Karunai Sabai-Salai Trust.
’சமரசம்’ என்பதற்கு பொருள் – வள்ளலார்.
உள்ளது உள்ளபடி; நன்றி: Apj Arul.

சமரச வேத சன்மார்க்க சங்கம் என்பதற்குப் பொருள்
:
எல்லாச் சமயங்களுக்கும் பொதுவாகிய அறிவுநூல் முடிபான நான்காவது மார்க்கத்தை அனுஷ்டிக்கின்ற கூட்டமென்று கொள்க. மேற்படி மார்க்கம் நான்காவன: தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என நான்கு.

ஷடாந்த சமரச சுத்த சிவ சன்மார்க்கம் என்பதில் ஷடாந்தம் என்பது யாது?

வேதாந்தம், சித்தாந்தம், போதாந்தம், நாதாந்தம், யோகாந்தம், கலாந்தம் ஆக ஆறு. மேற்படி அந்தங்களின் அனுபவம் காலம் இடம் முதலிய வேறுபாடுகளால் ஏறிக் குறையும். ஆதலால், ஷடாந்தமும் வியாபகமில்லாமல் வேதாந்த சித்தாந்தத்தில் நான்கந்தமும் வியாப்பியமா யிருக்கின்றன. மேற்படி அந்தம் நான்கின் ஐக்கிய விவரம்: வேதாந்தத்தில் போதாந்த யோகாந்தமும், சித்தாந்தத்தில் நாதாந்த கலாந்தமும் அடங்கியிருக்கின்றன. இந்த ஐக்கியம் பற்றி வேதாந்த சித்தாந்தமே இப்போது அனுபவத்தில் சுத்த வேதாந்த சுத்த சித்தாந்தமாய் வழங்குகின்றன.

இவற்றிற்கு அதீதம் ஆகிய சுத்த வேதாந்த சித்தாந்த அந்தாந்தமாகிய சமரசசுத்த சன்மார்க்கமே நித்திய மார்க்கம். மேற்குறித்த மார்க்கத்திற்குச் சமய மதங்களாகிய சன்மார்க்கங்கள் அநந்நியமாய் விளங்கும்; அந்நியமல்ல. மேற்படி சமயமத மார்க்கங்கள் எவை எனில், சமய சன்மார்க்கம் மதசன்மார்க்கம் என இரண்டு. இவற்றுள் அடங்கிய சன்மார்க்கம் அனந்தம். அதில் சமய சன்மார்க்கத்தின் வகை ஆறு, தொகை முப்பத்தாறு, விரிவு அறுகோடி. இதுபோல் மதத்திலும் வகை தொகை விரிவு உள்ளன. மேற்குறித்த சமய மத சன்மார்க்கங்களில் வகரவித்தை தகரவித்தையுள. அவை அவ்வச் சமயமத சன்மார்க்கங்களின் தலைமையாகிய கர்த்தா மூர்த்தி ஈசுரன் பிரமம் சிவம் முதலிய தத்துவங்களில் காலப் பிரமான பரியந்த மிருக்கும்; அதற்குமேலிரா.

மேற்படி சமயமத சன்மார்க்கங்களில் ஷடாந்த சமரச முளதோவெனில்: உளது. யாதெனில்: வேதாந்த சித்தாந்த சமரசம், யோகாந்த கலாந்த சமரசம், போதாந்த நாதாந்த சமரசம். இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம். இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம். இதற்கு அதீதம் சுத்த சமரசம். ஆதலால், சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்க சுத்த சமரச சன்மார்க்கமாம். இது பூர்வோத்தர நியாயப்படி, கடைதலைப்பூட்டாகச் சமரச சுத்த சன்மார்க்கமென மருவியது.

இதன் தாத்பரியம் யாதெனில்:
சமரசம் என்பதற்குப் பொருள் -
எல்லா அந்தங்களினது அந்தமும் தனக்குப் பூர்வமாக்கித் தான் உத்தரத்தி னின்று மருவியது சமரசம். இதற்கு அனுபவம் குருதுரிய ஸ்தானம். சுத்த சமரச மென்பதற்கு நியாயம்: விந்து பரவிந்து இரண்டையும் மறுக்கச் சுத்தவிந்து வந்தது போலும், சிவம் பரசிவம் இரண்டையும் மறுத்தது சுத்தசிவம் போலும். சன்மார்க்கம் சிவசன்மார்க்கம் இரண்டையும் மறுத்தது சுத்த சன்மார்க்கம். பூர்வத்தில் நின்ற சமயமத சன்மார்க்கங்களை மறுப்பது சுத்த சன்மார்க்கம். இதன் பொருட்டு ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க மென்றே மருவியது. ஒருவாறு, ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று. இதன் பூர்வத்தில் சமரச சன்மார்க்கம் ஒன்று, இதன் உத்தரத்தில் சுத்த சன்மார்க்கம் ஒன்று; ஆதலால் ஷடாந்த சமரசம். ஆன்மாவுக்கு அருள் எப்படி அநந்நியமோ, அதுபோல் சுத்த சன்மார்க்கத்திற்குப் பூர்வத்தில் சொன்ன சன்மார்க்கங்கள் யாவும் அநந்நியம்.

v-9.jpg

v-9.jpg

2 Comments
Ravichandran M
"சமரசம் கண்ட வள்ளலின் சத்திய வார்த்தையை தக்க தருணத்தில் பகிர்ந்தளித்த APJ அருள் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ". இதை SSSSS - ல் உள்ள நாமனைவரும் இன்பத் திருநாளான இன்று அறிந்து கொண்டது மிக்க சிறப்பு.
Thursday, April 14, 2016 at 02:26 am by Ravichandran M
narayani julu
திரு அருட்பிரகாச வள்ளற்பெருமானே தனி உண்மை மார்க்கத்தை கண்டு மரணமில்லா பெருவாழ்வு பெற்றவரே! எங்களுக்கும் வெளிப்படுத்திய இந்த நாளில் உங்களை வணங்குகிறோம். அருள் புரிவாயாக! சமரசம் என்ற சொல்லுக்கு பெருமான் தந்த விளக்கத்தினை சாதாரணமாக என்னால் வாசிக்க முடியவில்லை. அற்புதம் பெருமானே!
Thursday, April 14, 2016 at 11:21 am by narayani julu