Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.
சுவாமி சரவணானந்தா.
(12)
389. மண்கணச் சக்திகள் வகைபல பலவும்
390. அண்கொள வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) கணம் என்பது பலவின் கூட்டம். இந்த உலகின் புறத்தோற்ற நிலையில் எத்தனை எத்தனைவிதமான மண்பகுதிகள் காணப்படுகின்றன. இந்த மண்ணின் பலவாகிய தொகுதிகள் அங்கங்கு கூடி விளங்கக் காண்கின்றோம். இந்தப் புறத் தோற்றங்களுக்கு அடிநிலையாக உள்ளவை மண்ணின் இயல், உரு, ஒளி நிலையாம். ஆகவே, இந்த இயல், உரு, ஒளி, கணம் ஆகிய நான்கும் மண்ணின் அகம், அகப் புறம், புறம், புறப் புறம் ஆகிய நான்கிடங்களில் அமைந்து தத்தம் சக்திகளை வெளிப்படுத்தி விரிக்கின்றனவாம். அப்படி விரிக்கின்றதாலேதான் நம் புறஉலகில் மண்ணியல் மாண்பெல்லாம் கண்டும், பயன் கொண்டும் அனுபவிக்க முடிகின்றதாம்.
மனிதவாழ்வில், மனிதப் புறத்தோற்ற நிலையில் இந்த மண்கணச் சக்திளால்தான், பலப்பலவாகிய தோற்றங்கொண்டு, உலகின் பற்பல பகுதிகளில் இருந்து வாழ்ந்து வருகின்றார்கள் மக்கள் சமூகத்தினர். மண்கண சக்தி அல்லது மண்திரள் தொகுதிகள் போல், மக்கள் சமூகங்களின் திரள்கள் உலகில் விளங்குகின்றன. மண்கூறு முழுதும் சேர்ந்து இந்த நிலவுலகம் ஆகித்திகழ்கின்றதுபோல், மக்கள் சமூகங்கள் முழுவதும் சேர்ந்து ஒன்றாகிய உலக மக்கட்சமுதாயமாக இருக்கின்றதாம். அகப் பக்குவத்தால், ஆன்மநேய உரிமை கொண்டு வாழ்ந்து பெருநலம் காணவே, திருவருள் இப்படி உலகை அமைத்துள்ளது என்னும் கருத்தே இந்த இரண்டடிகளின் மூலம் அறியக் கிடக்கின்றதாம். இங்கு, மண்கணச் சக்திகள் வகை பலபலவும் அமைத்து, “அண்கொள” என்ற குறிப்பு, அக ஆன்ம ஞானத்தால், அண்டி ஆன்மஉறவு கொள்ளவும், அண்ணத்தின் மேல்வளர் அருள்ஒளியிற் கலந்துகொண்டு அதுவாகி, அருளொடு வாழ என்பதையும் சுட்டுவதாகவும் கொள்ள முடிகின்றதாம்.
(13)
391. மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
392. அண்ணுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) சக்தி அல்லது ஆற்றல் தனித்து இருக்கமுடியாது. அது ஒன்றினை ஆதாரமாய்க்கொண்டுதான் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். சக்தியைக் கொண்டுள்ளவை சத்தர்கள் ஆம். இவ்வுலகத்தில் உள்ள மண்ணான பொருள்கள் எல்லாமுமே மண்ணிலையின் பலவாகிய ஆற்றல்களை யுட்கொண்டு விளங்கும் பலவாகிய சத்தர்களாகக் கூறப்படுகின்றன.
மக்கள் உலகில் பலரும், பலவாகிய, கரண இந்திரிய, ஜீவ ஆன்ம ஆற்றல் கொண்டு வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் எல்லாம் தம்மைத் தேக வடிவினராகத்தான் கருதிக்கொண்டுள்ளனர். ஆன்மஞானியும்கூட அழிவுறு மனிதவடிவில் இருக்கும் அவ் ஆன்மாவைத் தன் உண்மை உரு அல்லது சுயரூபம் எனப் பாவனையாற் பற்றிநின்று ஆன்மசக்தியும் ஓரளவு பெற்று அற்புதசித்தி புரிய வல்லவனாக இருக்கின்றான். இந்த ஞானியையும், ஏனை யோரையும் அவரவர்கள் கொண்டுள்ள ஆற்றல்களையும் வைத்து ஒவ்வொருவரையும் சத்தர்கள் என்று குறிப்பிடலாகும். இந்தச் சக்தி, சக்தர்களின் இயல்முற்றும் மண்ணிலை நின்று கண்டு கொள்ளப்படுவனவே. இவ்வளவையுங் கடந்து அருணிலையுற்று யாவரையும் அருட்ஜோதியின் கூறாகவே கண்டு அன்பு செய்து, இன்புற அமைத்ததே இவ்வமைப்பு என்பது அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
(14)
393. மண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா
394. அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) புறத்தேகம் மண்கூறு என்பதை முன்பே அறிந்துள்ளோம். இதனால் இந்தக் கருப்பிண்ட வடிவம், மண்கரு என்றே இங்கு குறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கரு உயிர்த்தொகை, நால்வகை யோனி, ஏழ்வகைத் தோற்றங்களில் அடங்குவனவாம். நால்வகை யோனி ஆவன: 1. சராயுஜம் (கருப்பையில் தோன்றுவன) 2. உற்பீஜம் (விதைகளில் தோன்றுவன) 3. அண்டஜம் (முட்டையில் தோன்றுவன) 4. சுவேதஜம் (வியற்வை அழுக்கில் தோன்றுவன) மேலும், உயிரினங்களை எழுவகைத் தோற்றங்களில் அறிவு விளக்கமுறையில் பிரித்துள்ளனர். அவை எல்லாம் ஓரறிவுப் புல்பூண்டுகள் முதல் ஆறறிவு மனிதனும், மேல் தேவநிலைப்பிறவி யொன்றுமாக ஏழ் பிறப்பு என்றல் வழக்கு. இப்படியுள்ள வகைகள் ஒவ்வொன்றிலும், பலபலவான தொகையும் விரிவுகளும் உளவாம். நால்வகை யோனி, ஏழ்வகைப் பிறவி, எண்பத்து நான்கு லட்ச ஜீவ பேதத்தோற்றங்கள் என்பர். இவைகளிலும் உட்பிரிவுகளாகவும், புதியனவாகவும், சேர்க்கைமுறையிலும் இன்னும் எத்தனையோ தோற்றம் விளங்கும்.
உலகம் கண்டுள்ளனவெல்லாம் உயிரினங்களின் ஒரு சிறு கூறே எனலாம். இன்னும் எத்தனையோ புதியனவும், அரியனவும், வேற்று இடங்களில் உள்ளனவும், புலனுக்குப் புலனாகாதனவும், பேராற்றல் கொண்டனவாகவும் எவ்வளவோ தோன்றக்கூடும். இவ்வளவு உயிர் வடிவங்களும் மண்ணின் கரு நிலையுருவே என்பது உண்மை. இக் கருக்கள் யாவும் அகமிருக்கும் பதிசக்தியின் அருட் சார்பால்தான் வெளியாகின்றன. எப்பூத அணுவுக்கும் உள்ளகத்தே யிருக்கும் அருட்சக்தியின் சிற்றசைவால், கிரியா சக்திதோன்றிப் புறச்சுழற்சியால் பிரணவ நாதஜோதி ரூபமாக எக்கருவும் அமைகின்றது. இதனால் எந்த ஒரு கருப்பிண்டவடிவத் தோற்றத்தையும் ஆரம்பநிலைகளில் பார்த்தால், ஓங்கார வடிவமாகவே விளங்கக் காண்கின்றோம். இதனால் எல்லாம் கருநிலையில், ஒரு தன்மை கொண்ட ஆன்மாக்களாய் இருத்தல் அறியலாகும்.
மனிதன் ஒன்றான அருள் வண்ண ஆன்மக் கருவை, இந்த மண்ணான கருப்பிறவியிலிருந்து காணவல்லவனாகின்றான். கண்டு தன் அகநிலைக் கருவை, ஆன்மவடிவைக் கூடாமற்கூடி அதுவாகி அண்கொள (அனுபவநிலையில்) நிற்கின்றான். இவன் எங்கெங்கும் காண்பது மண்கருவுக்குள்ளான கடவுளான்ம ஒளியையேதான். இப்படிக் கண்டு நின்று அருட்பெருவாழ்வு பெறுதல் சுத்தசன்மார்க்க அருட்செயலாலேயாம்.
(15)
395. மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே(று)
396. அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) மண்கரு வடிவங்கள் உயிரினத்தைக் கொண்டு விளங்குவனவாம். உயிரற்ற சடப்பொருள் எல்லாமும் பெருவாரியாக மண்ணின் கூறாகவும், மண்ணின் வேற்றுத் தோற்றங்களாகவும் உள்ளனவேயாம். உயிர்களின் வாழ்வுக்குப் பலவாகிய பொருள்கள் தேவைப்படுகின்றன. உலகில் அறிந்தும் அறியாததுமான பொருள்களின் எண்ணிக்கை இத்தனைதான் என்று கணக்கிட்டுச் சொல்லவே முடியாதாம். இவ்வளவு பொருள்களையும் எதற்காகக் கடவுள் தோற்றுவித்துள்ளார்? இவ்வளவும் அவசியம்தானா? தேவையான ஓர் அளவு மட்டும் இருந்தால் போதாதோ? இவ்வளவு இல்லாமல் மனிதனுக்கு நிறை வாழ்வு ஏற்படாதா? என்றெல்லாம் பல வினாக்கள் கேட்கப்படலாம். இவற்றிற்கெல்லாம் சரியான விடை மன அறிவுக்கு விளங்காது. திருவருளாலே அருள்ஒளி நிலை நின்று உணரும் தருணம் உண்மை விளங்கும். கடவுளின் பேரருட் பெருந்தன்மை அறிதற்கரியது; அதன் ஆற்றலும் செயலும், தோற்றமும் அகண்டமான பிரபஞ்சநிலை முற்றும் நிரம்பியுள்ளனவாம். அப்படியுள்ள அருளின் முழு இயல்பை வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதே இப் பெரும் பிரபஞ்சமும் அதன் எண்ணிறந்த பொருட்களுமாம். கடவுள் யாவையும் மனிதனுக்காகப் படைத்துள்ளார் என்பதின் உண்மை, இந்த அருட்பெருஞ் சக்தியின் பெருமையை எல்லாம் உணர்ந்து தெளிந்து அருள்வாழ்வு கொண்டு விளங்குதற்கேயன்றி, பொருட்களையும், உயிர்களையும், ஆற்றல்களையும் தன் புலனின்ப வாழ்வுக்குப் பயன்படுத்த அல்லவாம். இவன் தானே அருள் ஒளி வண்ணமாய் இருந்துகொண்டு, எப்பொருளும் அவ்வொளியின் அம்சமாய் இருப்பதுகண்டு நிற்கும்போது, எதையும் தனக்கு வேறானதாக இல்லாததால், வேண்டும் என்று விரும்பாமலும், வேண்டாமென்று வெறுக்காமலும், அருள் உள்ளத்தோடு அன்புச்செயலோடு வாழ்கின்றான். உலகத்து அத்தனை பொருளும், பலவாகிய உயிரினங்களின் வாழ்வுக்கு வேண்டுவனவே என்பதையும் உணர்கின்றான். எதுவும் அவசியம் இல்லாதது என்று சொல்லற்கில்லையாம். ஒருவன் ஓரளவு பொருளைக் கொண்டேனும், உலகைத் துறந்து தவநிலையில் இருந்துகொண்டேனும் வாழக்கூடும். அப்போது, அவனுக்கு எல்லாம் வல்ல அருட்பெரும்பதியின் பேரருள் விளக்கமும் தெரியவராது. அருளனுபவத்தோடு கூடிய எங்கும் என்றும் நிறைந்து விளங்கும் பெருவாழ்வும் அறியவும் பெறவும் முடியாதாம்.
இதனால் இவ்வுலகையும் மண்ணியற் பொருள்கள் பலவற்றையும் விருப்பு வெறுப்போடு நோக்காது அகமிருந்து அருட்ஜோதியாற் கண்டு, அன்புச் செயல் புரிந்துகொண்டிருத்தல் அருட்பெருஞ்ஜோதியின் ஆணையாகும்.
(16)
397. மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
398. அண்ணுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி

(உ-வி) மண்ணிலே எத்தனையோ நிலைகள், படிவங்கள், அமைப்புகள், தோற்றங்கள், இணைந்திருக்கக் காண்கின்றோம். நிலத்தைத் தோண்டி ஆழ்ந்து செல்லச்செல்லப் பலவாகிய தோற்றங்களும், அமைப்புகளும், படிவங்களும், நிலைகளும் அடங்கிக் கிடப்பதைக் காண்கின்றோம். இவையெல்லாம் எவ்வளவோ காலமாக ஏற்பட்ட இயற்கைத் தாக்குதல்களால், அழுத்தத்தால் உண்டான சூட்டால், சுழற்சி, ஈர்ப்பு ஆற்றல்களின் வேகத்தால் ஏற்பட்டுள்ளனவாம். இப்படிப்பட்ட செயல்களால் உண்டானவைகளே உலோகத் தாதுக்கள், உப்பு வகைகள், பாஷாண வர்க்கங்கள் எல்லாமும். இவைகள் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு தோற்றத்தோடும், ஆற்றலோடும், வீரியத்தோடும், செயலோடும் விளங்குகின்றனவாம். இந்தச் செயல்கள் ஏற்படுவதால் நிலப்பரப்பின் மீது வளமும், விளைவிற் செழுமையும், பொருள்களில் தூய்மையும் ஆற்றலும் நன்கு விளங்கும். இவை கொண்டு மனிதன் தயாவொழுக்க வாழ்வு நடத்தி மேலான இன்ப நலம் காணலாகும்.
ஆனால், இன்றைய புலனிச்சைப் பெருக்கால், இயற்கை தரும் பொருள்களை வீணாக்காமலும், சிக்கனமாகவும் கொண்டு வாழமுடியாமல் மண்நிலைகளைப் பாழ்படுத்துகின்றான் மனிதன். நிலப்பரப்பின் கீழே வெகு ஆழத்திற்குக் குடைந்து சென்று அங்கங்குள்ள தாதுக்கனிகளையும், எண்ணெய் ஊற்றுகளையும், நிலக்கரிப் படிவங்களையும், உப்புப் பாறைகளையும் பெருவாரியாக வெட்டி எடுத்து எடுத்து வெளியிற் கொண்டு வந்து தேவைக்கு மேல் பல பொருள்களை ஆக்கி, வீணாக்கிக் கொண்டிருக்கின்றான். இதனால், மண்ணிலைகளில் பலவாகிய மாற்றங்கள், அழுத்தக் குறைவால், உள் ஆற்றல் குறைவால் ஏற்பட்ட நில நடுக்கங்களும், எரிமலைகளும், நில வெடிப்புகளும், சரிவுகளும் அதிகம் உண்டாகின்றன. மேலும் நிலத்தின் விளைபொருள்களில் வளமும் சத்தும் குறைந்து போவதால் பலவாகிய நோய்நொடிகள் உலகில் தோன்றி மக்களினத்தையும், பிற உயிரினங்களையும் அதிகம் பாதிக்கின்றனவாம். இக்கேடுகள் எல்லாம் ஏன்? மக்கள் தயாவொழுக்கமும், சத் விசாரமும் மேற்கொண்டு நல்ல முறையில் வாழப் பழகிக்கொள்ளாததால் என்பது விளங்கும்.
இப்பொழுது அருட்ஜோதி உதயமாகிவிட்டுள்ளதால், அக இருள் நீங்கிட உள்ளொளி பொங்கி செயல்படுவதாயிருக்கின்றதாம். ஆகையால், மண்ணின் இயல் நிலைகளையும், ஆற்றல்களையும் வீணாக்காமல், தேவைகளை மிக அதிகமாக வேண்டாமல், பெரும் பிரயத்தனமும் பொறிகளின் உதவியும் அதிகம் நாடாமல், உடல் உழைப்பால் உள்ளத்தில் அன்பொளி பெருக, புறவாழ்வில் நல்லின்பம் தழைக்க வாழ்தல் திருவருட்சம்மதமாம்.
(17)
399. மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
400. அண்ணுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) எந்த உயிரும், எந்தப் பொருளும் ஆரம்பத்திலேயே தன் நிறை நிலையோடு தோன்றி விடுவதில்லையாம். இதற்கு விதி விலக்காக உள்ளது ஒன்றே ஒன்று உண்டு! அது தான், பரம்பொருளாம் அருட்பெருங் கடவுள் ஆம். அக்கடவுள் அனாதிகாலமாகவே முழுநிறைவோடு, நிறை அருளோடு எங்கும் பரிபூரணமாக இருக்கின்றது உண்மையாம். உலகியலார்க்கு இந்த மெய்ப்பொருள் பற்றித் தெரிந்து கொள்ள முடிகின்றதில்லை. இதனால்தான் இவ்வுலகிடை தோன்றிடும் எவ்வுயிரும், எப்பொருளும் நுண்ணிலையிலிருந்து சிறிது சிறிதாகப் பெருகி வளர்ந்து மாற்றம் அடைந்து கொண்டிருக்கின்றனவாம்.
இம்மண்ணுலகில் தோன்றிடும் உயிரும் பொருளும் மண்ணின் கூறினால் ஏற்பட்ட புறவடிவங்களை ஏற்று வளர்ந்து கொண்டுள்ளனவாம். இந்த மண்ணிலைத் தோற்றங்கள், அபக்குவம், பக்குவாபக்குவம், பக்குவம் என்ற நிலைகளை அடைந்து வருகின்றன என்பது அறியலாகும். ஒரு மலரை எடுத்துக்கொண்டால், அது முதலில் சிற்றரும்பாக உள்ள நிலை அபக்குவமாம்; அது பேரரும்பாகி மொட்டாகி முகிழ்த்திருக்கும் நிலை பக்குவாபக்குவமாம். மேல் மொட்டவிழ்ந்து இதழ்கள் விரிந்து நிறைமணங் கமழ விளங்கும் நிலையே அம்மலரின் பக்குவநிலையாகும். இதுபோல், ஒரு கனியை எடுத்துக்கொண்டு பார்த்தால், அது சிறிய பிஞ்சாக இருந்த நிலை அபக்குவமாயும், பெருத்துக் காயாக இருந்த நிலை பக்குவாபக்குவமாயும் பழுத்துக் கனிந்த நிலையே பக்குவ நிலையாயும் அறியலாகும். இதே போன்று மனிதப்பிறப்பு வடிவை எடுத்துக்கொண்டு நோக்கின், கருவிலேயே அபக்குவம், பக்குவாபக்குவம், பக்குவம் அடைந்து குழந்தையாய்த் தோற்றுவதும், இந்தக் குழந்தை நிலையே அபக்குவமாகவும் பின்னர் அறியாத சிறுபிள்ளைப்பருவம் பக்குவாபக்குவமாகவும், நல்ல வயதுவந்த முதிர்ச்சிப்பருவம் பக்குவ நிலையாகவும் விளங்கும். இதுவுமல்லாமல், மனிதன் பொறிபுலன் இச்சைவழியில் வாழ்ந்துவரும் நிலை அபக்குவமாகவும், பகுத்தறிவு கொண்டு நல்லொழுக்க வாழ்வு மேற்கொண்டு விளங்கும் காலம் பக்குவாபக்குவநிலை எனவும், முடிவில் மெய்யறிவும் மெய்யன்பும் கொண்டு மெய்யின்பம் பெருக வாழ்கின்ற பருவமே பக்குவமான நிறை மனித நிலை என்றும் அறியலாகும்.
மேற்படி, அபக்குவம், பக்குவாபக்குவம், பக்குவம் ஆகிய மூன்று நிலைகளிலும் அகத்தும் புறத்தும் பலவித மாற்றங்களும் செயல்களும், பயன்களும் உண்டாக்கிக் கொண்டுள்ளனவாம். இப்படி உண்டாகும் நிலைகளில் பெரும்பயன் எதுவெனில், மனிதன் சுத்தசன்மார்க்க பக்குவநிலை எய்தும் சுத்த சுகானந்தப் பேரின்பப்பெருநிலை வாழ்வே ஆகும். இவ் அருட்பெரும் வாழ்வு மனிதனுக்கு வழங்குவித்தற்பொருட்டே இந்த மண்ணிடைப் பக்குவநிலைகளை எல்லாம் வகுத்து அதற்கதற்கான பயன்களையும் விளைவித்து, முடிவில் அப் பெரும்பயன் தரும் நிறை அருட்பெருஞ்ஜோதியையே அண்ணுற அமைத்துக் கண்டடையும் பக்குவநிலையையும் ஏற்படுத்தியுள்ளார் இப்பொழுது. இதனால், இந்த இறை அருட்பெரும்பயன் பெறத்தக்க முறையில் மனிதன், தன் அகத்தே அக்கடவுட் பூரணத்தைச் சார்ந்து நின்று நீங்காது அனகவாழ்வு மேற்கொண்டு ஒழுகவேண்டும். இம்மாதிரி பக்குவ நிலையே சுத்தசன்மார்க்கத்தினர் அடையவேண்டிய நிலையாம். இதுகொண்டு உலகமெல்லாம் அருளின்பில் ஓங்கும்.
(18)
401. மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
402. அண்ணுற வமைத்த அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) மண்ணின் இயல் விளக்க, இப்படிப் பதினெண் இணையடிகள் கொண்டு குறித்துள்ளவர், ஈண்டு தொகுத்துரைக்கின்றதோடு, மேல்விரி நிலைக்கும் வித்திடுகின்றார் இங்கு. மண்ணியல் விரி என்ற தலைப்பில், 1. மண்ணினில் திண்மையும் கிடக்கையும், 2. மண்ணில் பொன்மையும் ஐமையும், 3. மண்ணின் ஐம்பூவும் ஐந்திறமும், 4. மண்ணிற் பலவகை நாற்றமும், 5. மண்ணிற் பலவகை கருநிலையும், 6. மண்ணில் ஐந்தியலும் பயனும், 7. மண்ணில் அடிநிலையும் பன்னிலையும், 8. மண்ணில் ஐந்தைந்து வகைக் கலப்பும், 9. மண்ணியற் சக்தியும், மண்செயற்சத்தியும், 10. மண் உரு, மண்கலை சக்தியும், 11. மண் ஒளிச்சக்தி மண் கருச்சக்தியும், 12. மண்ணகச்சத்திகள் பலவகை, 14. மண்கரு வுயிர்த்தொகை வகை விரியும், 15. மண்ணினிற் பொருள் பல வகை விரியும், 16. மண்ணுறு நிலையும் செயலும், 17. மண்ணிடைப் பக்குவமும் பயனும், 18. மண்ணியல் பலபலவும் பிறவும் ஆக மண்ணியலை விரித்துக் காட்டியுள்ளதை யீண்டு அறிகின்றோம்.
மண்ணியலைப்பற்றி இவ்வளவு விரித்துக் கூறியும், இவை மட்டுமல்ல இன்னும் விரிவு உள்ளது என்ற குறிப்பை, பிறவும் என்ற சொல்லாற் சுட்டியுள்ளார். அப்படி மற்ற விரிவுகள் ஏதேனும் உளவாயினும், அல்லது இனிமேற்கொண்டு புதிதாகத் தோற்றுவதாயினும் கூட அவை எல்லாமும் அருள் அனுபவத்திற்கே உரியனவாய் அண்ணுற அமைத்துள்ளதாம் அருட்பெருஞ்ஜோதி. ஆண்டவர் நிறை பரம்பொருளாக என்றும் இருத்தலின், அதனிடத்து இல்லாதது என்று ஒன்றும் இருக்கமுடியாது; ஒரு வேளை வெளிப்படாமல் இருக்கலாம். அப்போது குறிப்பிட்ட ஒன்று, இல்லாதது போலிருக்கலாம். பின்னர் வெளியாகும் போது புதிய தோற்றமாய்க் கொள்ளக்கூடும். இந்த மண்ணியலில் ஹீலியம் என்ற தாது (Helium) இல்லாதிருந்ததும் பின்னர் அவ்வுலோகத்தாது ஞாயிற்றினிடத்திலிருந்து கிடைக்கப் பெற்றதாகக் கூறப்படுகின்றது. சூரியனை “ஹீலியாஸ்” (Helios) என்ற ஜெர்மானியச் சொல்லால் குறிக்கப்படுவதிலிருந்து, அச் சூரியனிடமிருந்து கிடைக்கப்பெற்ற உலோகத்திற்கு ஹீலியம் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கின்றதாம். இதுபோல் இன்னும் புதியபுதிய தாதுப்பொருட்களும் பிறவும், சந்திர மண்டலம் அல்லது மற்ற கோட் கோளங்களிலிருந்து பெறப்படலாம் அல்லது வேற்றுத் தொலைதூரத்து விண்மீன்களிலிருந்து பல மண்ணியற்பொருள் கிடைக்கப்பெறலாம். இவையெல்லாம் கூட நம் அகநிலை யுண்மைக்குள் அடங்கியதாய், அருளியல் வாழ்வுக்கு உதவுவதாய்த் தெரிந்து கொள்ளுவோம். இம் மண்ணியல் விரி பெரியது ஆகையால் இவ்வளவு அதிகமாகக் குறிக்க நேர்ந்துள்ளது. மற்றவைகளின் விரிவு ஓரளவு குறைவாய் இருக்கும், என்றாலும் ஒவ்வொன்றும் வழங்கவுள்ள பயன் பெரிதேயாம்.
180. நீரியல் விரி (1)
403. நீரினிற் றண்மையும் நிகழூ றொழுக்கமும்
404. ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நீரின் இயல்பு விரித்துரைக்கப்படுகின்றது. முதலில் நீரின் குணம் இவை எனப் பகரப்பட்டுள்ளது; யாதெனில், தண்மை அல்லது குளிர்ச்சிதான் முக்கியமானதாம். இதனாலேயே, இதனைத் தண்ணீர் என்றே பொதுவாகக் கூறப்படுகின்றது வழக்கம். தீயின் சூடு தணிந்து போகும்போது குளிர்ச்சி அடைந்துவந்து நீரகவாயும் உயிர்வளியும் கூடும்போது தண்ணீர் தோன்றிடுவது இயற்கையாகும். தண்ணீரின் இத் தண்மைக்குணம் ஒரு குறிப்பிட்ட நிலையில்தான் அளவும் கனமும் ஒரு நிலையில் இருக்கின்றதாம். அதாவது தண்ணீர், .4° சென்டிகிரேடு நிலையில், ஒரு கன சென்டி மீட்டருக்கு 1 கிராம் கனம் இருக்கின்றது. இத்தன்மை நிலை 4° க்குக் குறைந்தாலும் அல்லது அதிகமானாலும் ஒரு கன சென்டி மீட்டரின் எடை குறைந்துவிடுகின்றது. இதனால் தண்ணீர் குளிர்ந்து 0°- க்குக் கீழே போகும் போது நீர் உறைந்து பனிக்கட்டியாக மாறினாலும் தண்ணீரை விடக் கனக்குறைவாய் இருப்பதனால், தண்ணீரில் மிதக்கின்றது. சூடு அதிகரிக்கும் போது நீரின் அணுச்செறிவு அகன்றுவிடுவதால் அப்போதும் கனம் குறைகின்றது. ஆவியாக மாறி மேலெழுந்து காற்றில் செல்லுகின்றதாம். இத்தண்மைக் குணத்தோடு, நெகிழ்வு, ஊறுதல், செல்லுதல் இவையே இங்கு (நிகழ், ஊறு, ஒழுக்கம் எனக்) குறிக்கப்பட்டுள்ளன. இவற்றால் தண்ணீர் கடினமான மண் இயலை, இளக்கியும் குழைத்தும் பதப்படுத்தியும் வளம் பெற உதவுகின்றது. தண்ணீரின் கசிவுத்தன்மையும் பரவும் குணமும் கூட மண்ணிடை வள விளைவுகளுக்குக் காரணமாயுள்ளனவாம்.
நீரின்றி அமையாது இவ்வுலகவாழ்வு என்பது எவ்வளவு உண்மை என்பது, இன்றைய மனிதன் சந்திரமண்டலத்தில் சென்று அனுபவவாயிற் கண்டுள்ள உண்மையாகும். நீருக்கு இங்கு குறிக்கப்பட்டுள்ள குணங்கள் இல்லையானால், நிலவுலகில் எங்கும் போதிய அளவு தண்ணீரின் சத்து பரவி, வள நிலத்தில் தாவரங்கள் செழித்து ஓங்கி மக்கள் வாழ்வுக்குக் கிடைக்காமல் போய்விடும். ஆகவேதான், மனிதன் அருள்நெறி பற்றி யொழுகி மெய்யின்ப வாழ்வு அடையவேண்டியே, இக்குணநலம் நிரம்பிய தண்ணீரை இவ்வுலகின்கண் நிறையவே தோற்றுவித்துள்ளார் என்று அறியலாகும். ஆர் என்றால் நிறைவு என்று பொருளாம்.
(2)
405. நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
406. ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) பசுமையும் நீரின் இயல்பே. இப் பசுமை என்பது பச்சை, இளமை, செழுமை, செவ்வி, பொன்னிறம் என்றெல்லாம் பொருள் பெறும். இக்குணக் காரணமாகவே நீர் கொண்டு வளரும் தாவரங்கள் யாவும், மென்மையாகவும், செழுமையாகவும் அழகாகவும் தோன்றி முதிர்ந்து பழுப்பாகும்போது மஞ்சள் நிறமாக மாறுவது இயல்பாய்க் காண்கின்றோம். மேலும் தண்ணீர் நிலைகளில் பச்சைப் பாசம் உண்டாவதும், பாசிபடர்ந்து குளநீர்கள் மூடுண்டு கிடப்பதும் அறிவோம். பசுமையும் கருமையும் கலந்த நீலநிறமான கடல் நீர்த்தோற்றம், நீரின் இப்பசுந் தன்மையாலும் நீலவான் கொண்ட நிறத்தாலும் விளங்குவதாம்.
உலகில், வளம் உண்டாகி, உயிர் விளங்கி, அருள் அனுபவம் பெற, நீரின் இப்பசுந்தன்மை பொருத்தமாய் அமைந்திருக்கின்றதாம். மண்ணில் மறைந்துகிடக்கும் பலவாகிய இயல்புகளை பெளிப்படுத்திப் புறவுலகில் தோற்றுவித்து, நற்பெரும் பயன்களை எல்லாம் விளைவிக்க இந்த நீரின் இயல்புதான் பெரிதும் உதவுகின்றதென அறியப்படும். நீரற்ற பிற கோள் மண்டங்களில், மண்ணியல் வெளிப்பட மார்க்கமுமில்லை, மற்றும் உயிரினங்களின் வாழ்வுக்கு வசதியும் இல்லை. ஆகையால், அவ்விடங்களில் மனிதன் வளம்பெற வாழவும் நலம்பெற்று விளங்கவும் முடியாது எனலாம். ஆகவே கடவுட்படைப்பில் இவ்வுலகும், இதில் வாழவந்துள்ள மக்களினமும் சிறந்தனவாகக் கொள்ளப்படுகின்றன.
