www.vallalarspace.com/durai
வாழ்க சமரசம்! வளர்க சுத்த சன்மார்க்கம்!!

அருட்பெருஞ்ஜோதி...தனிப்பெருங்கருணை...

நம்மவர்கள் அனைவருக்கும் வந்தனம்! 

வளமொடு இன்புற்று வாழி நீடூழி!

உலகிலுள்ள சமயமதங்கள் தங்கள் தங்கள் கொள்கைகளால் ஒன்றையொன்று தாக்கிக்கொண்டதில் தங்களுக்குத் தாங்களே பெருத்த காயங்களை ஏற்படுத்திடுக்கொண்டு, அவைகளெலாம் அவமானப்பட்டுக்கொண்டதுதான் மிச்சம். இப்பொழுது அந்தத் தத்துவங்களையெலாம் வம்பாகப் பேசவேண்டாமென்று நம்முலகிலுள்ள பலநாடுகள் சட்டங்களை இயற்றி, மனிதநேயத்தைப் பள்ளியேடுகளில் பாடமாக்கி உலகவர் அனைவரும் மனிதநேய ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும்மென்று வழிவகைசெய்து வருகின்றது. இதற்கிடையில் இவ்வுலகின்கண் இயற்கையுண்மையை அறியும்பொருட்டு விஞ்ஞானமும் திருவருளால் நன்கு வளர்ந்திருக்கின்றது.

இந்த இயற்கை விஞ்ஞானத்தையும், மனித நேயத்தையும் முறையே சத்துவிசாரம் என்றும், சீவ ஒழுக்கம் என்றும் இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே, நாம் நன்கு கற்றொழுக வேண்டுமாய் வாழ்ந்து காட்டிப் போதித்ததோடு மட்டுமல்லாமல், 'ஆன்மநேயம் என்றால் என்ன?, அதனால் அடையக்கூடிய ஒப்பற்ற புருஷார்த்த நற்பலன்கள் என்னென்ன?' என்பதையும் நடைமுறையில் கடைபிடித்துக்காட்டி, அந்த அருள் ஒழுக்கத்தால் தான் பெற்ற சுத்த-பிரணவ-ஞான தேகங்களைப் புகைப்படம் எடுக்கமுடியாத அளவிற்கு எக்காலத்தும் இறவாத முத்தேக சித்தியைப் பெற்றுக்கொண்டதோடு, தனக்குத்தானே அந்த ஒப்பற்ற இயற்கைப் பேரின்ப அனகப் பெருவாழ்விலே சுயநலத்தோடு இருந்துகொள்ளாமல், "இந்த முத்தேக சித்தியை மனிததேகம் வாய்க்கப்பெற்ற அனைவருமே இந்த இகத்தில் பெற்றுக் கொள்ளக்கூடும்!" - என்று, அந்த ஆன்மீகத்தின் இயற்கையுண்மையை நம்முடைய இவ்வுலகிற்குப் போதித்து, உலகர் அனைவருக்கும் ஆன்மீக சுதந்திரத்தை வாரிவாரி வழங்கியருளிய ஈடு இணையற்ற மகாபுருசர்தான் நம்தென்னிந்தியத் தமிழகத்தில் அவதரித்த திருவருட்பிரகாச வள்ளற்பெருமான் என்கின்ற சீவகாருண்யமூர்த்தி ஆவார்கள்.

"அப்பேர்பட்ட உத்தம மகா புருசரின் வழியில் நல்வாழ்வு வாழவந்த நம்மவர்களில் பலபேர் எப்பேர்ப்பட்ட பிழைகளைச் செய்து வாழ்கிறோம்!" - என்று, நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் தாங்காதே என்ற காரணத்தினால், 'தீராத ஒன்றுக்குத் தெய்வம்தான் துணை!' - என்கின்ற, நன்நம்பிக்கையில், பல சுத்த சன்மார்க்க மகான்கள் இருக்கும் இடம் தெரியாமல் இவ்வுலகின்கண் ஆங்காங்கே அமைதியாக இருந்துகொண்டிருக்கிறார்கள். அத்தகைய மகான்களும், ஞானிகளும் ஒருபுறம் பனிமலைபோல் ஒதுங்கியிருந்தாலும், சாதாரண மக்களுக்கு நம்மிடையே நிலவி வரும் சண்டை சச்சரவுகள் ஒன்றும் தெரியாமல் இல்லை. நேற்று முன்தினம் வடலூர் தர்மச்சாலையில் சேவை செய்துவரும் ஒரு அய்யா அவர்கள், மர்ம நபர்களால் தாக்கப்பட்டதே இதற்கு ஒரு உதாரணம். இந்தத் தாக்குதலுக்குக் காரணமாகிய அனைவருக்கும் நீதியின் தக்க தண்டனையானது அரசாலும், ஆண்டவராலும் வெகுவிரையில் நிச்சயம் கிடைக்கும். தெரிந்தே தப்பு செய்தவர்கள் ஒருக்காலும் தப்பிக்கவே முடியாது! 

