Sritharan Ramasamy
ஒளி அல்லது ஜோதி வழிபாடு
இந்த வழிபாட்டினை வள்ளல் பெருமான் அறிமுகம் செய்தாரா?

சமயத் தெய்வங்களை வழிபடுவது அவசியம் இல்லை என்று கூறிய பெருமான், வேறொரு கற்பனையான ஒன்றை செய்திருப்பாரா?

இதையொட்டி சில சந்தேகங்கள்.

சினங்கொள்ளாமல் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.

1. ஜோதி அறிவு பொருளா? அறிவு பொருள் என்றால் எனக்கு சற்று விரிவாக விளக்கவும்.

2. அதற்கு கருணை / தயவு இருக்கா?

3. தத்துவப் பொருளா?

என் அறியாமையை நீக்கும் பொருட்டு கேட்கிறேன்

நன்றி
13 Comments
venkatachalapathi baskar
"அருளாளர் வருகின்ற தருணம்இது தோழி
ஆயிரம்ஆ யிரங்கோடி அணிவிளக்கேற் றிடுக
தெருளாய பசுநெய்யே விடுகமற்றை நெய்யேல்
திருமேனிக் கொருமாசு செய்தாலும் செய்யும்
இருள்ஏது காலைவிளக் கேற்றிடவேண் டுவதோ
என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்
மருளேல்அங் கவர்மேனி விளக்கமதெண் கடந்த
மதிகதிர்செங் கனல்கூடிற் றென்னினும்சா லாதே."_ திருவருட்பா, 6ஆம் திருமுறை.
Tuesday, January 7, 2020 at 12:44 pm by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
"மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்"... இவ்வரிகளை கூர்ந்து கவனிக்கவும்.
Tuesday, January 7, 2020 at 12:45 pm by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
ஈற்றறியேன் இருந்திருந்திங் கதிசயிப்ப தென்நீ
என்கின்றாய் நீஎனைவிட் டேகுதொறும் நான்தான்
காற்றறியாத் தீபம்போல் இருந்திடும்அத் தருணம்
கண்டபரி சென்புகல்வேன் அண்டபகி ரண்டம்
தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
தோன்றியதாங் கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
மாற்றறியாப் பொன்ஒளியோ அவ்வொளிக்குள் ஆடும்
வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.
Wednesday, January 8, 2020 at 01:30 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
புறத்தே தெரியும் ஜோதியினை மங்கலமாய் வைத்துக்கொள்ளவேண்டும். அகத்தில் ஜோதியை காணுதல் வேண்டும். அகத்தில் காணவேண்டிய ஜோதியைப் பற்றி விளக்கும் ஒரு திருவருட்பா பாடல் மேலே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.


புறத்தில் ஜோதியை காண்பது எளிது; அகத்தில் ஜோதியை காண்பது அரிது.
Wednesday, January 8, 2020 at 01:33 am by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
"இந்தத் தேகத்தில் புருவமத்தியில், நமது ஆன்ம அறிவென்கிற கற்பூரத்தில், கடவுள் அருளென்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப் பார்த்து, அதில் பழகிப் பழகிக் கடவுளிடத்தே உண்மையாகிய அன்பையும், ஜீவர்களிடத்தே உண்மையாகிய காருணியத்தையும் இடைவிடாமல் வைக்க வேண்டும்." வள்ளல் பெருமானின் நித்திய கரும விதி.
Wednesday, January 8, 2020 at 01:38 am by venkatachalapathi baskar
Sritharan Ramasamy
நன்றி அய்யா.

மங்கலமாய் ஏற்றுதலாம் என்பதை வழிபடலாம் என்று பொருள் கொள்ள முடியுமா அய்யா?

ஒரு நிகழ்ச்சியில் குத்து விளக்கு ஏற்றப்படுகிறது - இது மங்கலத்தை குறிக்கும் அல்லவா?

இறைவனின் சொருபம் ஆகாயம் அல்லது வெளி என்று உரை நடை பகுதியில் குறிப்பிடுகிறார். ஆகாயம் அநாதி அதுபோல் அதற்கு காரணமான பரமாகாச சொருபராகிய கடவுள் அநாதி.

தருமச் சாலையில் இறைவன் அமர்வதற்கு நடுவே திண்டு இட்டு வலது பக்கத்தில் விளக்கு வைத்திருப்பது மங்கலமாய் ஏற்றுவதற்கு பொருந்தும் என்றும் அதை வழிபடுவதற்கு அல்ல என்று கருதுகிறேன்.