(3)
407. நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்
408. ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) பூவியல் என்பது விரிந்து படரும் தன்மையாம். விரிந்து மலர்ந்த மலரையும் இதனால் பூ என்கின்றோம். தண்ணீர் இந்த விரிகுணத் தன்மையால், எங்கெங்கு எப்பக்கம் அழுத்தப்படுகின்றதோ அப்பக்கம் நெகிழ்ந்தும் பாய்ந்தும் பரவுகின்றதாம். இந்த நீரின் அழுத்தும் திறல், கீழ், மேல் பக்கங்கள் எல்லாம், ஒருபடித்தாய் இருக்கின்றது என்பதை விஞ்ஞான உலகம் பரிசோதித்து நன்கு அறிந்துள்ளது. இக்குண இயல் நன்கு ஆய்ந்துகண்ட அறிவியற் பொறியியல் வல்லுநர்கள், பெரிய பெரிய நீர்த் தேக்கங்களையும், ஆறு அருவிகளின் போக்குகளையும் நன்கு பயன்படும் முறை அமைத்து உலக வாழ்வுக்கு உதவுகின்றனர்.
நீருக்கு இந்த அருங்குணம் ஆண்டவர் அமைத்துள்ளது, பல வகையிலும் இங்கு மக்கள் வாழ்வு செழித்து நிறைவு பெறுவதற்கேயாம். ஆனால் அருள் ஒழுக்கம் பூணாத மக்களினம் இந்நீரின் இயலும், திறலும் அறிந்தும் அறியாமலும், பெரு முயற்சியாலும், முயற்சியின்மையாலும் அவத்தையே அடைந்துகொண்டிருக்கின்றனர். இயற்கையில் மழை பொழிகின்றது, பருவங்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன, நீரின் இயல்பால் வளமெல்லாம் பெருகுகின்றன. இவ்வளமெல்லாம் இருந்தும் மக்கள் நல்ல உள்ளத்தோடு, அருள்நாட்டத்தோடு, வீண்பாடு படாமல் முறையாக உழைத்தாலே போதும். திருவருளால் யாதொரு குறைவுமில்லாது உலகியலையே அருளியலாக ஆக்கிக் கொண்டு வாழ்ந்து ஆனந்தமுறலாம். மருள் மனத் தீச்செயலால் எவ்வளவு முயற்சி செய்தும் வேண்டியன பெற்றும் முடிவில் அமைதியும், இன்ப வாழ்வும் அடையாதுபோவது கடவுள் ஆணைக்கு மாறானதாகும். அருட்பெருஞ்ஜோதியின் திருவுளம், நாம் இந்த நீரியலிலே கடவுளர் அருளியலைக் கண்டு நிறைவுறுவதற்கேயாம். இதுவே ஈண்டு, “நீரிடைத் திறவியல் ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி”, என்று குறித்துள்ளார்.
(4)
409. நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பலவகை
410. ஆருறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) எந்தக் கரைசலும் சேராத சுத்த ஆவி நீரில் (Distilled Water) சுவை இல்லை என்பர். இதுபோல் ஐட்ரஜன், ஆக்ஸிஜன் கூட்டிப் பெறப்படும் நீரிலும் சுவை இல்லையாம். வான்பொழி மழை நீரில் காற்றிற் கலந்த சிலவகை உப்புச் சேர்க்கையால் நற்சுவை யேற்படுகின்றது. மேலும் அம்மழை நீர் பல்வகை நிலங்களில் வீழ்ந்து அங்கங்குள்ள மண்ணியல் சத்துகள் கலப்பதால் பலவித சுவையும் தன்மையும் பெறுகின்றதாம், மக்களுக்குக் கிடைக்கும் நீர் எல்லாம். நீரில் இந்தச் சுவைகள் எல்லாம் எதற்கு அமைக்கப்பட்டிருக்கின்றன? பொதுவாகச் சுவைகளை எல்லாம் அறுசுவை என்ற தொகுப்பில் அடக்கிக் கூறுவர். இச்சுவைகளை அறிய மனிதனுக்கு நாக்குதான் உரிய கருவியாய் இருக்கின்றது. இந்நாவினைக் கொண்டு சுவையறிந்து உடல்நல வாழ்வுக்கு உகந்ததை அளவாக ஏற்பதும், பொருந்தாததை அருந்தாதிருப்பதும் மனிதன் கடமையாம். சுவை விரும்பாதிருத்தல், உண்மைநெறி ஒழுக்கத்தில் முக்கியம் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாம். நீரை அமுதம் என்பர். இது உடல் வளர்ச்சிக்குத் தேவையான ஒன்றாம். நீர் நிலையில் இந்த அமுத சத்து அடிபாகத்தில் பொருந்தி நிற்கும், இதற்கு மேல் பூத பாகமும், விஷ பாகமும் மறைத்துக் கொண்டிருக்கும். மேல் இரு கூறையும் நீக்கிவிட்டு அமுத பாகத்தை ஏற்பது நன்று என்று வள்ளலார் கூறியுள்ளார். தண்ணீரைச் சூடாக்கிவிட்டால் தண்ணீரின் நச்சுப் பகுதியும், பூத சக்திப் பகுதியும் நீங்கி விடுவதால் வெந்நீரை அருந்தல் நன்று என்பர். இல்லாவிட்டால் அருள் அமுத ஜோதியை சிந்தித்து நீரை அருந்தினால், அதுவும் அமுதமயமாகி நலம் பயக்கும்.
மண்ணியற் பொருள்களில் கலந்து பலவகை சத்துக்களும் நீரின் சேர்க்கையால் பல சுவை ரசமாய் மாறி பண்டங்களில் இடம் பெறுகின்றனவாம். இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்புச் சுவைகள் உள்ள காய், கனி, கொட்டை முதலானவற்றை அறிவோம். அவற்றின் கருநிலை ஆகிய விதைகள், கிழங்குகள் முதலியவற்றை ஒரு நிலத்தில் பயிரிட்டு, நீர்வார்த்து விளைவிக்கும்போது, அவைகளிலிருந்து விளைகின்ற கனி வர்க்கம் அதற்கதற்குரிய சுவையிற் கொஞ்சமும் மாறுபாடின்றி இருப்பதைக் காண்கின்றோம். எல்லாவற்றிற்கும் மண்ணும் நீரும் ஒரே மாதிரிதானே வழங்கினோம். அப்படியிருக்க, அவற்றின் கனிகள் வேறுபட்ட சுவையுடன் விளைவு கொண்ட தெப்படி? என்பதைச் சற்று ஊன்றி உணரின் நன்கு அறியலாகும். ஒவ்வொரு விதைக் கருவிலும், அதற்கே உரிய, வேர் முதல் பழம் வரை தேவையான எல்லா அம்சங்களின் சூக்குமச்சத்துகளும் அடங்கியிருந்து, மண்ணியலாலும், நீரியலாலும் விளைவு கொள்ளும்போது அது தனக்குரிய மணமும் சுவையும் கொண்ட கனியை யீன்றளிக்கின்றது உண்மையாம். ஆகவே, நீரினால் சுவைநிலை நிரைத்திடப் பெறுகின்றதென அறிகின்றோம். இதுவே, இங்கு, நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பலவகை ஆர் உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி என்றுள்ளார். மனிதன் சுத்த சத்துவ குணம் வளர் பண்டங்களில் விருப்பு வெறுப்பின்றி ஏற்று உயிர் விளக்கத்துடன் இருந்து அன்புச் செயல் புரியப் புரிய அருள் அகநின்று சுரக்கும். அதுவே அருளமுதமாகக் கொண்டு நிறை இன்ப வாழ்வு பெற வேண்டியது கடவுள் ஆணையாம். புறச்சுவைப் பொருட்களை அறிந்தும் அவற்றில் பற்று கொள்ளாது மேல் செல்ல, அருளமுதின் சுவையை அருளால் அனுபவிக்கும் போது அறிகின்றான். இவ்வுண்மையைப் பிறிதோரிரு இடங்களில் விளக்கமாகக் கண்டுகொள்ளுவோம்.
(5)
411. நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல
412. ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நீரைப் பற்றி உலகம் எவ்வளவோ தெரிந்து கொண்டிருக்கின்றது. புறநீரின் குணம், ஆற்றல் செயல்திறன், பயன் எண்ணிலாதனவாம். இவ்வளவும் அந்நீரின் கருநிலையிற்றானே உள்ளுறைந்திருந்து காலத்தே சூழ்நிலைக்குத் தக்கபடி வெளியாகிக் கொண்டிருக்கின்றனவாம். கருவின் கண் யாவும் நுண்நிலையிற் பொருந்தி நின்றுதான் பின்னர் வளர்ச்சியில் வெளிப்பட்டு விளங்குகின்றன. அவ்வக இயல் வெளிப்பட்டு விளங்கற்கே, புறச்சூழ்நிலைகள் துணைப்பொருளாய் வந்து சூழ்கின்றன. கருவில் அமையாத, இல்லாத ஒன்று, அதற்குப் புறத் தோற்றத்தில் உண்டாகாது. நீரின் கருநிலையில், பொதுவாக ஐட்ரஜனும், ஆக்ஸிஜனும் தான் கலந்திருப்பதாக அறிந்துள்ளனர். ஆனால் அக்கரு நிலையில் மிக நுண்ணியதாக, அறிவரிய பூதசக்திகளும், அவற்றின் இயல் செயல்களும் அமைந்துள்ளனவாம். இதனால், இந்த நீரக அணுவுடன், மற்ற பூதங்களின் அம்சங்கள் வேறு வேறான அளவுச் சேர்க்கையால், அனந்தவண்ணத் திரவப் பொருள்களாகப் பெருகுகின்றனவாம். பூமியிலும், கல்லிலும், தாவரப்பொருள்களிலும், காற்றிலும் இருந்து கூட எத்தனையோ விதமான, அமிலங்கள், (Acids) எண்ணெய்கள், ஆவிகள் (Gases) கிடைக்கப்பெறுகின்றனவாம். இவற்றில் இதுகாறும் கண்டுபிடிக்கப்பட்டவையும், பயன்படுத்திக் கொள்ளப்பட்டவையும் ஓரளவுதான். இன்னும் புதிதாக எவ்வளவோ, வருங்காலத்தில் வெளிப்படும். இவைகள் எல்லாம் நமக்குத் தேவைதானா? தேவையில்லையா? என்றால், நமக்குத் தேவையில்லாதது என்று எதுவுமில்லை. எது எந்தக் காலத்தில், எவ்வளவு தேவையோ, அது, அந்தக் காலத்தில் அந்த அளவுக்குத் திருவருள் வெளியாக்கப் பிறர் வாயிலாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் மக்கள், தயவோடு கூடிய மெய்யின்ப வாழ்வுக்கான முறையில் யாவையும் ஏற்று எவ்வளவோ சுக சௌக்கியமாக எளியமுறையில் வாழலாம். ஆவற்பெருக்காலும், தயவின்மையாலும், வீண் ஆடம்பர வாழ்வாலும், எந்தப் புதிய அரிய கண்டுபிடிப்புக்களாலும் அமைதியான ஆனந்தவாழ்வு கிட்டாதிருக்கின்றதாம்.
நம் இறைபரம்பொருள், நீரின் கருநிலையில், எவ்வளவோ பொருட்களையும் ஆற்றல்களையும் பொதிந்து வைத்திருந்து காலத்தே வெளிப்படுத்திக் கொண்டிருந்தும், மக்கள் கடவுளின் திருவருட்செயலை யுணராதிருப்பதும், மாறுபட நடந்துகொண்டு அவத்தைப்படுகின்றதும் இரங்கத்தக்க விஷயங்களே. அருட்பெருஞ்ஜோதியால், உண்மை கண்டு உலகெலாம் உய்வதாக.
(6)
413. நீரிடை நான்கியல் நிலவுவித் ததிற்பல
414. ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நீரின் இயல் தொடக்கத்தில் அதன் தண்மைக் குணம் பற்றிய விளக்கமும் நிலையும் ஒருவாறு குறிக்கப்பட்டது. அதன் ஒரு விரிவுரை விளக்கமாக இங்கு அந்நீரின் நான்கு இயல்கள் பற்றி யுணர்த்தப்பெறுகின்றன. நீரின் நான்கு இயல் ஆவன: (1) சாதாரணச் சூழ்நிலையில், நீர் மிகத் தட்பமோ வெப்பமோ அடையாத நிலையில், யாவராலும் விரும்பி ஏற்றுப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளதாம். இந்த சுத்த நீரே 4°C சுடுகையுள்ளதாயும் 1 C.C. ஒரு கிராம் நிறையுள்ளதாயும் விளங்குகின்றதாம். (2) இரண்டாவதாக நீர், தட்ப மிகுதியால், சுடுகை குறைந்து 0°Cக்கும் கீழே வெப்பமானி காட்டும் நிலையில் திரவமாய் இருந்த நீர், திடநிலை அடைந்து பனிக்கட்டி ஆக விளங்குவதாம். இந்தக் கட்டி நிலையில் நீர் அணுச்செறிவு விரிவது ஒரு சிறப்பான அம்சமாகும். இதனால், பனிக்கட்டி, நீரைவிட இலேசாகினும், கனப்பரிமாணம் அதிகரித்து பருமனாக விளங்குகின்றதாம். இது காரணமாக பனிக்கட்டியின் ஓரளவு நீர் மட்டத்திற்கு மேலே தெரியும்படி, மற்ற பகுதி நீரின் கீழ் மூழ்கி இருக்கக் காண்கின்றோம். நீரால் உயிரினங்கள் வாழவேண்டியுள்ளன. அந்நீரின் இயற்கை சுடுகையே யாவற்றிற்கும் பொருந்தும். சூடு மிகினும் குறையினும் சில உயிரினங்கட்குத் தாங்கமுடியாததாகிக் கேடு விளையும். நீர்வாழ் உயிர்கள் நீரிற் கலந்துள்ள உயிர்க்காற்றின் சக்தியால், பிற சிற்றுயிர்களையும் நீர்த்தாவரங்களையும் உண்டு வளரும். பனிக்கடலடி வாழ் உயிரினங்கள் அங்கேயே நெடுங்காலமாக வாழ்கின்றவையாம், நீரின் மேல் மட்டத்திற்கு வராமலே இருக்கின்றனவாம். அந்த ஆழ்கடலில் கீழ்நிலையில் பனிக்கட்டி உண்டாவதேயில்லை. ஏனெனில் கடற்பரப்பின்கீழ் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே நீர் பனிக்கட்டியாகி மிதக்க அதற்குக் கீழ்ப்பாகம் முற்றும் உறைநிலை (Freezing Point) அடையாதிருக்கின்றதாம். ஆகையால், கடலடிவாழ் உயிரினங்களுக்குப் பனிக்கட்டியில் உறைந்துபடும் நிலை ஏற்படாதிருக்கின்றது. ஆகவே, அங்கு அவ்வுயிரினங்கள் நீரில் கலந்துள்ள உயிர்க்காற்றின் உதவியால், ஜீவித்து வருகின்றனவாம். (3) கடல்நீர்ப்பரப்பின் மீது, காற்றின் வேகத்தாலும், சூரியனின் சூட்டாலும், ஈர்ப்புச்சக்திகளாலும் நீர் அலைகள் எழும்புகின்றன. பேரலைகளில் சிறிய பெரிய நீர்க்குமிழிகள் பேரளவிற் கூடி வெண்ணுரையாகக் கிளம்பித் திரைபோன்று உயர்ந்து எழுந்தும், சுருண்டும் விரிந்தும் பாய்கின்றனவாம். இந்த அலைகளாலும், இவற்றின் பொருள்களாலும், வேகத்தாலும் எத்தனையோ பயன் உண்டாகின்றனவாம். (4) பொதுவாக எல்லா நீர் நிலைகளின் மீதும் இயற்கை வெப்பத்தாலும், வெய்யிலின் சூட்டாலும் நீராவி உண்டாகி மேலெழுகின்றது. நீரின் பெருக்காகிய கடல் நீரினின்றுதான் பேரளவு நீராவி யுண்டாகி, மேலே சென்று முகிலாகிக் குளிர்ந்து மழையாய்ப் பெய்கின்றதாம். இந்நீராவியால் மேகக்கூட்டமும், வானிலையில் இரசாயன மாற்றச் செயலால், மின்காந்த அலைகள் ஏற்பட்டுப் பேரதிர்ச்சிகளும், இடியும் மின்னலும் உண்டாகின்றனவாம். நீராவியால் உண்டாகின்ற மழை ஓரளவு என்றால், இயற்கை வானிலையிலுள்ள நீரக உயிர் வளிச்சேர்க்கையாலுண்டாகின்ற நீரும் ஓரளவு கூடிப் பெருமழையாகப் பொழிகின்றதாம்.
இப்படி நீரின் நான்கு நிலைகளிலும் அனேக இயலும் செயலும் வெளிப்பட்டு உலகம் பல வகையிலும் பயன்பெறத் திருவருள் பாலிக்கப்படுகின்றதாம். இவை எல்லாம் அறிந்து, இவைகளைத் தக்க வழியில் பயன்படுத்தி, உலக வாழ்வில் எல்லோர்க்கும் நலம் ஏற்படும்படி உதவினால் திருவருளால், இன்றைய துன்ப உலகம் முற்றிலும் மாறி இன்ப உலகமாக விளங்குவது திண்ணம்.
(7)
415. நீரிடை யடிநடு நிலையுற வகுத்தனல்
416. ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நீரின் துளியைக் காண்கின்றோம். அத் துளிநீருக்கு அடி, நடு உண்டென அறிவோம். அப்போது, அந்த அடி நடுவுக்கு முடியாக இருப்பது, அத்துளியின் புறநிலையே எனவும் அறியலாகும். நீர்த்துளியைச் சூடுபடுத்தினால் அதன் மேற் பகுதியிலிருந்து ஆவி எழுந்து வெளியிற் பரவும். அப்போது அந்நீரினுள்ளிருக்கும் பொருள்களும் ஆற்றல்களும் வெளியாகின்றன. அடிநிலையில் ஒரு சில உப்பு வகைகள் இருந்து ஆவிசென்றபின், எஞ்சி நிற்கும். கடல் நீரிலிருந்து உப்பு எடுப்பதை யாவரும் அறிந்ததே. இதுபோல் வேறு வேறான நீர் நிலைகளிலிருந்தும், சாறுகளிலிருந்தும் மூலிகைகளிலிருந்தும் உப்பு எடுத்தல் அறியப்படும். நீரின் நடுநிலையில் உள்ள அனல் வெளிப்படுவதும் மின்னல் மூலமும், நீர் வீழ்ச்சியாலும் வேகத்தாலும் அறியப்படும்.
ஆதியில் நீர்நிலை ஞாயிற்றினிடமிருந்து தீயாகவும், மின்னியற்சக்திகளாகவும், திரவசக்தி வாயுக்களாகவும் வந்து தீக்கோளமாய் அமைந்த பூமியில் செறிந்திருந்த சத்துக்கள் காலத்தே நீரின் அகம், அகப்புறம் ஆகிய தோற்றரிய சக்திகளாய் விளங்கிப் பின்னர் நீராக ஆகி நிரம்பியபோது, அகச் சக்திகள் அனலின் கூறுகளை யுட்கொண்டு நிலைத்துவிட்டன. அப்போது முதல் நீர் நிலையும் இப்பூமியின் மீது நிரம்பி விளங்கலாயிற்றாம். இந்நீரின்கண் இருக்கும் நெருப்பு சக்தி நிலச்சுழற்சியாலும் ஈர்ப்பாலும் வட கடலடியிலும் பிற இடங்களிலும் கீழ்நீர் ஓட்டங்களாகக் காணப்படும். வடக்கு நோக்கி எழுகின்ற இத்தீயை வடவை அல்லது வடவாமுகாக்கினி என்று கூறுவர். இதுபோல் மனிதனில் பிண்டபாகத்தில் ஜடராக்கினியும் உண்டாகி விளங்குகின்றதாம். இப்படி நீரின் அகச்சக்தியால், நீரின் தீ ஆற்றலால் மனிதன் உணவைப் பக்குவப்படுத்திட உடல் வளர்ச்சிக்கு ஏற்றதாய் உதவுகின்றது இந்த நீரிடை அனல். மனித வாழ்வுக்கு இந்நீரின் சக்தி எவ்வளவு முக்கியம் என்பதை அகநின்று காணும் போது மிக அதிகமாக அறியலாம். அருட்பெருஞ்ஜோதியின் செயல் எப்படியெல்லாம் வெளியாகி உதவுகின்றன. யாவும் பெரு வியப்பாம்.
(8)
417. நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்
418. ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) சுத்த நீருக்குச் சுவையில்லாததுபோல், சுத்த நீருக்கு நிறமும் இல்லையாம். ஆனால் பிற பொருட்களின் சேர்க்கையால், பூத சக்திகளின் சேர்க்கையால் ஞாயிற்றின் ஒளிக்கதிர்கள் பரவலால், பலவாகிய நிறங்கள் நீருக்கு ஏற்படும். நீரணுவில் அகத்தும் புறத்தும் சில ஆற்றலும் வடிவத்தோற்றமும் உள்ளனவாம். இந்த இரண்டிற்கும் இடைநிலையில் மின் அணுக்கள் உள்ளனவாம். இவைதான் நிறங்களை ஏற்றுப் பல வண்ணங்களையும், சாயங்களையும், உயிரினங்களிலும் பொருள்களிலும் இயற்கைவண்ணத் தோற்றங்களை யுண்டுபண்ணுகின்றனவாம். ஒளியால் நீரின் குணத்தன்மை மாற்றமடைகின்றது. நீரையோ, பாலையோ, சில மருந்துகளையோ சில நிறக் கண்ணாடிப் புட்டிகளில், பாத்திரங்களில், உலோகப்பாண்டங்களில் வைத்திருந்து உட்கொண்டால் பலவித ஆற்றல்கள் கிடைக்கின்றன. ஒளி இன்மையால், இருளால் நீரில் சில கேடுசெய் ஆற்றல்கள் விளைகின்றன. இருளில் வளரும் செடிகள் நன்கு செழிக்காமல் குன்றியும் வெளுத்தும் போவதை அறிவோம். தாவரங்களில் நீர் பாய்ந்து வளரும் விதம் அற்புதமானது. செழுமையும் வண்ணமலர்களின் எழிலும் நீரின் ஒளியியலால் அமைகின்றனவாம். செடிகொடிகள் வெளிச்சத்தை நோக்கிச் சாய்ந்து சென்று வளரவும் இந்நீரின் ஒளியியலே காரணமாம். இப்படி நீரிலே ஒளி ஆற்றலையும் நிறத்தன்மையையும் அமைத்த நம் பதி, நம் அகத்தில் அன்பு நீர்மையை வளர்க்கவும் அருட்குணத்தைப் பெருக்கவும், இன்பச் செயலைப் புரிவிக்கவும் உதவுகின்றதையே தெரிந்துகொள்ள முடிகின்றதாம்.
(9)
419. நீரிடைச் சக்திகள் நிகழ்வகை பலபல
420. ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நீரில் அநேக சக்திகள் பொதிந்து வைத்திருந்து வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவாறு நெகிழ்தல், பரவுதல், நெகிழ்வித்தல், அழுத்தல், சுழற்றல், வளப்படுத்தல், கலத்தல் சூடு, மின்சாரம், சுவை முதலான சக்திகளால் இந்தப் பரந்த உலகையும், இதிலுள்ள பலவான பொருள்களையும் உயிரினங்களையும் பல்கிப்பெருகிப் பக்குவமடைய உதவுகின்றனவாம்.
பிற வுயிரினங்கள் நியதிப்படி தோன்றி வளர்ந்து பக்குவப்பட்டு மறைந்து மேனிலைக்கு ஏறிக்கொண்டே யிருக்கின்றன. மனித இனமோ நியதிப்படி விதிமுறைக்கொப்ப தோன்றினாலும்கூட அன்பும் அறிவும் பெருக்கிக்கொண்டு அருள்வாழ்வு மேற்கொண்டு
வளரவேண்டியவனா யுள்ளது. இதற்காகவே இவனை இம் மண்ணுலகில் பிறப்பித்து அன்பறிவை வளர்க்கத் தகுந்தபடி எல்லாச் சூழ்நிலைகளையும் வழங்கியுள்ளார். இதனால் தான் இங்கே தான் இந்த நீரியலின் அற்புத ஆற்றல்களை எல்லாம் இப்படி வெளிப்படச் செய்துகொண்டுள்ளார். பிறவிடங்களில் இதுபோன்ற நீரியல் வெளியாகாததால் மக்களினம் அங்கு தோன்றி வளர்ந்து பக்குவமுறவும் முடியாதென்பது தெளிவு. ஆகையால், இங்குள்ளவன் இறையருள் நெறியை யுணர்ந்து ஏற்று ஒழுகுதலே சாலச் சிறந்தது. இதை விடுத்து, அருளறியா மருட்செயலால் உழன்றுகொண்டும், இச்சை வசப்பட்டு அழிந்து கொண்டும் இருத்தல் திருவுளச் சம்மதமன்று. அருள்முயற்சி மேற்கொண்டால், எதையும் அறியலாம், எங்கும் செல்லாமற் சென்று யாவருக்கும் நலம் புரியலாம். இது அருட்பெருஞ்ஜோதிபதியின் ஆணை.
(10)
421. நீரினிற் சத்தர்கள் நிறைவகை யுறைவகை
422. ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நீரில் பல ஆற்றல்களும் தன்மைகளும் உண்டென்பது அறிவோம். அவ்வாற்றலை, தன்மையைச் சக்திகள் என்பர். அதனைத் தன் இயல்பாய்ப் பெற்று, செயலில் வெளிப்படும் பொருள்கள் அல்லது தத்துவங்கள், அல்லது உயிர் வடிவங்கள் சத்தர்கள் எனப்படும். நீரிலே எத்தனையோவகை நுண்தாதுப்பொருட்கள், பூதப் பொருட்கள், மின்னியல் சிற்றணுக்கள் உள்ளன ஆதலின், அவை ஒவ்வொன்றும் செயலொடு விளங்கும்போது சத்தராகக் கொள்ளப்படுகின்றது. இப்படி எத்தனையோ சத்தர்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளது நாம் காணும் நீர். இச் சத்தர்களால்தான் நீர்நிலை பரவுவதும் விரிவதும், சுருங்குவதும் உறைவதும் ஆகவுள்ளதாம்.
இவ்வளவு ஆற்றலையும் குணத்தையும் பொதிந்து வைக்கப்பட்டுள்ள நீர், மனிதனுக்கு எத்தனையோ வகையில் பயன்படக் கூடியதாயுள்ளதாம். இவன்தான் இவ்வளவையும் காணவும் கண்டு, தன் தேவைக்கு ஒப்பப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் நல்லின்பம் காணவேண்டியவனாய் இருக்கின்றான். இவ்வின்ப நிலை எய்தவே திருவருள் இப்படிப் புரிந்துள்ளதைப் புரிந்து கொள்ளாமல்தான் மாந்தர்கள், அன்பென்னும் நீர்மையைப் பெருக்கிக்கொண்டு வாழாது, புலனிச்சை பெருகும் பாசத்தாலும், உலகுயிர்களை வெறுத்து வறண்ட துறவாலும், வீண்போதல் திருவுள்ளச்சம்மதமன்றாம். அருட்பெருஞ்ஜோதி வழங்கியுள்ள நீரையும் அதன் நல்ல பல பயன்களையும் துணைகொண்டு, அன்பருளின்பம் ஓங்க வாழ்தல் முறையாகும். மண்ணியல் விரியிற் சக்தி சத்தர்கள் கூறப்பட்டதுபோல் நீரியல் விரியிலும் இங்கு குறிக்கப்பட்டுள்ளதைக் காண்கின்றோம்.
(11)
423. நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல
424. ஆருற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நீரில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன என்பதும், பெருங்கடல் எத்தனையோ உயிரினங்களையும் பொருள்களையும் கொண்டுள்ளது என்பதும் பலரும் அறிந்ததே. நீரில் மிகச்சிறிய பூச்சி புழு இன உயிர்கள் முதல் பெரிய திமிங்கிலம் வரை எவ்வளவோ பிராணிகள் உள்ளன. பாசிக்கொடி முதலான நீர்த்தாவரங்களும் பல உள. உப்புகள், பாஷாணப் பொருள்கள் முதலியன, இரத்தின இனங்கள், கடலடி நிலப்பகுதிக்கும் கீழிருந்தும் “பெட்ரோல்” முதலிய எண்ணெய்களும், எரிவாயுப் பொருள்களும் உள்ளனவாம். கடல்வளம் பற்றி இப்போது அதிகம் ஆராய்ந்து பெரும் பயன்பெற முனைந்துள்ளனர் அறிவியற் பெருமக்கள். கடல்களில் பெருமதிப்புடைய முத்து மணி முதலியன இருப்பதாலும், கடல் வளத்தால் எவ்வளவோ நலம் கிடைக்கக் கூடும் என்பதாலும் இக் கடலுக்குரிய பெயர்களில் ஒன்று இரத்தினாகரம் எனக் குறிக்கப்பட்டுள்ளதாம்.
நீரில் இவ்வளவு உயிர்களையும் பொருள்களையும் ஆற்றல்களையும் படைத்துள்ள கடவுளின் திருவுள்ளம் யாதோ. ஆண்டவர் அருளின் பெருமையும், ஆற்றலின் மிகுதியும், எங்கும் நிறைந்துள்ள இயல்பையும் அறிந்து கொள்ளும் மனிதன், திருவருளின் உண்மையை யோர்ந்து அவ்வருளைப் பெற்றுப் பெருவாழ்விற் தழைத்தற்கேயாம்.
(12)
425. நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல
426. ஆர்கொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தண்ணீரில், மேல்நிலை, நடுநிலை, கீழ் நிலை என மூன்று நிலைகள் அமைந்துள்ளன. இவற்றில், மேனிலையில் விஷ பாகமும், நடு நிலையில் பூதபாகமும், கீழ் நிலையில் அமுத பாகமும் உள்ளனவாம். நீரணு ஒவ்வொன்றிலும் கூட இம்மாதிரி முந்நிலை யுளவாம். இம் முப்பகுதியும் பொதுவாக நன்மைக்கே தான் அமைக்கப்பட்டுள்ளன. அமுதபாகம் ஆக்கும் தன்மையுடையது, பூதக்கூறு வளர்க்கும் தன்மை கொண்டது, விஷப்பகுதி அழிக்கும் இயல்பு கொண்டதாம். இதனால் இவ்வுலகில் நிலையியல், இயங்கியல் உயிரினங்கள் தோன்றித் தோன்றி வாழ்ந்து அனுபவப்பயன் சிறிது சிறிதாக விளைவித்துக்கொண்டே மேனிலைக்கு வந்துகொண்டுள்ளனவாம். மிக நுண்ணிய உயிரினங்கள் இந்திரிய கரணமில்லாத, ஓரறிவு இனத்திலும் சேராத சிற்றுயிர் (Amoeba virus) இனங்கள் கூட இப்பூமியில் அல்லது காற்று வெளியில் மிதந்து பரவிக்கொண்டு வாழும் (உருப்பெருக்கிக் கண்ணாடி “Microscope” மூலம் அன்றி தோற்றரிய சிறு கிருமி வகைகள்) உயிர்ப்பொருள்கள் எல்லாமும் இந்த நீரின் அருஞ்செயலால் உதவிக் கொண்டுள்ளனவாம்.