அன்பு வழியிலே பயணிக்கின்ற, நம்மவர்களுக்கிடையே இதுபொன்ற வம்புகளுக்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்? அதுபற்றி இனி நாம் தெளிவாகத் தெரிவதற்கு முன்பாக, அண்மைக் காலத்தில் என்செயல்பாடுகள் குறித்தும் கொஞ்சம் இங்கே அன்புடன் பகிர்ந்து கொள்கின்றேன். சுய விளம்பரம்மென்று நினைக்காது, "என்கூற்றில் ஏதாவது நமக்கு இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான நன்மை ஒன்று இருக்கிறதா?" - என்று நேராகக் காணவேண்டுமாய் வேண்டுகிறேன்!

"வள்ளலார் யுனிவர்சல் மிஷன்" - என்கின்ற ஒரு அமைப்பானது அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று உலகெங்கும் உள்ள சன்மார்க்கிகளை ஒவ்வொருவராகத் தொடர்புகொண்டு, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையன்று வரவழைத்து, சுத்த சன்மார்க்கம் குறித்து வளைதளம் மூலமாக சொற்பொழிவு ஆற்ற வைத்து, சுத்தசன்மார்க்கப் பரப்புரையைச் செய்து வருகின்றது. அதில் ஒரு சில அன்பர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, முதல் ஒரு வருடகாலம், அந்த அமைப்போடு சேர்ந்துகொண்டு "சொற்பொழிவைத் துவக்கி வைத்தல், நடத்துதல், நிறைவுசெய்தல்" - போன்ற பணிகளைச் செய்து வந்தேன்.

தமிழகத்திலிருந்து இசை ஆசான் இன்னிசை ஏந்தல் திரு.ஆத்மநாதன் அய்யா அவர்கள், ஓய்வுபெற்ற மாவட்ட உதவி ஆட்சியர் திரு. இராமானுஜம் அய்யா அவர்கள் மூலமாக, என்னைத் தொடர்புகொண்டு, "அமெரிக்காவில் அருட்பாக்களை இசையோடு பாடக்கற்ற தன்னுடைய மாணவ மாணவிகளுக்கு, 'அருட்பா அரங்கேற்ற நிகழ்வு!' - ஒன்றை அமெரிக்காவிலேயே நடத்தவேண்டும்." - என்று, இந்தச் சிறுவனாகிய என்னிடம் அவர் அன்புடன் கேட்டுக்கொண்டார். 'திருவருள் சம்மதம்!' - என்று நினைந்து, இங்குள்ள அன்பர்களிடம் அது குறித்துப் பேசினேன். கேட்டவர் அனைவரும் முன்பின் சொல்லாது, திருவருளால் பச்சைக்கொடி காட்டினார்கள். அப்படியே, இங்குள்ள சில அன்பர்களின் பொருளுதவியாளும், கலிபோர்னியாவின் வளைகுடாப் பகுதியிலுள்ள ( Bay Area Tamil Sankam) தமிழ்சங்கத்தின் பேராதரவுடனும், குப்பர்டினோ (Cupertino) என்ற இடத்தில், குப்பர்டினோவின் மேயர் திருமதி சவிதா வைத்தியநாதன் அவர்களின் தலைமையில், வட அமெரிக்கவில் இயங்கி வந்த வள்ளலார் யுனிவர்சல் மிஷனை உலகலவில் ஒரு அறிமுகம் செய்வதற்கும், அதேசமயத்தில் அருட்பா இன்னிசையை அரங்கேற்றம் செய்வதற்கும் பொருத்தமாக, 'வள்ளலார் விழா' - என்ற ஒரு பெரிய ஆன்மீக நிகழ்வானது வட அமெரிக்காவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ம் நாள் மிகச் சிறப்பாக நடைபெறுவதற்குத் திருவருள் என்னையும் ஒரு பொருட்டாக ஆக்கி அருளியது.

