Daeiou Vallalar anbargal
சுவாமி.சரவணானந்தர் அருளிய தயவுக்குறள் விசாரம்.
ஆன்மசிற் றம்பலத் தாரு மதுவேயின்

றூன்மே வுருவா யுணர்.(தயவுக்குறள்)

தயாநெறி தலைப்பில் 5ஆம் தயவுக்குறள் இது.
சன்மார்க்கிக்கு உண்மை அறிவால் தேகப்பற்றை நீங்கி கடவுள் பற்று உண்டாகுவதையும் அதோடு தயவு நெறி வெளிப்படுதலையும் பற்றி இக்குறள் உரைக்கின்றது.

ஆன்மாவாகிய சிற்றம்பலத்தில் பொருந்தி விளங்குகின்ற ஒன்றான ஆண்டவரே இன்று நம் தேகத்தில் நிறைந்து உணர்வாகிய மனதிலும் உயிரிலும் கலந்துள்ளன என்ற உண்மை அறியப்படும் போது தான் புலைப்பற்று நீங்கி தயாநெறி தொடங்குகின்றது.
வள்ளலார் தெய்வமணிமாலையில் பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள்.

கந்தக்கோட்டத்து வளர்ந்தோங்கும் கந்த வேளே என்பார்.சமயநெறியில் முழ்கியவர்களும் நாத்திகர்களும் இதிலுள்ள சன்மார்க்க பேருண்மையினை காணாது சமய நோக்கிலேயே காண்பதால் பெரும்பயன் ஏதும் அவர்களுக்கு விளையாது.

எல்லாம் வல்ல தெய்வமணியை சண்முகத்துய்ய மணியாக சொல்லுவார்.சண்முகத்துய்யமணி என்பது உண்மையில் தயாமணி ஆகும்.

கந்தக்கோட்டமாகிய வள்ளலின் உயிருடம்பில் உணர்வில் எல்லாவல்ல இறையாகிய கந்த வேள் வளர்ந்து ஓங்கியுள்ள நிலையினை தான் நாம் உணர வேண்டும்.எனவே வள்ளல் சண்முகத்துய்யக்காட்சியினை கண்டாரோ அன்றே பெருநெறியாகிய தயாநெறி தொடங்கி விட்டதாம்.சரவணானந்தருக்கு உணர்த்தப்பட்டதும் இதுவே தான்.புலைப்பற்று ஆகிய இது என்னுடைய தேகம் என்ற பற்று நீங்கி அம்பலத்தரசராகிய ஆண்டவரையே சன்மார்க்கி தம் உயிருடம்பு உணர்விலே கண்டு உணர்ந்து அனுபவம் பெறுகின்ற பெரிய வாழ்வு நிலையே அருட்பெருநிலைவாழ்வு என்பது உணர்த்தப்படுகின்றது.