உயிரினங்கள் அளவோடு பெருகிவரவும், வேண்டாதன அழிந்து ஒழியவும், புதியன தோற்றவும் உதவுவது இந்நீரின் நிலைகளேயாம். நீரே இல்லாத அல்லது நீர் வெளிப்படற்கில்லாத பிற கோட்களில் உயிரினங்கள் வாழ்ந்து உயர்நிலை அடைய முடியாது என்பது இதனால் விளங்கும்.

(13)
427. நீருறு பக்குவ நிறையுறு பயன்பல
428. ஆருற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நீரினால் உண்டாகும் பயன் அனந்தம். அவை அந் நீரிலிருக்கும் வேறு வேறு பொருள்களால், சக்திகளால், செயல் திறன்முறைகளால் வெளியாவனவாம். இவை யாவும் அகத்தே பக்குவமாக்கப்பட்டு, தக்கவண்ணம், உரியகாலம், இடம், சூழ்நிலைகளில் வெளியிடப்பெறுகின்றனவாம். பொதுவாக எல்லா உயிர்களுக்கும் இந்நீர், பக்குவப்பட, நற்பயன் விளைய, நிறைவு பெற்று மேனிலைக்கு ஏற உதவுகின்றதாம். சிறப்பாக மக்கள் வாழ்வுக்கு இந்நீரின் பக்குவ ஆற்றல்களும் விளைவும் பயன்களும் உலகியல் வாழ்வினின்று அருளியற் பெருவாழ்விற்கு ஏறப் பெருந்துணை புரிகின்றதாம்.
(14)
429. நீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும்
430. ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நீரினது இயலை இப்படிப் பதினான்கு ஈரடித் தொடரில் விளங்கிட விரித்துக் கூறப்பட்டிருப்பது, மனிதன் தனது அகப்புற வாழ்வின் அனுபவம் கொள்ளற்கேயாம். கடவுளான்ம வடிவினனாய் இருந்துகொண்டுள்ள இவன், அனாதிகாலமாகவே அப்படிக் கடவுள் அணுவாய் இருந்துகொண்டுதான், இறையனுபவம் கொள்ளவேண்டி ஏழ்வகைப் பிறவியிடை செலுத்தப்பட்டுள்ளான். ஒவ்வொரு வகைப் பிறவியிலும் அதற்கதற்குரிய அனுபவம் அடைய எத்தனையோதரம் அந்தக் குறிப்பிட்ட இன வரிசையில் பிறந்து பிறந்து வாழ்ந்து வாழ்ந்து பயன்கொள்ள வேண்டியுள்ளதாம். இப்படி ஓர் அறிவு நிலை நிறைவுறும் போதுதான், மேலினப் பிறவி அடைய பக்குவம் ஏற்படுகின்றதாம். ஆகவே, ஏழ்வகைப் பிறவியிலும் பன்முறை வாழ்ந்து வாழ்ந்து அக அனுபவத்தைப் பெருக்கி வரவேண்டியுள்ளதாம். ஒவ்வொரு ஆன்மாவுக்கும் இவ்வனுபவம் நிறைத்தற் பொருட்டே இப்படிப் பலவாகிய பிறப்புகளில் சென்று சென்று கடத்தப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாம். இப்படி முறையாகக் கீழிருந்து மேல் வந்தால்தான் முடிவில் இந்த மனிதப் பிறப்பில் பெருநலம் காண முடியும்.
மேற்படி அடிப்படை உண்மைகளைச் சிறிதும் தெரிந்து கொள்ளாத மக்கள்தாம் இவ்வுலகப் படைப்பின் காரண காரியங்களையும், வாழ்வில் நேரும் ஆக்க அழிவுகளையும் புறத்தோற்றத்தில் காணப்படும் குறைபாடுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், இயற்கையாகத் தோற்றுகின்ற சோதனைகளையும் கண்டு கண்டு குழப்பமே அடைகின்றனர், அவத்தையுறுகின்றனர். அருட்பெருங் கடவுளைப்பற்றியும் அவரது எல்லாம் வல்ல செயல் பற்றியும் ஐயமும் அவநம்பிக்கையும் கொள்ளுகின்றனர். கடவுள் என்பது வெற்றுக் கற்பனை, அதனை நம்பிக் கொண்டிருப்பது அறியாமை, எல்லாம் அறிவதற்கரிய இயற்கையின் செயலே என நாத்திக வாதம் புரிகின்றனர் பலர். இவையெல்லாம் நீங்கி உண்மையை உள்ளபடி அறிந்து ஏற்று அனுபவ வாழ்வு பெற வேண்டுமானால், தயவோடும் ஒருமையோடும், உலகபோகத்தில் நிராசையோடும் சத்விசாரம் செய்துவந்தால் உண்மைகள் எல்லாம் உள்ளிருந்து விரிந்து விளங்கவரும். அவ்வுண்மையைக் கண்டு விட்டால் மட்டும் போதாது. அதற்கு தகுந்த முறையில் அருள் அனுபவம் அகத்தே விளைவு கொண்டோங்கப் பரோபகாரத் தயவுச்செயலே புரிந்துவரல் வேண்டும். இதுதான் இந்த நீரியல் விரியின் கருத்து. பிறவும் இதுபோன்றனவே என்பதை மேலும் மேலும் கண்டுகொள்வோம்.
181. தீ யியல் விரி
(1)
431. தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்
432. ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தீயின் தன்மை சுடுதல் என்று யாவரும் அறிவர். அந்தச் சூட்டினால் என்னவெல்லாம் ஏற்படும், எப்படியெல்லாம் செயல்படுத்தப்படுகின்றன, சூட்டின் ஆக்க இயலும், அழி இயலும் எப்படி உலகுக்குத் துணைபுரிகின்றன. கடவுள், தீயை உலகுக்கு வழங்கிச் செயல்படச் செய்துள்ளதின் நோக்கம் என்ன என்பன பற்றி இவ் விரிவியலால் யூகித்துணரச் செய்கின்றார் நம் அடிகளார்.
எப்பொருள் அணுவிலும்கூட நடுவிடம் தீயின்சக்தி செறிந்துள்ளது. நேர், எதிர்மின்சார சக்திகளாக, மின் அணுத்துகள்களாக இருப்பதும் தீயின் இயல்பே அடிப்படையாகக் கொண்டதாம். அகண்ட வான்வெளியில், காற்றின் செயலால், மின் அணுக்களின் செறிவால் நுண்ணிய தீயணுக்கள் எங்கும் நிரம்பியுள்ளன. அத்தீ அணுக்களின் பேரளவுச் சேர்க்கையால், கனலி என்னும் ஞாயிறு அண்டம் தோன்றி யொளிர்கின்றது. இதுபோல் கோடி கோடி அண்டங்கள் வெகு தொலைவிலிருந்து மிகச் சிறிய மணிக்கற்கள் போன்று மின்னி மிளிர்ந்து கொண்டுள்ளன. அவைகள் எல்லாமும் தீமய ஜோதி அண்டங்களே யாம். அந்தத் தீக் கோளங்களில் உள்ள அதிக அளவு சூடும் ஒளியும் சூழ்ந்துள்ள அவற்றின் கோட்குடும்பங்களுக்கும், அவைகளில் உள்ள எண்ணரிய உயிர்ப் பொருள்களுக்கும் வேண்டும், புறச்சூட்டையும் ஒளியையும் கொடுத்து விளங்கச்செய்து, பக்குவப்படுத்திக் கொண்டுள்ளனவாம். அவ்வொளியும் சூடும் விரிவுற்று அகன்று செல்லச் செல்லக் குறைந்து குறைந்து மறைந்தேபோகின்றன. இதுபோல மனிதன் பிண்டானுபவத்திலும் காண உள்ளது சூட்டின் இயலும் செயலும்.
ஆன்ம அணுவே, பெருவெளி நிறை பேரொளியின் ஒரு கூறேயாம். ஆகையால் அது அக்கினிமயமானதாம். அந்தத் தீயணுவின் கண்ணின்றே உயிர்க்காற்று இயக்கசக்தி தோன்றி தேகத்தை விளங்கச்செய்து கொண்டும், சூட்டை நிரப்பிக் கொண்டும் இருக்கின்றதாம். இந்த உயிர்த்தீ, மூலத்தும், இதயத்தும், மூளையின் கண்ணும் உடலுக்கும், உயிர்க்கும், உணர்வுக்கும் வேண்டிய சூட்டைத் தந்து விளங்கச் செய்து கொண்டுள்ளதாம். உயிர் விளக்கத்தால் உடல் வளர, ஞானம் சேர மனிதப்பிறப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற உயிரினங்களைப் போன்று தோன்றியிருந்து மறைந்து போவது சரி அல்ல என ஞான ஒளியால் உணர்ந்து திருவருளைச் சார்ந்து மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றுக்கொள்ள வேண்டியதே இப்பிறப்பின் சிறப்பாம். இச்சிறப்பியலை வெளிப்படுத்தவே ஆண்டவர் தீயின் இயல்பை ஆதியிலேயே அப்படி அமைத்துள்ளார் என அறிகின்றோம். ஆயுற என்றால், நுணுகி ஆராய்ந்து அடைதல் ஆம். அக ஓர்மையோடும், தயாநெகிழ்வோடும் தீயின் இயலை ஆராய்ந்தால் அருட்பெருஞ் ஜோதியையே முடிவில் கண்டு அடையலாம் என்பது குறிப்பு.
(2)
433. தீயினில் வெண்மைத் திகழியல் பலவாய்
434. ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தீயில் முதிர்ந்த நிலை வெண்ணெருப்பாகத் தோற்றுவதாம். எந்தப் பொருளையும் அதிசூட்டால் எரித்தால் முடிவில் நீறு பூத்து வெளுத்துப்போகும். மருந்துகளை இப்படிப் புடமிட்டு எரித்து பற்பம் ஆக்கி வழங்கும்முறை மருத்துவர் நன்கு அறிவர். தீயின் வெண்மை நிலைக்கு முன் பொன்மையும், செம்மையுமாகத் திகழும். இயற்கையில் தீயின் நிறம் செம்மையே, செவ்வொளி, செஞ்சுடர், செஞ்ஞாயிறு, செந் தீ என்று கூறப்படுதல் அறிவோம். தீக் கொழுந்து விட்டெரியும்போது செம்பொன்வண்ணமாய்த் தோற்றும்.
அகத்தீயின் செயலால் உடலில், உட்கருவிகளில், ஊன் பொருள்களில் ஏற்படும் தோற்றமும், செயலும் விளக்கமும் ஆய்ந்து பார்த்தால் அநேக உண்மைகள் விளங்கும். ஒருவன் உட்கொள்ளும் உணவில் சூடு இருக்கிறது. அதனை இத்தனை மாத்திரை உள்ளதென்று கணக்கிடுகின்றனர். ஒரு கிராம் தண்ணீரை, ஒரு டிகிரி சூடு ஏற்றுவதற்குத் தேவையான வெப்ப அளவை ஒரு “கலோரி” (Calorie) என்பர். பசிக்கு ஏற்றபடி நல்ல அளவு சுடுகை தரும் உணவை ஏற்று, உடல் விளக்கமும், உயிர் விளக்கமும், ஆன்ம விளக்கமும் பெறலாகும். ஒருவன் உண்ட உணவு ஜடராக்கினியாலும், பித்தநீர் முதலியவற்றாலும் ஜீரணமடைந்து, சத்துப்பொருள் இரத்தமாகவும், அதுவும் எரிக்கப்பட்டுத் தாதுப்பொருட்களாகவும் மாறி உடற்கூறுகளுக்குப் போய்ச் சேருகின்றன. முடிவில் அந்த உணவினின்று ஆக்கப்பெற்ற வெண்பொருளாக விளங்குவது வெள்ளெலும்பாம். இவ்வுண்மையையெல்லாம் மறைத்து இறைவனைத் தீயின் வண்ணனாகக் கற்பனை செய்து வழங்கியுள்ளனர். செந்தீ வண்ணப் பொன்னார் மேனியச்சிவனையும், நீலஜோதித் திருமாலையும், வெண்ணிறப் பிரமனையும் தீபச்சுடரிலே அகநீல ஒளியும், புற வெள்ளை ஒளியும் விளங்கக் காட்டியுள்ளனர். சிவனை, நீறுபூத்த நெருப்பு போன்ற, சுடலைப் பொடி பூசிய பொன்னார் மேனியன் என்றும், வெள்ளெலும்பணி பூண்டோன் என்றும் கூறியுள்ளனர்.
இங்கு நாம் இத்தேகமாகிய தீயின் உள்வளர் சுத்த அருட்ஜோதியை சத்விசார பரோபகாரத்தால் கண்டு அடைய வேண்டியதே நம் கடமையாகும். இது கடவுள், தீயின் இயலை இப்படி அமைத்ததின் காரணம் என அறியலாகின்றது.
(3)
435. தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
436. ஆயுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) தீயினால்தான் யாவும் பெருகி விரிந்து பொலிந்து விளங்குகின்றன. உள்ளடங்கியிருக்கும்போது தீக்கலை முற்றும் மடங்கிக் கிடக்கும். அது கொழுந்து விட்டுத் தணலாய் எரியும் போது தீக்கலையின் கதிர்வீச்சைக் காண்கின்றோம். அப்போது தான் சூடும் ஒளியும் சூழ்ந்து பரவுகின்றது. பூ என்பது மலர்ச்சியைக் குறிப்பது, அரும்பு மலர்ந்து மலராகின்றது. தாவரங்கள் பூத்துக் குலுங்கும் காட்சியை ஒளி மலராகக் காண்கின்றோம். வானிலே மி்ன்னும் விண்மீன்களை வானப்பூ என்கின்றோம்.
அகிலமெல்லாம் நிறைந்த அருட்பெருஞ்ஜோதித் தீயே நமது அகத்தே அருள்மணம் கந்திக்கும், ஆன்மஜோதி மலராக, ஆயிரம் இதழ் பொற்கமல மலராகக் காணவும், கண்டு அதன் அருட்பெருந் திறலால் ஆனந்தவாழ்வு பெற்று அழிவில்லாது வாழலாம் என்பது அருள் வள்ளல் அனுபவம்.
(4)
437. தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்
438. ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) தீயின் எரிநிலை வெளிப்படும்போது, கனற் பிழம்பு அனற்ஜோதியாகச் சுடருகின்றது. இச் சுடருக்குச் சுடும் தன்மையும், ஒளிதரும் சக்தியும் உண்டு. இச்சூடு சிற்றெல்லை வரைதான் பரவும். ஒளியோ விரிந்த பெரும் எல்லைவரை திகழும். இந்தத் தீயினில் திகழும் ஒளியே உலகில் எல்லாப் பொருள்களுக்கும், உயிர்களுக்கும், ரூப சௌந்தரியத்தை அல்லது வடிவழகை வழங்கி விளங்கச்செய்கின்றதாம்.
சூரியஜோதியின் ஒளிக்கதிர்களும், அந்த ஜோதியின் பிரதிபலிப்பால் விளங்கும் கோட்களின் ஒளிவீச்சும், விண்மீன்களின் நுண்ணொளி அலைகளும் வான்வெளியிற் பரவி, நம் நிலவுலகை அடைந்து, இங்குள்ள உயிர்கள், பொருள்கள் யாவற்றையும் சூழ்ந்தும் ஊடுருவியும் சென்று, புறவடிவையும், உயிர் ஆற்றலையும், உணர்வு அனுபவங்களையும் தாக்குகின்றன. இவற்றால் அக நிறைவான ஆன்மபரிபாகம் உண்டாக்கப்படுவதே கடவுட்சித்தம். இவ்வுண்மையை நன்கறிந்த மக்கள் தேக போக அனுவங்களில் புலன் அவா மிகாது, சூழ்நர்க்கு அன்பு செய்து அருள் அனுபவம் பெற்று மெய்யின்பில் ஓங்கவேண்டுவதே திருவுள்ளம். இந்த அருளியல் உண்மையை அறியாத புலனெறியாளர்கள்தாம் விண்ணூல் கொண்டு சோதிடக்கலை ஆய்ந்து, மக்களுக்கு இச் சோதிச் சூழலால் ஏற்படும் புற அக சுகாசுகங்களைப் பற்றியும், தீமைகளை விலக்கி நன்மைபெற சாந்தி பரிகாரங்களையும் கூறுகின்றார்கள். அப்படிக் கூறவும் உதவவும் ஊதியம் பெற்ற அது கொண்டு பிழைத்து வருகின்றார்கள். அந்த வான் சோதியின் தாக்கல்களை விலக்கிக்கொண்டு, நலம்சூழ வாழ, நவரத்தின மணி ஒளிகளைத் தம்மில் பிரதிபலிக்கச்செய்தற்கு, அம்மணி இழை அல்லது ஆபரணங்களை அணிந்து கொள்ளுகின்றனர் சிலர். இந்தச் சிற்றொளியால் சிறுநலம் பெற்று ஒழியாது, அருட்பெருஞ்ஜோதியால், பெருநலம் பெறவேண்டியது கடவுளாணை.
அண்ட பிண்ட ஆராய்ச்சியிலும், உடற்பிணிகளை ஒழிக்கும் முறையிலும் இந்த ஒளியின் உதவியைப் பல வழியில் பயன்படுத்திக்கொள்ளுகின்றனர். ஒளிப்படப் பிடிப்பு, எக்ஸ் கதிர் படப்பிடிப்பு, ஊதாக் கதிர் ஒளி சிகிச்சை, “லாஸர்” கதிரின் பேராற்றல் எல்லாம் நம் தீ பூதத்தின் ஒளியால் கிடைக்கின்ற பயனேயாம். இதுபோல் இன்னும் சிலபல நன்மைகளை ஒளியினால் பெறக்கூடும். ஆனால், கடவுள் திருவுள்ளம், மனிதன் தனது அறிவு ஒளியால் உண்மையைக் கண்டு, அருள் ஒளியைப் பெற்று, அருட்பிரகாச வடிவெய்தி ஆனந்தவாழ்வில் ஓங்க வேண்டும் என்பதே. ஆதலின் அருட்ஜோதி கொண்டின்புறுவோமாக.
(5)
439. தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
440. ஆயுற வமைத்த அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) தீயில், அருநிலை, கருநிலை, திருநிலை ஆகிய மூன்றுள்ளன. எது போன்றெனில், ஒரு மரத்தை எடுத்து ஆராய்ந்து பார்க்கும்போது, அம் மரத்தோற்ற வடிவம் நிறை எழிலொடு விளங்குவதால் அது திருவுருவம் எனக் கொள்ளப்படும். அம் மரத்திற்கு ஆதி ஆகிய விதையே அருவநிலையாகும். அவ்விதையினின்று வெளிப்பட்டு விளங்கும், முளை விதையின் அருவ அம்சத்தையும், மரத்தின் உருவக்கூறின் சூக்கும அம்சத்தையும் கொண்டுள்ளதால், இம்முளையே மரத்தின் அருவுருவ நிலையாம்.
ஒரு பொருள் அல்லது மரக்கட்டை எடுத்துக்கொண்டு, அதில் தீயின் நிலைகளைக் காண்போம். கட்டையில் இயற்கையாய்த் தீ மறைந்திருந்து பின்பு வெளிப்படும். அருவமாகிய தீ, கட்டையில், அருவமாயிருப்பதோடு அக்கட்டை வடிவமாகவே நிரம்பியுள்ளதாம். ஆகையால், அந்தக் கட்டையே தீயின் அருவுருவ நிலையாம். பின்னர் அக்கட்டை எரியூட்டப்பெற்றபோது, அகத்திருந்த தீயை வெளிப்படுத்தி எரியும் தழல் உருவமாய் விளங்கச்செய்கின்றது. இதுவே தீயின் உருவநிலையாம். இவைகளை மட்டும் ஆய்ந்து கொண்டதனால் பெரும்பயன் கிடைத்துவிடாது. இந்தப் புறநிலைகளைக் கண்டு அதை உதாரணமாய்க் கொண்டு நம் கடவுள்நிலையைக் கண்டு கொள்ள வேண்டுவதே முக்கியமாம். நம்மில், ஆன்மா கருநிலையாகவும், தேகம் திருநிலையாகவும் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் பக்குவவசத்தால் ஏற்பட்ட உயிர் உணர்வில்தான் கடவுளின் அருவுருவாகிய அருள்நிலை வெளியாகின்றதாம். இந்நிலை நின்று திருவருளால் தேக வாழ்வையே ஆன்ம வாழ்வாக, அனக சுத்த அருள் இன்ப வாழ்வாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பது திருவுள்ளமாம்.
(6)
441. தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
442. ஆய்வகை யமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) ஐம்பூதங்களாகிய, வான், வளி, தீ, நீர், மண் இவைகள் 1, 2, 3, 4, 5 என்ற முறையில் தோன்றியவையாம். இத்தோற்றக் கிரமமே இவற்றின் இயல்பு எண்ணும் குறிக்கப்படும். முன்னர் மண் 5, நீர் 4, என்பவற்றைக் கண்டோம். இங்கு தீ 3 என்றதன் விளக்கம் தெளிவாம். இங்கு குறிக்க வந்த தீயிடை மூவியலாவது, உலகப் பொருள்களையும், உயிர்களையும் ஆக்குதல், காத்தல், அழித்தலாம்.
விந்தாகிய தீயில் இயல்பாக இந்த, ஆக்கல், காத்தல், அழித்தல் ஆற்றல் அமைந்துள்ளன. ஆனால் இத் தீ இயல்கள் வெளிப்பட்டு செயல்பட்டு விளங்கத் தக்க சூழ்நிலை அமைய வேண்டியுள்ளதாம். விந்தின் ஆக்கல் சக்தி செயல்பட, நாதமாகிய சோணிதத்தீயின் சேர்க்கை தேவைப்படுகின்றது. தீக்குச்சியிலுள்ள தீ வெளிப்பட புற மருந்துப் பட்டையின் உராய்வு வேண்டியிருத்தல் ஓர் உதாரணமாய்க் கொள்ளலாம். அப்படி, ஆக்கல் சக்தியால் தோன்றிய கருவடிவம் அவ்விந்தின் காத்தல் ஆற்றலால் அகப்புறக்கருவி கரணங்கள் எல்லாம் வளர்க்கப்பட்டு உலகிடைக் குழந்தையைத் தோற்றுவிக்கின்றது. பின்னர் கூட வளர்ச்சி தொடர்ந்து குறிப்பிட்ட காலம் வரை இருந்து பலவித அனுபவங்களை வாழ்வால் வழங்கியபின் உயிர்த்தீ உள்வாங்கப்படும் தொழிலே, அழிக்கும் செயலாகத் தோற்றுகின்றதாம்.
இம்மாதிரி இத்தீயின் மூவியலால் பலவாகிய பொருள்களிலும், உயிர்களிலும் முச்செயல்கள் தோன்றிப் பக்குவப்படுத்தி வருகின்றன. முடிவாகப் பக்குவ மனிதனில், ஆன்மஞானமாகிய தீயின் திரிநிலைத் தோற்றம் ஏற்படுகின்றது. இத்தீயின் ஆககச் செயலால் கடவுள் ஆன்ம உண்மை உணரப்படுகின்றது. பரோபகாரச் செயலால், ஆன்மாவின்கண் அருள் உணர்வு வளர்க்கப்பட்டு வருகின்றது. முடிவில் அருட்ஜோதி அனுபவம் வெளிப்படும்போது அந்த அருட்ஜோதியே, பிறவிக்கட்டை அழித்து, இறப்பையே ஒழித்து விடுவதாம். இதுதான் அகத்தீயின் பெருஞ்செயலாய், அருட்செயலாய் அறியலாகும்.
(7)
443. தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
444. ஆயுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தீ, சுடர் விட்டெரியும்போது, பிரகாசமான ஒளியை வீசுகின்றது. அப்படி எரிந்துகொண்டு மேல்நோக்கி எழும்சுடர் காற்றோடு கலந்து மறைந்து விடுகின்றது. கற்பூரச் சுடர் அல்லது விளக்குச் சுடர் எரிந்துகொண்டு சலியாது இருக்கும்போது பார்த்தால், பொன்மயமான ஜோதியின் நடுவே தீயின் அணுத்திரள் அச் சுடருக்கு ஆதாரமாய்த் தோற்றும், அந்தத் தீத்திரளுக்கும் நடுவில் நீலஜோதிநிலை தோன்றும். இம்மாதிரி மூன்றுநிலை கொண்ட சுடர் விளக்கம் மெழுகுவர்த்தி எரியும்போது நன்கு காணலாம். தீயின் ஒரு சிறு கூறை எடுத்துக்கொண்டு பார்த்தாலும், சாதாரண அணுவின் புறநிலையும், அதன் அகத்தேயுள்ள எலக்ட்ரான், புரோட்டான் போன்ற சுடருட்சுடர் நிலைகளும் யூகித்தறிய உதவும். உள் அகத்தே இருக்கின்ற சுடர்நிலை ஆற்றல் மிக்கது, மற்றவற்றிற்கு ஆதாரமானது. இடையிலுள்ள தீத்திரள் நிலை, மேல் உள்ள ஜோதிப்பிழம்பிற்கு ஆதாரமாய் இருக்கின்றது.
இப்படிச் சுடருட்சுடராய் இருந்து ஒளிருகின்ற தீயின் இயல்பறிந்து கொண்டால், இறைவாழ்வுக்கும் இதுவே ஒரு மாதிரிப் பொருளாகக் கண்டு அக அனுபவத்திற்குச் செல்லலாம். நமது அருட்பெருஞ் ஜோதியும் இந்தப் பேருலகில் எங்கும் நிரம்பியிருந்தாலும் அருள்ஞானியின் உள்ளத்தே வெளிப்பட்டு அனுபவத்தில் விளங்கும் போது, அதனால் பெறத்தக்க பெரும்பயனை நன்கறிந்து அடைய உதவுவதாம். அருட்பிரகாச வள்ளலின் அனுபவத்தில் இந்த உள்ளொளிநிலையின் கூறுகளை எல்லாம் நன்கு கண்டு தெளியலாகும்.
“ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்னீ
என்கின்றாய் நீ எனைவிட் டேகுதொறும் நான்தான்
காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
தோற்றறியாப் பெருஞ்ஜோதி மலைபரநா தத்தே
தோற்றியதங் கதனடுவே தோன்றியதொன்றதுதான்
மாற்றறியாப் பொன்னொளியோ அவ்வொளிக்குள் ளாடும்
வள்ளலருள் ஒளியோஈ(து) அதிசயிக்கும் வகையே.”
மனம் அடங்கி, மெய்யுணர்வு கொண்டு அகமிருந்து அருளால் நோக்கும்போது உண்டாகும் அனுபவக்காட்சியே நன்கு தெளிவாக்கப்பட்டுள்ளதாம். முதலாவது தோற்றிய நிலை, அகண்ட பெருஞ்ஜோதி நிலையாம். இப்பேரொளிமயத்தில் சூழ் அகண்ட பகிராண்ட கோடிகள் எல்லாம் இருந்தும் இல்லாததுபோல் மறைந்துவிடுகின்றனவாம். பகல் வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் எல்லாம் மறைகின்றனபோல், இப்பெருஞ்ஜோதி நிலைதான் எங்கும், என்றும் கேடின்றித் திகழ்கின்ற இறைநிலையை யுணர்த்துவது. இப் பேரொளியின் அழியா நிலையை யுணர்ந்தே இதனைப் பெருஞ்ஜோதி மலையாகக் கூறுகின்றனர். இச் ஜோதி மலையின் காட்சி பரநாதநிலை கடந்தவர்களுக்கு அனுபவத்தில் தோற்றுவதாம். இதற்குமேல், அந்தப் பெருஞ்ஜோதிக்கு நடுவில், மாற்றறியாத பொற்ஜோதி வடிவத்தோற்றம் விளங்குவதாம். அந்தப் பொன்னொளி நடுவிலிருந்து திருவருளின் பெருஞ்செயலாகக் கடவுளின் வள்ளற்பெருமை வெளியாகின்றதாம். ஆகவே, பெருஞ்ஜோதி நிலை நடு ஒன்று, அதன் நடு மாற்றறியா பொற்ஜோதி நிலை ஒன்று, அதன் நடு ஆடும் வள்ளல் அருட்ஜோதிநிலை ஒன்று ஆகவுள்ளதாம். இதனையே நம் அடிகளார், ஜோதியுட், ஜோதியுட் ஜோதி என்கின்றார் பிறிதோர் இடத்தில். இந்த அருட்பேரனுபவம் எல்லாம் வெளிப்பட வேண்டிய, தீயிடை நடுநிலை, அந் நடுநிலை திகழ்நடு நிலையை வகையாக பண்டே அமைத்துள்ளார் நம் பதி.
(8)
445. தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல
446. ஆயுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தீயில் எவ்வளவு ஆற்றல் உள்ளது என்பதும், அதனால் எவ்வளவு செயல்கள் ஏற்படுகின்றன என்பதும், அவற்றால் பெறப்படும் பயன்கள் யாவை என்பதும் மக்களினம் முதலில் கொஞ்சமும் அறியாதிருந்தது. ஆதிக் கானக மக்களாக இருந்த வனவாசிகள் நெருப்பின் உபயோகத்தை அறிந்து பயன்படுத்திக் கொள்ளாது, ஏதோ குளிருக்குச் சூடுதரும் பொருளாக மட்டும் எண்ணியிருந்தனர். பின்னர் கால எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தீயினால், உணவைப் பக்குவப்படுத்தி யுண்ணுதல், சுட்ட மண்செங்கல், மண்பாண்டம் முதலியன செய்து வீடு முதலியன கட்டிக்கொண்டு வாழப் பழகினார்கள். பின்னர் உலோகங்களை உருக்கிப் பலப்பல பொருள்களாக, கருவிகளாக ஆக்கிப் பயன்கொள்ளலானார்கள். இன்றைய உலகர் தீயின் ஆற்றலால், அறிவியல், பொறியியல் துணைகொண்டு எவ்வளவு பெரிய பெரிய காரியங்களைச் சாத்தியமாகக் கொண்டுள்ளனர். மின்சாரம், அணுசக்தி எல்லாமும் தீயிடை மறைந்திருந்த ஆற்றல்களேயாம்.
உயிர் உடம்பிலே உள்ள உயிர்த்தீ (ஜீவாக்கினி)யும், மூலாக்கினியும், ஞானாக்கினியும், அக ஆய்வினாலும், யோக சாதனைகளாலும், தவ ஆற்றலாலும் அறிந்து கொள்ளப்பட்டன. இவற்றின் மூலமாக எவ்வளவோ பயன்தரும் செயல்களும், அற்புதச் சித்துகளும் இயற்றப்பட்டுள்ளனவாம். இவைகளுக்கெல்லாம் மேலாக இப்பொழுது தயவோடுகூடிய சத்விசார சுத்த ஞானத்தால் கடவுள் உண்மையை அருட்பெருஞ்ஜோதியாகக் காணவும், அதன் தனிப்பெருங்கருணையால் அருட்பிரகாச வண்ண அழியாத் திருவுரு கொண்டு வாழவும் முடிந்துள்ளதாம். தீயினால் கண்டு கொள்ளற்கான, அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மையைத் தான் ஆதியில், அத்தீயின் அற்புதசித்தி ஆற்றலாக அன்றே ஆண்டவர் ஆக்கிவிட்டுள்ளார் போலும்.