இந்த இனிய விழாவிற்கு, இந்தச் சிறுவனாகிய நானும் 750 டாலர்களுக்கு மேல் (இந்தியப் பணத்தில் தோராயமாக ரூபாய் 50 ஆயிரம் வரை செலவு செய்து கலந்து கொண்டேன். இந்த அருள்விழா நிறைவுற்ற பிறகு, கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒரு மாதத்திற்குள் செலவு கணக்குகளை மிகத்துள்ளியமாக, ஒரு சிறு பிழையுமின்றி இமெயில் மூலமாக எனக்கு முறையாகத் தெரியப் படுத்தினார்கள். அந்தக் கணக்கில் கிட்டத்தட்ட 2000 டாலர்கள் (இந்தியப்பணத்தில் ஒன்னேகால் இலட்சம் இருக்கும்) வசூலித்த பணத்தில் இறையருளால் மிஞ்சியது. வசூலித்த பணத்திற்கும் மேலாகச் செலவு வந்தால் நாங்கள் தாங்குவதற்கு இறையருளால் தயாராகவும் இருந்தோம். ஆனால், ஆண்டவர் நாங்கள் எதிர்பார்க்காமலேயே அதிகத்தொகையை மிச்சம் பண்ணிக் கொடுத்தார். அந்தத் தொகையின், இப்போதைய நிலவரம் குறித்து எனக்கு எதுவம் தெரியாது. ஏனென்றால் அந்தப் பணம் வள்ளலார் மிஷனினிலுள்ள மற்ற அன்பர்களின் கைவசமே ஆரம்பத்திலிருந்து இருந்தது. அது மட்டுமல்ல, "அது ஆண்டவர் தந்தது. ஆகையால் அவரே பார்த்துக்கொள்வார். நமக்கென்ன வந்தது!" - என்று துவக்கத்திலிருந்தே என் நிலைப்பாடு இருந்தது.. இருப்பினும், அந்தப் பணத்தை நானே வைத்திருக்கும்படி வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அன்பர்கள் பலமுறை என்னைக் கேட்டுக்கொண்டாலும், ஆரம்பத்திலிருந்தே அதற்கு நான் சம்மதம் தெரிவிக்க எனக்கு ஒருபோதும் உள்ளிருந்து உணர்த்தப்படவேயில்லை.

அந்த 'வள்ளலார் விழா' நடந்து ஓரிரு மாதங்களிலிலேயே, இந்தச் சிறுவனாகிய நான், எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பிலும் இணைந்து "தலைவர், செயலாளர், பொருளாளர்..." என்ற பதவிகளில் சிறைபடக் கூடாது என்றும், அவ்வாறு சிறைபடுதல், தற்போது என்னுடைய ஆன்மீகப் பயணத்திற்கு ஏதாவது ஒருவகையில் அந்தச் சிறைவாசம் இடையூறாக அமையக்கூடும் என்றும், ஒரு தனிப்பட்ட அமைப்போடு மட்டும் நம்மைச் சுருங்கிக்கொள்ளாமல், எல்லாச் சன்மார்க்க அமைப்புகளோடும் இணக்கமாக இருந்துகொண்டு, நம்மால் முடிந்தமட்டும் தேவைப்படுகின்ற சன்மார்க்க அமைப்புகளுக்கு ஏதாவது ஒருவகையில் பயணுள்ள விதமாக இருக்கலாமே என்றும், எம்முடைய உள்ளுணர்வு அடிக்கடித் தெளிவுபடுத்தியதால், வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அன்பர்களுடன் பிரியா விடைபெற்று, "எந்தப் பணியாக இருந்தாலும் தேவைப்படும்போது அவ்வப்போது வந்து இணைந்து செயல்படுகிறேன்." - என்றும், "என்னால் முடிந்த பொருள் உதவிகளையும் அவ்வப்போது முடிந்தமட்டும் செய்கிறேன்." - என்றும், உள்ளதை உள்ளபடி சொல்லிவிட்டு, வள்ளலார் யுனிவர்சல் மிஷன் என்ற அந்த அமைப்பைவிட்டு வெளியில் வந்து இப்போது கிட்டத்தட்ட ஆறுமாதங்களாகி விட்டது.

நான், இந்த அமைப்பை விட்டு வெளியில் வந்தாலும், அதிலுள்ள சன்மார்க்க அன்பர்கள், எப்போதும் போலவே தங்கள் சன்மார்க்கப் பரப்புரைப் பணியைத் தொடர்ந்து நல்லவிதமாகச் செய்துகொண்டுதான் வருகிறார்கள். இப்படித்தான் எந்த ஒரு சன்மார்க்க அமைப்பும் நல்லவிதமாகத் தானே இயங்கும். "ஒரு சன்மார்க்க அமைப்பானது, மிகச்சிறப்பாக என்னால்தான் நடக்கிறது!" - என்று ஒருவர் நினைத்தால், அது அவரின் அறியாமைதான்! தானே இருந்து அவரே நடத்துகிறார் என்பதை பக்குவிகள் அனுபவத்தால் அறிந்துகொள்ளக்கூடும்!அதேசமயத்தில் ஒரு தனிப்பட்ட சன்மார்க்க அமைப்பில் இருந்துகொண்டுதான் "ஒருநபர் நற்பணிகளைச் செய்ய வேண்டும்!" - என்கின்ற அவசியமும் இல்லை. அது அவரவர் சுதந்திரம்! எல்லாம் திருவருள் சம்மதமே!! ஒரு அமைப்பு, இன்னொரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அமைப்பின் நபர், வேறோர் அமைப்பின் நற்பணிகளுக்கோ அல்லது வேறு ஏதாவது ஒரு சேவைச் செயல்களுக்கோ முடிந்த, உகந்த நற்பணிகளைச் செய்து, ஆன்ம இலாபத்தைக் காலமுள்ளபோதே அனுபவமாக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி நல்ல அறப்பணிகளை இந்த உலக சீவர்கள் எல்லோருமே மகிழ்வுற்றுச் சிறப்புற்றுச் செழித்து வாழ்வதற்காக, ஆற்றப்படுகின்ற சுயநலமற்ற சீவசேவைதான், அறிவு விளக்கம் அடைந்தவர்களுக்களின் உண்மையான கடவுள் வழிபாடாகும். 'மற்றவைகளெல்லாம் மாயாசாலமே!' -என்று அறிந்து, புறவுலகில் மயங்கி விழுந்து விடாமல், ஆன்ம விழிப்பு நிலையை ஒவ்வொருவரும் விரைந்து விரைந்து பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

இதை இங்கு, இவ்வளவு விளக்கமாக நான் ஏன் எழுதுகிறேன் என்றால், இன்னும் நான் தான் அந்த "வள்ளலார் யுனிவர்சல் மிசனை" - அமெரிக்காவில் இருந்துகொண்டு நடத்துகிறேன்!' - என்று, சிலர் தவறாக நினைத்துக்கொண்டு, என்னிடம் அவர்கள் அலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு, அந்த வள்ளலார் யுனிவர்சல் மிஷன் அமைப்பின் மூலமாக இங்கு வந்து பேசுவதற்கு நல்வாய்ப்பை நாடுகின்றார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், எனக்கும், அமெரிக்காவிலுள்ள அந்தச் சன்மார்க்க அமைப்பிற்கும், 'நான் ஒரு சன்மார்க்கி என்பதைத் தவிர, வேறு எந்ததொரு தொடர்பும், பொறுப்பும் அப்போதும், தற்போதும், எப்போதும் கிடையவே கிடையாது!' - என்பதுதான். யாராவது ஒருவர் நம் சன்மார்க்க அமைப்பிற்குத் தலைவராக இருந்துதான் ஆகவேண்டும். அதுபோல மற்ற பதவிகளிலும் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நம் அமைப்பு இயங்கும். நம் அமைப்பின் மூலமாக மட்டுமே பொருளீட்டிப் புகழீட்டி வாழல் வேண்டுமென்று நினைக்காமல், தம்முடைய தனிப்பட்ட தொழில் மற்றும் உழைப்பின் மூலமாக் தான் சார்ந்த அமைப்பிற்கு ஏதாவது முடிந்த மட்டும் தானதர்மம் செய்யத் தகுதியும், யோகமும் உள்ள புண்ணியவான்கள் யார் வேண்டுமாயினும் பொறுப்பில் இருக்கலாம். மற்றவர்களோ அத்தகைய பொறுப்புகளில், 'நாமேதான் இருக்கிறோம்!' - என்று, நம்மை உளமாறப் பாவித்துக்கொண்டு, சந்தோசமாக நாம் சார்ந்த அந்த ஒரு அமைப்பிற்கு, நல்ல ஒரு உறுதுணையாகவும் இருக்கலாம்! நம் அமைப்பின் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள், மற்ற அங்கத்தினர்கள் அனைவருமே அவ்வாறே தங்களைப் பாவித்துக்கொள்ளும் அளவிற்கு, பெருங்கருணைக் கண்ணியத்தோடே எப்போதும் நடந்துகொள்ளல் வேண்டும்!

