கவிஞர். கங்கைமணிமாறன்
வழக்கமானவரா வள்ளலார்?
வள்ளலாருக்கு முன் உயிரிரக்கம் பற்றி உணர்வாளர்கள் எவரும் உள்ளம் தைக்குமாறு உரைக்கவில்லையா?
   வள்ளலாரைப்போல் பேரன்பின் உச்சத்தில் நின்று கசிந்துருகிக் கண்ணீர் மல்கிக் கரையவில்லையா?
    அவரைப்போல் வேறொருவர் கருணைப் பேராறு கரையது புரளவந்து அருள்நயந்த சன்மார்க்கர் ஆகவில்லையா?
   வள்ளலாரைப்போலத் தாயிற்சிறந்த தயாவாக எவரும் நடந்துகாட்டவில்லையா?
-இப்படியாகப் பல வினாக்கள் எதிர்முனையில் இருந்து காற்றைக் கிழிக்கும் கணையாக வந்து நம் காதுகளைக் காயப்படுத்துவது நடக்கக் கூடியதே.
    அதை அலட்சியப்படுத்துவதோ கண்டுகொள்ளாமல் கடந்து போவதோ மற்றவர்க்கு ஆகலாம். எமக்கு ஆகாது.சன்மார்க்கிக்கு ஆகாது.
பயம் எமக்குப் பூச்சியமன்றோ!
   அதனினும் பிறிதொரு காரணமாய் இருப்பது..வள்ளலார் வழி தனிவழி என்பதை வலியுறுத்தி நிலைநாட்டும் பொறுப்புடையார் நமையன்றி வேறு யார் என்பதுவுமன்றோ!
     அன்பினால் கசியார் இல்லை.ஆன்மா நெக்குருக அழாதார் இல்லை.
   பிறவுயிர் பேதுறக்கண்டு கலங்கிச் சிதறி உடையாதார் இல்லை.      எல்லாரும் சிவரூபம் என்று எண்ணாரும் இல்லை!
      என்னய்யா இது! வள்ளலார் போலவே மற்றவர்களும் வாழ்ந்தார் எனில் அவர்களுக்கும் இவருக்கும் என்னதான் வேறுபாடு?
  வேறுபாடே இல்லையெனில் ஏனிந்த வறட்டுச் சன்மார்க்கக் கூச்சல்..?
-இப்படியொரு கேள்வி ஈட்டியாய்ப் பாயும் பட்சத்தில் அச்சத்தில் மூழ்கவோ..அறியாமையில் தடுமாறவோ அவசியம் இல்லை எமக்கு.
     மற்ற அடியார்கள் ஞானிகள் அனைவரையும் விட...முற்றிலும் வேறுபட்ட முரட்டுத்தனமான கொள்கைவாதி எம் வள்ளலார்.
     ஒரே அலைவரிசையில் பூர்வ சமயப் புருஷோத்தமர்களை ஒட்டியே போய்க்கொண்டிருப்பதுபோல் தோன்றும் அவரது புனிதப் பயணம் ...திடீரென விவேக வேகமெடுத்து வேறு திசையில் பாயும்!
    அங்கே ஆயிரம் மின்னல்கள் ஒரே சமயத்தில் வெட்டியது போன்ற வெளிச்சம் எழுந்து நம் கண்ணைப் பறிக்கும்.
அப்போது வேறுபட்ட வண்ணத்தில் நம் எண்ணத்தில் மின்னுவார்..வள்ளலார்.
    ஒரு சோற்றுப் பதமாய் ஒன்று சொல்கிறேன்:
ஆன்மிக உலகின் அப்பர்..நாவுக்கரசர் சுவாமிகள் இப்படிச் சொல்லுவார்.
"அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்..
அவர்கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே!"
     இந்தத் திருமுறை வரிகளைத் திரும்ப ஒருமுறை அரும்பும் ஆய்வுடன் அன்புடன் நோக்கி ஆராய்ந்து பாருங்கள்.
   வாயில்லா ஒரு ஜீவன். வணங்குதற்குரிய கோமாதா. தாய்க்கு அடுத்தபடி பரிவுடன் நமக்குப் பால்சுரக்கும் காமதேனு. நம் தாய்க்கே பாலூட்டும் தாவர உண்ணித் தாய்.
  ஓரெழுத்தில் சொன்னால்...ஆ!
   வியந்து சொன்னாலும் அது 'ஆ!'
*அத்தகு ஆவை -அரிவாள் கட்டாரி கொண்டு- கதறக் கதற..பச்சை ரத்தம் சிதறச்சிதறக் ... கொன்று முடித்து- அத்தோடு விடாமல் கொடுமனத்தோடு அதன் தோலை உரித்து அப்புறப்படுத்தி...
     வெட்டிவெட்டித் துண்டுகளாக்கி...கருணையே இன்றிக் கறிசமைத்துச் சாப்பிட்டு அந்த அற்ப சுகத்திலேயே ஆட்பட்டுக் கிடக்கும் -குணத்தால் இழிந்த ஒருவனாயினும்--
     அவன் நெற்றியில் திருநீறுபூசிக்கொண்டு- கங்கையைத் தலையில் சூடிய சிவபெருமானுக்கு அன்புடையவனாக - ஓர் அடியானாக இருப்பானேயானால்-
அவனே நான்வணங்கும் கடவுள்!*
     என்று வாக்குமூலம் தருகிறார் வாகீசர்.