(9)
447. தீயிடைச் சித்துகள் செப்புற மனைத்தும்
448. ஆயுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) சித்தி என்பது நிறைவேற்றம் அல்லது பயன் அடைவு என்ப. ஒருவன் செயற்கருஞ்செயலைப் புரிந்து வெற்றியுடன் முடித்தான் எனப்தை அக் காரியசித்தி பெற்றான் என்று கூறுதல் வழக்கம். சித்து என்பது அற்புதம் அல்லது வியன் செயல் ஆம். சித்து பெயர்ச் சொல்லாகவும், அச்சித்து பெறுதலை சித்தித்தல் என்ற தொழிற் பெயராகவும் கொள்ளுவர். சித்தி என்பதற்கு ஆங்கிலச்சொல் Attainment என்றும், சித்து என்பது Miracle, Wonder என்றும் குறிக்கின்றனர்.
எவர் எந்தவிதமான சித்துச்செயல் புரிந்தாலும் அது அகத்தேயுள்ள கடவுளான்ம ஜோதியின் ஏகதேச ஆற்றல் வெளியீடே. அருட்பெருஞ்ஜோதி எல்லாம் செய்ய வல்லது. அதன் துணை இல்லையாயின், ஒரு சிறு துரும்பும் அசைக்கமுடியாது எவராலும். உண்மையறியாதாரே, தாமே எல்லாம் செய்வதாகவும், இருவினைச் செயல் தாமே புரிவதாயும் கருதுகின்றனர். அதனால் மேற்பிறப்புக்குத் தம் வினையே காரணம் என்ற எண்ணம் வலுப்பட்டுள்ளது. உண்மையில் அருட்பெருங்கடவுள் ஒருவரே எங்கும் இருந்துகொண்டு, தன் அருள் ஒளியையே எப்பொருளாயும், எச்செயலாயும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும்போது, தான், தான் என்று அகங்கரித்து எழும் உணர்ச்சி யொழியும். அப்போது எச்செயலும் திருவருளின் செயலே எனக் கண்டு நிரகங்காரத்தோடு தன்னைக் காட்டிக்கொள்ளாது இருப்பான் பக்குவ மனிதன்.
தீயின் பேரற்புதப் பெருஞ்செயல்கள் உலகம் அறியாதிருக்கலாம். அறிவியல் துறை எண்ணரிய அதிசூட்டால் பல விந்தைக் காரியங்கள் புரிந்துகொண்டிருக்கக் கூடும். இவற்றையெல்லாம் விட அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றல் கோடிகோடி பங்கு அதிகமாகும். அதனைத் திருவருளால் பெற்றுக்கொள்ளுவதால் பேரின்பப் பெருஞ் சித்தியே அடைந்திடலாம். அதுவே கடவுளாணை.
(10)
449. தீயிடை சத்திகள் செறிதரு சத்தர்கள்
450. ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தீயிலே தோன்றும் பலவாகிய சக்திகள், ஆற்றல்கள் யாவும் பல்வேறு பொருள்களில், வடிவங்களில், தேகங்களில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கின்றன. பௌதிகம் என்ற சொல், தீயைத் தன் அகத்தில் பொதிந்து வைத்திருப்பது என்ற பொருள் தருவதாம். ஐம்பூதங்களும் தம் அகத்தே அடக்கிக்கொண்டுள்ளது தீயின் சக்தியே. இத் தேயு சக்தி கொண்டு திகழ்கின்ற உருவங்களில், தூல, சூக்கும, காரண தேகங்கள் தெய்வங்களாகவும் கற்பனைசெய்து கொள்ளப்படும். தேவர்கள் ஒளியுடையோர் என்பதும் இத்தேயு சம்பந்தத்தால் ஏற்பட்டதேயாம். முக்கியமாக இத் தெய்வ ரூபிகளே சத்தர்கள் என்றும் சொல்லப்படுகின்றனர். மற்றபடி அத்தீயின் ஆற்றல் கொண்டு விளங்கும் எப்பொருளையும் எவரையும் சத்தர்கள் என்று கூறுதல் வழக்கன்று.
நமது அருட்பெருஞ்ஜோதித் தெய்வமே எல்லாம்வல்ல பூரண சக்தியைத் தன்னகம் கொண்டு விளங்கலின், மகாசக்தர் ஆகக் கொள்ளப்படும்.
(11)
451. தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
452. ஆய்வகை யமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) உயிர் இனங்கள் எண்ணிலாதனவாம். அறிவு அளவைக் கொண்டு இனம் பிரித்தறியப்பட்டன. ஓரறிவு முதல் ஆறறிவு பெற்றுள்ள மனித இனம் வரைதான், அறிவறியா உயிரினங்கள் பலப்பல உண்டென்பது ஓரளவு யூகித்திடத்தான் முடிந்துள்ளது, நுண்ணிய பரிசோதனைகளால் சின்னஞ்சிறிய உயிரின இருப்பு தெரியவந்துள்ளது. நிலத்திலும், நீரினும், காற்றினும், வெளியினும் கூட உயிர்கள் இருக்கின்றன என்பதும் ஒப்புக்கொள்ளப்படுவதே. தீயிடையும் உயிரினங்கள் உண்டென்பது இப்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. சில உயிர்கள் அதிக அளவு சூட்டையும் தாங்கிக்கொண்டு இறவாதிருக்கின்றன. எவ்வணு வகத்திலும் தீயுண்டென்பது யாவரும் அறிந்ததே. அதே அணு அகத்திலிருந்து உயிர்ச்சக்தியும் தோன்றி உருவேற்று வளர்கின்றன என்றறியும்போது தீயிடை உயிர் உண்டு என்பதும் தெளிவாம்.
அருட்பெருஞ் ஜோதியில் எவ்வுயிரும், எப்பொருளும் உண்டென்பது சாத்தியானுபவநிலையில் தெளியலாகும். உண்மையில் அந்நிலை பொருந்தி வாழும் சன்மார்க்கி எப்பொருளையும் எவ்வுயிரையும் தனக்கு அன்னியமாகக் காணான்; தானே யாவுமாய் இருந்து நிறைவாழ்வில் நிலவுவான்.
(12)
453. தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
454. ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தீயின், நிலை, செயல் பயன் பலப்பலவாம். தீயானது மறைந்து கிடக்கும் அகநிலையில், உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் பெரும்பூதம்போல் இருக்கின்றதாம். அதனை இலேசாக உசுப்பி எழுப்பிவிட்டால், அடக்கி ஆண்டால் பல நற்செயல் புரியும் நல்ல நல்ல பயன் விளையக் காண்போம். அத்தீயை மிகத் தூண்டி வேகங்கொள்ளச் செய்துவிட்டால் பின்னர் அடக்கக்கூடிய முடியாதுபோம். அதனால் பயங்கரமான தீமை விளையக்கூடும்.
ஒரு விதையுள்ளிருக்கும் அகத் தீயானது சூழ்நிலைக்குப் பொருந்த விரிகின்றது. அவ் விரிவுக்குச் சரியாய் புறநிலையும் மாற்றமடைந்து வருகின்றதாம். தீயின் நிலையால், விதையிலிருந்து முளையும், செடியும், மரமும், காய்கனியும் தோன்றுகின்றன. மேலும், ஒரு காய் தன் உள் கொண்டுள்ள தீயின் நிலைமாற்றத்தால் பழுக்கின்றதும், கனிகின்றதும், பின்னர் அழுகிக் கெட்டுப்போவதும் காண்கின்றோம். மனிதனில் அருட்ஜோதியாம் தீ பெருகப் பெருக ஒவ்வொரு நிலையிலும், அகமும் புறமும் பக்குவம் அடைந்து வந்து நிறைவுறும்போது ஆனந்தவாழ்வு சித்திக்கும்.
(13)
455. தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்
456. ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தீயின் இயற்கைத்தன்மை எரிப்பதும், எரிவதுமாம். ஆனால், அந்த இயற்கைக் குணத்தோடு இயற்கையிற் செயற்கையாக தன்மை தோன்றி ஓரளவில் அடக்கிவைக்கின்றது. நெருப்பானது எரியும்போது சூடு வெளிப்படுகின்றது. சூழ்பொருளைப் பாதித்துச் சுடச்செய்கின்றது. ஆனால் எவ்வளவு தான் எரித்தாலும் புறச்சூடு ஓர் குறிப்பிட்ட நிலைக்குமேல் போவதில்லை. சூழ்நிலையை ஒரு சிற்றெல்லையில் அடக்கி சுடச் செய்தால், சூடு எல்லையற்ற சக்தியால் எதையும் உருக்கும் நிலைக்கும், மேலும் ஆவி நிலைக்கும் கூடக் கொண்டுபோம்.
வான்கதிர் ஆகிய சூரியன் தன் சூட்டால் நிலவுலகையும் மற்ற கோள்களையும் அங்கங்குள்ள பொருள்களையும், உயிர்களையும், ஆற்றல்களையும் விளங்கச் செய்கின்றதாம்; முக்கியமாக இவ்வுலகுயிர்களைத் தோற்றுவித்து வளர்த்துப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கின்றதாம். சூரியனின் இயற்கை சூட்டியலுடன், தண்மைத்தன்மை இயற்கையிற் செயற்கையாய்த் தோன்றுகின்றது. இதுவே சந்திர ஒளியாக தண்கதிர் என விளக்கி, உயிர்ப்பொருள்களுக்குச் சூட்டைச் சமனப்படுத்தி வழங்குகின்றதாம். அகநிலை அனுபவம்கொண்ட அருளாளன், இந்தச் சூட்டையும் தண்மையும் கொண்டு உலகினர்க்குப் பலவிதத்திலும் உதவுகின்றான். இது அருட்பெரும்பதியின் கருணைச்செயலேயாம்.
(14)
457. தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
458. ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தீ, உருக்குந்தன்மையுடையது. பொதுவாக உலோகப்பொருள்களையே உருக்கும். மற்றபடி மண்ணீர் காற்று முதலியன சூட்டால் உருகி ஓடாது, இவற்றினுள்ள அணுச்செறிவின் விரிவால் இப்பொருள்கள் விரிவுற்றுத் தோன்றுகின்றனவாம். பருப்பொருள்களில் அதிகசூடு ஏற்றினால், அப்பொருள் எரிந்து குறுகி முடிவில் நீறாகி விடுகின்றதாம். அக அனுபவத்தில் ஞானத்தீ மனக்கருங்கல்லையே தயவால் உருக்கி விடுகின்றது. அஞ்ஞானத் தீ, மூடத்தால் ஜீவ கரணேந்திரியங்களையே சுட்டுப்பொசுக்கி பாழ்படுத்தி விடுகின்றதாம். தீயின் சிறப்பியலால் யாவையும் பக்குவப்படுத்திக் கொள்வதுபோல, அருட்ஜோதியாம் தீயால் உண்மை கண்டு அடைவதுதான் சிறப்புடைத்தாம்.
(15)
459. தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
460. ஆயுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தீயினுடைய பலவாகிய இயற்கைத் தன்மைகளும், செயற்கையால் உண்டாகும் தன்மைகளும் செறிவிக்கச்செய்து அதாவது உள்ளடங்கியிருக்கச்செய்து, அவற்றினால், பலவாகிய ஆற்றல்களும், விளைவுகளும், பயன்களும் சூழ்நிலைக்குப் பொருந்த வெளியாக்கப்படுகின்றனவாம். இதனால் மனிதனே புறத்தும் அகத்தும் வாழ்வினால் உண்மைகள் பலவற்றையும் கண்டு முடிவில் கடவுள் உண்மையைக் கண்டு திருவருளால் பேரின்ப நிலை அடைவதுதான் திருவுள்ளமாகும்.
182. காற்றியல் விரி
(1)
461. காற்றிடை யசையியல் கலையியல் உயிரியல்
462. ஆற்றலி னமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) வாயு பூதசக்தி, தீயின் சூட்டினால் உந்தப்பட்டு அதிகம் சலிக்கும் தன்மை அடைகின்றது. அகண்டாகாச வெளியில் இயற்கையில் உள்ள இவ்வாயு சக்தி சூக்குமமாய் இருக்கும் நிலையில் விளங்காதுள்ளது. அணுக்களின் அகத்திலே இயல்பாக மின்னியக்கமாக இருக்கும் ஆற்றலே, வாயுசக்தியாக வெளியாக்கப்பட்டு அதிகரிக்கும் போது வான்வெளியில் சலனம் ஏற்படுகின்றது. இது நிலவுலகச்சுழற்சி வேகத்தால் காற்று மண்டலமாகிச் சூட்டியல்போடும் வீசிக்கொண்டிருப்பதாம்.
பிண்டதேகத்தில் காற்றினுஐடய அசைவியல், கலையியல், உயிரியல் ஆகிய மூன்றும் ஆற்றல்வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளன. அகத்தே ஆன்மாவினின்று உயிர்ச் சக்தி விரிந்து ஆற்றலோடு விளங்கும்போது, புறத்திருக்கும் காற்றை உள்ளுக்கு இழுத்து அதன் சத்து அம்சத்தை இரத்தசுகத்திற்கும் ஜீவ விளக்கத்திற்கும் ஏற்று, கரியமிலாம்சத்தை வெளிக்காற்றோடு விட்டுவிடுகின்றது. வெளிவரும் காற்று நாசித்துளை வழி வலத்தில் சூரியகலை அல்லது பிங்கலை எனவும், இடது நாசி வழி சந்திரகலை அல்லது இடகலையாகவும் மூச்சுக்காற்று ஓடிக் கொண்டிருக்கின்றதாம். இதற்குமேல் இருநாசி வழி செல்லாது, இரண்டுக்கும் இடையேயுள்ள சுழிமுனை வழி சிறிதே காலம் ஓடி ஒரு கலையிலிருந்து மறு கலைக்கு மாறும். இவையெல்லாம் சேர்ந்து காற்றின் கலையியலாகக் கொள்ளப்படுகின்றது. உள்ளிருக்கும் ஆனமாவினின்று உயிர்க்குச் சக்தி வரவில்லையானால் மூச்சு ஓட்டம் நின்றுவிடும்: அசையியல் நின்றால், உயிரியல் நிற்கும், உடன் கலைகளின் இயலும் நின்றுவிடும். இதனால் இறப்பு உண்டாம்.
இன்று திருவருளால் அருட்பெரும்பதியோ டிரண்டற இருக்கும் உண்மையைக் கண்டுள்ளோம். அப்படியே அகமிருந்து கொண்டு, உளநெகிழ் தயவுச் செயல் புரியப் புரிய, அந்த அருட்சக்தியே நித்திய ஜீவனாய் அகமிருந்து அனகமாய் விளங்கத் தோன்றிவிடுகின்றதாம். இந்த உயிர் சக்தி, பின்னர் கலைவதுமில்லை பிரிவதுமில்லையாம். நித்தியமாகவே, சுத்த உடம்போடு என்றும் திகழ்ந்து கொண்டிருப்பதாம். இதுதான் காற்றின் கூறாகிய உயிர் அனுபவத்தால் கிடைக்கக்கூடிய பெருவாழ்வாகும்.
(2)
463. காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
464. ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) சூட்டால் காற்று இலேசாகி விரிகின்றது; மேல் நோக்கிச் செல்கின்றது. கனமான காற்று கீழே வரவும் லேசானது மேலே போகவும் ஓர் இயக்கம் உண்டாகி வேகம் கொள்ளுகின்றதாம். காற்றின் பூவியல் என்பது, காற்றின் மலர்ந்து விரிந்து விளங்கும் தன்மையாம். சலனசக்தி, காற்றின் மலர்ந்து விரிந்து விளங்கும் தன்மையாம். சலனசக்தி, இயக்கிடும் வேகம், பரவும் ஓட்டம் எல்லாம் அதிகரிக்க அதிகரிக்க, இளங்காற்றாய் இருந்தது, சுழல்காற்றாய், புயல்காற்றாய், சண்டமாருதமாய், வெளியில் வீசுகின்றதாம்.
உயிர்க்காற்றின் அம்சமானது மனம். இந்த மனத்தில் அமைதியிருக்கும்போது சுவாசத்தில் மென்மையும் தண்மையும் கொண்டு தென்றல் போன்று சுகானுபவத்தைத் தரும். மனத்தில் ஆசை, கோபம், பொறாமை, கடுகடுப்பு முதலியன தோன்றும் போது உயிர்ப்பில், சுழலும், புயலும், சண்ட மாருதமும் போன்ற கேடு நேரும். ஆதலின் அருள்கொண்டு உளம் சலியாது, தயவின் திறம் விளங்க வாழ்தல் உரித்தாம்.
(3)
465. காற்றினி லூறியல் காட்டுறு பல பல
466. ஆற்றலி னமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) காற்றினைத் தொட்டறி உணர்ச்சியாம், பரிசத்தால் அறியலாகின்றதாம். இப்பரிச சக்தியினை விரித்துக் கூற வந்தது இந்தக் காற்றின் ஊறு இயல். இவ்வூறு அறிவுணர்ச்சி ஓரறிவுயிர்களாகிய புல் பூண்டு முதலிய தாவர வர்க்கங்கள் முதல், ஆறறிவுடைய மக்களினம் வரையுள்ள எல்லா ஜீவர்களுக்கும் உண்டு. புறத்தாக்கலால் இப்பரிசம் ஏற்படும் போது அகத்திருக்கும் ஆன்மாகாசத்திலிருந்து கிளர்ந்தெழும் ஜீவசக்தியால் அனுபவிக்கப்படுகின்றது. மனிதப் பிறப்பில், பக்குவநிலையில்தான் இந்த அக அனுபவம் ஏற்பட்டு விளங்கும். காற்றே இல்லாத இடங்களில் உயிரும் வாழமுடியாது. அங்கு காற்றின் இயலும் செயலும் விளங்க வசதியில்லை. ஆகவே, இம்மண்ணுலகமும் மனிதப்பிறவியும் எவ்வளவு சிறப்புடையன எனத் தெளியலாம்.
(4)
467. காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில
468. ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) வெளிக்காற்றை, அதன் சாதாரண, அசாதாரண வேகங்கொண்டு பிரித்தறிகின்றோம், இவ்வுலகில் இவையெல்லாம் காற்றின் பெருநிலையாகும். ஆனால், காற்றின் கருநிலை பற்றிப் பலர் அறிந்திலர். ஏனெனில், அக் கருநிலை புறப்புலன்களுக்கு எளிதில் புலனாகாது. மிக நுண்ணிய அறிவியற் சோதனைகளுக்கே விளங்குவதாயுள்ளதாம். காற்றினுடைய பிறப்பிடமாகிய கருநிலை, சிற்றணுவின் அகமாக இருக்கின்றதாம், அணுவகமிருக்கின்ற, மின் இயக்கம்தான் சிற்றசைவாய் உள்ளதாம். அதனின்று பெருகி வெளிப்பட்டு வளர்கின்றதே காற்றின் எல்லாத் தோற்றமுமாகும். அந்தச் சிற்றசைவே, மனிதனில் ஜீவசக்தி இயக்கத்திற்கு அகக்காரணமாய், உயிர்க்குயிராய் இருக்கின்றதாம். அந்தக் கருநிலையில் அளவிலாத இயல்புகளும் ஆற்றல்களும், கால வரையறைக் குறிப்புகளும் மறைந்திருந்து கிரமமாக வெளிவந்து அனுபவப்படுகின்றனவாம். இவைகளை எல்லாம் கொண்டு மனிதன் பெருவாழ்வுநிலை பெறவே நம் பதி வகுத்தளித்துள்ளார் என்பது உண்மை.
(5)
469. காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல
470. ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) காற்றின் இரண்டு தன்மைகள் யாவையெனில், அசைவது, யாவையும் அசைப்பது ஆம். வாயுவின் சலனமாகிய அசையும்நிலையை நன்கு அறிகின்றோம். ஆனால், அது அகத்தே அழியாதிருந்துகொண்டு, யாவையும் அசைப்பதை ஆழ்ந்து ஆய்ந்து அறியப்படவேண்டியுள்ளதாம். காற்றின் அகநிலை எங்கும் உள்ளீடாய் இருந்துகொண்டு வெளிப்பட்டு இப் பிரபஞ்சத்தோற்றக் காரியப்பாட்டை இடையறாது நடத்திக்கொண்டிருக்கின்றதாம். காற்று, கால் எனப்படும். ஆகாசத்தில் நிறைந்த காற்றால் யாவும் நடக்கின்றதேபோல் பரமகாசசொரூபியாகிய கடவுளின் பிரிவற்ற அருள்ஒளிச் சக்தியாம் திருவடியால் யாவும் செயல்பட்டுக் கொண்டுள்ளதையும் அறிகின்றோம். இது நம் தத்துவநிறைவுடைய மனிததேகத்தில் புறத்து இரண்டு கால்களாகியும், இடகலை, பிங்கலைகளாகிய இருவாசிக் கால்களாயும் விளங்கி உயிரனுபவத்தை நமக்கு நல்க உள்ளதாம். இந்த உயிரனுபவத்திற்கு மேலே அருளனுபவம் உண்டாகும் போது, அந்த அருட்பெரு நிலையில் அருள் ஒளி வடிவாய் இருக்கும்போது, ஞானதேக நிலையும், சுத்ததேக நிலையுமே இரு திருவடிகளாகக் கொண்டு நித்தியானந்த சித்தி வாழ்வில் நிறை மனிதனாய் நிலவுதல் சுத்த சன்மார்க்கக் குறிக்கோள்.
(6)
471. காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்
472. ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) காற்றினுடைய இருநிலை விளக்கங்களை இங்கு தெளிவு செய்யப்படுகின்றோம். அவ்விருநிலைகளாவன: ஒன்று அகம் மற்றது புறமாம். அகம் அருவமாக அறியப்படாததாய் மறைந்துகிடப்பது, புறம் உருவமாக அறியப்படுவது. காற்று ஒருவன்மீது படும்போது உணரப்படுகின்றது, அதற்குமுன் அக் காற்றின்நிலை உணரப்படாதிருப்பது. ஆகையால் முதல்நிலை தெரியவில்லை, இடைநிலைதான் தெரிகின்றது. கடைநிலை அதாவது அக்காற்று எங்கே போனது, என்ன ஆனது என்பதும் தெரிகின்றதில்லை. இதுதான் காற்றின் இடை நடு, கடை நடு என்று குறிக்கப்படுகின்றதாம்.
மனிதனில் உள்ளிருக்கும் ஆன்மாவிடமிருந்து ஜீவசக்தி செயல்படுகின்ற போதுதான் ஜீவசுவாசக் காற்று, புறத்திருந்து அகத்தும், அகத்திருந்து புறத்தும் ஓடிக்கொண்டிருக்கின்றது. அகமிருந்து இயக்குகின்ற உயிர்க்குயிரான, நித்திய ஜீவனை அறியமுடிகின்றதில்லை. அதுபோல் புறத்திருந்து வான்வெளி கலந்த நித்திய வாயு சக்திநிலையும் அறியப்படுகின்றதில்லை. ஆகவே, காற்றின் இடை, நடு நிலையே ஜீவ தேகத்தில் விளங்கக் காணப்படுகின்றது. இந்த இடைநிலை வாழ்வில் திகழும் மனிதன் பக்குவமடைந்து அருள்ஞானம் பெறும்போதுதான் காற்றின், ஆதி அந்த நிலையும், அகம் புற உண்மையும் அறிந்துகொள்ள முடியும். இவ்வுண்மையைச் செயல்படுத்த அல்லது ஆற்றவே நம் பதி இக்காற்றினியல் அமைத்துள்ளார் என அறிகின்றோம்.
(7)
473. காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
474. ஆற்றலி னமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) பொதுவாகக் காற்று என்பது ஒன்றாகக் கூறப்பட்டாலும், அதன் தன்மை, வேகம், தோற்றம், பிற பொருட் சேர்க்கையால் ஏற்படும் குணம், ஆற்றல், செயல்திறன், விளைபயன் பலப்பலவாம். இவற்றால் ஒன்றான காற்று வேறு வேறான தோற்றநிலையில் வேறு வேறாகிய பெயர்கள் ஏற்று விளங்குவதாம். புற உலகில் காற்றின் பலநிலைத் தோற்றங்களை அறிவியல் அறிந்துள்ளது. அவை, உயிர்க் காற்று (Oxygen), நீரக வாயு (Hydrogen), உப்புவளி (Nitrogen), கரியமிலவாயு (Carbondioxide) முதலியனவும் இன்னும் நற்பனையும், தீய விளைவையும் உண்டுபண்ணும் பலவாகிய காற்றுகளைக் கண்டுள்ளனர். இவைபோக, நம் இலக்கியங்களில் நாற்றிசையிலிருந்து வீசும் காற்றுகளை அவற்றின் குணச்செயல் தோற்றம் கருதிக் காரணப் பெயராக நால்விதக் காற்றைக் கூறியுள்ளனர். அவை, வடக்கிருந்து வருவது வாடைக்காற்று, தெற்கே இருந்து வருவது தென்றல், கீழ் திசையிலிருந்து வருவது கொண்டல், மேற்றிசைக் காற்று கோடை எனப்படும்.
நம் பிண்டதேகக்கூறில் பலப்பல வாகிய நிலைகளில் வேறு வேறான குணத்தோடு, ஆற்றலோடு, செயலோடு விளங்கும் காற்றைப்பற்றி உடற்கூறு நூற்களும் மருத்துவயோக சாத்திரங்களும் நன்கு விளக்கியுள்ளனவாம். இவற்றில் குறிக்கப்படும் காற்றின் வகை பொதுவாகப் பத்து எனப்படும். அவைகள், பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் என்பனவாம். இவைபோக இன்னுஞ் சிலவும் குறிக்கப்படும்.
ஆகவே இந்தக் காற்றின் பலவாகிய தோற்றங்களினால், குணச் செயல்களினால் உயிர் விளக்கமும், அறிவு அனுபவமும் ஏற்படுகின்றன. இவை கொண்டு அருள் இன்ப வாழ்வு பெறுவதே நமக்கு ஆணை செய்யப்பட்டுள்ளோம். ஆன்ம இன்ப லாபம் ஒன்றே குறிக்கோளாய் வைத்து ஞான யோக சாத்திரங்களைப் படைத்தனர் முன்னோர். ஆகவே, ஜீவான்ம உண்மை இந்தக் காற்றின் விளக்கத்தால் அறியப்பட உள்ள காரணத்தால்தான், வாயுவைப் பத்தாகக் கொண்டனர். ஆன்மாவே, யகரமாகவும், எட்டும் இரண்டும் இணைந்த ஒன்றாகவும், கடவுளுண்மையும் மனித உண்மை கலந்த அத்துவதைப்பொருளே இந்த ஆன்மாவும் கண்டுகொள்ளச்செய்தனர். தச வாயுக்களை தச அவதாரமாகவும் பொருந்தக் காட்டியுள்ளனர். திருமாலின் பத்து அவதாரங்களில் முக்கியம், இராமன், கிருஷ்ணன் இரண்டும் உலகியலிலிருந்து பரநிலைக்கு உயர்த்தும் பெருமைகொண்டனவாய்ப் பேசுவர். அந்தக் கற்பனைகளையெல்லாம் கடந்து அருள்விசார உணர்வை, அகக் கடவுள் வடிவில் பதித்து நின்று அருள்வாழ்வு வாழ வாழ பேரின்பநிலை சித்திக்கும் என்பது உண்மையாம். இவ் அடைவின் பொருட்டே ஆண்டவர் இப்படிக் காற்றின் அமைப்பே ஆதியிலேயே ஏற்பாடு செய்திருக்கின்றார்.
(8)
475. காற்றிடைச் சக்திகள் கணக்கில உலப்பில
476. ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) காற்றிலுள்ள ஆற்றலை இவ்வளவுதான் என்று கணக்கிட்டுச் சொல்லிவிட முடியாது. பெரிய பிரபஞ்ச வெளியில் காற்று அருகியுள்ள இடங்களில், அதன் தோற்றமும் செயலும் வெளிப்படாது மறைந்து கிடக்கின்றன. நிலவுலகம் போன்றவற்றில்தான் இக்காற்றின் சக்திகள் நன்கு வெளியாகின்றன. நிலக்கோளத்தைச் சூழக் காற்றி்ன் ஆற்றல், தரையையொட்டிச் சில மைல் தூரத்திற்கு அதிக அழுத்தமாய் உயிர் வாழ்வுக்கு ஏற்றதாயுள்ளதாம். தரையைவிட்டு மேலெழுந்து உயரே செல்லச் செல்லக் காற்றின் ஆற்றல் குறைந்து அருகிப்போகின்றதால் வான்வெளியில் அதிவுயரம் செல்லவும், சென்று வாழ்ந்து கொண்டிருக்கவும் தக்கதாய் இல்லையாம்.
ஆன்மாவில் அமைந்துள்ள உயிர்க்காற்றின் ஆற்றலும் அளவும் எண்ணடங்காவாம். இதனால், அவ்வான்மா உயிர்க் காற்றை வெளியிடும்போது, அதனைச் சூழ ஓர் ஒரு தேக வடிவம் தோன்றி விளைவுகொண்டு அனுபவத்தை யுட்சேர்த்துக் கொண்டே வருகின்றதாம். இப்படி ஓர் ஆன்மாவுக்கு எத்தனைப் பிறப்பு உருவங்கள் வருகின்றனவோ, அதன் ஒவ்வொரு பிறப்பிலும் எவ்வளவு ஆற்றலும், செயலும், அனுபவமும் உண்டாகின்றனவோ, யாரே கணித்தறியக்கூடும்? இவையெல்லாம், முடிந்த அருள் வாழ்வுக்கு அடிநிலையாய் அமைந்துள்ளன என்பது உண்மையாம்.
477. காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
478. ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) காற்றின் குணம், ஆற்றல், பயன் முதலியவற்றின் வேறுபாட்டால் அளவில்லாது விளங்குகின்றது இவ்வாயு பூதம். இதனை அடக்கியாளும், பூதரூபிகள், பொருள்கள், தத்துவ தத்துவிகள் பலவாகவே வகுத்து அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூமிப் பரப்பிலும், சூழ்நிலையிலும், உயிருடம்புகளின், கருவி, கரண, ஜீவ, ஆன்ம தத்துவங்களிலும் இக்காற்றின் ஆற்றல் அமைந்துள்ளது. இவை ஒவ்வொன்றும் மேற்படி சக்திகளைக் கொண்டுள்ளதால், இவையே சத்தர்கள் எனப்படுகின்றனர். இந்தச் சத்தர்களாகிய இயக்கிகளை முற்றிலும் அறிவதே கடினம். ஒருவன், தன்தேக கரணத்திலும், உயிரிலும், இச் சத்தர்களாகிய இயக்கிகளை அறிந்து, அருளாலே அடக்கியாளும் ஆற்றலும் பெற்றுவிட்டால், அருட்சித்தியோடு அனந்தானந்த வாழ்வைப் பெற்றுக்கொள்ளலாம்.
