Arul Jodhi Samarasa Sutha Sanmarga Sangam
உள்ளொளி- உயிரொளி- ஞானஒளி- ஓர் ஆய்வு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
**********
மனித நிலையில் ஏற்படுகிற இந்திரியச் சேட்டைகள் மற்றும் கரணச் சேட்டைகள் எல்லாம் இறையருளாகிய அருளொளியால் மட்டுமே வேதிக்கப்படவேண்டும். இறையருள் இல்லாமல் அந்தச் சேட்டைகளை வேதிக்க முடியாது. ஏனெனில் அவைகள் மாயாச்சக்திகள். இறையருள் இல்லாமல் அதனை வேதிக்க முயன்றால் ஒரு நாள் அவைகள் திரும்பவும் சேட்டைகளில் ஈடுபடும்.
********
உள்ளொளி- உயிரொளி- ஞானஒளி- ஓர் ஆய்வு
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் இங்கு உள்ளொளி-உயிரொளி-ஞானஒளி என்கிற மூன்று ஒளிநிலைகளைப் பார்ப்போம். திருவருட்பிரகாச வள்ளல்பெருமானார் அகவல் வரிகளில் மூன்று வித ஒளிகளைத் தெரிவிக்கிறார். ஒன்று உள்ளொளி, இரண்டாவது உயிரொளி, மூன்றாவது அருளொளி.

முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்தருள்
அச்சுடராம் சபை அருட்பெருஞ்ஜோதி
-அகவல்
திருவருட்பாவிலும்:
கடலமுதே செங்கரும்பே அருட்கற்பகக் கனியே
உடல் உயிரே உயிர்க்குள் உணர்வே உணர்வுள் ஒளியே
அடல்விடையார் ஒற்றியார் இடங்கொண்ட அருமருந்தே
மடலவிழ் ஞான மலரே வடிவுடை மாணிக்கமே.
ஒளியாகி உள் ஒளியாய் உள் ஒளிக்கும் ஒளியாய்
ஒளி ஒளியின் ஒளியாய் அவ் ஒளிக்குளும் ஒர் ஒளியாய்…..
என்றும்,

உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல்
உற்றகரு வாகிமுதலாய்
உயிராய் உயிர்க்குள்உறும் உயிராகி உணர்வாகி
உணர்வுள்உணர் வாகிஉணர்வுள்
பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம்
பரமாய்ச் சிதம்பரமுமாய்ப்
பண்புறுசி தம்பரப் பொற்சபையு மாய்அதன்
பாங்கோங்கு சிற்சபையுமாய்த்
தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற
சிவமாய் விளங்குபொருளே…

எனவே, முதலில் சாதகன் ஒருவன் உள்ளொளியைப் பெருக்கி, உயிரொளியைத் தரிசித்து, பிறகு அருளொளியை அடைய வேண்டும் என்பது வள்ளல் பெருமானின் அனுபவநிலையாகும்.

அருளொளியைத் தரிசித்தால் ஓதாது உணரலாம்.

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி
இதில் இரண்டு விதப் பொருள்கள் உள்ளன, ஒன்று வள்ளல் பெருமானார் ஓதாமல் (கற்பிக்கப் படாமல்) புலமைப் பெற்றார். இரண்டாவது, ஓதாது என்பது தவத்தால் உள்நோக்கி சும்மா இருக்கும் பொழுது அருட்பெருஞ்ஜோதியைக் கண்டு அருளால் அனைத்தையும் அறிந்துக்கொள்வது.(omniscient) எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் திருசிற்றம்பலம் என்கிற புருவமத்தியின் வாயிலாக உள்நோக்கிப் பயணிக்கும் பொழுது இந்திரியங்கள், கரணங்கள் எல்லாம் இவற்றின் தொழில்களை விட்டுவிடும். அதாவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் இவைகள் வேதிக்கப்படும்.
தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே
இவ்வாறு இறையருளால் இந்திரியச் சேட்டைகள், கரணச் ( மனம் சம்பந்தமான) சேட்டைகள் வேதிக்கப் பெற்றால் அவைகளால் என்றுமே பிரச்சனை வராது.
அருளொளி விளங்கிட ஆணவம் எனும் ஓர்
இருளற என்னுளத்து ஏற்றிய விளக்கே
ஆகவே முதலில் சாதகன் ஒருவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் புருவமத்தியில் மனதைச் செலுத்தி உள்ளொளியைப் பெருக்கி, உயிரொளியைக் காண வேண்டும்.

இயல் அருள் ஒளி ஓர் ஏகதே சத்தினாம்
உயிரொளி காண்க என்றுரைத்த மெய்ச்சிவமே
உயிரொளிப் பிரயாணத்தில் மனித நிலையில் ஏற்படுகிற சேட்டைகள் எல்லாம் இறையருளால் வேதித்தால் மட்டுமே மனித நிலையில் ஏற்படுகிற சேட்டைகள் எல்லாம் நீங்கும், இல்லையெனில் ஒரு நாள் அவைகள் திரும்பவும் சேட்டைகளில் ஈடுபடும் வாய்ப்புள்ளது, அருள் ஒளியால் வேதித்தால் அவைகள் என்றுமே சேட்டைகளில் ஈடுபட வாய்ப்பே இல்லை.

இவ்வாறு அனைத்து விதச் சேட்டைகளும் இறையருளால் வேதிக்கப்பெற்றால் அருளொளி அனுபவம் கிட்டும்.

தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர்
அனுபவம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே
வெள்ளொளியாகிய அருளொளியைத் தரிசனம் செய்தால், உடலில் அமுதம் ஊற்றெடுக்கும். சிவஜோதியாகவே உடல் பரிமாற்றம் அடையும். இதனை:

ஜோதி ஜோதி ஜோதி சுயம்
ஜோதி ஜோதி ஜோதி பரம்
ஜோதி ஜோதி ஜோதி அருள்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்
எனலாம். ஆகவே ஸ்தூல உடம்பை ஞானதேகமாக மாற்ற வேண்டும் என்றால் அது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையால் மட்டுமே முடியும். இதற்கு அவருடைய அருள் நம் மேல் கருணை மழையாகப் பொழிய வேண்டும். எனவே நாம் ஒவ்வொருவரும் தயவு- கருணை வாழ்வில் இல்லாமல் கருணாமூர்த்தியின் கருணையை - மரணமில்லாப் பெருவாழ்வை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்.
மேலும், ‘சாகா வரமும் உவந்தளித்தாய்’ என்று வள்ளல் பெருமானார் கூறுவது ஈண்டு ஒப்புநோக்குதற்குரியது. எந்த ஒரு தவமும், தியானமும் சத்தியத்தின் சாயலுக்கு நம் வாழ்க்கையை மாற்ற வேண்டும். காலையில் இரண்டும் மணி நேரம் தவம் செய்கிறேன், அல்லது தியானம் செய்கிறேன் என்று சொல்பவர்கள், அதே தினத்தில் சத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் சொல்லும் கூற்று, “தியானம், தவம் வேறு”, உலகியியல் வாழ்க்கை வேறு. ஆனால் வள்ளல் பெருமானார் கூற்றோ, அருளியியல் வாழ்வு உலகியியல் வாழ்வில் கலந்தே இருக்க வேண்டும். ”அருளியியல் வாழ்வு உலகியியல் வாழ்வை மாற்ற முடியவில்லை யென்றால் நாம் வாழும் அருளியியல் வாழ்வில் அர்த்தமில்லை. நம்முடைய தவ வாழ்க்கையும் பயனளிக்கவில்லை என்பதே உண்மை”.
எனவே எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சாகாவரமாகிய மரணமில்லாப் பெருவாழ்வை உவந்தளிக்க வேண்டுமென்றால், அருள்நெறியாகிய சுத்த சன்மார்க்க சுக வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்பதே வள்ளல் பெருமானார் நமக்கு காட்டிய ஞானநெறி.
ஞானநெறி மேலும் தொடரும்..,
தகவல் உதவி:

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை