www.vallalarspace.com/durai
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்டு 27, 2017), வள்ளலார் மிசன் நடத்திய அகிலவுலக நேரலையில் இச்சிறுவன் அமெரிக்காவிலிருந்து வாசித்த அருட்பாக்கள

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

ஆறாம் திருமுறை / 001. பரசிவ வணக்கம்

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.

திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க
உலகமெலாம் விளங்கஅருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே.

குரு வணக்கம்

"அடர்மலத்தால் மருளுடைய எம்போன்ற கொடியபேரிருள்வன்நரகக்
கடவுலகத்து மடமாக்களும் கடைத்தேறித் தனிப்பெருங்கருணையினால்
சடவுடலைச் சாகாத ஒளியுடலாக்கிடவே வேகாத காலாதிகாட்டியருள
உடலூர்ப்பெரு வெளியில்சுடரும் உயிர்க்குலத்தின் துணையேநீவாழ்க." - .துரை சாத்தணன்

முதல் திருமுறை / மகாதேவ மாலை

2. உலகநிலை முழுதாகி ஆங்காங் குள்ள
உயிராகி உயிர்க்குயிராம் ஒளிதான் ஆகிக்
கலகநிலை அறியாத காட்சி யாகிக்
கதியாகி மெய்ஞ்ஞானக் கண்ண தாகி
இலகுசிதா காசமதாய்ப் பரமா காச
இயல்பாகி இணையொன்றும் இல்லா தாகி
அலகில்அறி வானந்த மாகிச் சச்சி
தானந்த மயமாகி அமர்ந்த தேவே.

4. வித்தாகி முளையாகி விளைவ தாகி
விளைவிக்கும் பொருளாகி மேலு மாகிக்
கொத்தாகிப் பயனாகிக் கொள்வோ னாகிக்
குறைவாகி நிறைவாகிக் குறைவி லாத
சத்தாகிச் சித்தாகி இன்ப மாகிச்
சதாநிலையாய் எவ்வுயிர்க்குஞ் சாட்சி யாகி
முத்தாகி மாணிக்க மாகித் தெய்வ
முழுவயிரத் தனிமணியாய் முளைத்த தேவே.

5. வேதாந்த நிலையாகிச் சித்தாந் தத்தின்
மெய்யாகிச் சமரசத்தின் விவேக மாகி
நாதாந்த வெளியாகி முத்தாந் தத்தின்
நடுவாகி நவநிலைக்கு நண்ணா தாகி
மூதாண்ட கோடியெல்லாம் தாங்கி நின்ற
முதலாகி மனாதீத முத்தி யாகி
வாதாண்ட சமயநெறிக் கமையா தென்றும்
மவுனவியோ மத்தினிடை வயங்குந் தேவே.

7. பரமாகிச் சூக்குமமாய்த் தூல மாகிப்
பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
சிரமாகித் திருவருளாம் வெளியாய் ஆன்ம
சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
திரமாகித் தற்போத நிவிர்த்தி யாகிச்
சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
அரமாகி ஆனந்த போத மாகி
ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே.

10. அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
அறிஞர்மலர் அயன்முதலோர் அனந்த வேதம்
களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
கடுந்தவத்தும் காண்பரிதாம் கடவு ளாகி
உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
ஊறுகின்ற தெள்ளமுத ஊற லாகிப்
பிளவிறந்து பிண்டாண்ட முழுதுந் தானாய்ப்
பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே.

11. வாயாகி வாயிறந்த மவுன மாகி
மதமாகி மதங்கடந்த வாய்மை யாகிக்
காயாகிப் பழமாகித் தருவாய் மற்றைக்
கருவிகர ணாதிகளின் கலப்பாய்ப் பெற்ற
தாயாகித் தந்தையாய்ப் பிள்ளை யாகித்
தானாகி நானாகிச் சகல மாகி
ஓயாத சத்தியெலாம் உடைய தாகி
ஒன்றாகிப் பலவாகி ஓங்குந் தேவே.

