DAEIOU - தயவு
22.2.09 ஞாயிறு-சென்னையில் இன அழிப்புக்கு எதிரான இந்தியர்கள்-பேரணி.

இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்.

வரவிருக்கும் 22.2.2009 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மாலை 4.00 மணி அளவில், சென்னை கடற்கரையில் எல்லா சமய, மத அமைப்புக்கள் சேர்ந்து இலங்கையில் நடைபெறும் மனித இனப் படுகொலையினைக் கண்டித்து, ஒரு பேரணி நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை கீழ்க்கண்டவர்கள் செய்து வருகின்றனர்.

1. டாக்டர் திரு எழிலன், சென்னை.
2. அருட்திரு ஜெகத் கஸ்பார், சென்னை
3. திரு சரவணன், சென்னை.

இப் பேரணியில், ராமகிருஷ்ண மடம் மற்றும் கிறிஸ்துவ அமைப்புக்கள் சென்னையில் உள்ள பல்வேறு சமய, மத அமைப்புக்கள் எல்லாம் பங்கேற்க உள்ளன. இதற்கான முன்னேற்பாட்டுக் கூட்டம் சென்னையில் கடந்த 14.2.2009 அன்று நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.

அமைதிப் பேரணி கடற்கரையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இருந்து புறப்பட்டு, காந்தி மண்டபம் வரை அமைதியான முறையில் நடை பயணமாக சென்று வரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காவல் துறை அனுமதி கிடைப்பதைப் பொறுத்து, புறப்படும் இடம் முடிவு செய்யப்படும்.

இந்த அமைதிப் பேரணியில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் சர்வ சமய, மத அமைப்புக்கள் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன.

ஓரறிவுத் தாவரமான, பயிர் வாடியதையே காணச் சகியாது, தாம் வாடியவர் திரு அருட்பிரகாச வள்ளலார். 64 லட்சம் சர, அசர பேத நிலைப் பிறப்புக்கள் எல்லாம் தாண்டி, அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் பேரருட் பெருங்கருணையினால், ஆறாவது அறிவுடன் கூடிய இந்த மனிதப் பிறப்பு வழங்கப் பெற்றுள்ளோம்.

மனித குலம், சிரநடுப் பகர வடிவக் குழியில் இருக்கும் இறைவனை மன்னி எப்போதும் அவருடனே கூடி இருந்து கொண்டு அனக வாழ்வு வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைப்பிடித்தால், இறை நிலையினை இந்தப் பிறவியிலேயே அடையலாம் என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியவர் வள்ளற் பெருமானார்.

அத்துடன் நில்லாமல், தாமே அந் நிலை நின்று வாழ்ந்து காட்டி, பஞ்சகிருத்தியம் என்னும் ஐந்தொழிற் காரியப்பாடுகள் செய்யும் வல்லமை பெற்றவர். மனித வடிவிலே பிறந்த அவர், ஒழுக்க நெறி நின்று, தயவும் கருணையையுமே தமது வடிவமாக்கிக் கொண்டதால், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருட் பெருங்கருணையினால், திரு அருட்பிரகாசர் ஆனார். சிற்சபையையும், பொற்சபையையும் சொந்தமானதாக்கி, யாவுந் தானாய் நின்றார்.

மனித குலம், உண்மை ஒழுக்க நெறி முறைகளைக் கடைப்பிடிக்காமல், தமது கண் முன்பாக இறந்து, இறந்து ஒழிகின்ற நிலையினை அவர் பார்த்தார்.

மனித குலம் மேம்பட வேண்டும்..இறை மயமாக வேண்டும்..என்றால், அவர்கள் சுத்த சன்மார்க்க நெறியில் நின்று, ஜீவகாருண்ய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு இந்த மனித உடல் தான் மூல ஆதாரமாக விளங்குவது. ஏனைய பிறவிகளில் விளங்காத உண்மைகள், தன்னைப் பற்றிய உண்மைகள், இறைவனைப்பற்றிய உண்மைகள், எல்லாம் விளங்குவதற்கு, மனம் என்ற சிறப்புப் புலன் அமைந்த இந்த மனித தேகம்தான் என்ற முறையில், ஜீவ தேகங்களே கடவுளது ஆலயங்கள் என்று சொல்லி வைத்தார். அப்படி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையினால் கிடைக்கப் பெற்ற இந்த தேகத்தை ஒவ்வொரு சன்மார்க்கியும், பொன்போல் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பரனளித்த இந்த தேகத்தை எரிக்கக் கூடாது அஜாக்கிரதை காரணமாக இந்த தேகத்தை மண்ணில் விட்டுச் சென்றவர்களின் உடலினைப் புதைக்க வேண்டும் என வலியுறுத்தியவர். இறந்தவர்களின் உடலை சமாதி செய்வதையே அவர் சொல்லிச் சென்றுள்ளார். சமாதி வற்புறுத்தலுக்காகவென்றே 10 பாடல்கள் பாடியவர் திரு அருட்பிரகாசர்.

பிற உயிர்கள் துன்பப் படுவதை சகியாமல்,. திரு அருட்பாவில் அவர் பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.

அவற்றில் ஒரு சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணிநல் இன்புறச் செயவும்
அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை அகற்றியே அச்சநீக் கிடவும்
செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி
ஒவ்வுறு களிப்பால் அறிவுறா திங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.

(திரு அருட்பா 6ந் திருமுறை-பிள்ளைச் சிறு விண்ணப்பம். பாடல்.18)

கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்.

(திரு அருட்பா 6ந் திருமுறை-பிள்ளைச் சிறு விண்ணப்பம், பாடல் 22)

மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோ திசைத்தபோ தெல்லாம்
நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கநல் வர்ந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.

(திரு அருட்பா 6ந் திருமுறை-பிள்ளைச் சிறு விண்ணப்பம் பாடல்.23)

உடலைப் பேணி வைத்துக் கொள்ளாமல் மக்கள் தமது அஜாக்கிரதையினால் இறப்பதையே சகித்துக் கொள்ளாத திரு அருட்பிரகாசர், மனித உயிர்கள் இலங்கையில் கொல்லப் படுவதை எப்படி சகிப்பார் ?

அதிலும், சுத்த சன்மார்க்க காலமான இந்த காலத்தில், ஐந்தொழிலும் தன் கைவசம் வைத்திருப்பவர், திரு அருட்பிரகாசர் தான். மனித உயிர்கள் மேம்பட்டு, இறை நிலை அடைய வேண்டும் என்பதற்காக உபதேசம் செய்தவர், மனித குலம் .. படைக்கப் பட்டதன் நோக்கம் நிறைவேறுவதற்கு ஏற்படும் தடைகளைக் கண்டு சிறிதும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்.

சிங்கப்பூரில் பல இடங்களில், குறிப்பாக (Accident prone areas like Railway Stations etc.,) மனித உயிர் விலை மதிப்பற்றது என்பதை பொது மக்கள் அனைவரும் அறியும் விதத்தில் விளம்பரப் பலகைகளின் மூலம் குறித்து வைத்துள்ளனர். விபத்து ஏற்பட்டு மனித உயிர் அழிவதைத் தடுப்பதற்காகத்தான் இந்த வாசகத்தை பல இடங்களில் அந்த நாட்டில் எழுதி வைத்துள்ளனர்.

கடந்த 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில், ஜோதி முருகன் அய்யா இலங்கை சென்றிருந்த போது தாம் தங்கியிருந்த இடத்தில், இரவு நேரம் கழிந்தபின், விடிந்து எழுந்திருத்தால், வெளியே பொது மக்கள் பேசிக் கொள்வதெல்லாம், இன்று எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதைப் பற்றித்தான் என்று சொல்லுவார்.

இதுதான் காலையிலே என்றனக்கே கிடைத்த பெருங் களிப்பா .... ? என்று அவர் அப்போதே உள்ளம் குமுறினார்.

அதிலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் வீடு திரும்பும் வரையில் பெற்றோர் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் .. பயிலச் சென்ற குழந்தைகள், உயிருடன் திரும்புவார்களா .. என்ற சந்தேகமான நிலை அங்கு அப்போதே நிலவியது என்பார்.