(10)

479. காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
480. ஆற்றலி னமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) காற்றில் பலவாகிய உயிர்த்தோற்றத்திற்கான ஆற்றல் அமைந்துள்ளது. உயிர்ச்சக்தி என்பது எல்லா உயிரினங்களுக்கும் பொதுவே. ஆனால், அவ்வுயிர்ச்சக்தியின் வெளியீட்டு விளக்கம், ஒவ்வொரு உயிரினத்திலும் மாற்ற நிலையில் இருக்கின்றதாம். இதனால் உயிரினங்களின் வாழ்க்கை முறையும், அவற்றின் கலையுணர்வும் செயல்திறனும, அனுபவமும் பலவாக விளங்குகின்றனவாம். இவற்றையெல்லாம் அறிகின்ற மனிதன் திருவருளின் பெருமையை உள்ளபடி யுணர்ந்து, மக்களுயிர்க்கு அருள் விளக்கம்செய்து, மேலேற்ற வேண்டியவனாயிருக்கின்றான். மக்கள்பால் ஜீவ கருணைத்தொண்டு புரிய வேண்டியதே மிக அவசியம். மற்றபடி பிற உயிர்களிடத்தில் விருப்பு வெறுப்பின்றி, வாழ்வுக்கு உதவும் வகையில் தயவோடு நடந்து கொள்ள வேண்டியதே கடமையாம். இப்படி தயவோடு கூடிய உயிரனுபவத்தால் அருளனுபவம் பெறவேண்டியதே முறையாம்.
(11)
481. காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்
482. ஆறறுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) வான்நிலை முழுவதும் பிரிவறக் கலந்துள்ளது காற்று. ஆனால், அது வானிலையிலும், தீயிலும், நீரிலும், பாரிலும் ஒரு படித்தாயில்லாது, வேறுவேறான நிலையில், வேறுவேறான வண்ணமாக இருந்து செயல்படுத்துகின்றது. ஆதலால் பயனும் வேறு வேறாகத் தோற்றுகின்றதாம். இதுபோலவே ஜீவனும் காற்றம்சமாய் இவ்வுடலில் விளங்குகின்றதும்கூட நானிலையில் உளவாம். ஆன்மா, ஜீவன், கரணம், இந்திரியம் ஆகிய நான்கிலும் காற்றின்கூறு, வேறு வேறான நிலையில், இயலில், செயலில் உள்ளதாம். இந்திரியத்தில் அதாவது கண் முதலான கருவியில் காற்றானது இரத்தத்தோடு சேர்ந்து இயங்கிக் கொண்டுள்ளது. மனமுதலான கரணத்தில், காற்று, எண்ணம், சிந்தனை யுணர்வாக எழுந்து சுழலுகின்றதாம். ஜீவனில் மூச்சுக்காற்று சுவாசமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. ஆன்மாவில் காற்றானது அன்பறிவின்ப சக்தியாக உள்ளுணர்வில் விளங்குகின்றதாம். இவைபோக மனமே காற்று அம்சம் என்பர். அதுவும், மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்னும் நானிலைகளிலும் சலனம், சலித்தலற்று நிற்றல், தெளிவு நிலை, மேலோங்கி எழுதல் ஆகிய நான்கு முறையில் முறையாக விளங்கும். அன்றியும் இக்காற்றின் செயலால் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம் ஆகிய நானிலைகளில், இந்திரிய, கரண, ஜீவ, ஆன்ம விளக்கம்தரு முறையில் செயல்படுகின்றதும் காற்றின் ஆற்றலே. இப்படி எல்லாம் காற்றின் ஆற்றலும் செயலும் வகுத்தமைத்த நம் பதி இவைகொண்டு அருட்பெருநிலை பெறவே வழிசெய்துள்ளார்.
(12)
483. காற்றிடை யுணரியல் கருதிய லாதிய
484. ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) இங்கு காற்றின் காரணமாக விளைகின்ற உணரியல் அதாவது உணர்ந்துகொள்ளும் தன்மை ஒன்றும், கருதியல் ஆகிய எண்ணுதல், நினைவுகூர்தல், சிந்தித்தல் என்னும செயற்குக் காரணமாயும் இக்காற்று உள்ளதாம்.
பொதுவாக உயிரினங்களில் உள்ள ஜீவ காற்று உயிர் உணர்வாக விளங்குகின்றது. அது பொறிபுலன் உணர்வாகவும், பசி, துயில், சோர்வு, விளக்கம் ஆகவும் இருக்கின்றதாம். உயிரினங்களிலே சிறந்த இம்மனிதனில்தான் காற்றினால் உணர்வு இயலும், உடன் கருதும் இயலும் விரிந்து விளங்குகின்றதாம். இக் கருதியல் பிறஉயிர்களில் மறைந்துகிடந்து, ஓரளவு சுபாவ குணச் செயலாக விளங்கும்; மனிதனிலோ இக் கருதியல் சிந்திக்கவும், பகுத்தறியவும், தெளிவுபெறவும், நினைவில் ஒன்றை முறைப்படி இருத்திக்கொள்ளவும், மனம் இளகி இரக்கம் கொள்ளவும் செய்கின்றதாம். இதற்குமேல் இக் கருதியலே ஆன்மநிலையில் சத்விசாரம் செய்து உண்மையை அறிந்து சார்ந்துகொள்ளவும், ஜீவர்களில் கடவுளுண்மை கண்டு ஜீவ காருண்யம் மேற்கொண்டு வாழ்ந்து கடவுட் கருணை பெற்று கழிவில்லா இன்பில் ஓங்கவும் உதவுவதாம்.
(13)
485. காற்றிடைச் செயலெலாம் கருதிய பயனெலாம்
486. ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) காற்றினால்தான், அசைந்தும் இயங்கியும், சுழன்றும, சுற்றியும் கொண்டிருக்கின்றன எல்லாப் பொருள்களும், உயிர்களும்; காற்றின் செயலால் உண்டாகின்றன இவை. இச் செயல்களோடு மனிதனில் கருதும் செயலைத் தூண்டிவிட்டு அதனால் பல நல்ல பயன்களை விளைவிக்கின்றதாம்.
மனிதன் கருதிய பயன் பெய, பல வழிகளில் முயற்சிக்கின்றான். திண்ணிய மனத்தால் எண்ணிய காரியம் கையுறப் பெற முடிகின்றதாம். உலகியல் வாழ்விற்கான காரியசித்திகளைப் பெற்று மகிழ்ந்திருந்து முடிவில் மடிந்துபோவது பெரிய காரியமன்று. ஆக இயல் வாழ்வுக்கான, சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நிலைகளில் முயற்சித்துச் சித்தி பெறுவது விசேடமாய்க் கருதுகின்றனர் சிலர். அதிலும் சிலர், யோகசாதனையால் அட்டசித்துநிலை பெற்று விளங்க விரும்புகின்றனர். அந்த யோகநிலையோ எட்டு நிலைகள் கொண்டதாம். அவை: இமயம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாம். இவற்றை முறைப்படி மேற்கொள்ளுகின்றவர் அரிதே. ஆசனம் பிராணாயாமம் ஓரளவு பயின்று அற்பசித்தி பெற்று ஒழிகின்றார்கள். இவற்றிற்குமேலே ஞானத்தால் ஆன்மநிலை யோர்ந்து பற்றி நின்று சில சித்தி பெற்று முத்தி முடிவெய்தி யொழிகின்றனர். இவ்வளவுக்கும் காற்றின் கருதியல்பயன் விளைசெயலே காரணம் என்பர்.
இன்று தோன்றியுள்ள சுத்தசன்மார்க்கம் வழங்க உள்ள சித்தி இன்பவாழ்வு மிக உயர்ந்ததாம். அதுவே, கடவுள் அருளாணையாகவுமிருக்கின்றது. இந்த மார்க்கி இக்காற்றை அருள் திருவடியாகவே காண்கின்றான். வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே இன்னான் செயலாகும். வேகாக்கால், சாகாத்தலை, போகாப்புனல் என்பன சாகாக்கல்வியின் பயனாம் திரிதேகசித்தி நிலையேயாம்.
(14)
487. காற்றினிற் பக்குவ கதியெலாம் விளைவித்
488. தாற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

(உ-வி) அண்ட பிண்டங்களையெல்லாம் தாங்கியும், ஈர்த்தும், இயக்கியும், சுழற்றியும் வேகம் கொடுத்து மிக விரைந்து சுற்றிச் சுற்றி வரச் செய்கின்றது காற்றின் செயலே. கோட்களையும் நாட்களையும் பலவாகிய நிலைகளிற் சூழ்ந்துள்ள காற்று அவற்றைத் தத்தம் கதிகளில் தவறாது செலுத்திக்கொண்டுள்ளதாம். இவற்றால், அண்ட பிண்டங்களிலுள்ள பொருள்களும் உயிர்களும், சக்திகளும், விளைவுகளும், பக்குவமடைந்துகொண்டுள்ளன. இப்பக்குவவிளைவால் மனிதனில் மெய்யறிவும், மெய்யன்பும் ஏற்பட்டு முடிவில் நற்கதியாகிய இறவாப் பேரின்ப வாழ்வும் சித்திப்பதாம்.
(15)
489. காற்றினிற் காலம் கருதுறு வகையெலாம்
490. ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) காற்றே கால் எனவும் படுவதாம். இக் காலின் அடியாகப் பிறந்ததே காலம்ஆம். மனிதப் பிண்ட தேகத்தில் காற்று, மூச்சுச் சுவாசமாக இயங்கிக்கொண்டுள்ளது. ஒவ்வொரு மூச்சிலும் தசமாகிய ஆன்மசக்திக்கலை வெளிப்படுகின்றது. அப்போது அக்காற்று, ஆறாதாரச் சக்கரங்களையும் சுழற்றி, அவற்றில் வெளிப்படும் சிறிதளவு ஆற்றலையும் ஆன்ம சக்திக் கலையுடன் வெளியேற்றிவிடுகின்றதாம். இந்த ஆன்ம ஆதாரச் சக்திக் கலையே, பத்தும் ஆறும் பெருக்கிய ( 10 x 6 = 60) அறுபதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதிரி ஒவ்வொரு நாளிலும் உயிர்க்கலை வெளியிற் கழிந்து போய்கொண்டேயுள்ளதாம். தினசரி மூச்சு 21600 என்று அறிகின்றோம். இம்மூச்சில் ஒவ்வொன்றும் ஆன்மாவின் பத்து கலை மட்டும் போக, ஆதாரங்களில் ஆறு கலை வேலை செய்து கொண்டேயிருப்பதாம். இதனால், ஒரு நாளில் 21600 மூச்சில் 21600 x 10 = 2,16,000 கலை கழிகின்றதாய்க் கொள்ளப்படும். இந்த 21600 கலைகளே ஒருநாளாக இருப்பதாம். இதனை 60 ஆல் வகுக்க 2,16,000/60 = 3600 ஆம். இவை வினாடிகளாம். இதனையும் 60ல் வகுக்க 3600/60 = 60 நாழிகை ஆகும். இப்படித்தான், 60 கலை = 1 விநாடி, 60 விநாடி = 1 நாழிகை, 60 நாழிகை = 1 நாள் என்ற வாய்ப்பாடு ஏற்படுத்தப்பெற்றுள்ளது. இதற்குமேல், அக ஆன்மா அனுபவத்தின் பொருட்டே சதுர்யுகக் காலக் கணக்கையும் நம் உயிர்களையே கொண்டு கண்டுள்ளனர். அதாவது, கலியுகம், துவாபாரயுகம், திரேதாயுகம், கிருதயுகம். இவை ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என்ற பொருளில் கொள்ளப்படுவது. ஒவ்வொரு யுகத்திற்கும் இருண்டு நாட்களையே உரிய வருடங்களாகக் கற்பித்துள்ளனர். அதாவது கலியுகத்திற்கு, 2,16000 x 2 = 4,32000 வருடங்களாம். துவாபர யுகத்திற்கு 4,32000 x 2 = 8,64000 ஆண்டுகளாம். திரேதாயுகத்திற்கு 4,32000 x 3 = 12,96000 வருடங்கள். கிரேதாயுகம் அல்லது கிருத யுகம் 4,32000 x 4 = 17,28000 வருடங்களாம். இவைகளின் மொத்தம் 4,32000 + 8,64000 + 12,96000 + 17,28000 = 43,20000 ஆண்டுகள் ஒரு சதுர்யுகம் ஆகும். இவ்வளவும் உயிர்கலையே. இதனை ஒருநாளுக்குரிய 2,16000 கலைகளால், வகுக்க வருவத 20 நாளாம். ஆனமா 10 எனப்படுவதால், ஆன்மவிசாரம் முதற்பத்தாகவும், ஆன்ம இன்ப வாழ்வு இரண்டாம் பத்தாகவும் கொண்டு, இந்த சுத்த சன்மார்க்கச் சித்தி வாழ்வு அனுபவம் குறிப்பது இச் சதுர்யுக தத்துவ இருபது நாள் சுட்டுவதாம். நம் அருட்பெருஞ்ஜோதிபதி இந்தக் காலாதீத மரணமில்லாப் பெருவாழ்வை வழங்கவே இக்கால தத்துவத்தை காலாகிய காற்றினுட் பொதிந்துவைத்து வெளியாக்கியுள்ளனர் என்பது உண்மையாம்.
(16)
491. காற்றியல் பல பல கணித்ததிற் பிறவும்
492. ஆறறவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) காற்றினுடைய அகப்புறத் தன்மைகள், ஆற்றல்கள், வகைகள், தோற்றங்கள் பலபலவாக அமைத்து, அவற்றால் விளையும் செயல்களும் பயன்களும் அனந்தமாக வெளியாக்கப்படுகின்றன. இவைகளேயல்லாமல் அருளால் ஆன்மானுபவம் வெளிப்படற்காக, சூக்கும தெய்வ வடிவங்களையும், ஆவி வடிவங்களையும், பூத, பிரேத, பைசாச, காற்றுக் கறுப்பு வடிவங்களையும், சுர, அசுர, தேவ, சித்த கணங்களையும், சகல, பிரளையாகல, விஞ்ஞானகல ஆன்மபேத மனிதர்களையும், திரிமலபரிபாக திரிதேக சித்தி நிலைகளையும் இந்த வாயு சக்தியினால் வெளிப்படுத்தற்கே தொடக்கத்தில் இவைகளை எல்லாம் திருவருளால் அடக்கிவைத்திருந்து தேவையானபோது தேவையானபோது கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளார் நம் பதி. காற்றின் முழுமையான விரிநிலையை இன்னும் மனிதன் காணவில்லை, காணவேண்டியது எவ்வளவோ: காலத்தேயாவும் வெளியாகிக்கொண்டேயிருக்கும். பிறவும் வருங்காலத்தில் வெளியாகிக் கொண்டிருக்கும். அருணிலை பெறுவோர் காலக் கணக்கு கடந்து என்றும் அருள் வாழ்வுடன் திகழ்வார்கள்.
183. வெளியியல் விரி
(1)
493. வெளியிடைப் பகுதியின் விரியியல் அணைவியல்
494. அளியுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) இங்கு, வெளி என்பது வெற்றுச் சூனியவெளியன்று. மேலும், அப்படிச் சூனிய வெளியே உண்மையில் இருக்க முடியாது. எப்போது அவ்வெளி முற்றிலும் ஆகாசபூதம் நிறைந்தே இருப்பது இயல்பாகும். ஆகவே ஈண்டு வெளியியல் விரி, ஆகாசநிலைத் தோற்றத்தைப் பற்றியே விளக்கிக் கூறவந்ததாகப் பொருள் ஆக்கிக்கொள்ள வேண்டும். இந்த வெளியும் இடமும் ஆகாசமும் (Space and ether) எனப்படுகின்றது. ஆனால் இவற்றின் உண்மையை அறிவியலாற் காணக்கூடாததாயிருக்கின்றது.
பெருவெளிநிலை எல்லையற்றதாய் அகண்டமானதாயுள்ள ஒன்றாகும். இந்த முழுமையான பெருவெளித் தோற்றத்தைக் கண்ணாலோ, கருவிகளாலோ காணமுடியாது. நாம் காணக் கூடியது அந்த அகண்டத்தின் ஒரு சிறிதளவேயாம். இவ் அற்பப் பகுதி வெளியையே முழுமையானதாகக் கருதிக்கொண்டுள்ளனர் பலர்.
நாம் காணுகின்ற பகுதி வெளி, நிலப்பரப்புக்கு மேலே வான்வெளி கவிந்து பெரு வட்டக் கூடாரம்போல் தோற்றுகின்றது. வான்வெளியில் நிலமும், பிற கோட்களும், நாட்களும் சுழன்று சுழன்று சுற்றிக்கொண்டேயிருப்பதால் உருண்டை வடிவாக அமைந்துள்ளன. மேலும், கண்ணாற் சூழ நோக்கும் போது, எல்லையில்லாப் பெருவெளியின் பகுதியும் வட்ட வடிவமாகவே தோற்றுகின்றது. இவ்வெளியில் சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் வானவிதானத்தில் அந்தரத்தே இருந்து ஒளிருகின்றனவாய்க் காண்கின்றோம். தரைமட்டத்திற்கு மேலே சென்று பார்த்தால் வானக் கவிகை தணிந்தும், சுருங்கியும் தோற்றும்.
மனிதனில் நிரம்பியுள்ள வெளி நிலை, உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரையுள்ள தேக வடிவம் முழுவதுமாம். இத்தேக நிலை குழவிப்பருவத்தில் மிகச் சிறிதாயிருந்து வளர்ச்சியுறும் போது விரிகின்றது. உயிர் நீங்கினால், உடலுருச் சிதைந்து, பூத அணுக்கள் பிரிந்து விரிந்துபோய் விடுகின்றன. உரு வளர்ச்சியில் பூத அணுக்கள் அணைந்து அல்லது கூடிப் பெருவடிவமாகின்றதாம். தேகத்தின் இந்த விரிவதும் சுருங்குவதுமான நிலைகளை, வான்வெளி வடிவின் விரிவும் சுருக்கமும் ஆகக் கொள்ளப்படும்.
புறத்தேகம் தோன்றி விளங்கும் நிலையில், அகத்தே ஆன்மாகாசம் விரிந்து அறிவு அனுபவ விளக்கம் கொண்டு திகழுகின்றதும், புறவுடல் நீங்குவதால் அகத்திருந்த ஆன்மாகாசம் சுருங்கி அருகி அறிவனுபவம் கெட்டு மறைகின்றதாம். மறுபடியும் அவ்வான்மாணுவைச் சூழப் புதிய ஒரு தேகம் தோன்றிடுங்கால் அவ்வாகாசம் விரிகின்றது. இப்படி இவ் வான்நிலை விரிவதாலும், சுருங்குவதாலும், பிறப்பும் இறப்பும் உண்டாகி ஆன்மபரிபாகம் அடையக்கூடியதாயுள்ளதாம். இதுதான் அளியுற எனப்பட்டுள்ளது. அளிதல் என்றால் கனிதல் எனப் பொருளாம். ஆன்மாவின் கனிவுநிலை இரக்கமே வடிவான அன்புருவமாகும். இதனால், அளிதல் என்பதற்கு அன்புமயமாதல் என்று பக்குவத்தே காணலாகும். இக் காரணத்தால் அளி என்ற சொல்லுக்கு அன்பு என்ற பொருளும் வழங்கப்பட்டுள்ளதாம்.
(2)
495. வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
496. அளியுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) அகண்டமான வெளியிடத்தே வான்பூதம் நிரம்பியிருந்து, அதனின்றே காற்றாகிய வாயுபூதம் தோன்றி நிரம்பிட அதிலிருந்தே மேலும் தீயும், நீரும், மண்ணும் தோன்றிப் படர்ந்து நெகிழ்ந்தும், இறுகியும் ஐம்பூதங்களாகி, இவ்வைம் பூதத்தாலான அண்ட பிண்ட சராசரங்கள் யாவுமாகிப் பிரபஞ்சம் முழுவதுமாய்த் தோற்றியுள்ளதாம். இந்த மா பிரபஞ்சத் தோற்றம் வியத்தகு வண்ணம் விளங்கிக்கொண்டும், பலவாகிய ஆற்றலை வெளிப்படுத்தி மனிதனில், இப் பிரபஞ்சத்திற்கெல்லாம் முழுமுதற் காரணமாகிய கடவுளையே காணவும் அருள்ஞானம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாம். அந்தக் கடவுளின் அருள்விளைவே இன்று மெய்யன்பாகக் கண்டு விளங்கவும் செய்கின்றதாம்.
(3)
497. வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
498. அளியுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) சாதாரண ஒலி, காற்றைத்தான் ஊடகமாய்க் கொண்டு பரவுகின்றது. காற்றை எதிர்த்து அதிகம் செல்லாது, காற்றின் போக்கிலே தான் சென்று பரவும். இதுவும் ஒரு விநாடிக்கு 1200 அடி தூரம்தான் சென்று பரவும். சில விநாடி தூரத்திற்குமேல் செல்ல முடியாததால் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செவிப்புலனாவதில்லையாம். ஒலியின் ஆற்றல் இம் மட்டோடு நின்றுவிடவில்லை. ஒலியானது, வெளிநிறை ஆகாச பூதத்தில் கலந்துள்ள மின் அலை மூலம் பரவுகின்றதை இன்றைய அறிவியல் கண்டுள்ளது. இம் மின்னலையின் வேகம், ஒளிக்கதிர் பரவும் வேகத்திற்கு ஒப்பாம், இது ஒரு விநாடிக்கு 1,86000 மைல் அல்லது 3,00000 கிலோமீட்டர் செல்லுவதாம். இதனால் இந்த மின்காந்த அலைகளை ஊடகமாகக் கொண்டு, உலகெங்கும் ஒரு விநாடியில் ஏழில் ஒருகூறு நேரத்தில் ஒலிபரப்பப்படுகின்றதை இன்று வானொலிக் கருவி (Radio) மூலம் காண்கின்றோம். வெளிநிறை ஒலியின் சிறப்புத் தன்மையில் இந்த ஒலிப்பரவல் ஒன்றாகும்.
ஒலியாக வெளிப்படுகின்ற பேச்சுக்குரல் கொண்டு ஒருவன் தன் கருத்தை பிறர்க்குத் தெரிவித்து எத்தனையோ விஷயங்களைப் புரிந்துகொள்ளச் செய்கின்றான். இம்முறையால் மாந்தர்க்கு எவ்வளவோ நன்மை ஏற்படுகின்றதாம். இப்படிப் புறஒலியால் உண்டாக்கப்படும் நன்மையைவிட, அகநின்று உள்ளொளியான் அருட்சக்திமூலம் பிறர் உள்ளத்தே பரப்பப்படும் உண்மைவிளக்கத்தால் பெருநன்மை விளைவது சன்மார்க்கியின் அனுபவம்.
ஒலியின் மற்றொரு வியன்நிலை யாதொனில், வான்வெளியில் ஆகாசம், வாயு, தீ இம்மூன்றின் இயலாய், அகர, உகர, மகரம் தோன்றி, “ஓம்” ஆகி எங்கும் பரநாத இயக்கத்தோடு பெருஞ்ஜோதிமயமாய்த் திகழ்ந்து கொண்டுள்ளதாம். இதனால், பிரபஞ்சத்தில் உருவாகும் அண்டபிண்ட உயிர்ப்பொருள்கள் யாவும், பிரணவத்தால் தாக்கப்பட்டு, ஓவண்ணமாய்த் தோன்றி, வேறு வேறு வடிவாய் விளைவுற்றுத் திகழ்கின்றனவாம். இதுவும் நிறையொலியின் வியன்நிலைத்தோற்றமேயாம். இவை எல்லாம் இந்த மனிதப்பிறப்பு வடிவில் வெளிப்பட்டு விளங்கி, அருட்பக்குவம் ஏற்படுத்தி அன்பின்ப வடிவில் வாழ்வித்தற்கேயாம்.
(4)
499. வெளியிடைக் கருநிலை விரிநிலை யாருநிலை
500. அளிகொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) வெளிநிறை வான் அணுவில் மற்ற பூதங்கள் அதி சூக்குமமாய் ஒடுங்கிக்கிடக்கின்றன. இதனால் இந்த வான்பூதக் கருநிலையில் பிற பூத சக்திகள் இருப்பனவாய்க் குறிக்கப்படுகின்றன. அக் கருநிலைவிட்டு வெளிப் போந்து விரிநிலையுற்றுத் திகழ்கின்ற நிலையில்தான் ஐம்பூதங்களையும் காண்கின்றோம். அந்த ஐம்பூதங்கள்தாமே, பலவகை இரசாயன மாற்றங்களால் எத்தனையோ பொருள்களாயும், உயரின வடிவங்களாயும் தோன்றியுள்ளனவாம். இதனால் எந்தப் பொருளிடத்தும், உயிரிடத்தும் ஐம்பூதங்களை நேரடியாகக் காணமுடிகின்றதி்ல்லையாம். இது அப்பூதங்களின் அருநிலை எனப்படுகின்றது.
தத்துவநிறை மனிதப்பிறப்பு வடிவிலேயும் ஐம்பூத அருநிலையுண்மை உண்டென்பதைத்தான் இன்று கண்டுகொள்ளவும், தெளிந்து பயன்பெறவும் முடிகின்றதாம். சுத்த அன்பு அனுபவம் எப்படி வெளியாகின்றது என்பதைக் கண்போம். காயம் என்பது ஆகாயம் என்றறிந்திடல் வேண்டும். இது அகர ஆகாசமே. இதில் உள்ளீடாய், இறையொளியாய் இருக்கின்றது ஆன்ம சிற்றணுவே, (ன்) னகர மெய்யாக இருக்கின்றது. இந்த அகர வுகரம் அடிமுடியாகி, மனிதனில், ப் + உ வண்ணமாய் தலைநடு நின்று ஒளிர்கின்றது. இது “அன்பு” ஆகின்றது.
இந்த அன்பு உண்மையை அகத்திற்கண்டு, சொல்லிலும் செயலிலும் அன்பே வெளிப்பட வாழ்ந்து சுத்த இன்பானுபவத்தில் ஓங்கவே திருவருள் இப்படி இசைந்துள்ளதாம்.
(5)
501. வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
502. அளிபெற விளக்கும் அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) புறவான் வெளிநிலையில், வான், வளி, தீ ஆகிய மூன்றையும் தோற்றுவித்து விளங்கச்செய்துள்ள கடவுள், அதனையே முடிநிலையிற் கொண்டுள்ளார் என்பதை, அகவான், சிதாகாசத்தில், அன்பருளின்ப ஜோதியுருவாய் அருளாற் காண்கின்றோம். இதனால் வெளி என்பது புற ஆகாசநிலையையும், அகச் சிதாகாசநிலையையும் குறிப்பதாய் அறிகின்றோம். அண்டத்திலுள்ள பிண்டத்திலும் உண்டு என்பது உண்மையே. புறத்தே இயற்கையாய் வெளிப்படுத்தி விளங்குறச் செய்துள்ளதை அகத்தே விளக்கியுணர்த்தி அளிபெறச் செய்ததற்கே இந்த அருட்பெரும் செயலாக யாவும் விளங்குகின்றனவாம்.
(6)
503. வெளியினிற் சக்திகள் வியப்புற சத்தர்கள்
504. அளியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) உருவெளித் தோற்றத்தில் உணரப்படுகின்ற ஆற்றல் படைத்த சத்தர்களும் அவ்வாற்றல்களாகிய சக்திகளும் மிக அற்புதமானவைகளாம். அவ்வுருவெளித் தோற்றங்களே சிற்சில சமயங்களில் பூதாம்சம்கொண்டு, தேவர், சித்தர், முனிவர், இயக்கர் காற்று, கறுப்பு ஆவேசங்களாக வெளிப்பட்டுப் பல அரிய பெரிய காரியங்கள் புரிகின்றனவாம். இக் காரியப்பாடுகள் எல்லாம் எதற்காக என்னில், நம் அருட்பெரும் பதியின் பெருமையை நாம் அறிந்து, அன்பு மயமாகி அருள் அடைந்து உய்யவேயாம். பலவாகிய ஆற்றல்களே சக்தியாக அறிகின்ற போது, அந்தச் சக்திகளை தவ முயற்சிகளால் கொண்டு விளங்குகின்றவர்களைச் சத்தர்கள் என்கின்றோம்.
இதுகாறும் வெளியிடத்திலே இருந்து வந்தும, செயல்பட்டு விளங்காத காரணத்தால் எந்தவிதப் பெருமையும் பயனும் உண்டாகவில்லை மனிதனுக்கு. இதனால் அச்சக்திகளும் பெருமையுற்று விளங்கவில்லையாம். இது சமயம்தான் அச்சக்திகளைக் கொண்டிருந்த சத்தர்களின் மனித வடிவேற்று வாழவந்துள்ளார்களாம். அவர்கள்தான் இன்று அளிவுற்றுத் திகழ்கின்றார்கள். அதாவது அன்புவடிவச் சுத்ததேகிகளாய் விளங்குகின்றார்களாம். இந்நிலை எய்தற்பொருட்டே யாவையும் அன்றே வகுத்திருக்கின்றார் நம் பதி.
(7)
505. வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல
506. அளியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) விண் ஒன்று என்று கூறியுள்ளனர். அகண்டாகாசம் முழுவதும் ஒன்றேயாக இருக்கின்றது. அந்த ஒன்று மிக மிகப் பெரியதாய், அளவிடற்கரியதாய் உள்ளதால், அதனைப் பகுதி பகுதியாகப் பலப்பலவாகத் தோற்றுவித்துள்ளார் நம் பதி. ஒரு பகுதியையே நாம் நமது சிற்பிரபஞ்சமாகக் காண்கின்றோம். இதில் ஒரு சூரியனும் ஒரு சந்திரனும், பலவாகிய நட்சத்திரங்களும் விளங்குகின்றன. இத் தோற்றமுடைய பிரபஞ்சத்தை ஒரு பிரமன் அண்டமாகக் கொள்ளுகின்றோம். இதைப் போன்ற பிரமாண்டங்கள் எண்ணடங்காதன, எண்ணடங்கா விண்மீன் ஆகிய சூரியர்களைச் சுற்றியுள்ளனவாம். அங்கங்குள்ள நிலவுலகங்களிலிருந்து காண்போர்க்குத் தனித்தனி ஒவ்வொரு பிரபஞ்சம் சூரிய, சோம, உடுக்களோடு விளங்கும். ஆகவே எண்ணற்ற பகுதிப் பிரபஞ்சங்கள் கொண்டு விளங்குவதுதான் மா பிரபஞ்சமாய் நிறைவுடைத்தாம்.