வைதீகவாதிகள் வாரிச் சுருட்டி எழுந்து 'அடடா..என்னவொரு வைரம்பாய்ந்த வைராக்கியம் இது' என்று வாய்மாலை கட்டி வாழ்த்திசைத்து வருகிறார்கள்- இன்றும்.
     ஓர் உயிரைத் துடிக்கத் துடிக்கக் கொன்று குவித்து தின்று முடித்தாலும் அவன் தீயவன் அல்லன்.பாவியும் அல்லன்.கொடியனும் அல்லன்.கொலைகாரனும் அல்லன். அவன் நெற்றியில்தான் இருக்கிறதே திருநீறு.     
    அதிலேதான் தெரிகிறதே அவன் வரலாறு.பிறகென்ன தகராறு..?
அவனே நான் வணங்கும் தெய்வம்!- என்று நெடுஞ்சாண் கிடையாய் விழுகிறார் திருநாவுக்கரசர்.
திகைப்புத் தீயில் எரிந்து சாம்பலாகின்றன நம் சிந்தனைத் திசுக்கள்!
கருகல் வாசனையைச் சகித்துக் கொள்ளமுடியாமல் சன்மார்க்க உள்ளம் வள்ளலாரை ஏறிட்டுப் பார்க்கிறது.
            எம்பெருமான் ஒரு வெள்ளைச் சிரிப்போடு திருவருட்பாவைத் திறக்கிறார்.
* ஓர் ஆண்மகனைப் பெண்ணாக மாற்றி... ஒரே கணத்தில் மறுபடியும் அவளை ஆணாக மாற்றிக் காட்டினும் சரி...இறந்தவரை உயிரூட்டி எழுப்புவித்து ...அடுத்தடுத்து அதிசயமூட்டும் அற்புத மந்திர வித்தைகளைச் சர்வசாதாரணமாக அரங்கேற்றும் சித்திகள் எல்லாம் சிறப்புறக் கைவரப்பெற்ற வணக்கத்துக்குரியவனாய் வானளாவ உயர்ந்திருந்தாலும்  சரி...
      ஓர் உயிரைக் கொன்று தின்னவேண்டும் என்னும் மலிவான மனக்கருத்தை உடையவனாக ஒருவன் இருந்தால்...அவனை நான் ஞானியென்று ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவ்வாறு அவனை ஒருபோதும் அழைக்கக் கூடாது! இது என் குருவின் மேல் ஆணை. சிவன்மேல் ஆணை* என்று மலையினும் மாணப் பெரிய உறுதியோடு அவர்புகன்ற செம்மொழி செம்மாந்து நின்று சிரிக்கிறது..அருட்பாவின் உள்ளே.
    ஈரமற்ற இதயம் என்றாலும் ஏற்றிருக்கும் கோலம் போதும்.அவனை அன்பனாய் ஏற்றுக் கொள்ளலாம் என்றுரைக்கும் அந்தச் சிவநெறி எங்கே?
*எத்தனை வித்தகச் சித்திகள் மொத்தமாய்ப் பெற்றிருந்தாலும் இன்னொரு உயிரை இரைப்பைக்கு அனுப்ப ...எண்ணினாலே போதும்- அவன் ஞானியல்லன். சிவனுக்கு அன்பனும் அல்லன். அவன் வெறும் ஞானசூன்யம் * என்று கொல்லாமைக் கொள்கையின் கொள்ளிடமாய் நிற்கும் நம் வள்ளலின் செந்நெறி எங்கே?
யோசித்துப் பாருங்கள்...!
அங்கே.. சடங்கின் முழக்கம்!
இங்கே..சன்மார்க்கத்தின் எக்காளம்!
அங்கே..ஒப்பனையின்
பிளிறல்!
இங்கே...உயிர் இரக்கத்தின்
கர்ஜனை! 
அது சடங்கு!
இது சத்தியம்!
அது வேஷம்!
இது பாசம்!
அது வெறும் தொழுகை!
இது ஆன்மாவின் அழுகை!

என்ன அன்பர்களே...
இப்போது புரிகிறதா-
வள்ளலார் வழக்கமானவர் இல்லை..
புதுமைக்கு இலக்கணமானவர் என்று!

பிறகென்ன ..
காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு
களங்காணுவோம் வாருங்கள்!


 

4 Comments
Williams  Chelliah
Deep analisise.Absolutely correct and true.Thank you Ayya.
Tuesday, January 1, 2019 at 11:48 am by Williams Chelliah
கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
நன்றி சகோதர.
புத்தாண்டு வாழ்த்துகள்.
Tuesday, January 1, 2019 at 12:57 pm by கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
Karunanithi Munisamy
மிக அருமையான பதிவு ஐயா. எவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விளக்கம்.
Thursday, January 3, 2019 at 04:38 am by Karunanithi Munisamy
கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்
நன்றி பெருமானே.
Monday, January 7, 2019 at 19:00 pm by கவிஞர்.கங்கைமணிமாறன் கங்கைமணிமாறன்