Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
திருக்கதவம் திறத்தல் பாடல் எண்.10க்கு உரை விளக்கம்..சுவாமி சரவணானந்தா.
திருத்தகுமோர் தருணமிதில் திருக்கதவம் திறந்தே
   திருவருட்பே ரொளிகாட்டித் திருஅமுதம் ஊட்டி
கருத்துமகிழ்ந் தென்உடம்பிற் கலந்துளத்திற் கலந்து
   களித்துயிரிற் கலந்தறிவிற் கலந்துலகம் அனைத்தும்
உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா(து)
   ஒன்றாகிக் காலவரை உரைப்பவெலாங் கடந்தே
திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும்
   சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.

000000000000000000000000000000000000000000000000000000000000000000
விளக்கம்.

     இம்முடிவான செய்யுளிலே மிக முக்கியமான வேண்டுகையை முடிவாக வெளியிடுகின்றார்.

     திருத்தியோடு, திருப்தியோடு என்று சாதாரணமாகப் பொருள் கூறி விடுவர் நூலறிபுலவோர்; உள நிறைவோடு என விளக்கியும் கூறுவர். இவர்களின் சொற் பொருளும், விளைவாம் பயனும் குறுகியவையே ஆம்.  நம் பெருமானின் அருண்மாண்ணிலை அறிவரிய ஒன்றாகும். அவர் பெற்ற திருத்தி நிலை, இடமும் காலமும் காடந்து திரிதேக சித்தியோடு என்றென்றும், தன் அருட் பெருஞ் செயலால் ஆருயிர்கட்கெல்லாம் மெய் இன்ப வாழ்வு உண்டாக உதவிக் கொண்டிருத்தலாகும்.

     இதுதான் இவரது முடிந்த குறிக்கோள். இதனைத்தான் ஈற்றடியில் வைத்துள்ளார். இம்முடிந்த அனுபவப் பேறு சித்திப்பதற்கு முன் நிகழும் அனுபவ நிலைகளையே, முன் மூவடிகளிலும் வரிசைப்படி கூறியுள்ளார். அவற்றைக் கீழ் காண்போம்.

     திருத்தகுமோர் தருணம் - திரு என்பதற்கு, இதுவரை நாம் கண்டு கொண்ட பொருள் மெய்ப் பொருளைக் காட்டி நம்மை அத்தோடு கூட்டி வைத்து வாழச் செய்யவில்லை !  நம் சுத்த நெறியில் திரு என்பதற்குப் பொருள் அருள் ஆம். ‘திரு அருள்’ என இணைத்துச் சொல்லும்போது, அழுத்தம் திருத்தமாக உண்மையை விளக்கும் மீமிசைச் சொல்லாகக் கொள்ளக் கூடும். இந்த மனிதப் பிறப்பிலே, கடவுள் உண்மை ஒளி, சிரநடு இருந்து ஆள்கின்றதை இன்று உணர்த்தப் பெற்றுள்ளோம். இந்த இறை ஒளி, த்இ - ர்உ ஆகக் கடவுளின் இயல் உண்மை செயல் வண்ணம் வெளிப்படுத்திக் கொண்டு தலை நடுவுள் விளங்குவதைக் குறிப்பதாம். இக்குறிப்பைக் கண்டு கொள்ளற்கே அகர உடலும், ருகர உயிரும், ளகர மெய் ஞான ஒளியும் கூடி அருள் ஆகித் திகழ்கின்றதாம். இதனால்தான் திரு என்ற சொல்லுக்குப் பொருள் அருள் எனக் கொள்ள நேருகின்றது.

     இத்திருவால், திரிதேக சித்தி பெறுவதற்குரிய சமயம் இதுவாக இருக்கின்றது. இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவே, சத்திய ஞான சபை முன் சார்ந்து நின்று, திருக்கதவம் திறக்கும்படி வேண்டப்படுகின்றது. புறக்காட்சியை வடலூர் சென்று, தைப்பூசத்தன்று, திருக்கதவம் திறக்கப் பெற்று, திரைகளும் விலக்கப் பெற்று ஜோதியைக் காணலாம். அக உண்மைக் காட்சியைக் கண்டு, அருளால் அருட் பெருஞ் ஜோதி அனுபவம் பெற வேண்டுவது திருவருள் ஆணை ஆகும்.

     ஒருமையும் தயவும் கொண்டு, சுத்த சத் விசார வசத்தராய்ப் புருவ நடுவிருந்து வேண்டிக் கொண்டிருந்தால், அருள் ஞான பக்குவம் உண்டாகும் போது நுதற்கண்ணாகிய திருக்கதவம் திறக்கப்படும். நாளடைவில் மாயா சக்தித் திரைகளாம் மறைப்புகள் விலகிட அருட்ஜோதி காட்சி அக ஞான சபையிலே கண்டு கொள்ளலாம். வள்ளலார் இப்படி உள்ளொளியைக் கண்டுகொண்டார் இக்காட்சியைக் கண்டதோடு, அருளால், ஆணவ மல ஒழிவிலே அதுதானாம் அனுபவ நிலையுற்றார். இதுதான் அருள் அமுதம் ஊட்டப் பெற்று விளங்கினதாம். 