இப்படி பிரம்மாண்ட கோடிகள் கொண்ட மாபிரபஞ்சத்திற்கெல்லாம் தனித் தலைமைப் பெரும்பதி ஆக விளங்குகின்ற கடவுள் ஒரே ஒருவர் தான் என்பதைத் திருவருளால் இன்று அறிந்து கொண்டுள்ளோம். இந்தத் தன்னேரில்லாப் பெரும்பதி ஆகிய கடவுள், எவ்வுலகத் தெவ்வுயிர்க்கும், எப்பொருட்கும் என்றென்றும அன்புசெய்து கொண்டுள்ளாராம். தனியொருவராய் இருந்துகொண்டு எப்படி யாவையும் அன்புற விளக்கம் செய்ய முடிகின்றது? எப்படி என்றால், அவர் ஒருவர்தான் என்றாலும், அருள்விசேடத்தால் எங்கும், தன் இயல் உண்மை அறிவின்ப நிலை முழுமையாக விளங்கச்செய்தற்பொருட்டு, பரிபூரணமாகவே விளங்கிக்கொண்டுள்ளார். எனவே, அவரேதான், அவர் ஒருவரேதான், யாவற்றிற்கும் உள்ளீடாய் இருந்துகொண்டு, அனந்தவண்ண பேதத்தோடு புறத்தே விளங்கிக்கொண்டுள்ளார் என்பது தெளிவாம். இந்த உண்மை வெளிப்படவுள்ள மனிதப் பிறப்பு வடிவங்களில் எல்லாம் அந்த ஒன்றான கடவுளே இருந்து கொண்டு வேறு வேறான தோற்றத்தோடு விளங்கிடுகின்றார் என்று அறியப்படுகின்றதாம். இதனால், அவ்வொன்றான கடவுள் தானே, நாம் ஒவ்வொருவருமாய்ப், பிறருமாய், மற்ற உயிர்கள், பொருள்கள் எல்லாமுமாய் விளங்குகின்றார் என்று சத்தியமாகக் கண்டு தெளியவேண்டும். இவ்வுண்மை விளங்கினால்தான் நாம் பலவாகிய புறவடிவினராகவோ, ஒருவண்ண ஆன்ம ஒருமைச் சகோதரர்களாகவோ இல்லை, உண்மையில், எவருமாய் விளங்கிக்கொண்டுள்ள கடவுள் தானே நாம் ஒவ்வொருவருமாவோம். ஆகவே, நாம் இத்தேக வடிவில் இருந்துகொண்டு, பக்குவஞான வசத்தால் உண்மையை அறிந்து, அந்த ஒன்றான கடவுளே அல்லாது வேறாக இல்லாதிருக்கும், நம் மெய் இயலைக் காண்கின்றோம். இந்நிலையினின்று வாழ்வதுதான் இனி ஒவ்வொருவரும் அடைய வேண்டிய நிலையாகும். “ஒன்றே விரித்ததிற் பற்பற அளிவுற வகுத்த” என்றதன் கருத்து, ஒன்றான கடவுள் அகமிருந்துகொண்டு, அன்பு செய்து இன்பம் விளைவிக்கவேண்டித்தானே யாவுமாய் எவருமாய் வெளிப்பட்டுச் சூழ்ந்து வந்து விளங்குகின்றதாம். இவ்வுண்மையை அறிந்துகொண்டுள்ள மனிதனும் அக்கடவுள் மயமாய் இருத்தலின், அப்படியே அன்பின்ப வாழ்வு மேற்கொள்ளுதலே அமைகின்றதாம்.
(8)
507. வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல
508. அளிதர வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) கடவுள் ஒருவர்தான் உண்மையில் எப்போதும் இருந்துவருகின்றார். ஆனால், அந்த ஒருவரே இந்தப் பேருலகில் புறவடிவில் எல்லாம், உள்ளிருந்தபடி வேறுவேறாய்த் தோற்றிக் கொண்டிருக்கின்றார். அனந்த ஆன்மாக்களாய் விளங்குகின்றார். இது ஆண்டவர், வெளியிடைப் பலவாய் விளங்குகின்ற நிலையாம்.
கங்கில கரையில ஜீவான்மாக்கள் என்பர். உண்மையாதெனில், கடவுள் ஒருவரே, பரமான்மாவாக எப்போதும் இருந்துகொண்டுள்ளார். அவர்தானே ஒவ்வொரு மனித வடிவிலும் தனித்தனி ஒவ்வொரு மனிதனாய்த் தோற்றி விளங்கிக் கொண்டிருக்கிறதை உணர்கின்றோம். அந்த ஒரு கடவுளே இத்தனை ஜீவதேக சம்பந்தங் கொண்டு தனித்தனி ஒவ்வொரு ஜீவான்மா என விளங்குகின்றார். இப்படி ஒன்றான பரமான்மபதியே, கோடிகோடி ஜீவான்ம பசுக்களாயுள்ளனர் ஆம். அந்த ஜீவான்மாக்கள் பலவேறு தேகபோக வாழ்வில், பாசச் சூழலில் விளங்குகின்றதாக அறியப்படுவதும், ஒரே கடவுள் உண்மை வெளியாவதற்கேயாம்.
ஜீவான்மாக்கள் எத்தனை கோடி இருந்தாலும் சரி, அவ்வளவுமாய்த் திகழ்ந்துகொண்டுள்ளது அந்த அகமுடைய ஒரு பரமான்மாவே என்பது சத்தியம். ஆகையால், ஒரு ஜீவான்மா சித்தி யுறுங்கால், பரமான்மாவாகவே யுள்ளிருந்து விளங்குகின்றதாம். இதற்குமேல் அந்த பரமான்மாவாயுள்ள ஒன்றே, எந்த ஒரு ஜீவான்மாவாயும் இருந்துகொண்டு, நிறை சித்தியோடு விளங்கக் கூடியதாயுள்ளதாம். இதனால் ஜீவான்மாக்கள் ஒவ்வொன்றிலும் கூட, கடவுள் பற்பல சக்தி, ஆற்றல், செயல்களோடு வெளிப்பட்டு விளங்கி அன்பைப் பெருக்கி அருளைக் கொடுத்து வாழ்விக்கின்றார் என்பது உண்மையாம்.
(9)
509. வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்
510. அளிபெற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) ஆன்மாகாசத்தில் கடவுட்சக்தி நிரம்பியுள்ளது இயற்கை. ஒவ்வொரு ஆன்மாவிலும் சூக்குமமாக அனந்த ஆன்மாக்கள் அடங்கியுள்ளனவாம். ஓரான்மாவிலிருந்து உயிர்ச் சக்தி வெளியாகிச் செயல்படும்போது, அவ்வான்மாவுக்குரிய தனு, கரண, புவன, போகங்களைச் சூழ வருவித்துப் பக்குவம் உண்டு பண்ணுகின்றதாம். இதனால், ஆன்மாவின் உயிரியல் விளக்கம் தோன்றுவதும், மறைவதுமாயுள்ளதாம். இதுபோல் ஒரு விதையிலும் அதற்குரிய தாவரவியல் முற்றுமே ஒடுங்கி, யிருப்பதும், வெளித்தோன்றி விளங்குவதும் காண்கின்றோம். இவைகளே உயிரியல், வித்தியல் என்று கூறப்பட்டுள்ளன. மேலே சித்தியல் என்பது யாதெனத் தெரிந்துகொள்வோம்.
ஓரான்மா, அபக்குவநிலையில், தன்னையுணராது, தான் பெண் சத்தம்சமான தேகியாகக் கருதிக்கொண்டிருக்கும் காலம், பெண்ணாகவே, ஒருத்தி எனக் குறிக்ககப்படுகின்றது. சற்று பக்குவாபக்குவமுற்றுத் தன்னை ஆண் அம்சமான ஆனம சொரூபியாய் உணர்ந்து, சித்திநிலை எய்தி விளங்கும் காலம், தன்னை ஒரு சித் சொரூபியாக, சித்தனாக அறிந்திருக்கின்றான். இது இருத்திநிலை எனப்படுவது. இருத்தி என்றாலே சித்தி என்பது பொருள். சக்தியும் சித்தியுமே இரண்டு தி உடைமையால் இருத்தி என்றார் போலும். இதற்குமேல் அந்த ஆன்மா திருவருளாலே கடவுள் மயமாகி விளங்கும் நிலையே முத்திநிலை எனப்படுவது. இந்த முத்திநிலையே ஆன்மாவுக்கு முடிவான ஆனந்தநிலை ஆகும். இவ்வளவையும் ஆன்மவெளியிடை வைத்திருந்து பக்குவகாலத்தே வெளியாக்கி அனுபவமுறச் செய்கின்றது அருளாளன் பெருஞ்செயலாம்.
(10)
511. வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்
512. அளியுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) புறவெளியிலுள்ளது பூதகாசம். அதிலிருந்து பிரபஞ்சம் உதித்துத் தழைத்துள்ளது. இதுபோல் அகமாகிய ஆனமாகாச வெளியில், மற்ற ஜீவாகாசம், கரணகாசம், இந்திரிய ஆகாசம் ஆகியவற்றை இப்பிண்ட பிரபஞ்சமாகிய தேகத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த அண்ட பிண்டப் பிரபஞ்ச உண்மைகளை எல்லாம் இப்பொழுது தன் அருள் வெளியிலிருந்து வழங்கியுள்ளதை அவ்வருள் நிலை நின்றே அறிகின்றோம். எல்லாம் அருள்வெளியில், பிரணவஜோதி வடிவுடன் நவமணி பீடத்திலிருந்து புரிகின்ற அருள் ஐந்தொழில் என்னும் திருநடனச் செயலின் விளைவேயாகும். அருள்வெளியிலிருந்து இதுவரை வெளியாக்கப்பட்டவை எவ்வளவோ, அவ்வளவுதான் என்பதில்லை; இன்னும் எத்தனையோ கோடி யுகத்திற்கும் வெளிவரவிருக்கும் பிறவும்தான் அடக்கிவைக்கப்பட்டுள்ளனவாம். இவை எல்லாம் ஏனென்றால் மனிதனை, மக்களினத்தை, எவ்வுலகத்து எதுவரையும் சுத்த அன்புடையவராக ஆககி நிறையின்போடு நிலவச் செய்தற்கேயாம்.
184. அகப்புற விரி

(1)
513. புறநடு வொடுகடை புணர்ப்பித் தொருமுதல்
514. அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) பொதுவாக ஐம்பூத விரிவியல் விளக்கம் முன்னடிகளில் தெரிவிக்கப்பட்டது, இனிமேலே அப்பூதப் பிண்டாண்டங்களின், அகம், புறம், எப்படி எல்லாம் விளங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறித்து அகப்புற விரி என்ற தலைப்போடு விளக்கிக் கூறப்படுவதாம்.
இங்கு, புறம், அகம் யாவையெனில், மனித உடலுக்குப் புறம்பாயிருக்கும் யாவும் புறம் என்றும், தேகத்திற்குள் இருப்பவை அகம் என்றும் கொள்ளப்படுவனவாம். ஆகையால், புற நடு என்பது, வானாதி ஐம்பூதங்களில் நடுவிருக்கும் தீயைச் சுட்டும். இவ்வொளியே சூக்கும கடவுட்ஜோதியைக் கொண்டு விளங்குவது. கடை என்பது ஆன்மாவாம். ஒரு முதல் என்பது ஒப்பற்ற முழுமுதற் பரம்பொருள் ஆம் பரமான்மாவேயாம். அதாவது வான்ஜோதியில் ஒவ்வொரு சிற்றணுவும் ஆன்மாவாய், பரமான்மாவோடு இரண்டறப் புணர்ப்பித்து வைக்கப்பட்டுள்ளதாம். யாதெனில், ஒன்றாம் பரமான்மபதியே, ஒளிமய ஆன்ம சிற்றணுவுடன், ஒன்றாதே யொன்றி எங்கும் எப்பொழுதும் இருந்துகொண்டிருக்கிறபோதிலும், மனிதக் கருப்பிண்ட சிருஷ்டி ஆரம்பத்தில் வெளியாகி விளங்குகின்றதாம்.
இப்படித் தீவண்ண ஜோதி அணுவைக் கடவுளான்ம சொரூபமாய் ஏன் தோற்றுவித்துள்ளார் எனில், மனித மனத்தறிவில், அருள் அறம் அல்லது அருள் விளக்கம் ஏற்பட்டு, அருளின்ப நிறை வாழ்வு உண்டாவதற்கேயாம்.
(2)
515. புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
516. அறம்பெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) புறந்தலையாவது புற ஆகாசமே. அகம் தேகத்திற்கு உள்நிலையாம். ஆகவே, புறத்திற்கும் அகத்திற்கும் நடுவாய் இருப்பது இந்த உடலேயாம். இது காயம் என்றால், அகண்டமாய் விரிந்துளளது, ஆ காயம் என்று கூறப்படுதல் பொருத்தமன்றோ. இந்த ஆகாயத்தையும் காயத்தையும் இணைத்துவைத்து இத் தேகத்தின் அகமாகிய கடையில், ஒப்பற்ற உள்ளத்தில் அறம்பெற வகுக்கப்பட்டுள்ளதாம். அருள் ஒழுக்கத்தால் அகத்தே அருள்ஒளி பெறப்படுவதாம்.
நம் வள்ளலார் தம் அக அனுபவத்தில் கிடைக்கப்பெற்ற ஒப்பற்ற அருட்பெருஞ் ஜோதியை விரித்துக் கூறிப் பிறர்க்கு வழங்க முயன்றார். ஆனால், சூழ இருந்தோர் அகத்தே அருட்பக்குவம் அடையாதவர்களா யிருந்தது கண்டு, மக்களிடத்தில் பரிதாபமும் இரக்கமும் கொண்டு, “கடையை விரித்தோம், கொள்வாரில்லை கட்டிவிட்டோம்,” என்று அன்று குறிப்பிட்டார். அவரது உள்ளமே உண்மைக் கடை. பிறருடைய அறியாமையாம் மாயை என்னும் நீலத்தை வாங்குபவராக, ஓர் சமயம் தன்னை “நீல வியாபாரி” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நீலம், இறப்பென்னும் விஷத்தையே சுட்டுவதாகவும் கொள்ள உள்ளதால், மரணத்தையே வாங்கிடும் அல்லது இறப்பையே ஒழித்துவிடும் வணிகனாகத் தன்னைக் கூறிக்கொண்டார் என்றலும் அமைவதாம். அவர் தமது கடையை மூடிவிட்டு எங்கோ சென்றுவிடவே யில்லை. உண்மையில் நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அக்கடையை வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்; பக்குவம் எதிர்பார்த்துக்கொண்டும் மறைமுகமாக உதவிக்கொண்டும் இருக்கின்றார். நாம் பக்குவமுறறு உளக்கடைக்குச் சென்றால், அவரது அருட்சரக்கைக் கொடுத்து நம் நீலத்தை வாங்கிவிடத் தான் தயாராக இருக்கின்றார் என்பது உண்மையாம்.
(3)
517. அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
518. அகப்பட வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) புறமுதல், என்பது வெளி ஆகாயமாம். அப்படிப் புறத்தேயுள்ள ஆகாயம் முதலான ஐம்பூதங்களும், நம் பிண்ட வடிவில் அகம், புறம், நடு, கடை ஆகியவற்றில் ஆன்மாகாசத்திலிருந்து விரிந்துள்ளனவாம். அதாவது, ஆன்மாவிலிருந்து, உள்ளம், உயிர் (மனோகரண) உணர்வு, உடல் யாவும் தோற்றிச் சூழ்ந்துள்ளனவாம்.
புறத்துள்ள வானாதி ஐம்பூதமும், மனிதனில் இணைந்து உயிர் உணர்வையும் அறிவனுபவத்தையும் விளைவிக்க உதவுகின்றனவாம். அகப்பட என்றால் கிடைக்க என்று பொருளாம். அகத்திலே அனுபவம் ஏற்பட என்று விரித்துப் பொருள் காணலாகும்.
(4)
519. அகப்புற நடுமுதல் அணைவாற் புறக்கடை
520. அகப்பட வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) இதில் நடுமுதல், அதாவது தேகநிலையை முதலாகக் கொண்டு அகப்புறம் உள்ளும், புறக்கடை வெளியுமாகக் கூடிப் பொருந்தியுள்ளதாம்.
இந்த மனித உடலை, புறத்திருந்தும், அகத்திருந்தும், நெருக்கிப் பக்குவப் படுத்துகிறது திருவருள். முடிவில் திருவருளாலே தேகமே அருள்ஒளி யுருவாகிடச் செய்யவே பல பிறவியும் அணைந்துகொண்டேயுள்ளனவாம். உடல் சுத்தநிலை பெற்று அழியாதிருக்க இம்மார்க்கம் வழிகாட்டுகின்றது. பழநெறி, உடலை நீக்கிவிட்டுப் பிறவாமலிருக்க வழிகூறுகின்றது:
“ஒளிறேந்து மருப்பு களிறு மாறு பற்றிய
தேய் புரிப் பழங்கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உடம்பே.”
என்று தேய்புரிப் பழங்கயிற்றினார் கூற்றாக மொழியப்பட்டுள்ளது. முதிர்ந்த தேகம், தேய்ந்துபோன, பலபுரிகளால் திரிக்கப்பட்டுள்ள பழைய கயிறு போன்றியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இப்படியுள்ள உடலாகிய கயிற்றை இருபுறத்தும் இரு கொம்பன் யானைகள் பற்றி இழுத்தால் என்னவாகும்! விரைவிலே அறுந்துபோகும் என்பது உலகறிந்ததாம். இம்முறை சன்மார்க்கம் அல்ல, கடவுள் திருவுள்ளமுமல்ல. அருட்பெரும்பதியே அகமும் புறமுமிருந்து, விளக்கத்திற்குத் தகுந்த உடலும், உடலுக்கு ஏற்ற விளக்க அனுபவமும் ஏற்று ஏற்று வந்து, நிறை பக்குவம் உண்டாம்போது இடையில் அருள்ஒளி உடம்பும் அகமும்புறமும் ஞானசுத்த தேகமும் சேர்ந்து நித்தியவாழ்வுக்கு வழிசெய்து விடுகின்றனவாம்.
(5)
521. கருதக நடுவொடு கடையணைந் தகமுதல்
522. அருளுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) இதிற் கருது அகம், கருதுகின்ற அகம் அதாவது உள்ளம், சுத்தமனமாம். இந்த அகமும், நடுவும் கடையும் முறையே உள்ளம், உயிர், உடல் ஆகிய மூன்றைக் குறிப்பதாம். இம்மூன்றும் ஒன்றுகூடி மனிதவாழ்வில் பெருநலம் விளைந்திட வுள்ளதாம். அதற்காகவே, திருவருள் அகமுதல் வெளிப்பட்டு விளங்கச் செய்யப்படுகின்றதாம். இதுவே, “அகமுதல் அருளுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி”, என்று போற்றிக்கொள்ளப்பட்டுள்ளதாம். உள்ளத்தில் தோற்றிடும் அருள்ஒளி, உயிரிலும், உடலிலும் சார்ந்து நிறைந்து கொண்டிடவேண்டும் என்பது குறிப்பு.
(6)
523. தணியக நடுவொடு தலையணைந் தகக்கடை
524. அணியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) தணிஅகம் என்றது, தயவினால் பக்குவப்பட்ட உள்ள நிலையாம். இவ்வுள்ளத்திற்கும் உடலுக்கும் நடுவுள்ளது உயிர் உணர்வு. அவ்வுயிருணர்வு ஒருமையினால் தலையிடத்தைச்சார்ந்து அகக்கடையாகிய ஆன்மாவின்கண், இன்பானுபவம் உண்டாகவே இப்படி வகுத்து வழங்கப்பட்டுள்ளனவாம்.
(7)
525. அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
526. அகமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) அகநடு உயிர்நிலையாம். புறக்கடை வான்பூத நிலையாகும். புறமுதல் இங்கு உடலாயுள்ளது. உயிருணர்வானது சத்விசாரத்தால் புறக்கடையாகிய வான்பூதநிலையை அடைகின்றது. பின்னர் உடலை முதலாகக் கொண்டு அகம் உற ஆன்மானுபவ நிலை அடையவே வழிசெய்துள்ளார் நம் பதி. இந்தப் புறமுதல் என்றது தேகமாம். இது அக அனுபவத்தில் புறப்புறமாக விளங்குவதும் இதற்குள்ளீடான மற்ற முந்நிலைகள், புறம், அகப்புறம், அகம் ஆம். முடிந்த ஆனமானுபவமே குறிக்கோளாயிருக்கின்றதாம்.
(8)
527. அகநடு புறந்தலை யணைந்தகப் புறங்கடை
528. அகலிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) உயிர்ச்சக்தியானது உள்ளத்திற்கும் உடலுக்கும் நடு உள்ளதாம். இந்த உயிர்ச்சக்தி இவ்வுடலின் தலைப்பகுதியைச் சார்ந்துநின்று, புறங்கடை யாகிய வான்நிலையை அகலிடையான பெருவெளியில் விளங்கக் காண்கின்றது. இத்தேக பிண்டத்தில், அகம் ஆன்மா, உயிர் அகப்புறம், கரணம் புறம், இந்திரியம் புறப்புறமாம். புறத்திருந்து விசாரவசத்தராய்ப் புறந்தலையைச் சார்ந்துகொள்ளவேண்டும். அப்படியிருந்து கொண்டு, அகமிருந்தே அகனமாக விரிந்து பிண்ட அகநிலையிலிருந்து புறஅண்டக் கடைநிலை வரை மெய்யனுபவம் பெற யாவும் வகுக்கப்பட்டுள்ளன.
(9)
529. அகநடு வதனா லகப்புற நடுவை
530. அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) ஆன்மாவே அகம் எனப்படுவது. அவ்வான்மாவின் நடுவிலிருந்து வெளியாகின்ற உயிர்ச்சக்தியே அகப்புறமாம். அவ்வுயிரிலிருந்து அல்லது உயிர் நடுவிலிருந்து எழுவதுதான் மனோகரணம். இதில்தான் நான் என்ற தற்போத உணர்வாகிய “நான்” என்பது இருக்கின்றது. இந்த அகமாகிய தற்போத உணர்ச்சி பல பிறவிகளிலும் தொடர்ந்து வந்துகொண்டே இருத்தலின், இலேசிலே ஒழிவதில்லை. ஆதலால் ஒவ்வொரு பிறப்பிலும் பலபல சுகதுக்க அனுபவம் ஏற்பட்டு ஏற்பட்டுத் தெளிவுண்டாகி முடிவில், அருள்நாட்டம் அடைந்து, தான் அருள் ஒளிப் பதி வண்ணமாய் இருப்பதை யுணரும் ஒருவன், தேகம் தான் என்றிருந்தமை அகற்றிவிடுகின்றான். இதுதான் அகங்கார ஒழிவாகும். இதனையே இங்கு அகம் அற என்று குறிக்கப்பட்டுள்ளதாம். கடவுள் உயிர்களின் அக்ப்புற ஆற்றல்களைப் படைத்து வாழ்வில் செலுத்தி வருவது இந்த அருட்பக்குவம் அடைவித்தற்கே என்பது கருத்து.
(10)
531. அகப்புற நடுவா லணிபுற நடுவை
532. அகப்பட வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) அகப்புறமாவது உயிர். இந்த உயிரின் நடுவிலிருந்து புறநடு, அதாவது கரண நடுவை பக்குவப்படுத்தவே இவண் வருவித்துள்ளார் நம் பதி. புற என்றது மனம்: அதுதான் மனிதனைக் கடவுள் அனுபவத்திற் கொண்டுசேர்ப்பது. மனமே கடவுள் அருளின் கூறுதான். உண்மைக்கு அடுத்துள்ள குறிப்பை யுணர்த்தவே அணி என்னும் அடை புறம் என்பதுடன் வந்துள்ளதாகும். இங்கேயும் மனோபோத நாசம் குறித்து அகப்பட என்ற சொல்லை வழங்கியுள்ளார். அகமற என்றதைப் போன்று அகம்பட என்றால் அகங்காரம் ஒழிய என்றும் கொள்ளலாம். அல்லது நேரடியாக, மனோகரணத்தில் அருள் அனுபவம் அகத்திருந்து உண்டாக அமைக்கப்பட்டுள்ளதாய்க் கொள்ளலாம்.
(11)
533. புறநடு வதனாற் புறப்புற நடுவை
534. அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) உலகவெளியில் புறநடு என்பது அண்டத்தில் சந்திரனாகவும், பிண்ட தேகத்தில் மனோகரணமாகவும் உள்ள தாம். சந்திரனின் இயல்செயல்களை யோர்ந்து புறப்புறமாகிய ஐம்பொறியுடம்பில், புறவாழ்வில் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்து கொள்ளக்கூடும். இது சோதிட முறையால் காணும் வழியன்று. அகத்தேயுள்ள அருட்ஜோதியைத் திடமாகக் கண்டுகொண்டு வாழ்வில் அறமுற இன்பம்பெற விளங்கும் வழியாகும். சுத்த சன்மார்க்கர் அருள்நாட்டம் உடையவர்கள், ஆகையால் புறக்கலைக் கொள்கைகளில் நாட்டம் கொள்ளார்.
(12)
535. புகலரு மகண்ட பூரண நடுவால்
536. அகநடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) அகண்ட பூரணம், கடவுளின் நிறைபெரு வடிவமாகும். புகலரும் அகண்டம் என்று கூறப்படுவதின் கருத்தை நாம் முன்பே ஓர்ந்து கொண்டுள்ளோம். ஆனால் அந்த அகண்டத்தின் நடுவைப்பற்றி அறிதல் எளிதல்ல. அகண்டாண்டம் ஒரு நடுவைக் கொண்டிருக்கவேண்டும் என்பது எப்படி எனில், சிற்பிரபஞ்சம் ஞாயிற்றை நடுவாகக்கொண்டு விளங்குவதும், அண்டம்முதல் அணுவரை யாவற்றிற்கும் ஓர் ஒரு மையம் இருப்பது போல் அகண்டவெளிக்கும் ஒரு நடு இருக்கவேண்டுவது அவசியமாம். இதனையே, “மகாமேரு” என்று உண்ணின்று கண்டோர் உரைக்கின்றனர். மகாமேருவைச் சூரியன் வலம் வருகின்றதாகக் கூறியுள்ளது இந்த உண்மை கொண்டதேயாம்.
புறநடு மேருவைப் புனைந்துருவாக்கிக் கொண்டது. அகநடுவாகிய ஆன்மாவின் அகத்தேயுள்ள அருள்ஒளிக் கடவுளைக் குறிப்பதாக உணர்வோம். அகண்டமான எல்லாம்வல்ல பரம்பொருளின் அனுபவத்தை நமது அகநடுவே கண்டு அனுபவத்தில் பெறவே இப்படி யாவையும் வகுத்துத் தொகுத்து வைத்துள்ளார் நம்பதி.
(13)
537. புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
538. அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நட்சத்திரங்களின் சக்தி அவற்றின் ஒளிவழி படர்ந்து, இவ்வுலகின் மீது பரவி, நமது தேகேந்திரியங்களை உருப்படுத்த உதவுகின்றதாம். எனவே, அவ்வண்ட ஒளியின் ஆற்றலால் நம் பிண்ட வடிவங்கள் விளங்குகின்றன என்பதும் உண்மையே. அண்டஜோதி சக்தியின் முடிநிலையாகப் பழுத்துள்ளவை இப்பிண்ட இந்திரியங்கள். ஆதலின், முன்னதன் கடைநிலையே பின்னதன் முதல்நிலையாக மொழியப்படுகின்றதாம்.
அண்டனாகிய கடவுள் உண்மையைப் பிண்டனாகிய மனிதன் கண்டடைவோனாய்த் திருவருளே யாவையும் அகமுதல் புறப்புற மீறாக அமைத்து வைத்திருக்கின்றதாம். ஆகையால் எப்பொருளும், உயிர்களும், கடவுளரின் அறக்கணமாக, அருட்சக்தித் தோற்றத்தின் தொகுதிகளாக அமைக்கப்பட்டுள்ளதாம். இவற்றால் ஆன்மபரிபாகம் அடைந்து அருட்பேரின்பநிலை எய்துகின்றது உண்மையாகும்.
(14)
539. புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
540. அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) புறப்பிரபஞ்சத்தில், மண்கூறுதான் முதலிடம் பெற்றுள்ளது. அம்மண்ணோடு சேர்ந்து கலந்து உருவாகிய வடிவங்களே உலகெங்கும் சூழ்ந்துள்ளனவாம். இந்த வடிவங்கள் வெற்று பூதப்பொருள்களால் ஆனவையல்ல. பூதப்பொருள்கள் இரசாயன மாற்றத்தாலும் இயற்கைச் செயல்களாலும் எண்ணற்ற வேற்றுப்பொருட்களாய், உயிரின வடிவங்களாய், ஆற்றல்களாய்த் தோற்றிச் சூழ்ந்துள்ளன. இவற்றையே இங்கு அறக்கணம் என்றுள்ளார் அருளனுபவம் உண்டாக இவை புறத்துணையாய் உள்ளனவாம்.
(15)
541. அகப்புறக் கடைமுதல் அணைவா லக்கணம்
542. அகத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) அகப்புறமாகிய சூரியன் ஈன்ற சக்தியை முதலாகக் கொண்டு தோன்றியது மனிதனின் உயிராகிய பிண்ட ஜீவ சக்தி. புறவெளியில் மின்மயமாய் இருந்து கொண்டுள்ள சிற்றொளி அணு, மனிதக் கருவிலே வெளிப்பட்டுப் பிண்டமாய் வளர்கின்றதாம். இக்கருப் பிண்டத்தில் அச்சூரிய ஜோதி அணுவுயிர் தொடக்க முதல் இருந்து வளர உதவினாலும், கருப்பிண்டத்தின் ஆறுமாத வளர்ச்சிக்குப்பின்தான் உயிரியக்கமாக விளங்குவதாம். அதுவும் அச்சிசுவுக்குத் தனியுயிர் வாழ்வு தாயின் கருப்பை விட்டு நீங்கி, உந்திக்கொடி துண்டிக்கப்பட்ட பின்னேதான் தொடங்குகின்றதாம். அவ்வுயிர்க்கு முடிந்த அருளனுபவம் ஏற்படும் வகையில் யாவையும் முன்கூட்டி அக நிலையிலேயே அமைந்துள்ளார் நம் பதி.
(16)
543. அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்
544. அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) இதில், அகத்திடை, அகக்கடை, அகக்கணம் என்று மூன்றைக் குறித்துள்ளார். முதலாவதான அகத்திடை என்பது, ஆன்ம அணுவில் என்று பொருளாம். அகக்கடை என்பது புறவுடல் வடிவம் (ஆன்மாவின் கடைநிலைத் தோற்றம் இத்தேகம் என்பது குறிப்பு) அகக்கணம் என்பது ஆன்மசக்திக் கூட்டங்களாம். அதாவது, இம்மனித தேகத்தில், ஆன்மாவின்கண் பலவாகிய ஆன்மசக்திக் கூட்டத்தை அடக்கிவைத்துள்ளார் நம் பதி. இத்தேக வாழ்வில் அகமுதலான நிலையில் பல சக்திகள் வெளியாகி உண்மை அனுபவம் உண்டாகத் திருவருள் கூட்டிவைத்துள்ளது இங்கு அறிகின்றோம்.
இங்கு குறிக்கப்பட்ட அகப்புற விரிவால், பிண்ட அண்ட தோற்றமும், செயலும், அறிவும் விளக்கமும், பக்குவமும் ஏற்பட்டு அருட்ஜோதி அனுபவம் தழைப்பதாம்.
(17)
545. வானிடைக் காற்றுங் காற்றிடை நெருப்பும்
546. ஆனற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) ஆன் அற, ஆன்ம உண்மையை நன்றாகத் தெரிந்து தெளிந்து அனுபவத்திற் கொள்ளும்படியாக, நம் தேகாதி பிரபஞ்சம் யாவும் வகுத்தளிக்கப்பட்டுள்ளனவாம். பிரபஞ்சம் ஆகிய திருவோங்கு ஐந்தாகிய பூதங்களின் கலப்பு உண்டான வதம் இவ்வண்ணம் என்பதைப்பற்றி விரித்துக் கூறப்படுகின்றது இத்தலைப்பின்கீழ்.
அகண்ட வெளிநிறை வானில் வாயுசக்தி பிரிவறக் கலந்து நின்று இயக்கலால் காற்று அடிக்கின்றது. அக்காற்றின் வேகத்தால் தீ தோன்றி வெளியெல்லாம் காலங்கி மயமாகத் திகழ்கின்றதாம்.
“திரவி யழலுருவாய் நீண்டவெளி காணில்
அரவணையா னாகும் உடம்பு”
- ஔவை குறள்
ஒருவன் தேகத்தினிடத்தும், தேகபோகப் பொருள்களினிடத்தும், புலனின்ப உணர்விலும் பற்று கொண்டிருந்தால், கடவுளான்ம அனுபவத்தைச் சிறிதும் பெற முடியாது. ஆகையால், அந்தப் பற்று முற்றும் அற்று, உள்ளொளியில் நாட்டம்வைத்து உளநெகிழ் அன்போடு ஊன்றிநின்றால், பரநாத நிலையதன் மேற்சென்று பெருஞ்ஜோதிக் காட்சியைக் காண்பான். இதுதான், அழல்உருவாய் நீண்ட வெளிக் காட்சியாகக் கண்டு கொள்ளக்கூடும். அவ்வொளியைக் கண்டு அதன்மயமாய் இருக்கும் ஒருவன் அரவணையானாகிய, பாப்பணையிற் பள்ளி கொண்ட பரந்தாமனாய்த் திகழ்கின்றானாம். வெளிநிறையொளியே திருமால் எனவும், அவ்வொளி வான்கலந்த காற்றே பாம்பாகவும், அக்காற்றின் பத்தியல் விளக்கமே, அதுதாங்கும் திருமாற் ஜோதிக்குரிய தச அவதாரம் எனவும் புனைந்து கூறியுள்ளனர். இதனால், ஒருவன் அக அனுபவ நிலையுற்றால், விஷ்ணுவின் இயல்புகொண்டு திகழ்வான் எனப்படுகின்றது. அம் மால் உண்மையில் நம் கடவுளான்ம ஜோதி நிலையே ஆம். அதனால், வானும், காற்றும், தீயும், சுத்த பிரணவ ஞான தேகமாய்ச் சுத்த சன்மார்க்க அனுபவத்தில் விளங்கும்.
(2)
547. நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
548. அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) முன்னடிகளில், வானின்று வளியும், வளிநின்று தீயும் தோன்றி, வெளிநிறை ஜோதியாய்க் கலந்திலங்கும் காட்சியாய் விளங்கிடக் காண்பதைக் குறித்துள்ளார். அடுத்து, அத்தீயினின்று நீரும், நீர்நின்று மண்ணும் உருவாகித் திகழ்கின்றதைக் குறிக்கின்றார்.
இடை என்ற சொல்லுக்குக் கண்ணின்று அல்லது இடத்திலிருந்து என்ற பொருள் கொள்ள வேண்டும். அருப்பிட என்பது, அரும்பிட என்ற சொல்லின் வலித்தல் விகாரநிலை, எதுகைக் காரணமாக இப்படி நெருப்பிடை, அருப்பிட என வந்தனவாம். மேற்படி பூதத் தோற்றங்கள், அணுக்களாக இருந்து, சிறிது சிறிதாக ஒன்று கூடித் திரண்டு, உருப்பெறுவதால் அரும்புவதாக மொழியப்பட்டது. அருட்பெருஞ்ஜோதி மலர், பூதாணுக்களுக்குள்ளிருந்து, உயிருடம்புள் அரும்பி, அருளனுபவத்தில் மலர்கின்றதாகும்.
(3)
549. நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும்
550. ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) காற்று, தீ, நீர், என்ற முறையில் தோற்றி விரிவது புற அண்ட உலக அமைப்பாம். இவை ஒன்றிலொன்று ஒடுங்கும் போது, நீர், தீ, காற்று எனக் கலந்து ஒன்றுவதாம். பிண்ட வடிவப் படைப்பில் இந்த நீரும் நெருப்பும் உயிர்ப்பும் முறையே சுக்கில சுரோணித நிலை நீராகவும், இவற்றின் கலப்பால் தோன்றிய முதல் ஒளிஅணு நெருப்பின் நிலையாகவும், அவ்வொளியிலிருந்து பிண்டோற்பத்தியானதும், உள்ளிருந்து உயிர்ப்புச்சக்தி தோன்றுவதும் அதுவே உடல்வாழ்வில் ஜீவக்காற்றாகத் திகழுநிலையுமாம். இதுதான் நீர்மேல் நெருப்பும், நெருப்பின்மேல் உயிர்ப்பும் எனக்குறிக்கப்பட்டுள்ளதாம். இப்படி அமைத்துள்ளதின் இரகசியம் என்னவெனில், ஆர்வுற அதாவது நிறை இன்பானுபவம் உண்டாவதற்கேயாம். திருவருள் நிறைவால், பெறப்படும் இறைநிலை அனுபவத்தில் மேற்படி, நீரும், நெருப்பும், காற்றும், போகாப்புனல், சாகாத்தலை, வேகாக்கால் ஆகத்தோற்றி முடிவில், சுத்த, ஞான, பிரணவ, தேகசித்திப் பேரின்ப வாழ்வை வழங்கி நிற்பதாம்.
(4)
551. புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
552. அனன்மேல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) உலகப் படைப்பில் இம் மண்ணான நிலப்பகுதித் தோற்றம் நீரிலிருந்து உயர்ந்து அந்நீர் மட்டத்திற்குமேல் விளங்குகின்றதாம். பூமி கோளம், தீக்குழம்பாயிருந்தது ஆறிஆறி, மேனிலை நீராக மாறிச் சுழன்று கொண்டிருந்தபோது, பூமத்திய கோட்டுப் பகுதியில் அதிக வேகமும், துருவப் பகுதிகளில் சுழற்சி வேகம் மிகமிகக் குறைந்தும் இருந்தன. ஆகையால், நில நடுக்கோட்டுப் பகுதியில் முதலில் நிலப்பரப்பு எழுந்து தோன்றியதாம். நிலநடுச் சூட்டு நிலையால் உருக்கு நிலையிலிருந்த உலோகக் குழம்புகள் மேலே உந்தப்பட்டு, நிலமட்டத்திற்கு மேல் எறியப்பட்டுப் படிந்து கற்பாறைகளாகவும் மண்மலைகளாகவும் இறுகிப்போயின. பின்னர் அம்மண் பண்பட்டபோது அதிலிருந்து எல்லா உயிர்ப்பொருள்களின் படைப்பும் தோன்றினவாம். ஆகவே, நம் நடுக்கோட்டுப் (Equator) பகுதியில்தான் புனல்மேல் புவியும், புவிமேற் படைப்பும் முதல் முதலில் உண்டாயினவாய் அறியலாகும். எவ்வளவோ காலத்திற்குப் பின்னரே இக்கோளத்தின் பிற பகுதிகளில் நீர்மேல் நிலமும், நிலமேல் படைப்புகளும் தோற்றமுடிந்தனவாம். மேலும் ஆதி மக்களினமே நம் பகுதியிலேதான் தோன்றிப் பின்பு எங்கும் வசதிகள் தேடிச் சென்று குடியேறி அங்கங்கு பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பழக்கப்பட்டுத் தோற்றம், பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் மாறுபட்ட மக்கட் பிரிவினராய் விளங்கலாயினர் என்பது உண்மையாம்.
இந்த நீரும் நிலனும், உயிர்ப்பொருட் படைப்புகளும் எதிலிருந்து தோற்றுவிக்கப்பட்டனவென்றால், நெருப்பிலிருந்தேயாம். இதுதான் அனன்மேல் என்றுள்ளார். அனற்குழம்பாய் இருந்த இவ்வுலக கோளம்தான் பக்குவமுற்று மேற்படி நீரும், நிலமும் உயிர்ப்பொருள்களும் தோன்றக் காரணமாகியுள்ளன என்பது உண்மையே ஆம்.
மற்றொரு விளக்கம்: அனல், அகமாகிய ஆன்மஜோதியாம். இந்த ஆன்மாவின் கண்ணின்றே, உயிரும், உடலும், மேற்செயல்களும் தோன்றியுள்ளனவாம். ஆன்ம உண்மை கண்டு அனக வாழ்வு கொண்டு விளங்கவே இவ்வளவும் செய்யப்பட்டுள்ளனவாம்.
(5)
553. பகுதிவான் வெளியிற் படர்ந்த மாபூத
554. வகல்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) நாம் காண்கின்ற அகன்ற வான்வெளித் தோற்றம் ஓர் எல்லையில் அடங்கியுள்ளதே போன்றுதான் தோன்றுகிறது. உண்மையில் நமக்குப் புலனாகிக்கொண்டுள்ளது மிகச் சிறிய பகுதி வான்வெளியே யாகும். இந்தப் பகுதி வெளியிலே தோற்றிப் படர்ந்துள்ள ஐம்பூதங்களும் நமது பிரபஞ்சத்தில் நாமே நம் நிலவுலகே நடுவிருப்பதாகவும், மற்ற ஞாயிறும் கோட்களும், நாட்களும் நம்மைச் சூழ்ந்துள்ள வானில் சுற்றிக் கொண்டிருப்பனவாயும் தோற்றுகின்றன. உண்மையில் நம் பகுதிப் பிரபஞ்சத்திற்கு ஞாயிறே நடுநாயகமாயுள்ளது. இதன் ஒளியும் ஆக்கமும் கொண்டு விளங்கும் பூமியும் பிற கோட்களும சூரியனைச் சுற்றியே வந்து கொண்டிருக்கின்றனவாம். நிலவுலகிலிருந்து வானைப்பார்க்கும் நமக்கு, ஞாயிறும், திங்களும், செவ்வாயும், புதனும், வியாழனும், வெள்ளியும், சனியும் வானவிதானத்தில் குறிப்பிட்ட இராசிகளில் இருப்பனவாய்த் தோற்றுகின்றன. வானின்றுதித்த மண்ணாதி ஐம்பூதங்களும் நம்பகுதி வான்வெளியில், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம்) என்னும் வரிசையிலுள்ளனவாம். இவ்வரிசைமுறையில்தான் சூரியன் உள்ள சிங்கராசி முதல், கன்னி துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் வரையும் வலமாக அமைந்தும், சந்திரன் இருக்கும் கடகம் முதல், மிதுனம், ரிஷிபம், மேஷம், மீனம், கும்பம் வரையும் இடமாக அமைந்தும் ஐங்கோட்களின் ஆட்சி நடக்கின்றதாம். இந்த அகண்டாண்ட நிலையிற்போன்றே நம் பிண்ட தேகத்திலுமச் மண்முதலாம் ஐங்கோட்குரிய பகுதிகள் “நமசிவாய” என்னும் தூலபஞ்சாக்கர வடிவிற் பொருந்தியுள்ளனவாம். இவ்வுடல் நடுவாம் சிகரஜோதிநிலை இதயத்திருந்து, தலைநடுவுற்று சிவானுபவசித்தி பெற்றிருத்தல் முன்னோர் குறிக்கோள். இப்போது நம் வழியில், நாம் கடவுட்ஜோதியாகவே உள்ளிருந்து விளங்குவதாய் அறிகின்றோம். அறிந்து அகமிருந்தே அனகமாக வாழ்வதுதான் உய்யுநெறியுமாம். அகல்வெளி எங்கும் நிரம்பியுள்ள பெரும்பூதப் பொருட்களால் உண்டான ஐம்பூதக்கோட்கள் ஆகி, இவ்வுலகில் தோற்றுகின்ற மக்கள் வடிவிலும் அவ்வைம்பூதத் தத்துவமும் நிரம்பியுள்ளன. இவ் அண்ட பிண்ட இரகசியங்களை யோர்ந்து சோதிடப்பலன் காண்பதற்கன்று இவை; இவற்றைக்கொண்டு அகத்தே அருட்ஜோதியைக் கண்டு அழியாவாழ்வுப் பெரும்பயன் பெறற்குத் தான் ஆண்டவர் யாவையும் இசைத்துள்ளார் என்பது உண்மை.
186. வெளிவகை விரி
(1)
555. உயிர்வெளி யிடையே உரைக்கரும் பகுதி
556. அயவெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) வெளி என்பது வெற்றிடம் (Empty or Vacuum Space) என்பர். பிரபஞ்சப் பெருவெளி அகண்டமானதாம். இதில் நாம் காண்கின்றது ஒரு மிகச் சிறிய பகுதிப் பிரபஞ்சமேயாம். இதுபோல் எண்ணடங்காப் பகுதிகள் கொண்டது அகண்ட பெருவெளியாம். ஆனால் இந்தப் பெருவெளியும் இதன் கூறுகளும் வெற்றிடமன்று, பலப் பலவகையான அண்ட கோளங்கள், ஆற்றல் சக்திகள், பொருள்கள், உயிரினங்கள் எவ்வளவோ நிரம்பியிருக்கின்றனவாம். இவற்றின் வடிவமைப்பிலும், அகத்திலும், புறத்திலும் எங்கும் இடையீடின்றி நிரம்பியுள்ளது ஆகாசமேயாம். இவ்வாகாசவெளியில் பூர்ண நிறைவோடும் ஆற்றலோடும் விளங்கிக்கொண்டிருப்பது இறையொளியாம் அருட்ஜோதியே: இவ்வுண்மை கண்டு அடையவே வகுக்கப்பட்டுள்ளனவாம். சூனிய வெளியாய்த் தோற்றும் இடத்தும் எல்லாம்வல்ல அருட்ஜோதி நிரம்பியுள்ளதாம்.
பிண்ட தேக வடிவில், நிரம்பியுள்ள வான்கூறு, இந்திரிய ஆகாசம், கரணாகாசம், ஜீவாகாசம், ஆன்மாகாசமாம். இவ்வெளி நிலைகளில் பலவகையான சக்திகள் தோன்றிக் காரியப்படுகின்றன. அப்படியுள்ள வெளிவகைகளை விரித்து உரைப்பது இப்பிரிவு.
ஜீவ ஆன்மவெளியில் முக்கியமான ஆற்றல் உயிர்சக்தியாம். இவ்வெளிப் பகுதியிலிருந்து உயிர் ஆற்றல் விரிந்து செயல்படும் போதுதான் ஜீவதேகம் உருவாகி வளரத் தொடங்குகின்றதாம். அவ்வுயிர்ச்சக்தி உள்ளடங்கும்போது உடற்பிரிவு ஏற்படும். இந்த ஜீவாகாச வெளியில் உயிர்ச்சக்தியின் தோற்றமும் மறைவும், ஏன், எப்படி ஏற்படுகின்றது என்பது மன வாக்குக்கு எட்டாத இரகசியமாம். அயவெளி என்பது உயிர்சக்தி நிலை, வாசி அல்லது பிராணநிலையாம். ஜீவான்மாவில் மறைந்து கிடக்கும் உயிர்நிலை அறிவரிதாம். ஆம், அறிவரிய இதனை அருள்வெளி (ஆன்மாவுக்கு அகமானது) உறுவோர் அனுபவத்தில் கண்டு கொள்ளுவர்.
(2)
557. உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
558. அயலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) உயிர்ச்சக்தி நிலையைத்தான் உயிர்வெளி அல்லது ஜீவவெளி என்கின்றோம். இவ்வுயிர்ச்சக்தி நிலையை எதனால் தெரிந்து கொள்ளுகின்றோம் என்றால், சுவாசக் காற்றியக்கத்தால், இட பிங்கலை மூச்சுக்காற்றால் அறிகின்றோம். இந்த மூச்சு சுவாசம், வாசி என்பதும் உயிர்ச்சக்தி என்பதும, ஜீவ வெளியில் ஒன்றாக வேறு பிரிந்து அறிய முடியாதபடி இருக்கின்றதாம். உயிர் உணர்வோடு மன உணர்வும் ஒன்றியுள்ளதால் மனம் காற்றின் கூறாகக் கூறப்படும். இதனால் மனோ சலனமற்று விளங்குமிடத்து அதற்கு வேறாயில்லாத உயிர்ப்புக் காற்றும் அடங்கிநின்று கலையறிவை வளர்க்கின்றது. இக்கலை வெளிக்கு அப்பால் சென்றால்தான் அருள்வெளி யனுபவம் கைகூடும். அருட்பெருஞ்ஜோதி விளங்கும்.
(3)
559. கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த
560. அலர்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) சுத்த ஞானமாகிய தயவு அல்லது அருள் விளங்குவது, கலையறிவு கலவாத ஒரு நிலையாகும். கலைவெளியில் அருள் வெளி ஒருபோதும் கலவாது. ஆனால் அந்த அருள்வெளியிலோ, எல்லாம் ஆனவராயும், எல்லாம் வல்லவராயும் திகழும் நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கிக் கொண்டிருத்தலால், அவரது சந்நிதியில் சகல கலைகளும் தோன்றாது தோன்றி அனுபவம் வழங்குதல் சாத்தியமாம். சுத்த அலர்வெளியாவது, மனத்தின் நினைப்பு மறப்பு நீங்கி சுத்த அருள்உணர்வு மயமாகி விரிந்து விளங்கும் நிலையாம்.
(4)
561. சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
562. அத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) பரவெளியாவது, மேலான சத்விசார உண்மை விளங்கும் உயர்நிலையாகும். இப்பரவெளிதானே மனோகரண வெளியின் அவாமுதலான மாசறுப்பதாம். அபரமாகிய இகலோக விசாரத்தில் அழுந்திக் கிடக்கும் சாதாரண மனிதமனம் தான் மாசுடைய அசுத்தவெளி கொண்டதாம். பரலோக விசாரத்தில் ஓங்கும் மனம், நல்ல, சுத்த அன்புணர்வு கொண்டதாம். இச்சுத்த மனவெளியில் துரிசாகிய மலம் இல்லையாம். அத்து, என்பது எல்லையாம். அதாவது மனம் சுத்தமுற்றால் பரவெளி எல்லையில் நின்று அறியவரும் பொருளை அருளால் உணர வல்லதாகின்றதாம்.
(5)
563. பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
564. அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) விசார உண்மை விளங்கும் அப்பரவெளி நிலையைத் தனது, வெளிப்பட்டிலங்கும் இடமாக ஆக்கிக்கொண்டுள்ளார் நம் பரமர். பரவெளியிலிருக்கும் இப்பரமர், பரம்பர வண்ணர் ஆவர். இவரது உருவம் அப்பரம்பர வெளியாகவே உள்ளதால், இதிலிருந்துதான் நமது ஜீவ தேகாதி பிரபஞ்சத்தை யெல்லாம் ஆள்கின்றார். சத் விசாரத்தில் விளங்கும் அருள் வண்ணக் கடவுள் உண்மையே அருட்பெருஞ்ஜோதி சொரூபமாக, பரம்பர வெளிநிறை யொளியாகத் திகழக் கண்டு கொள்ளுவோம்.
(6)
565. பரபம்பர வெளியைப் பராபர வெளியில்
566. அரந்தெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) கடவுள் வெளியாகிய பரம்பரநிலையே, இரு கூறாகிப் பரம், அபரம், என இரண்டு நிலைகளாய்ப் பரிந்த பராபர வெளியென விளங்குவதாம். இந்தப் பிரிவு சொல்லளவில்தானே யொழிய இரண்டுபடக் காண்டற்கில்லையாம். அவ்விரு நிலையும் ஒருபடித்தாய் விளங்குவதை ஊன்றிக் கவனித்தால் காணலாம். அருள் ஒளியில், அருளும் ஒளியும் இரண்டாகச் சொல்லளவில் தோன்றினாலும், அது, குண குணியாக உள்ள ஒன்றே யாம். அருள் குணம், ஒளி அருட்குணத்தையுடையது குணி எனப்படுவதாம். பரம் அருள் ஆக உள்ளிருந்து விளங்க. அபரம் ஒளியாகப் புறத்திருந்து இலங்குவது. அகமும் புறமும் நீக்கமற நிரம்பிய கடவுள்தான் இன்று, பராபர வெளியில் அருளாயும் ஒளியாயும் விளங்கிக்கொண்டுள்ளார். இவ்வருள் ஒளியின் பராபர உண்மையை நம் மெய்யுணர்விலே வெளிப்படுத்தி விளங்கச் செய்து கொண்டுள்ளார். இச்செயலே அரம் தெற எனப்பட்டுள்ளது. அராவுதல் அல்லது உராய்தல் அகவுணர்வில் தொட்டுக்காட்டுதல் ஆம். தெறல் ஒளியுற விளங்கச் செய்தலாம். ஆகவே, அரம்தெற என்றது நம் மெய்யுணர்வில் ஒளிவிளங்கச் செய்தல் என்பது கருத்து.
(7)
567. பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
568. அராவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) ஆன்மாக்களின் அகத்தே பரவெளியாம் நிலையும், புறத்தே அபர வெளியாம் நிலையும் பொருந்தி ஒவ்வொரு பிறவியிலும், உள்ளுணர்வு பெருக, புற வடிவு வளர உதவிக்கொண்டிருக்கின்றதாம். அப்பராபர வஸ்து. இதைப்போன்றுதான், அகண்டாகாரப் பெருவெளியில் அண்டகோடிகளையும் ஒன்றோடொன்று அராவற முட்டி மோதிக் கொள்ள வண்ணம் வேகத்தோடு இயக்கிவருதல் திருவருளின் பெருஞ்செயலேயாம். இப்பெருவெளி நிகழ் பெருஞ்செயலும்கூட, ஆன்மபரிபாகம் உண்டாக்கும் அருஞ்செயலே என அருளால் அறிந்து கொள்ளுகின்றோம்.
(8)
569. பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
570. அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) மா பிரபஞ்சவெளி மிகப்பெரிது. அதில் அடங்கியுள்ள அண்டகோடிகள் எண்ணில் அடங்காதனவாம். ஆகையால், இந்தப் பேருலகின் முழுமையான தோற்றத்தைக் கருவி கரணங்களால் எவ்வளவு முயன்றாலும் காணவும் கருதவும் முடியாதாம். திருவருள் ஒன்றாலே இந்தப் பெருவெளி நிறைபொருளை அனுபவத்தால் உணர்ந்துகொள்ள முடிகின்றதாம். அது எப்படியெனில், அந்த அகண்ட பிரபஞ்சம் முழுவதையும் தன் அருளால் நமது ஆன்ம சிற்றணுவில் அடக்கிவைத்துள்ளார் நம் பதி. ஆகையால், இந்த ஆன்மாவில் நிரம்பியுள்ள அருளாகிய பெருவெளியில், அந்தப் புறப் பிரபஞ்ச உண்மையெல்லாம் அருளாலே அனுபவபூர்வமாக அறிந்துகொள்ளக்கூடிய தாயிருக்கின்றதாம். இவ்வருள் வெளியில் பெறும் அனுபவம் பெருஞ்சுக வாழ்வு விளங்குவதாகும். ஆகையால், இந்த அக அருள் வெளியே பெருஞ்சுக வெளியாகக் குறிக்கப்படுகின்றது.
(9)
571. குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
572. அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) ஒன்றன் தன்மை அல்லது இயல்பே அதன் குணமாகும். அத்தன்மையால் தான் எல்லா அனுபவமும் பயனும் விளைகின்றனவாதலின், அக் குணத்தைக் கருவியாகவும் கொள்ளலாகின்றது. பலவாகிய பொருள்களுக்கு, தத்துவங்களுக்கு, இயல்களுக்குக் காரணமாயுள்ள அல்லது துணையாயுள்ளவை குணம் முதலான கருவிகளேயாம். புறப்பொருள்களில் உயிர்களில் பல தன்மைகள் உள்ளனால், மனிதனில் அவனது அகவுணர்வில் முக்குணங்கள் தோன்றுகின்றன. முடிவில் அக் குணமெல்லாம் சுத்த அன்பு அல்லது அருளில் அடங்குகின்றதாம். அகத்தில் அன்பென்னும் நற்குணம் விளையுங் காரணமாய்க் கடவுள் அருளே அங்கு காரணக் கருவியாக இருந்து துணைபுரிகின்றதாம். இதனால், அவ்வகவெளியில் முக்குணம் நற்குணமாகி முடிவில் நிர்க்குணமாகி நிமலானந்தம் சிந்திக்கச் செய்வதாம்.
(10)
573. மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
574. அனமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) மன்னுயிர் என்பது ஆன்மா, இவ்வான்மாவில், அதன் இயல்குணமாம் அருளே மனமுதற் கருவிகளாய் அமைந்துள்ளது. ஆன்மாவில் அருட்சக்தி நித்த நிறைவுடையதாய் இருக்க, அவ்வான்மாவிலிருந்து ஜீவசக்தி தோன்றி, யொடுங்குவதாகவுள்ளதாம்.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் தத்துவக் கருவிகள் அருளால் சுத்த முற்று, மன்னுயிர் வெளியாகிய ஆகாசத்தில் லயமடைவதாம். இப்படி யொடுங்குவது (அனம் அன்னம் சோறு முத்தியாம்) இம் முத்திநிலை எய்தும் பொருட்டே இம்முத்தி முடிவும் முடிவல்ல என்பது சுத்த சன்மார்க்க அனுபவம். சுத்த சன்மார்க்கத்தில் இந்த, அனம், அன்னம் (அ - ன் அம் மூன்றும், சுத்த, ஞான, பிரணவ தேகத்தைக் குறிக்கும்,) திரி தேக சித்தி வாழ்வைக் குறிப்பதாம்.
(11)
575. காலமே முதலிய கருவிகள் கலைவெளி
576. ஆலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) மனவெளியில் அறிவு உணர்வு விளங்கிட, அது தேகேந்திரியத்தில் காரியப்பட்டு வெளியுலகத் தொடர்பு கொண்டு விரிகின்றதாம். இநத் நிலையிலிருந்து, காலம், தூரம் வண்ணச்சூழ்நிலையாகிய, சூக்கும தூலக் கருவிகளின் துணையால் பலவாகிய கலைகள் தோன்றியுள்ளனவாம். இக்கலைகளின் முடிந்த குறிக்கோள் கடவுணிலை அடைவேயன்றி, கலை பொழுது போக்குக்காக எனவும், கலை பொருளுக்காக எனவும், கலை கலைக்காகவே எனவும் கருதுதல் அபக்குவ மனநிலையாம். அரும் கலை யாவும் தங்கும் இடம் அகவெளியே ஆம். ஆலுதல் என்றால் தங்குதல் என்று பொருளாம். அகண்டாமாயுள்ள வெளி ஒன்றே எனினும், அது பல நிலைகளில், பலபல ஆற்றலொடு விளங்கிப் பலபல பயன்களை வழங்கலின் பலவான வெளியாகக் குறிக்கப்படும். காலமே முதலிய கருவிகள் என்றதால், காலம், தூரம், சூழ்நிலை எனக் கொள்ளப்பட்டதாம். இக்கலை வெளியில் மனம் பக்குவப்பட்டுச் சுத்தமுற உள்ளதாம்.
(12)
577. துரிசாறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
578. அரசுற வகுத்த அருடபெருஞ் ஜோதி
(உ-வி) உலகிடைத் தோற்றுகின்ற அணுஜீவன் முதல், மனிதன் வரையும் உள்ள பிறவிகளுககு உள்ளீடாய் அமைந்த ஆன்மாக்கள், இயற்கையில் ஆணவமாம் ஒரு மலத்துரிசு உடையதாம். அவ் ஆணவமலத்துரிசைப் போக்க, முள்ளை முள்ளால் எடுத்தல் போலும், அழுக்கை அழுக்கால் போக்குவது போலும், நஞ்சை மற்றொரு மாற்று நஞ்சால் ஒழிப்பது போலும், ஆணவத்தை, மாயா கன்ம மலங்களாலேயே போக்கவேண்டியுள்ளதாம். உண்மையில் மலமாசும் கடவுளின் அருள்ஒளியேயாம்: அபக்குபவத்தில் மலமாசாகவுள்ளதுவே பக்குவத்தில் அருள்தேகமாக விளங்கும். எப்படியெனில், நம் அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் ஒருவரே, தன் அருள்நிறைவோடு என்றும் விளங்கிக் கொண்டிருக்கின்றது உண்மை நிலையாம். அக்கடவுள்தானே, தனித்தலைமைப் பெரும்பதியாய் உள்ளார். அப்படியுள்ள அவர், இந்த மனிதப் பிறப்பு வடிவத்திலே, மெய்யருள் ஞானத்துடன் வெளிப்படும் இடம் தலைநடுத் தலமாகும். இக்கடவுள் அருள், தன்னையே உணர்த்திக் கொண்டிருக்கிறதை, அதுவே தானாகியுள்ள மனிதன் அவ்வருள் ஞானத்தால் உணர்கின்றான். இந்தக் கடவுள் உண்மையும் மனிதன் உண்மையும் ஆன சிரநடு அருள்ஒளி அணுவே ஆன்மா ஆக இருக்கின்றதாம். இக் கடவுளான்ம உண்மையை அறியா அபக்குவ மனிதன், தான் வேறு கடவுள் வேறு எனக் கருதிக் கொண்டிருக்கின்றான். தான் கடவுளுக்கு வேறான ஆன்மா என்பதுதான் ஆணவமலம் என்பபடுவது. மலமாவது மறைப்பு, திரை, பாசம் முதலியனவாகக் கூறப்படுவது. இந்த மறைப்பை போக்கி, இவ்வான்மா என்பது கடவுளின் சிற்றுருவே என உணர்த்தப்படவேண்டி, அவ்வான்மாவைச் சூழவிருக்கும் ஒளியையே பலவாகிய உருவொடு, ஆற்றலொடு விளங்கச்செய்யப்படுகின்றதாம். அந்த ஒளிச்சூழலும், ஆற்றல் செயலுமே பலபல வடிவங்களாகவும் ஆறறல்களாகவும் மாறி மாறி வந்து, முடிவில் இம்மனித வடிவும் அருள்ஞான உணர்வுமாகியுள்ளதாம். இந்த நிலையில்தான் இப்பொழுத அந்த அருள் ஒளிக் கடவுளே “தான்” ஆக உள்ளதை அறிந்து கொண்டிருக்கின்றான் மனிதன். இப்பொழுது அந்த உண்மையறியாமை ஆணவம் என்பது தெளிவாம். அருளால் ஆணவம் நீக்கப்படுவது இப்போது விளங்கும். இதற்குமேல் சூழ்ந்துள்ள தேகாதியும் அருள்ஒளி என்று அறியப்படலால், மாயையும் கன்மமும் இந்த அருள் ஒளியே என்பதில் ஐயமில்லை. இதிலிருந்து பதி, பசு, பாசம் என்ற முப்பொருளும் ஒன்றான அருள் ஒளிதான் என்பது நன்கு விளங்கும். சுத்த நல்வெளிதான் அருள் ஒளிக் கடவுணிலையமாம் அருள் அம்பலமாம். இதிலிருந்து கொண்டுதான் உலகுயிர்ப் பொருள்களை எல்லாம் ஆள்கின்றார் நம் அருளம்பலத்தரசர்.
