கூறிக்களித்திட்டனர்.

அவ்வாறு எமது இருவினையாம் பவத்தொடக்கை அறுந்து போகும் படி புன்னகைத்து
சப்பாணி கொட்டுக! எவ்விடத்தும் இயங்கும் அருட்பிரகாசப் பெருமலையே சப்பாணி கொட்டுக!