அய்யாவுடைய மற்ற விளக்கங்கள் அற்புதம். நன்றி
Friday, January 10, 2020 at 13:10 pm by Sritharan Ramasamy
SOULMATE S
திரு. ஸ்ரீதரன் ஐயா அவர்களுக்கு வந்தனம், ஆம், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால், வள்ளலார் வழியாக சுத்த சன்மார்க்கம் தோன்றியது.
சமய மத தெய்வங்கள் வழிபாடு என்பது சுத்த சன்மார்க்கத்தின் படிநிலை.

கற்பனை அல்ல, நமது ஆதரங்களின் கடைசி நிலைதான் அருட்பெருஞ்ஜோதி அனுபவம்

1. ஜோதி வழிபாடு என்பது கடைநிலை அனுபவம். உதாரணம் :
தனுகரணாதிகள் தாம்கடந்து அறியும் ஓர் அனுபவம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி.

ஆக, உண்மைக்கடவுள் நிலை இதனையும் கடந்தது என்றறிக.


கடவுள் என்ற அனாதி ஆற்றல், அறிவை கடந்தும், எல்லா நிலைகளையும், தத்துவங்களை கடந்தும் விளங்கிக்கொண்டு இருக்கின்ற அனாதி பேராற்றல்.
ஆன்டவர் - பதி - (+x axis, +y axis, protons) - இயற்கையில் மலமற்ற நிலை, பெருங்கருணை, பேராற்றல், பெருநீதி,அறிவே வடிவான நிலை.

ஆன்மா - பசு - (-x axis, -y axis, neutrons) - மும்மலத்தால் அனாதியில் அறிவு பிரகாசம் இல்லாத நிலை

2. ஆம், சத்தியமாக இருக்கின்றது. அவர் இட்ட பிச்சையே இவ்வுடம்பும், போகமும், முத்தியும், சித்தியும்.

3. 36 தத்துவங்களை கடந்தது. அந்த தத்துவ நிலைகளை உண்டாக்கி, அதனுள் இருந்து இன்றளவும் இயக்கிக்கொண்டிருக்கின்றது. எக்காலத்தும் மாறாத தன்மையாய், எல்லாம் தாமாய் விளங்குகிறது.
Saturday, January 11, 2020 at 10:08 am by SOULMATE S
venkatachalapathi baskar
நம் அகத்தில் காணவேண்டிய ஜோதி மூன்று.
1)அண்டபகி ரண்டம்
தோற்றறியாப் பெருஞ்சோதி மலை-


அனுபவம் கிடைக்கும் நிலை:பரநாதம்.


பாடல் வரிகள்: "அண்டபகி ரண்டம்
தோற்றறியாப் பெருஞ்சோதி மலைபரநா தத்தே
தோன்றியதாங்'..

2) பொன்னொளி.

அனுபவம் கிடைக்கும் நிலை:பரநாத நிலைக்குப் பிறகு.

பாடல் வரிகள்: "..கதன்நடுவே தோன்றியதொன் றதுதான்
மாற்றறியாப் பொன்ஒளியோ.."

3)ஆடும் ஒளி.


அனுபவம் கிடைக்கும் நிலை:பொன்னொளி நிலைக்குப் பிறகு.


பாடல் வரிகள்:அவ்வொளிக்குள் ஆடும்
வள்ளல்அருள் ஒளியோஈ ததிசயிக்கும் வகையே.

மேலும் தகவலுக்கு: 'திருவருட்பாவின் மறுபக்கம்' ஆசிரியர் மு. பாலசுப்ரமணியன் (முபா)
Sunday, January 12, 2020 at 02:08 am by venkatachalapathi baskar
Sritharan Ramasamy
வந்தனம்

தனு என்பது மெய், வாய், கண், மூக்கு,செவி
கரணம் என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
தனுவும் மற்றும் காரணங்களும் மாயைக்கு உட்பட்டவை. இவைகளை கடந்து பின் அனுபவம் ஆகிற பொருள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். அனுபவத்தை அனுபவிக்க வேண்டுமே தவிர வணங்குவது இயலாது.

அன்னியப் அல்லாத தெய்வம் பெருமான் பாடி உள்ளார். இது மட்டும் அல்ல. சுட்டுதற்கு அறிதாம், இது அது என்று சுட்ட ஒன்னா என்றும் கூறுவார்.

அப்படி இருக்க புறத்தே விளக்கை வைத்து வழிபடுவது எப்படி பொருந்தும்? தத்துவம் ஆகுமே.

அண்டபகிரண்ட தோற்றறியா பெருஞ்சோதி மலை பரநாதத்தே தோன்றியது என்பது அனுபவம்.

விளக்கு அல்லது சோதி அறிவு பொருளா என்று ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு யாராவது எனக்கு முதலில் விளக்குங்கள்.

அடியேன் மலேசியா வாழ் தமிழன் என்பதினாலும் தமிழ் தமிழ் அறிவு குறைவு என்பதால் எழுத்து பிழைகள் இருக்க வாய்ப்பு உண்டு. பொருத்தருள வேண்டும்.

நன்றி
Sunday, January 12, 2020 at 02:48 am by Sritharan Ramasamy
venkatachalapathi baskar
ஜோதி என்பது அறிவு பொருளா? என்பதை மனித தரத்தில் உள்ளவர்களால் தெள்ளத்தெளிவாக விடை சொல்ல முடியாது. ஏனென்றால் ஒளி என்பது அணுத் துகள்களில் உள்ள ஒரு துகள் என்று தற்போதைய அறிவியல் அறிவு கூறுகிறது. அனைத்து ஜடப் பொருட்களும்
அணுக்களால் ஆனவை என்பதும் நிகழாகால உண்மை. அணுக்கள் தானாக இயங்குவதும் இயக்கப்படுவதும் அறிவுப் பொருளால் மட்டுமே. ஒரு பெரிய நிலை அணு மற்றும் அறிவு பொருளின் கூட்டமானது சிறிய நிலை அணு மற்றும் அறிவுப் பொருளோடு தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
Tuesday, January 14, 2020 at 14:23 pm by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
வள்ளல் பெருமானின் உபதேசக் குறிப்புகளில் ஒன்றானஞான சித்தியும் ஒளி நிலையும்...



106. ஞானசித்தியும் ஒளிநிலையும்

இரவில் தீபமில்லாத விடத்தில் இருக்கக்கூடாது. ஏனெனில், அஃது பிராண நஷ்டம் பண்ணும். ஆதலால், நமது கிருகத்தில் தீபம் வைத்து இருளைப் போக்கி ஆனந்த மயமாய் நித்திரையில்லாதிருந்தால், ஆயுள் விருத்தியாம். இஃது சாத்தியனுக்கு. சாதகன் ஒருவாறு நித்திரை செய்தல் வேண்டும். கிருகத்தில் இருளில்லாது எங்கும் பிரகாசமாய் தீபம் வைத்தால், மேற்படி இருள் அந்தத் தீபத்தில் அடங்கும். அதுபோல் ஜீவதீபமாகிய நாம் வசிக்கிற கிருகத்தில் பிரகாசமில்லாவிட்டால், மேற்படி இருள் ஜீவப் பிரகாசமாகிய நம்மிடத்தில் சேர்ந்து நஷ்டத்தைப் பண்ணும். அதுபோல் ஆன்ம வாசமாகிய இந்தத் தேகமாகிற கிருகத்தில் அருட்பிரகாச மில்லாது மருளாகிய அஞ்ஞான சம்பந்தமுடைய இருள் சேர்ந்தால் பிராண நஷ்டம் சீக்கிரமாம்.

ஆதலால், நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம். ஏனெனில், மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல்போல் தெரியும். அவன்தான் சுத்தஞானி. மேற்படி ஞானி தயவோடு ஒரு பிரேதத்தைப் பார்த்த மாத்திரத்தில் பிரேதம் உயிர்பெற்றெழும். மேற்படி ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால். உடனே அந்த ஜீவன் பஸ்பமாகி விடுவன். மேற்படி ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்களுள. மேற்படி கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டுமுளது. மேற்படி பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும். ஆதலால், மேற்படி அருளென்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு. நாம் தயாவடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்.

மேலும் அந்தச் சுத்தஞானி இறந்த உயிர்களை எழுப்புவதற்குப் பிரமாணம் யாதெனில்: ஒருவாறு தீபப் பிரமாணத்தா லறிக. தீபப் பிரமாணமென்பது யாது? தீபத்தினிடத்தில் காரியஒளி, காரிய காரண ஒளி, காரணஒளி என மூன்று. மேற்படி ஒளியாவன ஒளி, சோபை, பிரகாசம். ஆதலால் கடவுள் காரியமாய்ப் பிரகாசம்போல் சுவர்ணதேகியாய்த் தோன்றினால், அதிதூரத்திலிருக்கிற இருளென்னும் அஞ்ஞானத்தைப் போக்கி ஆன்ம அனுபவத்தை வருவிப்பது பிரகாசமயம். அதுபோல் ஒளி மேற்படி பிரகாசத்திலடங்கிச் சோபை காரிய காரணமாய் இருக்கின்றதுபோல், ஆன்மாக்கள் அஞ் ஞானத்தில் கட்டுண்டு அறிவாகிய தீபத்தைக் கருதினால் மேற்படி அறிவாகிய தீபம் தோன்றின கணமே அதன் மயமாவார்கள். அதுபோல் கடவுளின் சோபையைக் கண்டால், பஞ்சகிருத்தியமுஞ் செய்யக்கூடும். ஒளியைத் தொட்டால் சுடுவதுபோல், இறந்த பிரேதத்தை அவர்க்குச் சமீபிக்கச் சேர்த்தால், தக்கணமே அது ஜீவிக்கும். மேலும் பிரகாசம் எங்குமுள்ளது. எந்த இடத்தில் புலை கொலை அகற்றிய சீவர்கள் பிரார்த்தித்தாலும் தக்கணமே அவரது காரண உருவமாகிய பிரகாசத்தில் நின்று காரிய உருவமாகிய ஒளி வடிவாய்த் தோன்றி அருள் செய்வர். இதற்குப் பிரமாணம்: சித்தமார்க்கத்திலுள்ள துருசுச் சுண்ணத்தை மஞ்சளில் தோய்த்த நூலை நெடுந்தூரங்கட்டி, அங்கங்கு காயாது உபகரணம் பூசி, மனிதர்களை நிற்க வைத்து, மேற்படி சுண்ணத்தை அடியில் காட்டின தக்ஷணமே நுனியில் சிவப்பேறும்.

ஜீவனும் தீபமும்

இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது. ஏனெனில், அப்படியிருந்தால், அது ஆயுள் நஷ்டத்தை உண்டுபண்ணும். ஆகையால் நாம் வாழ்கிற வீட்டில் தீபத்தை வைத்து ஆயுளை விருத்தி செய்து கொள்ள வேண்டும். வீட்டில் எந்த இடத்திலும் தீபம் வைத்திருக்க வேண்டியது அவசியம். இருளிருக்கப்படாது. ஒரு வீட்டில் தீபம் வைத்தால் அந்த வீட்டிலிருந்த இருளெல்லாம் அந்தத் தீபத்திலடங்கிச்சேரும். அதுபோல் இந்த ஜீவனாகிய தீபம் இருக்கிற இடத்தில் விளக்கில்லாவிட்டால் அந்த இடத்திலிருக்கிற இருளெல்லாம் ஜீவனாகிய தீபத்தைச் சேர்ந்து தேக நஷ்டத்தை உண்டு பண்ணும். ஆதலால், அவசியம் தீபம் இருக்க வேண்டியது.

தயா வடிவம்

பூர்வஞான மென்பது நெற்றிக் கண்ணாற் பார்த்தல். ஒருவன் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணைப் பெற்றுக் கொள்வானானால் அவனுக்கு எல்லாம் பட்டப் பகலைப் போற்றெரியும். அவன்தான் சுத்தஞானி. அந்த நடுக்கண்ணைப் பெற்றுக்கொண்ட சுத்தஞானி தயவோடு ஓர் பிணத்தைப் பார்த்த மாத்திரத்தில், அந்தப் பிணம் உயிர் பெற்று மீளவெழுந்திருக்கும். ஒருவனைக் கோபித்துப் பார்த்தால், உடனே அவன் பஸ்பமாய் விடுவான். இதுதான் நடுக்கண் பெற்ற சுத்தஞானிக் கடையாளம். இந்த நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணுக் கொரு கதவும் பூட்டுமிருக்கின்றது. அந்தக் கதவின் பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்கவேண்டும். அருளென்பது பெருந்தயவு. ஆகவே தயவே வடிவமாக இருக்க வேண்டியது.

கடவுள் அனுக்கிரகம்

தீபத்தில் ஒளி, சோபை, பிரகாசம் என்னும் 3-ல் பிரகாசம் காரண அக்கினி, சோபை காரியகாரண அக்கினி, ஒளி காரிய அக்கினி. பிரகாச மயத்தில் கடவுள் காரியமாய் சொர்ணதேகி ஆனாலும், பிரகாசத்தைப் போல் அதிதூரத்திலிருக்கிற இருளாகிய அஞ்ஞானத்தைப் போக்கி ஆன்ம அனுபவத்தை வருவிப்பது.

ஒளியெப்படி அடங்கிச் சோபை காரியகாரணமா யிருக்கிறதோ அதுபோல, ஜீவர்கள் இருளில் மூழ்கிக் கிடந்த காலத்தில், விளக்கினிடத்து லட்சியம் அதிகரித்த தருணம், ஒளியைக் கண்டால் அதன் மயமாவார்கள். அதுபோல் கடவுளினது சோபையைக் கண்டால், சிருஷ்டியாதி பஞ்சகிருத்தியங்களும் செய்யக்கூடும். ஒளியைத் தொட்டால் சுடுவதுபோல் இறந்த ஜீவர்களை ஆண்டவருக்குச் சமீபத்தில் சேர்த்தால் உடனே ஜீவிப்பார்கள். ஆண்டவரது பிரகாசம் எங்கும் உள்ளதால், எந்த இடத்தில் புலை கொலையில்லாமல் ஜீவர்கள் முயற்சி செய்கிறார்களோ, அந்த இடத்தில் கடவுள் வந்து காரண உருவமாகிய பிரகாசத்தில் நின்றும் காரிய உருவமாகிய ஒளியாகித் தோன்றி அனுக்கிரகிப்பது சுபாவம். இதற்குப் பிரமாணம்: துருசுச் சுண்ணத்தை மஞ்சளில் நனைத்து, அதிக நீளமுள்ள நூலின் ஒரு தலைப்பைச் சுண்ணத்தில் படும்படி நனைத்த அந்நூல் முழுமையும் சிவப்பேறுவது போலாம்.

என்னுடைய தற்போதைய புரிதல்... கடவுளின் காரண உருவம்-பிரகாசம், கடவுளின் காரிய-உருவம் ஒளி வடிவம்...
Tuesday, January 14, 2020 at 14:37 pm by venkatachalapathi baskar
SOULMATE S
ஜோதி ஜோதி ஜோதி சிவம் என்ற பாடலை நோக்குக.

இதில் குறிக்கப்பட்ட ஜோதி, ஒரு சன்மார்க்க சாதகனின் தொடர் பிறவிகளில் இடைவிடாது செய்த தீவிர முயற்சியின் பயனாகவும், புறப்பற்றை தள்ளி சுத்த சன்மார்க்க சாதனத்தை மட்டும் பற்றி, அதீத தவ (அக) உஷ்ணத்தாலும், ஆண்டவரின் பெருங்கருணையாலும், ஏழு திரையும் பூரணமாக விலக்கப்பட்டு, அகத்தில் பெறக்கூடிய அருட்பெருஞ்ஜோதி அனுபவமே ஜோதியின் அகக்காட்சி.


இதற்கு ஆரம்ப நிலையில் புறத்தில் விளக்கேற்றி, அந்த ஜோதியை வழிபாடு செய்தல் வேண்டும்.
நாஸ்திகரின் பார்வையில் விளக்கின் பயனாக பெறப்படும் ஜோதி, அறிவு இல்லாதது என்றும், அதன் பிரகாசமே ஜோதி தரும் பலன் என்று கருதுவார்கள்.

ஆனால், பேரின்பப்பேற்றை அடையப்பயில்கின்ற சாதகன், ஜோதியையே கடவுளாகவும், அறிவுப்பொருளாகவும் வணங்குகின்றான்.
இதில் பழகி பழகி, புறப்பற்றை நீக்கி, இந்திரிங்களை வென்று (அடக்குவது தவறு), உணவு உறக்கம் முக மிக குறைவுற்று, புறவழிபாடு விட்டு அக அனுபவத்தை நோக்கி பயணிக்கின்றான். அதாவது தத்துவம் கடந்த நிலை நோக்கி.

ஆக, அகஜோதியே அறிவுப்பொருள் என்றும், ஆன்மாக்கள் முடிவாக அடைகின்ற கடவுள் நிலை என்றும் அறிக.

புறப்பற்றை விடாமலும், மனம் அடங்காமலும், அக மற்றும் புற இந்திரியங்களை வெல்லாமலும், தவ முயற்சி இல்லாமலும், உணவு உறக்கம் குறைக்காமலும், விளக்கை மட்டும் வைத்து கடைசிவரை புற வழிபாடு செய்பவர்கள் மூப்பு காரணமாக இறக்கின்றனர். ஆனால், அடுத்தடுத்து வரும் பிறவிகளில், தொடர் முயற்சியால், சுத்த சன்மார்க்கத்தின் வழியாக பேரின்ப லாபத்தை அடைவார்கள் என்றுனர்க.
Wednesday, January 15, 2020 at 05:02 am by SOULMATE S
Sritharan Ramasamy
விளக்கங்களுக்கு நன்றி ஐயா
Saturday, January 18, 2020 at 07:14 am by Sritharan Ramasamy