12. அண்டங்கள் பலவாகி அவற்றின் மேலும்
அளவாகி அளவாத அதீத மாகிப்
பிண்டங்கள் அனந்தவகை யாகிப் பிண்டம்
பிறங்குகின்ற பொருளாகிப் பேதந் தோற்றும்
பண்டங்கள் பலவாகி இவற்றைக் காக்கும்
பதியாகி ஆனந்தம் பழுத்துச் சாந்தம்
கொண்டெங்கும் நிழல்பரப்பித் தழைந்து ஞானக்
கொழுங்கடவுள் தருவாகிக் குலவுந் தேவே.

13. பொன்னாகி மணியாகிப் போக மாகிப்
புறமாகி அகமாகிப் புனித மாகி
மன்னாகி மலையாகிக் கடலு மாகி
மதியாகி ரவியாகி மற்று மாகி
முன்னாகிப் பின்னாகி நடுவு மாகி
முழுதாகி நாதமுற முழங்கி எங்கும்
மின்னாகிப் பரவிஇன்ப வெள்ளந் தேக்க
வியன்கருணை பொழிமுகிலாய் விளங்குந் தேவே.

14. அரிதாகி அரியதினும் அரிய தாகி
அநாதியாய் ஆதியாய் அருள தாகிப்
பெரிதாகிப் பெரியதினும் பெரிய தாகிப்
பேதமாய் அபேதமாய்ப் பிறங்கா நின்ற
கரிதாகி வெளிதாகிக் கலைக ளாகிக்
கலைகடந்த பொருளாகிக் கரணா தீதத்
தெரிதான வெளிநடுவில் அருளாம் வண்மைச்
செழுங்கிரணச் சுடராகித் திகழுந் தேவே.

15. உருவாகி உருவினில்உள் உருவ மாகி
உருவத்தில் உருவாகி உருவுள் ஒன்றாய்
அருவாகி அருவினில்உள் அருவ மாகி
அருவத்தில் அருவாகி அருவுள் ஒன்றாய்க்
குருவாகிச் சத்துவசிற் குணத்த தாகிக்
குணரகிதப் பொருளாகிக் குலவா நின்ற
மருவாகி மலராகி வல்லி யாகி
மகத்துவமாய் அணுத்துவமாய் வயங்குந் தேவே.

16. சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச்
சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி
அவையனைத்தும் அணுகாத அசல மாகி
இகலுறாத் துணையாகித் தனிய தாகி
எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும்
உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம்
ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே.

17. வாசகமாய் வாச்சியமாய் நடுவாய் அந்த
வாசகவாச் சியங்கடந்த மவுன மாகித்
தேசகமாய் இருளகமாய் இரண்டுங் காட்டாச்
சித்தகமாய் வித்தகமாய்ச் சிறிதும் பந்த
பாசமுறாப் பதியாகிப் பசுவு மாகிப்
பாசநிலை யாகிஒன்றும் பகரா தாகி
நாசமிலா வெளியாகி ஒளிதா னாகி
நாதாந்த முடிவில்நடம் நவிற்றும் தேவே.

21. மந்திரமாய்ப் பதமாகி வன்ன மாகி
வளர்கலையாய்த் தத்துவமாய்ப் புவன மாகிச்
சந்திரனாய் இந்திரனாய் இரவி யாகித்
தானவராய் வானவராய்த் தயங்கா நின்ற
தந்திரமாய் இவையொன்றும் அல்ல வாகித்
தானாகித் தனதாகித் தானான் காட்டா
அந்தரமாய் அப்பாலாய் அதற்கப் பாலாய்
அப்பாலுக் கப்பாலாய் அமர்ந்த தேவே.

22. மலைமேலும் கடன்மேலும் மலரின் மேலும்
வாழ்கின்ற மூவுருவின் வயங்கும் கோவே
நிலைமேலும் நெறிமேலும் நிறுத்து கின்ற
நெடுந்தவத்தோர் நிறைமேலும் நிகழ்த்தும் வேதக்
கலைமேலும் எம்போல்வார் உளத்தின் மேலும்
கண்மேலும் தோள்மேலும் கருத்தின் மேலும்
தலைமேலும் உயிர்மேலும் உணர்வின் மேலும்
தகுமன்பின் மேலும்வளர் தாண்மெய்த் தேவே.

23. பொற்குன்றே அகம்புறமும் பொலிந்து நின்ற
பூரணமே ஆரணத்துட் பொருளே என்றும்
கற்கின்றோர்க் கினியசுவைக் கரும்பே தான
கற்பகமே கற்பகத்தீங் கனியே வாய்மைச்
சொற்குன்றா நாவகத்துள் மாறா இன்பம்
தோற்றுகின்ற திருவருட்சீர்ச் சோதி யேவிண்
நிற்கின்ற சுடரேஅச் சுடருள் ஓங்கும்
நீளொளியே அவ்வொளிக்குள் நிறைந்த தேவே.

25. கோவேஎண் குணக்குன்றே குன்றா ஞானக்
கொழுந்தேனே செழும்பாகே குளிர்ந்த மோனக்
காவேமெய் அறிவின்ப மயமே என்றன்
கண்ணேமுக் கண்கொண்ட கரும்பே வானத்
தேவேஅத் தேவுக்குந் தெளிய ஒண்ணாத்
தெய்வமே வாடாமல் திகழ்சிற் போதப்
பூவேஅப் பூவிலுறு மணமே எங்கும்
பூரணமாய் நிறைந்தருளும் புனிதத் தேவே.
27. விண்ணேவிண் உருவேவிண் முதலே விண்ணுள்
வெளியேஅவ் வெளிவிளங்கு வெளியே என்றன்
கண்ணேகண் மணியேகண் ஒளியே கண்ணுட்
கலந்துநின்ற கதிரேஅக் கதிரின் வித்தே
தண்ணேதண் மதியேஅம் மதியில் பூத்த
தண்ணமுதே தண்ணமுத சார மேசொல்
பண்ணேபண் ணிசையேபண் மயமே பண்ணின்
பயனேமெய்த் தவர்வாழ்த்திப் பரவும் தேவே.

30. ஞாலமே ஞாலமெலாம் விளங்க வைத்த
நாயகமே கற்பமுதல் நவிலா நின்ற
காலமே காலமெலாம் கடந்த ஞானக்
கதியேமெய்க் கதியளிக்குங் கடவு ளேசிற்
கோலமே குணமேஉட் குறியே கோலங்
குணங்குறிகள் கடந்துநின்ற குருவே அன்பர்
சீலமே மாலறியா மனத்திற் கண்ட
செம்பொருளே உம்பர்பதஞ் செழிக்கும் தேவே.

33. காட்சியே காண்பதுவே ஞேய மேஉள்
கண்ணுடையார் கண்ணிறைந்த களிப்பே ஓங்கும்
மாட்சியே உண்மைஅறி வின்ப மென்ன
வயங்குகின்ற வாழ்வேமா மவுனக் காணி
ஆட்சியே ஆட்சிசெயும் அரசே சுத்த
அறிவேமெய் அன்பேதெள் ளமுதே நல்ல
சூட்சியே சூட்சியெலாம் கடந்து நின்ற
துரியமே துரியமுடிச் சோதித் தேவே.

40. சுழியாத அருட்கருணைப் பெருக்கே என்றுந்
தூண்டாத மணிவிளக்கின் சோதி யேவான்
ஒழியாது கதிர்பரப்புஞ் சுடரே அன்பர்க்
கோவாத இன்பருளும் ஒன்றே விண்ணோர்
விழியாலும் மொழியாலும் மனத்தி னாலும்
விழைதருமெய்த் தவத்தாலும் விளம்பும் எந்த
வழியாலும் கண்டுகொளற் கரிதாய்ச் சுத்த
மவுனவெளி யூடிருந்து வயங்கும் தேவே.

