கவிஞர். கங்கைமணிமாறன்
ஞானி சொன்ன....... "மானி"!

     தமிழர் வரலாற்றுத் தடத்தில் உயிர்களை நேசிப்பது ஒரு பேரறமாகவே இருந்தது. தொடுவுணர்ச்சி மட்டுமே உடைய ஓரறிவு உயிர்களைத் தொழுது வணங்கியவர்கள் தமிழர்கள்.
சிற்றறிவுடைய உயிர்கள்மீதும் இயற்கையாகவே கனிவுப்பார்வை உடையவர்களாக விளங்கியவர்கள் தமிழர்கள்.
சிந்தனையில் கூட இம்சை செய்யும் எண்ணம் கூடாது. அதுவே பாவம் எனக் கருதியவர்கள் அவர்கள்.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் ...இரவாமல் ஈந்த வள்ளல்களைப் பற்றி சங்க இலக்கியம் பரக்கப் பேசுகிறது.
பைந்தமிழால் பாடிப் பரிசில் பெறவந்த பாவலர்களுக்கும் பாணர்களுக்கும் முந்நூறு ஊர்களையே பரிசாகத் தந்தான் பறம்புமலைப் பாரிவள்ளல்.
அதுபற்றிய புகழ்வாய்ந்த புனைவுகள் எதுவும் அடைமொழி தாங்கி அவனைப் பெருமை செய்யவில்லை. முந்நூறு 'ஊர்கொடுத்த பாரி' என்று புகழ்முழக்கம் கேட்கவில்லை. மாறாக முல்லைக்குத் தேர்கொடுத்த பாரி..என்ற புகழுரைதான் காலவெள்ளத்தில் மூழ்கிப்போகாமல் இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அதிலும் கடையெழு வள்ளல்களில் இருவர் பெயர் மட்டுமே இன்றளவும் பாமரர் நெஞ்சத்திலும் பசுமரத்து ஆணியாய்ப் பதிந்திருக்கிறது.
பாரியும் பேகனும் மட்டுமே பரிவின் சிகரங்களாக உலாவருகிறார்கள் இலக்கிய உலகிலும்.
என்ன காரணம்!
மற்றவர்கள் கேட்டுக்கொடுத்தவர்கள்.இவர்கள் கேளாமலே உறுதுயரத்தைக் கண்டும்...துயருற்றதோ என்று துவண்டும்...உள்ளம் உருகி தாமே உவந்து கொடுத்தவர்கள்.
முல்லைக்கொடி கொழுகொம்பில்லாமல் தவித்தபோது கொடிதானே என்று கடந்துபோகாமல் கொடிகட்டிய தன் தேரையே நிறுத்திவிட்டு நடந்துபோனான் ஒரு காவலன் என்பது உயிரிரக்கத்தின் உச்சாணிக்கொம்பில்லையா!
அந்தக் கொம்பில்தானே முல்லைக் கொடிபடர்ந்தது.
மேகம் கண்டால் தேகம் சிலிர்த்தாடும் கானமயில். அது இயற்கை. அது செயற்கையாய்த் தெரிந்தது பேகனுக்கு. குளிரில் நடுங்கியதோ கோலமயில் என்று அருளில் நடுங்கியது அவனது ஆன்மா.
வண்ணமயில் ஆட்டங்கண்டு அவன் கருணைமனமும் ஆட்டம் கண்டது.
அடுத்தக் கணமே தோளில் இருந்த போர்வை மயிலின் தோகைமேல் இருந்தது.
அடடா...இரக்கத்தின் பண்புதான் என்னே!
இவ்விருவர் செய்கையும் எவ்வகையில் உயர்ந்தது என்று எண்ணும்போதுதான்...
ஒரு பேருண்மை நமக்குப் புலப்படுகிறது.
ஈதல் அறம் என்பது அறிவோம் நாம். ஆனால் கேளாமல் கொடுக்கும் ஈகை அரிதினும் அரிது.பெரிதினும் பெரிது.
இரவலன் ஒருவன் ஈயென்று கேளாமல் அவன் குறிப்பறிந்து அவனுக்குக் கொடுக்கும் கொடை.. வானினும் உயர்ந்தது.
* அந்தோ..இப்படி இரக்கும்படி ஆனதே* என்று மானம் இழந்து கைநீட்டும் அவலத்தை அவனுக்கு ஏற்படுத்தாமல்...அவனது மானத்தையும் காத்து வருத்தத்தையும் துடைக்கிறான் -கேளாது கொடுத்த கீர்த்தியாளன்.
இந்தச் சிறப்பால்தான்...ஏழு பேரில் இமயம் தாண்டிய உயரத்தில் இன்றும் கொடிகட்டிப் பறக்கிறார்கள் பாரியும் பேகனும்.
அவர்களைப்போல் நீயும் அறம்செய் என்று அறிவுறுத்துகிறது..புறப்பொருள் வெண்பாமாலை.
இரவாமல் ஈந்த அந்த இறைவர்போல் நீயும் கரவாமல் ஈகை கடன்- என்று அறிவுறுத்துகிறது அவ்விலக்கண நூல்.
இங்கேதான் வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலார் நம் அகலப்பார்வையில் அழுத்தமாய் எழுகிறார்.
" ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்" என்று உருக்கத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வார்த்தைகளில் கொண்டுவந்து காட்டும் ஓர் பாடலில் வள்ளலார் *மானிகள்* என்று சொல்வது ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய ஒன்று.
பசிக்கொடுமையைத் தாங்கவும் முடியாமல் உணவைக் கேட்கவும் முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் மான அவஸ்தையில் தவித்து நெஞ்சம் இளைத்துப் போய்க் கிடப்பவனைக் கண்டால் நான் துடித்துப் போகிறேன்..என்கிறார் அவர். அதனால்தான் கேளாரையும் அழைத்து இளைப்பற வாய்க்கும் இன்சுவை உணவு இதோ என்று தருமச்சாலையைத் திறந்து 
வைத்தார் அந்த மகான்.
என்னவொரு கருணைப் பேராறு அவர்.
எண்ணும்போதெல்லாம் சிலிர்க்கிறது இதயம்.