(13)
579. இவ்வெளி யெல்லாம் இலங்கவண் டங்கள்
580. அவ்வயின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) இவ்வெளி என்றது, நம் அகத்தே செறிந்துள்ள பிண்டநிலையில் விளங்கும் அருவவெளிப் பகுதிகளாம். இவ் வருவப் பகுதி வெளியோடு அடுத்துள்ள அருவுருவ அருள் ஒளிப் பகுதியுமாம். இவற்றால் பேரின்பத்தை அடையச் செய்யவே நம் பதி புறத்தே பெரும் பிரபஞ்ச வெளியைத் தோற்றுவித்து, அதிலே அனந்த மாகிய சிற்பகுதிப் பிரபஞ்சங்களை வகுத்து, அவற்றுள்ளும் பலவாகிய அண்டகோளங்களையும் நாட்களாக கோட்களாக அமைத்து, அங்கங்கிருந்து ஒளிசெய்து பக்குவ சக்தியைப் பரப்பி, நம்மைப் பண்படுத்தித் தம் அருட்பெரு நிலைக்கு ஏற்றுகின்றார்.
187. அண்டப் பகுதி விரி
(1)
581. ஓங்கிய வண்டம் ஒளிபெற முச்சுடர்
582. ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) வெளியின் தோற்றம் ஓர் எல்லைக்குட்பட்டதாகக் காணப்படினும் அது உண்மையில் எல்லையற்றதாக விரிந்துள்ளதாம். ஆகையால், தோற்றுகின்றது அகண்டவெருவெளியின் ஒரு சிறு பகுதியேயாம். இதுதான் நம் பிரபஞ்சமாம் அண்டப் பகுதி. இந்தப் பகுதிவெளியில்தான், நம் சூரிய, சந்திர, அக்கினிகளின் ஒளி நிரம்பியிருக்கின்றது. இந்த ஒளியில் சூரியன் ஒன்றே பேரொளிசெய் ஜோதி கோளமாக இருக்கின்றது. சந்திரனுக்கு இயற்கை ஒளியே இல்லை; அக்கினியோ அருகியதாய், பகுதி வெளியில் நீலாக்காரொளியாய்க் கலந்து இருக்கின்றதால் அதுவும் புறத்தில் சூரியன் போன்று காணக்கூடியதாயில்லை. ஆனால், இம் மூவொளிகளும் இருந்து தான் இந்த அண்டப்பகுதியின் விளக்கமும், செயலும், உயிர்களின் வாழ்வும் அறிவனுபவ விளைவும் ஏற்பட உதவுகின்றனவாம்.
அந்தப் புற முச்சுடர் விளக்கத்தால், அண்டப் பகுதியில் எல்லா உயிர்களும், பொருள்களும், தோற்றி விளக்கிப் பக்குவமடைகின்றன. பக்குவ நிறைவில் அந்த முச்சுடர் அனுபவமே முத்தேக சித்தி நிலையாக உள்ளதாம். சூரியன், சந்திரன், அக்கினியே சுத்தசன்மார்க்க சித்தி வாழ்வில், சுத்த, ஞான, பிரணவ தேகங்களாக அனுபவப்படுகின்றனவாம்.
(2)
583. சிருட்டித் தலைவரை சிருட்டியண் டங்களை
584. அருட்டிறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) இந்தப் பகுதிப் பிரபஞ்சத்தில், படைத்தற் செயல் புரிந்து வருவது பிரமன் என்பர். பிரமன் உண்மையில் ஓர் ஆன்ம சிற்றணுவேயாம். திருவருளால், உலகெலாம் தோன்றிச் செயல்பட, பல ஆன்மாக்களையும், அவைகளுக்குப் படைப்புத் திறனும் வழங்கியுள்ளார் நம் பதி. சிருட்டித்தலைவர்கள் வாழற்கு என்றே, சிருட்டி அண்டங்களை வழங்கியுள்ளார் நம் பதி. புறத்தில் அண்டப்பகுதி பெரிது. அதிலிருந்து பிள்ளப்பட்ட பிண்டங்கள் மனித உடல் வடிவங்கள். இவ்வடிவிலும் அண்டம் தலையாகவும், தலைக்குக் கீழ்ப்பகுதி பிண்டமாகவும் உள. இதில் பிண்டமே பெரிது. அண்டம் சிறியதாம். தலையையே அண்டமாகவும் அதன் நடுவுள்ள ஆன்ம அணுவே பிண்டமாகவும் கொள்ளும்போது பிண்டம் மிகச் சிறியதாயிருக்கின்றது. ஆனால் இந்த ஆன்ம பிண்டத்தில் பரம்பொருளின் பூரண இயல்பும் பொதிந்துவைக்கப்பட்டிருப்பதால், இந்த ஆன்ம அணுநிலை நின்றே பிரமனின் படைப்புத்தொழில் புரிகின்றதும் நம் பதியின் ஆற்றல் வெளியீடேயன்றி வேறல்லவாம்.
ஆதியில் திருவருளே படைப்புத் தலைவர்களையும் அவர்களின் அண்டங்களையும் தோற்றுவித்து இருந்தது. பின்னர், சில பல ஆன்மாக்கள் பக்குவமடைந்து தவமுயற்சியால் பிரம பதவி பெற்று படைப்புத் தொழில் நடப்பதாயிற்று. இந்தப் படைப்பு மாயையின் செயல். இதில் உண்மை விளங்காதிருந்தது இதுவரையும். இப்போது திருவருள் உண்மை வெளியாகியுள்ளதால், மாயா சிருட்டியைக் கடந்து அருள் திறலால் அருட்பெருஞ்ஜோதி அனுபவம் பெறக் கூடியதாய் இருக்கின்றதாம். இது தான், இது காறும் வெளிப்படாத சுத்த சன்மார்க்கப் பெருநெறியின் பெருமை.
(3)
585. காவல் செய் தலைவரைக் காவலண் டங்களை
586. ஆவகை யமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) காக்கும் செயல் திருமாலுக்கு உரியது என்பர். இதுபோன்ற எத்தனையோ திருமால்களையும் அவர்களுக்கான அண்டங்களையும் அமைத்துக் கொடுத்து நம் அருட்பெருஞ்ஜோதியே. மால் பதம் பெற்ற ஆன்மாக்கள் இப்பொழுது காக்குத் தொழில் கொண்டுள்ளனர். இவர்களும் மாயையின் தொடர்பால் அருள் நிலையுறாது அழிவுறுகின்றனர். திருவருளாலே இன்று சன்மார்க்கி, அந்த மாலையும், அம்மாலின் காவலையும் மதித்துக் கொள்ளாது அருள்ஒளி கொண்டு அழியாநிலை பெறும் வகையைக் கண்டு கொள்ளுகின்றான்.
(4)
587. அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை
588. அழுக்கற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) கடவுள் அருட்பெருஞ் செயல்களில் அழித்தலும் ஒன்றாம். பக்குவப்படாதவரை, தோன்றித்தோன்றி வளர்ந்து வளர்ந்து முதிர்வனவற்றை அழித்து அழித்துப் புத்துருவில் வருவிக்கச் செய்ய வேண்டியுள்ளது. இவ்வழித்தல் செயலும் தீவண்ண உருத்திரனின் தொழிலாகக் கருதப்படுவது. தீயால் யாவும் எரித்து நீற்றுச் சுத்தமாக்கப்படுவது இயற்கை. இச் சக்தி சித்தி பெற்ற ஆன்மாக்களையே உருத்திரர்கள் என்பர். இது காறும் அவத்தைப்பட்டு அழிந்துபோய்க் கொண்டிருந்த மனிதன், திருவருளால் அழியாமை பெற்று, அழுக்கற்ற சுத்த தேகியாகி விளங்க நேருகின்றதாம்.
(5)
589. மறைத்திடு தலைவரை மற்றவண் டங்களை
590. அறத்தொடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) அபக்குவ ஆன்மாக்களுக்கு, அழிவுச் செயலால் தேக நீக்கம் ஏற்படுகின்றது. அதற்குப்பின் அவ்வான்மாக்கள் வேறு இடங்களில், வேறு வடிவங்களில் வருவிக்கப்பட வேண்டியுள்ளன. அப்படிப் புத்துரு பெறும்வரை மறைத்திருந்து பக்குவ நிலைக்கு ஏற்றுவது திரோபவச் செயலாம். இதுவே மறைத்தற்றொழில் என்பது. இந்த ஆற்றல் பெற்ற ஆன்மாக்களும் அவர்கள் உரையும் அண்டங்கள் அநேகமும் உளவாம். அவர்களின் செயலால் இன்று மனிதன் அக உண்மையை அறியும் பக்குவம் அடைந்து அருட்பெருஞ்ஜோதியின் தொடர்பு கொள்ளுகின்றான். இனி அம் மறைத்தல் தொழிலுடைய மகேசுவரன் செயல் இவனுக்கு ஏற்படாது போகின்றதாம். அருட்பெருஞ்ஜோதியின் அறச் செயலின் மாண்பு என்னே!
(6)
591. தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
592. அளிபெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) ஒவ்வொரு பிறவியிலும் உயிருள் ஒளியாக அக விளக்கம் (அருள் ஒலி) வளர்கின்றது. இவ்வுள் ஒளியை வளர்க்க உதவும் ஆன்மாக்கள் சதாசிவ பதவி பெற்றவர்கள் ஆவர். அவர்களுக்குத் தனி அண்டம் உண்டாம். இந்தப் பதவியினர்கள்தாம் ஆன்மாக்களின் பரிபக்குவம் அறந்து மேற்பிறப்புக்கு உதவுகின்றனர். இதுவே அருளல் அல்லது அனுக்கிரகச்செயல் என்ப. இன்று சன்மார்க்க பக்குவ மனிதன் அளி பெற்ற, கனிவுற்ற அருள்நிலை ஏற்றுள்ளதாலே, அழிவுறா, மேல் பிறவியுறா நித்திய அனுபவ வாழ்வு அடைகின்றான். இது திருவருளின் பெருஞ்செயலாம். இந்தப் பேறு சதாசிவன் அறியாப் பெரும்பேறாகும்.
(7)
593. விந்துவாஞ் சக்தியை விந்தினண் டங்களை
594. அந்திறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) பிரம்மாண்டமுதல், சதாசிவாண்டம் வரையுள்ள நிலைகளில், சில ஆன்மாக்கள் அப்பத முத்தி பெற்றிருந்து கொண்டு, உயிருடம்புக்கு வேண்டிய ஆக்கலாதி ஐந்தொழிலும் புரிகின்றன. இந்நிலைகட்குமேல், ஒளிமயமான விந்துசக்தி அண்டம் உளதாம்; இதிலிருந்து முச்சுடர்கள் அண்டாகாயத்திலும் நமது பிண்டாகாயத்திலும் தோற்றுவிக்கப்பட்டுள்னவாம். இவ்விந்து சக்தி பெற்ற முத்தான்மாக்களும ஏகதேச அருட்சக்தி பெற்றவர்களே. ஆகையால், இவர்களை மதித்து, அருட்பெரும்பதி நிலையுறாது கெடல் சரியன்று. இனி நிறையருளால் பதிநிலைநின்று வாழும்போது விந்தண்டத்து வியன் ஆற்றலை முழுமையாகப் பெறுவோம். அதனால், விந்தணுவற் செறிந்திருந்த, ஆன்மஉணர்ச்சி, பிரகிருத, ஆகாசம் இம்மூன்றும், ஞான, பிரணவ, சுத்த தேகக் கூறாகத் திருவருளால் ஆதியில் அமைக்கப்பட்டிருந்து இப்போது வெளியாகித் திரிதேக சித்தியை வழங்க உள்ளனவாம்.
(8)
595. ஓங்கார சக்திக ளுற்றவண்டங்களை
596. ஆங்கா வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) சிற்றணுவுக்குள் நின்று சுழித்து எழுந்து இயக்குகின்றது தோற்றரிய ஓங்கார நாதசக்தி. இதனால், அணுவுள் அதிவேகமான மின் இயக்கம் இருந்து வருகின்றது. இவ்வியக்க் காரணமாக அணுக்கள் திரண்டு உருவாகி அண்ட பிண்டங்களும் அவற்றின் இயக்கமும் தொற்றியுள்ளன பிரபஞ்ச வெளியில். மேலும், இவ்வெளி நிறை ஓமொலிக்கும் காரணம் இச்சக்தியேயாம். இந்த ஓங்காரசக்தி இப்பொழுது நமக்குப் பிரணவ தேகசித்தியாய் அமைந்திலங்க உள்ளதாம்.
(9)
597. சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை
598. அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) ஓங்கார சக்தியால் ஒலியுண்டாகின்றது. இதுவே சகல சத்தங்கட்கும் காரணமாம். சத்த அலைகள் பதிந்து பதிந்து சத்த அண்டங்கள் பல தோற்றியுள்ளன. அவற்றில் சத்தத் தலைவர்கள் (சத்த சக்தியைத் நம்முள் அடக்கி ஆள்கின்றவர்கள்) பலர் வாழ்கின்றனர். இன்றைய அறிவியல் உலகு இந்தச் சத்த சக்தியை, ஒலியியலாகக் கண்டு, பல சாதனைகளால் தொலைபேசி, ஒலிபெருக்கி, இசைத்தட்டு, வானொலி, நாடா ஒலிப்பதிவு முதலியனவாக வெளிப்படுத்தியுள்ளது. இவற்றிற்குமேல் திருவருளால் அகமிருந்து உண்மையை வெளிப்படுத்தும் சன்மார்க்கியின் உரையும் ஆற்றலும் எவ்வுலகுக்கும் செல்லாமற்சென்று பரவிப் பெரும்பயன் அளிக்க வல்லதாயுள்ளதாம்.
(10)
599. நாதமாம் பிரமமும் நாதவண் டங்களும்
600. ஆதரம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) ஒலி நீண்டு ஓசையாகி ஏழிசைப்பண்ணாய் விளங்குகின்றதாம். இவ்விசைப்பண்ணில் மனம் ஒன்றிப் பரவசப்பட்டு மண்ணில் சாய்ந்துவிடுகின்றனர் சிலர். புறத்தே இவ்விசையொலிச் சூழலிலிருந்து கொண்டே மெய்ப்பொருள் உணர்வால் அகத்தே உள்ளொளியில் லயமாகி விளங்குவோர் சுகானுபவம் பெறுகின்றார்கள். இதனை நாதப் பிரம்மானுபவம் என்பர். இந்த நாத கீத இசையெல்லாம் மின்காந்த சக்தியால் உலக முற்றும் இமைப்பொழுதில் நிரம்பிவிளங்குவதை இன்று அறிவியல் விந்தைச் செயலால் காண்கின்றோம் இந்த நாதானுபவப் பெரியோர்கள், நவநாத சித்தர்கள் எல்லாம் ஆன்மாக்களே. இவர்களின் உலகு நாத அண்டங்களாம். இவர்களின் அனுபவத்திற்குமேல் அருள்மயமாய் அருட்பெருஞ்ஜோதியோடு இசைந்து வாழவே திருவருட்பா (ஆதரம் அன்பு) வழி செய்கின்றது.
(11)
601. பகர்பரா சக்தியைப் பதியுமண் டங்களை
602. அகமற வமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) பராசக்தி என்பது, உயர் தெய்வச் சக்தியாம் திருவருளே. இதில் மற்ற உலகியற் சக்திகள் யாவும் தோன்றியொடுங்கும். பக்குவ ஆன்மாவிலிருந்து அருள் ஒளிச்சக்தி வெளிப்பட்டு பிரபஞ்ச வெளியிலுள்ள ஜோதி சக்தி அண்டத்தில் பதிந்து நின்று, பின்னர் இவ்வுலகிடைத் தோன்றும் மனித ஆன்மாக்களுக்கு அருள் ஒளியைப் பரப்பிக்கொண்டுள்ளதாம். அவ்வருளனுபவம் உண்டாம்போது அகம் அறும், அதாவது அகங்காரம் ஒழியும். இப்பொழுது அருட்பெருஞ்ஜோதி சக்திச் சார்பால் பெருவாழ்வு ஏற்படுகின்றதாம்.
(12)
603. பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
604. அரசுற வமைத்த அருட்பெருஞ் ஜோதி

(உ-வி) அண்டநிலை விளக்கம் முற்றும் பிண்டான்மாவில் சத்துவமாய் அடங்கியுள்ளதால்தான், அகநிலையில் ஏறஏற புற அண்ட இரகசியமெல்லாம் கண்டு கொள்ளப்படுகின்றதாம்.
சமயமதச் சார்புடைய சிவம், பரசிவம் உபாயஞானத்தையும் உண்மை ஞானத்தையும் விளக்கவந்தனவேயாம். இதற்குமேல் சுத்த சிவானுபவநிலையே, சமய மதாதீத அனுபவ ஞானத்தை வழங்குவதாயுள்ளதாம். இந்நிலையிலிருந்துதான் நமது அருட்பெருஞ்ஜோதிபதி, பரசிவபதி யுண்மையையும், அவர்தம் அண்டத்தையும் ஆள்கின்றதாம்.
(13)
605. எண்ணில்பல் சக்தியை யெண்ணிலண் டங்களை
606. அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) பருப்பொருள்களிலிருந்து ஆற்றல் வெளிப்பட்டு, வெளியில் பரவிச் சென்று பிற இடங்களில் படித்துத் திரண்டு உருண்டு மற்ற வடிவம் அடைந்துவிடுகின்றதாம். இவ்வண்ணம் அனந்தசக்தியும், அவற்றால் உண்டான அனந்த உலகுகளும் நமது அருட்பெருஞ்ஜோதியினிடத்திருந்தே தோற்றியுள்ளனவாம். இது சுத்த சன்மார்க்கத் தெளிவு. நமது உள்ளத்தளியில், அண்ணுற ஓங்கும் அருட்பெருஞ்ஜோதியே எல்லாச் சக்திகளையும் அவற்றிற்குரிய எல்லா அண்டங்களையும் படைத்துள்ளதை இன்று கண்டு அந்நிலை நின்று சூழ்நர்க்குத் தயவுசெய்து இன்புடன் வாழ்ந்து வருவதுதான் கடவுளாணை.
(14)
607. அளவில்பல் சத்தரை அளவிலண் டங்களை
608. அளவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) பலவாகிய சக்திகளைக் கைவரப்பெற்ற சத்தர்களாகிய ஆன்மாக்கள், பலவாகிய அண்டங்களில் தங்கி உறைகின்றனர். இந்த நம் ஒரு பிரபஞ்சத்திலேய இப்படி இருக்க, அளவு கடந்த விரிந்துள்ள மகாபிரபஞ்சத்திலே உறைகின்ற சத்தர்களையும் அவர்தம் உலகுகளையும் இவ்வளவு என்று கணக்கிட்டுக் கூறுதல் எங்ஙனமாமோ? இப்பெரு நிலை நமது அருட்பெருஞ் ஜோதியின் பெருமையை யன்றோ உணர்த்துகின்றது!
(15)
609. உயிர்வகை யண்டம் உலப்பில எண்ணில
610. அயர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) சிற்றண்டம் ஆகிய அணுவிலே, உலகிலே உள்ள அனந்தவண்ண பேத ஜீவர்களுக்காம் உயிர்ச்சக்தியை, அதற்கதற்காம் நிறைகுண இயல்போடு அடக்கிவைத்துள்ளார் நம் பதி. இதனால்தான் இவ்வுலகச் சிருஷ்டியில், ஆதி உயிரினங்கள் யாவும் அவ்வணுநிலையினின்றே முதலில் வெளிப்பட்டுப் பின்னர் சேர்க்கையால் இணைகூடிக் கருவேற்றுப் பலவாகத் தோன்றிப் பல்கிப் பெருகியுள்ளனவாம். ஆகவே, உயிர்ச்சக்தி அடங்கிய அண்டங்கள் எண்ணிலி கோடியா யுள்ளனவாம். திருவருள் லடசிய வாழ்வில் தழைக்கும் நாம் தயவோடு உயிர்ச்சக்தியை வளர்த்தல் வேண்டுமேயன்றி உயிர்ச்சக்தியைப் புலன் இன்ப வாழ்விற்காக அழித்தல் கூடாது. இதனால், புலையண்டம் (முட்டை) கொள்ளக்கூடாது.
188. கடல்வகை
(1)
611. களவில கடல்வகை கங்கில கரையில
612. அளவில வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) முன அடிகளில் பொதுவாகப் பூதாண்டங்களையும் அவற்றின் ஆற்றல்களையும் தோற்றங்களையும் நம் பதி ஆதியில், அமைத்துள்ளதைப் பற்றியும் பின்னர் யாவும் பக்குவத்தே வெளிப்பட்டு வருவதைக் குறித்தும் விளக்கியுள்ளார் நம் வள்ளற்பெருமான். அவ்வண்ட வகைகளிலே சிறந்த நம் நிலவுகல அண்டத்தையும் இதுபோன்றிலங்கும் எத்தனையோ, மக்கள்வாழ் உலகங்களையும் அமைத்துள்ளார் நம் பதி. பிற கோளண்டங்களில் அபக்குவான்மாக்களே வேறு பல வாகிய உயிரின வடிவிகளாய் இருப்பனவாம் இந்நிலவுலக, உயிர்களின் நல்லின்ப வாழ்வுக்குத் தேவையான உயிர்க்காற்றுக்கு அடுத்தபடி நீரே முக்கியமாயிருக்கின்றதாம். உலகில் நீர்நிலைகள், பரவி ஆழ்ந்து பெருங்கடல்களாய் விளங்குகின்றனவாம். இப் பூ உலகில் நீர்ப் பரப்பே அதிகமாயுள்ளது. இந்நீர்ப்பரப்பின் இடைஇடையே தான் நிலப்பகுதிகள் உயர்ந்திலங்கக் கடலால் சூழப்பட்டுள்ளனவாய்த் தோற்றுகின்றன. இக்கடல்கள், வளமிக்கவை, களவற்றவை (அதாவது வஞ்சகமின்றி) நமக்கு, மாமழையையும், கடல் படு பொருள்கள், ஆற்றல்கள் பலவையும் வழங்கி வழங்கி வாழ்விக்கின்றனவாம். மேலும் அக்கடல்கள் எல்லையும் வரம்பும் இன்றி, ஆனால் தம் எல்லையை மீறிக்கடவாது விளங்குகின்றனவாம். இப்படி எண்ணிறைந்த கடல்களை அமைத்து, நிலைபெறுத்திக் காத்து வருகின்றார் நம் அருட்பெருஞ்ஜோதி.
(2)
613. கடலவை யனைத்துங் கரையின்றி நிலைபெற
614. அடலன லமைத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) வடவை, வடவமுகாக்கினி, வடவாக்கினி என்ற தீ, பூமியின் அக நடுவிலிருந்து மேனோக்கி அதாவது வடதுருவம் நோக்கித் தகித்துக்கொண்டுள்ளதுவாம். இதனால், பூநடு ஈர்ப்புச் சக்தியும், மின்காந்த ஆற்றலும் உண்டாகி, நிலமேற் பரப்பிலுள்ள பெருங்கடல்நீர் முழுவதையும், பிற பொருள்களையும், உயிரினங்களையும் பூமி தன்பால் வைத்து வளர்த்து வருகின்றதாம்.
வடவனலை உள்வைத்து சப்தசாகர உலகை இலங்கச் செய்கின்றதே போல், நமது பிண்ட உடலில் உத்தரபாகத்தில் மூலாக்கினியை உள்வைத்துச் சப்தாதுக்களாலான இவ்வுடலை நன்கு வளர்ந்தோங்கி விளங்க உதவிவருகின்றார் நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.
(3)
615. கடல்களும் மலைகளுங் கதிகளு நதிகளும்
616. அடலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) எல்லா உயிரினங்களும் நன்கு வாழ்ந்து இன்புற என்றே, நீரை எங்கும் அடையச்செய்ய வேண்டியுள்ளது. இதனாலே, அந்நீருக்குக் கீழ்நோக்கி நெகிழ்ந்தோடிப் பரவும் தன்மையை அமைத்துள்ளார் போலும் நம் பதி. தாழ்ந்த கடல் நிலையிலுள்ள, அசுத்த உவர்நீரை சுத்த அமுதநீராக மாற்றி உயர்மலைகளிலும், சரிவுகளிலும், நிலப்பகுதிகளிலும் தோன்றி விளங்கும் தாவரங்களையும், பிறந்து வளரும் உயிரினங்களையும் செழிக்கச்செய்ய முகில் மழையும், பனி மூட்டங்களையும் ஏறபடுத்தியுள்ளார் ஆண்டவர்.
உயர்மலைப் பிரதேசங்களில் பொழியும் மழை பல துளிப்பெரு வெள்ளமாகிப் பாய்ந்தோடி அருவிகளாயும், பெருநீர் வீழ்ச்சிகளாயும் இறங்கி ஆறுகளாக ஓடுகின்றன. அவ்வாறு களே நீர் குறைந்த காலத்தில் (ஆறு = ) வழிகளாக அமைந்து, மக்கள் போக வரவும், அங்கங்கு குடியேறி வாழவும் உதவுகின்றனவாம். இப்படி ஆற்றங்கரையில்தான் மக்கள் வாழ்வும் நாகரீகமும் வளர்ந்து வந்திருக்கின்றன. அறிவும் அனுபவமும் ஏற, மனிதன் நீரின் வேகத்தினாலும், இயல்பாலும் எத்தனையோ அறிவியற் சாதனைகளால் நன்மைகளைக் கண்டிருக்கின்றான்.
அடல் உற என்றால், ஆற்றல் பெற எனப் பொருளாம். அடுதல் என்றால், சுடுதல், சமைத்தல் என்ற பொருளும் உண்டு. ஆதலின் இங்கு அடலுற என்பதனை, அகம்வளர் அருட்ஜோதியால் அசுத்த மல உடம்பை வேதித்துச் சுத்த அருள் ஒளித் தேகமாய்ப் பக்குவப்படுத்தல் என்ற உண்மையைக் குறிக்க வந்ததாய்க் கொள்ளுதல் சிறப்பாம்.
(4)
617. கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்
618. அடலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) உப்பு வகைகளும், இரத்தின வகைகளும், பாஷாண வகைகளும் நீர்த்தாவர வகைகளும் ஆகிய பல வளங்களைக் கொண்டுள்ள கடல்களில், சங்கு சிப்பிகளும் மீனினங்களும் மற்றும் பலவான உயிரினங்களும் தோன்றி விருத்தியாகின்றன. வாழ்க்கைப்போரில் ஆறறல் குன்றிய, அறிவுவிளக்கம் குறைந்த கீழான உயிரினங்கள், நியதிப்படித் தோற்றுமடிய, வென்ற உயிரினங்கள் வாழ்வில் மேலேறுகின்றன. உடன் அத்தோல்வியில் மடிந்த உயிர்களுக்கும் திருவருளால் மேல்வகைப் பிறவி வழங்கப்படுகின்றனவாம். மனிதனாகி உயிரனுபவம் மேல் அருளனுபவம் பெற வகுத்து வழஙகப்பட்டமுறை யிதுவாகும்.
189. மலைவளம்
619. மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்
620. அலைவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) பூமியின் மூலக்கனலால் உள்ளுருகிய தாதுக்களின், பிற பொருட்களின் அனற்குழம்பு மேல்நோக்கிக் கிளம்பி, புவியின் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு வேகமாக எழுந்து, பின் சற்றுத் தணிந்து நிலப்பரப்பில் மலைகளாகக் குவிந்து. கல்லாய் மண்ணாய் உறைந்துபோயுள்ளனவாம். இந்த மலை களிற்றான் பலவாகிய உயிரினங்களும் தாவரங்களும் தோன்றியுள்ளன; உலோகத் தாதுக்களும் கலந்து படிந்து கிடக்கின்றனவாம். ஆதியில் மக்களினமும் மலையிடைத் தோன்றி பல்வளனும் கொண்டு பல்கிப் பெருகியுள்ளதாம்.
நிலநடுக்கோட்டு எல்லையில் பூமியின் சுழற்சிவேகம் அதிகம். ஆதலின், அங்குதான் முதலில் இறுக்கமும், எழுச்சியும், உறைவும் உண்டாகியிருந்தது. அதிலும் நீர்மட்டத்திற்குமேலேதான் உயர்மலையிடத்தில் யாவும் தோன்றினதாக உணர்கின்றனன் அறிவியலான் கூட. இதனால் மனித இனமும் மலைமேல் தோன்றியதே என்பது தெளிவு. மலைமீது இருந்துதான் நெற்றிக் கண்ணால் கந்தழி சோதியைக் கண்டு வழிபட்டான். அதுவே பின்னர் கந்தனாக, குறிஞ்சிக் கடவுளாக, முருகனாக விளங்கலாயிற்றாம். குன்றுதோறாடிய குமரனைத்தான் பழந்தமிழன் வழிபட்டான். அகத்தியரும் வழிபட்டு அருஞ்சித்திகள் பலவும் பெற்றார் என்ப. மலையில் சுத்தக் காற்றும், பனி நீரும், மழை நீரும் தங்கிப்பல்வளங்களை யுண்டுபண்ணியுள்ளன. மூலிகைகளும் அதிகம் தோன்றியுள்ள இடம் இம்மலையேதான். இதனால் மலையகராதி என்ற நூலே இயற்றி மூலிகை முதலானவற்றை எவ்வளவோ விளக்கியுள்ளனர் முன்னோர்கள்.
இவ்வளவையும் கடவுள் ஏன் படைத்துளளார் எனின், பலவாகிய உயிர்களும் தோன்றி வளர்ந்து அறிவுப்பக்குவமடைந்து உண்மை கண்டு அதிலே ஒன்றி அலைவற நிற்றற்கேயாம். அப்படி அலைவற் றடங்கிப்போனவர்கள் வாழ்வையும் இழந்து செயலற்றுக் கிடக்கத்தான் முடிந்ததாம். ஆனால், இத்தருணம் அருட்பெருஞ் ஜோதியின் கருணையால், அகத்தே அலைவற இருந்துகொண்டு, இவ்வுலகிலும் அலைந்தலைந்து அவத்தைப்பட்டொழியாது, அசைவற, நிலைபெற, இருந்து கொண்டு சுத்த சுகானந்தமாய் வாழ்வுபெற வேண்டுமென்பது தான் திருவருளாணையாம்.
*****