41. சொல்லொழியப் பொருளொழியக் கரண மெல்லாம்
சோர்ந்தொழிய உணர்வொழியத் துளங்கா நின்ற
அல்லொழியப் பகலொழிய நடுவே நின்ற
ஆனந்த அநுபவமே அதீத வாழ்வே
நெல்லொழியப் பதர்கொள்வார் போல இன்ப
நிறைவொழியக் குறைகொண்மத நெறியோர் நெஞ்சக்
கல்லொழிய மெய்யடியர் இதய மெல்லாங்
கலந்துகலந் தினிக்கின்ற கருணைத் தேவே.

43. வரம்பழுத்த நெறியேமெய்ந் நெறியில் இன்ப
வளம்பழுத்த பெருவாழ்வே வானோர் தங்கள்
சிரம்பழுத்த பதப்பொருளே அறிவா னந்தச்
சிவம்பழுத்த அநுபவமே சிதாகா சத்தில்
பரம்பழுத்த நடத்தரசே கருணை என்னும்
பழம்பழுத்த வான்தருவே பரம ஞானத்
திரம்பழுத்த யோகியர்தம் யோகத் துள்ளே
தினம்பழுத்துக் கனிந்தஅருட் செல்வத் தேவே.

46. உடல்குளிர உயிர்தழைக்க உணர்ச்சி ஓங்க
உளங்கனிய மெய்யன்பர் உள்ளத் தூடே
கடலனைய பேரின்பம் துளும்ப நாளும்
கருணைமலர்த் தேன்பொழியும் கடவுட் காவே
விடலரிய எம்போல்வார் இதயந் தோறும்
வேதாந்த மருந்தளிக்கும் விருந்தே வேதம்
தொடலரிய வெளிமுழுதும் பரவி ஞானச்
சோதிவிரித் தொளிர்கின்ற சோதித் தேவே.

49. பொங்குபல சமயமெனும் நதிக ளெல்லாம்
புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
செய்யவல்ல கடவுளே தேவ தேவே.

50. வான்காணா மறைகாணா மலரோன் காணான்
மால்காணான் உருத்திரனும் மதித்துக் காணான்
நான்காணா இடத்ததனைக் காண்பேம் என்று
நல்லோர்கள் நவில்கின்ற நலமே வேட்கை
மான்காணா உளக்கமல மலர்த்தா நின்ற
வான்சுடரே ஆனந்த மயமே ஈன்ற
ஆன்காணா இளங்கன்றாய் அலமந் தேங்கும்
அன்பர்தமைக் கலந்துகொளும் அமலத் தேவே.

51. மெய்ஞ்ஞான விருப்பத்தில் ஏறிக் கேள்வி
மீதேறித் தெளிந்திச்சை விடுதல் ஏறி
அஞ்ஞான மற்றபடி ஏறி உண்மை
அறிந்தபடி நிலைஏறி அதுநான் என்னும்
கைஞ்ஞானங் கழன்றேறி மற்ற எல்லாம்
கடந்தேறி மவுனவியற் கதியில் ஏறி
எஞ்ஞானம் அறத்தெளிந்தோர் கண்டுங் காணேம்
என்கின்ற அநுபவமே இன்பத் தேவே.

52. பற்றறியா முத்தர்தமை எல்லாம் வாழைப்
பழம்போல விழுங்குகின்ற பரமே மாசு
பெற்றறியாப் பெரும்பதமே பதத்தைக் காட்டும்
பெருமானே ஆனந்தப் பேற்றின் வாழ்வே
உற்றறியா தின்னுமின்னும் மறைக ளெல்லாம்
ஓலமிட்டுத் தேடநின்ற ஒன்றே ஒன்றும்
கற்றறியாப் பேதையேன் தனக்கும் இன்பம்
கனிந்தளித்த அருட்கடலே கருணைத் தேவே.
55. பேராய அண்டங்கள் பலவும் பிண்ட
பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின்
வாராய பலபொருளும் கடலும் மண்ணும்
மலையுளவும் கடலுளவும் மணலும் வானும்
ஊராத வான்மீனும் அணுவும் மற்றை
உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை
ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம்
அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே.

