www.vallalarspace.com/durai
"தீபாவளி"என்பது "தீபம் + ஆவளி"
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்

மனுரூபம் உடையவர் எல்லாம் மனிதரல்லர்
மனிதாபி மானம் உடையவரே மனிதனாவர்
மனதை இதமாக்கிக் கொண்டவரும் மனிதர்
மனதை இதயத்தே நிறுத்தியவரும் மனிதரே!

இதம்புரி மனம் கொண்டார் மனிதர்
இனிய மனம் கொண்டாரும் மனிதர்
இரக்க குணம் கொண்டாரும் மனிதர்
இன்சொல் அன்பர் எலாம் மனிதரே!

மனிதமனம் இதயத்திலிருந்து கீழேசென்றால் நாசமே
மனிதமனம் இதயத்திலிருந்து மேலேசெல்வதே விசேசம்
நாசமனம் கொண்டார்அவர் நரகனாகிப்பின் நீசனாவரே
விசேசமனம் கொண்டார் புனிதராகிப்பின் ஈசனாகலாமே.

உட்காமர் வெங்கோபர் கனலோபர் கடுமோகர்
துன்மதர் ஏமம்அறு வன்மாச்சரியர் கொலைஎன்று
இயம்புபாதகர் இவ்வெழுவரும் இன்னும் பற்பலவாய்
இவர்களுக்கு உற்ற உறவானவர்களெல்லாம் நரகரே.

நிலைஉறும் நிராசைஉடையார் நெறிபெறும் உதாரகுணத்தார்
மலைவறு நிராங்காரர் சுத்தமனத்தையே நல்ஏவலாய்க் கொண்டார்

நிகழ்சாந்த நிறைவானஉள்ளகத்தார் மருள்நீங்கிய அருள்உடையார்
வருசகல கேவலம்இலாத இடத்தே சுத்தஆன்மஅறிவாளரே புனிதர்.

தேகமலத்தை நரகல்என்பார் அதுனாலே புறமொடு
அகமலமுடைய மனிதரே நரகலுடைய நரகர்ஆனார்
எப்படிச்சூரிய ஒளிவரும்போது புறஇருள் விலகுமோ
அப்படியேநம் அகவொளியால் அகஇருளும் விலகும்.

இதயத்தை இதமாக்கிக் கொண்டு வாழும்மனிதர்
அகிலத்தில் இதம்புரி மனம்கொண்டு மலரும்போது
உதயத்தில் சூரியனும் வியக்கும் தீபஆவளியாய்ப்
பயணித்து உயிர்குலம் மகிழும் புனிதர்ஆகின்றார்.

"தீபாவளி"என்பது "தீபம் + ஆவளி" ஆகும்இதனில்
'ஆவளி'என்பது வரிசை அல்லது அணிவகுப்பாகும்
'தீபஆவளி' என்பதையே 'தீபாவளி' என்கின்றோம்
'தீபஆவளி' என்பது தீபங்களின் அணிவகுப்பேயாம்.

புறத்தீபங்களின் அணிவகுப்பு பயனற்றது அறிவோமாக
அகத்தீபங்களின் அணிவகுப்பே ஒப்பற்றது அருள்மெய்த்
தீபங்களின் அணிவகுப்பு நமதுஅகத்தின் அகத்திலிருந்து
தீபஆவளியாய் எங்கும்வியாபித்து அனகமாதல் வேண்டும்.

நம்அகத்தின் அகமிருந்து நாம்அனகமாய் ஒளிரும்போது
நம்அகத்தின் அகமிருந்து வெளிப்படும் நம்தீபஆவளியில்
பரிவுஒளி தயவுஒளி அன்புஒளி ஆன்மநேயஒளிஅருள்ஒளி
அறிவுஒளி பேரின்பஒளிகளெல்லாம் அணிவகு பிரகாசமே.

அகத்திலும் புறத்திலும் அசுத்தம்முடையாரே நரகர்
அகத்திலும் புறத்திலும் சுத்தம்முடையவரே புனிதர்
மனிதர் நரகர் நிலையிலிருந்து புனிதர்ஆகமுடியும்
புனிதர் ஆவதின் புறக்கொண்டாட்டமே நம்தீபாவளி.

இந்தத் தீபாவளித்திருநாள் முதலாய் இவ்அகிலத்தே
இன்பநம் அகத்தகத்தின் இயற்கைப் பூரணஒளியால்
வன்எதிர்மறை நரகக் குணங்களெலாம் மரிக்கட்டும்
நன்நேர்மறைப் புனித குணங்களெலாம் ஒளிரட்டும்!

நீள்வளமோடு வாழ்வாங்கு நீடூழி வாழி!

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All are Possible with Almighty, I swear
Exalt HIM in the Sanctum only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss
Let the Grace-Feet reign Grace-Rule

நன்றி! வணக்கம்! சுபம்!

ஆன்ம நேயம்மிகும்,
அன்பன் துரை சாத்தணன்