யாருடைய பசியைக் குறித்து யோசிப்பது அவசியமல்ல?
இதோ வள்ளலார் கீழ் வருமாறு குறிப்பிடுகிறார்கள்:.
‘”...ஆகலில் நாமனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மால் கூடியமட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்திப்பதற்கு முயற்சி செய்வதே ஆன்ம லாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.”
இதை நாம் எல்லாரும் கண்டிப்பாக செய்தல் வேண்டும். நம்மால் கூடியமட்டில் இந்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடித்து மற்ற சீவர்களுக்கு ஏற்படுகின்ற இந்த அவத்தையை (பசியை) நீக்குதல் நம் உரிமை மற்றும் அடிப்படை ஒழுக்கம் ஆகும்.
இந்த பசி என்கிற அவத்தையானது பொதுவாக எல்லா சீவர்களுக்கும் உண்டாகும். ஆனால் யாருக்கு/ யாருடைய பசியை நீக்கினால் போதுமானது என விரிவாக பார்க்கும் போது; (பக்கம்123):
1. ஏழைகள்
2. பசியினால் பாழகும் உடம்புக்கு
3. பசியினால் நிலைதடுமாறி அழியும் தருணத்தில் உள்ள குடும்பம்
4. பசியினால் மயக்கம் அடைபவர்கள்
5. பசியினால் வருந்தி, பசி நீக்க வழி தெரியாமல் தவிக்கும் மானமுள்ளவர்கள் மற்றும் விவேகிகளானவர்கள்
6. மற்ற உயிர்களுக்கு சத்துவ ஆகாரம் கொடுத்தல்
இவர்களை தவிர மற்றவர்கள் அனைவராலும் தங்களுக்கு நேரிட்ட பசியைத் தங்கள் முயற்சியினாலேயே மாற்றிக் கொள்ளத்தக்க வல்லபமுடையவர்கள் ஆதலால் அவர்கள் பசியைக் குறித்து மற்றவர்கள் யோசிப்பது அவசியமல்ல என்கிறார் வள்ளலார். மேற்படியான இவர்களுக்கு பசி நேர்ந்தால் துன்பமுண்டாகுமே என்று இரங்குவது மாத்திரம் அவசியமென்று அறிதல் வேண்டும்.
ஆக, பசியை தங்கள் முயற்சியினால் மாற்றிக் கொள்ளத் தக்கவர்களுக்கு பசியை தருமச் சாலையில் பசி நிவர்த்திக்க வேண்டிய அவசியமில்லை.
ஏழைகள் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ளவர்களுக்கே அன்னதானமிடுதலே சரியாகும்.
அங்ஙனம் மட்டும் நடைப்பெறுகின்ற தருமச்சாலைக்கு நம்மால் கூடியமட்டில் பொருள் முதலிய உதவி செய்தல் அவசியம்.இதனால் நம்மை சுத்த சன்மார்க்க நெறி அறிவதற்கான தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்கிறோம்.
இந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் நம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தில் சேர்வதற்கான தகுதியே என தெரிதல் வேண்டும்.
அடுத்து உள்ள ஒழுக்கம் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் ஆகும்.
இந்த சுத்த சன்மார்க்க ஒழுக்கமே இறை வீட்டினுள் நாம் செய்யும் தொழிலாகும்.
மேலே கண்ட ஜீவகாருண்ய ஒழுக்கம் இறை வீட்டின் திறவு கோல் என்கிறார் நம் வள்ளலார். அப்படியெனில் சுத்த சன்மார்க்க ஒழுக்கம் என்றால் என்ன? பக்கம் 410ல் வள்ளலார் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்கள்;
‘ இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்’ இதுவே நம் தொழில் எனவும் குறிப்பிடுகிறார் நம் வள்ளலார்.
ஆக, அன்பர்களே!
நம் அன்னதான தரும சாலையில் நம்மால் கூடிய மட்டில் நம் வள்ளலார் குறிப்பிட்டுள்ளவர்களின் பசியை நீக்குவோம்,
அடுத்து, நம் ஞான சபையில் நம் வள்ளலார் குறிப்பிட்டுள்ளப்படி தலைவனாகிய உண்மைக் கடவுளை மட்டும் கருத்தில் கருதி தொழுவோம்.
இவை முறையே;
உண்மையான ஜீவகாருண்யமாகும் மற்றும்
நம் உண்மைத் தொழிலாகும்
-----என்றும் அன்புடன் ஏ.பி.ஜெ.அருள்.
annathanam.jpg