56. கற்பங்கள் பலகோடி செல்லத் தீய
கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்
பொற்பறமெய் உணவின்றி உறக்க மின்றிப்
புலர்ந்தெலும்பு புலப்படஐம் பொறியை ஓம்பி
நிற்பவருக் கொளித்துமறைக் கொளித்து யோக
நீண்முனிவர்க் கொளித்தமரர்க் கொளித்து மேலாம்
சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்
திருவாளர் உட்கலந்த தேவ தேவே.

57. மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
மதித்திடினும் புலம்பிடினும் வாரா தென்றே
கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
விட்டகன்று கருமமல போதம் யாவும்
விடுத்தொழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
சுட்டகன்று நிற்கஅவர் தம்மை முற்றும்
சூழ்ந்துகலந் திடுஞ்சிவமே துரியத் தேவே.

67. பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற
பூரணசிற் சிவமென்றும் போதா னந்த
மதுவென்றும் பிரமமென்றும் பரம மென்றும்
வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும்
இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா
இருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின் றோரை
விதுவென்ற141 தண்ணளியால் கலந்து கொண்டு
விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே.

69. என்னுயிர்நீ என்னுயிர்க்கோர் உயிரும் நீஎன்
இன்னுயிர்க்குத் துணைவனீ என்னை ஈன்ற
அன்னைநீ என்னுடைய அப்ப னீஎன்
அரும்பொருள்நீ என்னிதயத் தன்பு நீஎன்
நன்னெறிநீ எனக்குரிய உறவு நீஎன்
நற்குருநீ எனைக்கலந்த நட்பு நீஎன்
தன்னுடைய வாழ்வுநீ என்னைக் காக்குந்
தலைவன்நீ கண்மூன்று தழைத்த தேவே.

70. தானாகித் தானல்ல தொன்று மில்லாத்
தன்மையனாய் எவ்வெவைக்குந் தலைவ னாகி
வானாகி வளியனலாய் நீரு மாகி
மலர் தலைய உலகாகி மற்று மாகித்
தேனாகித் தேனினறுஞ் சுவைய தாகித்
தீஞ்சுவையின் பயனாகித் தேடு கின்ற
நானாகி என்னிறையாய் நின்றோய் நின்னை
நாயடியேன் எவ்வாறு நவிற்று மாறே.

73. அன்னையினும் பெரிதினிய கருணை ஊட்டும்
ஆரமுதே என்னுறவே அரசே இந்த
மன்னுலகில் அடியேனை என்னே துன்ப
வலையிலகப் படஇயற்றி மறைந்தாய் அந்தோ
பொன்னைமதித் திடுகின்றோர் மருங்கே சூழ்ந்து
போனகமும் பொய்யுறவும் பொருந்தல் ஆற்றேன்
என்னைஉளங் கொள்ளுதியோ கொள்கி லாயோ
என்செய்வேன் என்செய்வேன் என்செய் வேனே.

75. மத்தேறி அலைதயிர்போல் வஞ்ச வாழ்க்கை
மயலேறி விருப்பேறி மதத்தி னோடு
பித்தேறி உழல்கின்ற மனத்தால் அந்தோ
பேயேறி நலிகின்ற பேதை யானேன்
வித்தேறி விளைவேறி மகிழ்கின் றோர்போல்
மேலேறி அன்பரெலாம் விளங்கு கின்றார்
ஒத்தேறி உயிர்க்குயிராய் நிறைந்த எங்கள்
உடையானே இதுதகுமோ உணர்கி லேனே.