பயம் பூச்சியமாக வேண்டும் என்றார் வள்ளலார். ஆனால், இலங்கையில் வாழும் தமிழ் மக்களிடம்… ஒவ்வொரு கணமும்…. பயமே வாழ்க்கை ஆகிவிட்ட நிலையை திரு அருட்பிரகாசர் எங்ஙனம் சகித்துக் கொள்வார் ?

வள்ளற் பெருமானின் கொள்கை வழியில் செயல்படும் பல்வேறு சன்மார்க்க சங்கங்களும், இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை வன்மையாக கண்டித்து வருகின்றன.

இந்த பேரணியில், சென்னையில் இயங்கி வரும் பல்வேறு சன்மார்க்க சங்கங்களும் தங்களது அணியினரை ஈடுபடுத்தத் தீர்மானித்துள்ளனர்.

எனவே, இந்த செய்தியை இணைய தளத்தில் காணும் அன்பர்கள், தாம் சார்ந்துள்ள சன்மார்க்க சங்கங்களுக்குத் தகவல் சொல்லி, சன்மார்க்க அன்பர்களை, சென்னையில் எந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் என்பதைத் தெரிவிக்கும் வண்ணம், பேனர்களைத் தாங்கி, இந்த இயக்கம் நடத்தும் பேரணியில் 22.2.2009 அன்று கலந்து கொள்ள வேண்டியது.

அமைதியான முறையில், இந்தப் பேரணியில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை அவர்கள் தெரிவிக்க வேண்டியது.

மேலும் விவரங்கள் அறிய, கீழ்க்காணும் சன்மார்க்க அன்பர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

திரு வளவன், போரூர் (சன்மார்க்கச் சான்றோர்)… 94440 – 00063.

திரு பாலகிருஷ்ணன், வில்லிவாக்கம் (சன்மார்க்க அன்பர்) .. 98405 – 59111.

2 Comments
Ramanujam jam
செய்தியின் தொடர்ச்சி .. ..
இந்தப் பேரணியில் சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற விதத்தில், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அன்பர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள், 16.2.2009 அன்று, கீழ்க்காணும் சன்மார்க்க சங்கங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
1) குரோம்பேட்டை சன்மார்க்க சங்கம்.
2) திரு.வி.க நகர் சன்மார்க்க சங்கம்.
3) வியாசர்பாடி சன்மார்க்க சங்கம்.
4) பாடிய நல்லூர் சன்மார்க்க சங்கம்.
5) பொன்னேரி சன்மார்க்க சங்கம்
6) நெசப்பாக்கம் சன்மார்க்க சங்கம்.
7) M.G.R. நகர் சன்மார்க்க சங்கம்
8) Dr.ஹுசேன் அவர்கள், வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம்.
இது போன்று இந்த இணைய தளத்தில் இச் செய்தியினப் பார்க்கும் எல்லா அன்பர்களும், சென்னையிலும், அதன் சுற்றுப் புறத்திலும் இருந்து சன்மார்க்க அன்பர்களைத் திரட்டி, 22.2.2009 ஞாயிறு அன்று கடற்கரைச் சாலையில் நடைபெற உள்ள பேரணியில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
Monday, February 16, 2009 at 21:30 pm by Ramanujam jam
Ramanujam jam
Today, 23.2.2009, Thiru Balakrishnan of Villivakkam, Chennai
phoned up and said that even though information was passed
on to many Sanmarga Associations functioning at Chennai
to particiate in the procession that was arranged against the
killing of Tamils at Sri Lanka. just only 20 members alone from
various Sanmarga Associations of Chennai Corporation and its
surrounding participated in the procession.
This was the sorry state of affiar prevailed . about the Sanmarga
Anbargal..
There was heavy crowd ..from the side of PoojyaShree Ravi
Shankarji group and others .. Christianity people and Ramakrishna
Sangam etc.,who participated in the procession on 22.2.2009.
So, with the participation of just 20 persons from Sanmaga
Associations at Chennai, the grace of Vallal Peruman is needed
to stop the killings of anybody (not only Tamils) at Sri Lanka
at this juncture of time.
Daeiou Team. Madurai.
Monday, February 23, 2009 at 06:33 am by Ramanujam jam