அத்தோடு, நம் அமைப்பின் பொறுப்புகளில் உள்ளவர்கள், அணுவளவும் கணக்கை மாற்றாது, யார் எப்போது கணக்குக் கேட்டாலும் கோபமும், குரோதமும் கொள்ளாது, வள்ளற்பெருமானே கணக்குக் கேட்கிறார் என்றெண்ணி, சந்தோசமாகக் கணக்கைக் காட்டுவதுதான் நம் மாசுமருவற்ற மார்க்கத்தின் கண்ணியம் ஆகும். அதுமட்டுமல்ல, 'நான்தான் நிறுவனர்', 'நான்தான் தலைவர்' - என்று, சுயநலத்தில் திமிராகப் பேசாது, பொறுப்புகளை எல்லா உறுப்பினர்களும் ஐனநாயக முறைப்படி ஒவ்வொரு ஆண்டும் மாறிமாறிப் பகிர்ந்துகொள்வதற்கு சட்டப்படியும் நல்ல ஒரு வழிமுறையும் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் பொறுப்புகளுக்காகவும், புகழுக்காகவும் சண்டைகள் வராது. யார் காலத்தில், நம் மார்க்கப்பணியும், அமைப்பின் வளர்ச்சியும் நல்ல முன்னேற்றம் கண்டதோ, அந்தப் புண்ணியர்களை அடையாளம் கண்டு, அவர்களைக் கௌரவிக்க நாம் ஒருக்காலும் மறந்து விடவும்கூடாது. அது நம் வள்ளற்பெருமானைக் கௌரவிப்பதே ஆகும்!

அதை விடுத்துவிட்டு, "நான்தான் தலைவன், நான்தான் நிறுவனர், உனக்கென்ன நான் கணக்குக் காட்டுவது." - என்றால், அது சன்மார்க்க நிறுவனம் அல்ல. அது தன்னுடைய சொந்தப் பிழைப்பிற்குச் சன்மார்க்கத்தின் பேரால் நடத்துகின்ற ஒரு குடும்பத்தொழில் ஆகும். இப்படிப்பட்ட நபர்களால்தான் அவரவர்களின் நிர்வாகத்தில் குழப்பங்களும், கூச்சல்களும், ஏன் சமயத்தில் அடிதடி சண்டைகளும் வந்து விடுகிறது. அப்படிச் சண்டை செய்து கொள்கின்றவர்கள், சன்மார்க்கத்தின் பேரால் தாங்கள் நடத்துகின்ற தங்களின் குடும்பத்தொழிலுக்குப் பொதுமக்களிடமிருந்து பொருள் பெறுவதற்காக நன்கொடையெனும் பேரில், போலி ரசீதுகளைக் கொடுத்துக் கையேந்துதல் கூடாது. 'அது மார்க்கத்திற்கும் இழிவு! தான் சேர்ந்துள்ள அந்தத் தனிப்பட்ட அமைப்பிற்கும், தன்னுடைய சொந்த வாழ்வுக்கும் அழிவு!' - என்பதை நாம் மறந்திடுதல் கூடாது.

இதற்குமேல், மற்றவைகள் காலம் வரும்போது, கடவுள் சம்மதம் இருப்பின் அவைகளெலாம் வெளிப்படும்!

இந்தச் சிறுவன் இப்பொழுதெல்லாம் அனுதினமும் நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டுவது யாதெனில், 'நம்மவர்களிடையே எக்காலத்தும், எந்த ஒன்றாலும் பிரிக்க முடியாத ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையையும், ஒப்பற்ற முடிந்த முடிவான திருவருள்பெற்றியின் அருளனுபவமும் அன்றில் வேறொன்றும் இல்லை!

வீணாக இப்புறவுலகச் சண்டைசச்சரவுகளை உடன்தவிர்ப்போம்!
ஞானாகர நற்பயிர்வளர்த்து நாள்தோறும் நல்அமுதுபடைப்போம்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா விரததம் இக்குவலயம்மெலாம் ஓங்குக!

வாழ்க சமரசம்! வளர்க சுத்த சன்மார்க்கம்!!

அருட்பெருஞ்ஜோதி...தனிப்பெருங்கருணை...

அன்பன்
துரை சாத்தனன்