76. மதியணிந்த முடிக்கனியே மணியே எல்லாம்
வல்லஅருட் குருவேநின் மலர்த்தாள் வாழ்த்திக்
கதியணிந்தார் அன்பரெலாம் அடியேன் ஒன்றும்
கண்டறியேன் கருமத்தால் கலங்கி அந்தோ
பொதியணிந்து திரிந்துழலும் ஏறு போலப்
பொய்யுலகில் பொய்சுமந்து புலம்பா நின்றேன்
துதியணிந்த நின்னருளென் றனக்கு முண்டோ
இன்றெனிலிப் பாவியேன் சொல்வ தென்னே.

79. வன்கொடுமை மலநீக்கி அடியார் தம்மை
வாழ்விக்குங் குருவேநின் மலர்த்தாள் எண்ண
முன்கொடுசென் றிடுமடியேன் தன்னை இந்த
மூடமனம் இவ்வுலக முயற்சி நாடிப்
பின்கொடுசென் றலைத்திழுக்கு தந்தோ நாயேன்
பேய்பிடித்த பித்தனைப்போல் பிதற்றா நின்றேன்
என்கொடுமை என்பாவம் எந்தாய் எந்தாய்
என்னுரைப்பேன் எங்குறுவேன் என்செய் வேனே.

84. கூம்பாத மெய்ந்நெறியோர் உளத்தே என்றும்
குறையாத இன்பளிக்கும் குருவே ஆசைத்
தாம்பாலே யாப்புண்டு வருந்தி நாயேன்
தையலார் மையலெனும் சலதி ஆழ்ந்து
ஓம்பாமல் உவர்நீருண் டுயங்கு கின்றேன்
உன்னடியர் அக்கரைமேல் உவந்து நின்றே
தீம்பாலுஞ் சருக்கரையுந் தேனும் நெய்யும்
தேக்குகின்றார் இதுதகுமோ தேவ தேவே.

86. எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட
என்னரசே என்குருவே இறையே இன்று
மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல
மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே
தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய்
தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய்
அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே
அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ.

87. தீவினைநல் வினையெனும்வன் கயிற்றால் இந்தச்
சீவர்களை ஆட்டுகின்ற தேவே நாயேன்
ஏவினைநேர் கண்மடவார் மையற் பேயால்
இடருழந்தும் சலிப்பின்றி என்னே இன்னும்
நாவினைஎன் பால்வருந்திக் கரண்டு கின்ற
நாய்க்கும்நகை தோன்றநின்று நயக்கின் றேனான்
ஆவினைவிட் டெருதுகறந் திடுவான் செல்லும்
அறிவிலிக்கும் அறிவிலியேன் ஆன வாறே.

88. எம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான்
ஏதுமறி யாச்சிறியேன் எனைத்தான் இங்கே
செம்புனலால் குழைத்தபுலால் சுவர்சூழ் பொத்தைச்
சிறுவீட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ
கம்பமுறப் பசித்தழலுங் கொளுந்த அந்தக்
கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து
வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம்
மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய்.

92. வருகணத்து வாழ்ந்திடுமோ விழுமோ இந்த
மலக்கூடென் றறிஞரெலாம் வருந்தக் கேட்டும்
அருகணைத்துக் கொளப்பெண்பேய் எங்கே மேட்டுக்
கடைத்திடவெண் சோறெங்கே ஆடை யெங்கே
இருகணுக்கு வியப்பெங்கே வசதி யான
இடமெங்கே என்றுதிரிந் திளைத்தேன் அல்லால்
ஒருகணத்தும் உனைநினைந்த துண்டோ என்னை
உடையானே எவ்வகைநான் உய்யும் மாறே

94. தம்மைமறந் தருளமுதம் உண்டு தேக்கும்
தகையுடையார் திருக்கூட்டம் சார்ந்து நாயேன்
வெம்மையெலாம் தவிர்ந்துமனங் குளிரக் கேள்வி
விருந்தருந்தி மெய்யறிவாம் வீட்டில் என்றும்
செம்மையெலாம் தரும்மௌன அணைமேற் கொண்டு
செறிஇரவு பகலொன்றும் தெரியா வண்ணம்
இம்மையிலே எம்மையினும் காணாச் சுத்த
இன்பநிலை அடைவேனோ ஏழை யேனே.