          இந்த அக நிலையில், ‘தான்’ போய் அதுவாகி நின்று அனுபவிப்பதே மெய் இன்பமாகும். இதனை முன் அனுபவிகள் பலரும் பெற்று இன்புற்றிருந்ததும் உண்டு. ஆனால், அவ்வின்பமே முடிந்த நிலையாகக் கருதி அதிலேயே ஆழ்ந்து அடங்கிப் போயினர் ஆன்றோர். அப்படி அகம் அழுந்திப் போனதால் உலகை மறந்து, உடலை மறந்து, உணர்வு மறந்து உயிர் ஒடுங்கி யாவையும் நீத்து சூனியமாகிப் போயினர். அந்த ஆன்மாவுக்கு மேற் பிறப்பு விதிப்படி சார்வதாம். இவ்வுண்மையை அறியாதாரே, தூல தேக மறைவுக்குப் பின் உலவும் சூக்கும ஆவி வடிவைப் போற்றி, உலகியற் சிறு பயன் அடைந்து மகிழ்வர். அதனால் அருள் இன்ப வாழ்வு அடைய முடியாது. அருட்ஜோதி இடம் இருந்து தான், மெய் இன்ப வாழ்வு பெற வேண்டும், ஆகவே, தூல, சூக்கும வடிவங்களையும், அவற்றின் சக்திச் செயல்களிலும் பற்று வைக்காது, நேரடியாகக் காரண ஜோதி வடிவாகிய உள் வளர் கடவுள் ஆன்ம வடிவைச் சார்ந்து தான் மெய் இன்பம் பெற வேண்டியுள்ளது.

     ஆனால் அந்த ஆன்ம சுகம் நிலைத்த அனுபவத்துடன் விளங்கிக் கொண்டே இருக்க வேண்டுமெனின், சூழ உள்ள உயிர் உடம்பும் அழியாது, அறிவு உணர்வு கெடாது விளங்கிக் கொண்டே இருக்க வேண்டுவது அவசியமாகும். இதற்கு அந்த அகம் ஒளிர் அருட் ஜோதி அனகமாக விரிந்து உடலிற் கலந்து, உளத்திற் கலந்து, உயிரிற் கலந்து, அறிவிற் கலந்து களித்து கருத்து மகிழ்வுற்றிருக்க வேண்டும் என்பதையே இரண்டாம் அடியிற் காண்கின்றோம். அப்படி தன்னில் கலந்து கொண்ட அருட் ஜோதியே புற உலக் பெரு வெளி முற்றும் நிரம்பி, ஊழூலி காலம் உலவாதிருக்கக் காணலாகும்.

     அகண்ட பெரு வெளியில் அனாதி நித்தியமாய் உள்ளது அருட் பெருஞ் ஜோதி. அபடி இருந்து கொண்டு தான் அனைத்துலகப் பொருள்களையும் ஆற்றல்களையும் தோற்றுவித்தும், விளங்கச் செய்தும் அடங்கி ஒழியச் செய்தும் கொண்டுள்ளது அவ்அருட் பெருன் ஜோதி. இவ்வுண்மைக் காட்சியைத் தான் சுத்த சன்மார்க்கி அனுபவ பூர்வமாய்க் கண்டு உலவாது என்றென்றும் விளங்குபவனாகின்றான். இக்கருத்தே மூன்றாம் அடியில் குறிக்கப்பட்டுள்ளதாம்.

         இப்படி திரிதேக சித்தியோடு இறவா இன்ப வாழ்வில் திகழ்ந்து கொண்டு இருப்பது தானே ஒருவனுக்கு நிறை வாழ்வு ஆகும். இது தான் “திருத்தியொடு விளங்கும் அருள் ஆடல்” என ஈற்றடியில் இசைக்கப் பெற்றுள்ளது. ஆகவே, இந்தத் “திருக்கதவம் திறத்தல்” என்ற தலைப்பினால் சுட்டப்படுவது, ஒருவன் இப்பிறப்பில் திருவருளால், அருள் ஞானக் கண் திறக்கப்பெற்று மறைப்பை எல்லாம் தவிர்த்துக் கொண்டு, உள்ளொளியைக் கண்டு கலந்து அதுவேகி நின்று உலகெலாம் உலவா இன்ப வாழ்வில் தழைத்தோங்கச் செய்து கொண்டு என்றும் ஆனந்தமாய் வாழ்ந்து கொண்டிருத்தலாகும். இதுவே முடிவற்ற முடிவு, நிறைவு; தயவு.

”பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவு
கோலும் கொடுத்தான் குணம்கொடுத்தான் - காலும்
தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
நிலையும் கொடுத்தான் நிறைந்து”                                  (திரு அருட்பா)

தரமும் என்பதே தயவும் ஆக இன்று வழங்கப் பெற்றுள்ளோம்.

நிறைக தயவு.




IMG_20160821_122749.jpg

IMG_20160821_122749.jpg