98. எண்ணியநம் எண்ணமெலாம் முடிப்பான் மன்றுள்
எம்பெருமான் என்றுமகிழ்ந் திறுமாந் திங்கே
நண்ணியமற் றையர்தம்மை உறாமை பேசி
நன்குமதி யாதிருந்த நாயி னேனைத்
தண்ணியநல் அருட்கடலே மன்றில் இன்பத்
தாண்டவஞ்செய் கின்றபெருந் தகையே எங்கள்
புண்ணியனே பிழைகுறித்து விடுத்தி யாயில்
பொய்யனேன் எங்குற்றென் புரிவேன் அந்தோ.

99. அன்பர்திரு வுளங்கோயி லாகக்கொண்டே
அற்புதச்சிற் சபையோங்கும் அரசே இங்கு
வன்பரிடைச் சிறியேனை மயங்க வைத்து
மறைந்தனையே ஆனந்த வடிவோய் நின்னைத்
துன்பவடி வுடைப்பிறரில் பிரித்து மேலோர்
துரியவடி வினனென்று சொன்ன வெல்லாம்
இன்பவடி வடைந்தன்றே எந்தாய் அந்தோ
என்னளவென் சொல்கேனிவ் வேழை யேனே.

ஆறாம் திருமுறை / 007. நான் ஏன் பிறந்தேன்

1. குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.
9. இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.
10. காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக்
களிப்பினிலும் சிறந்துமிகக் களித்துநிறை கின்றேன்
நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்
நெடுந்தூரம் ஆழ்ந்துதவாப் படுங்கிணறு போல்வேன்
ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்
அச்சமிலேன் நாணமிலேன் அடக்கம்ஒன்றும் இல்லேன்
கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
குறிப்பறியேன் மன்றில்நடங் குலவுகுல மணியே

ஆறாம் திருமுறை / 013. திருவருள் விழைதல்

8. தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும்
சாமியும் பூமியும் பொருளும்
சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும்
சுற்றமும் முற்றும்நீ என்றே
சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின்
திருவுளம் தெரிந்ததே எந்தாய்
நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல்
நீதியோ நின்அருட் கழகோ.

ஐந்தாம் திருமுறை / 001. சித்தி விநாயகர் பதிகத்திலிருந்து

உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே
கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை
வெள்ளம்உண் டிரவுபகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும்
விள்ளல்இல் லாமல் கலப்பனோ அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய தனிப்பெரும் கருணைப்பெரும்பதியே.

ஆறாம் திருமுறை / 003. அருட்பெருஞ்சோதி அட்டகம்

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்
தருட்பெருந் தலத்துமேல் நிலையில்
அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்
அருட்பெருந் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே
அருட்பெருஞ் சித்திஎன் அமுதே
அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

முதல் திருமுறை / மகாதேவ மாலை
101. அருளுடைய பரம்பொருளே மன்றி லாடும்
ஆனந்தப் பெருவாழ்வே அன்பு ளோர்தம்
தெருளுடைய உளமுழுதும் கோயில் கொண்ட
சிவமேமெய் அறிவுருவாம் தெய்வ மேஇம்
மருளுடைய மனப்பேதை நாயி னேன்செய்
வன்பிழையைச் சிறிதேனும் மதித்தி யாயில்
இருளுடைய பவக்கடல்விட் டேறேன் என்னை
ஏற்றுவதற் கெண்ணுகஎன் இன்பத் தேவே
ஆறாம் திருமுறை / 013. திருவருள் விழைதல்

ஆறாம் திருமுறை / 013. திருவருள் விழைதல்

வந்தருள் புரிக விரைந்திது தருணம்
மாமணி மன்றிலே ஞான
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
சுத்தசன் மார்க்கசற் குருவே
தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
தனிஅருட் சோதியை எனது
சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
செய்வித் தருள்கசெய் வகையே.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

Audio: