ஜோதிமந்தனின் சொல்லோவியம்-6
சன்மார்க்கம் என்பது கருணையை கருவாகக் கொண்ட அன்பர்களால் சத்விசாரத்தால் சாதகப்படுத்தப் பட வேண்டிய சாகாகலையை கற்பிக்கும் சாத்தியமுள்ள ஒரு சாத்வீக வாழ்க்கை இயல்பாகும்.
சத்விசாரம் என்பது புலமையால் நிலை நிறுத்தப்பட வேண்டுமா அல்லது அனுபவத்தால் வெளிப்படுத்தப்படவேண்டுமா என்பது அனைவரின் உள்ளத்திலும் உள்ள சஞ்சலமாகும்.
நமது ஞானகுரு கருணைமிகு திருவருட்பிரகாச வள்ளலார் எனும் சிதம்பரம் இராமலிங்கம் ஐயா அவர்கள் அன்றைய தினத்தில் என்ன சொன்னார் என்பதை ஆய்வுக்கு சத்விசாரமாக கொள்வது புலமையின் வெளிப்பாடு.
ஐயா அவர்கள் தற்போது ஞானதேகத்திலிருந்து தமது அன்பர்களுக்கு என்ன சொல்கிறார் என்பதும், அன்று சொல்லாமல் எழுதாமறையாக விட்டுச் சென்றார் என்பதும் சத்விசாரமாகக் கொள்வது அனுபவத்தின் நிலைப்பாடு.
புலமை என்பது ஒரு செடியில் உள்ள இலைகள்,கிளைகள் போன்றது. அனுபவம் என்பது அந்த செடிக்கு அளிக்கப்படும் உரம் போன்றது. வள்ளல் பெருமான் அவர்கள் தமது அருள்சக்தியால் சன்மார்க்கம் எனும் செடியை நட்டு அதை மாபெரும் கிளை,இலைகளுடன் கூடிய மரமாக வளர்த்து விட்டார். அதற்கு உரமாக ஆங்காங்கே அன்பர்களுக்கு அனுபவங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். தமது ஸ்தூலதேக வாழ்க்கையில் பக்தியில் அதியுச்சமாக இருந்து ஞான வாழ்க்கையில் அதியுச்சமாக மாறிய அனுபவத்தை தமது திருமுறை பாடல்களில் வெளிப்படுத்தினார். அந்தவகையில் திருவருட்பா பாடல்களே அவரது அருளனுபவ வெளிப்பாடுகளின் சாட்சியமாக அமைந்துள்ளன.
ஒரு ஆய்வு என்று எடுத்துக் கொண்டால் ஆய்வின் வெற்றிக்கு முன்னால் பலவகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆய்வாளர் வெற்றி பெறுகிறார். பெற்ற வெற்றியால் கிடைத்துவிட்ட கண்டுபிடிப்பை ஆதாரமாகக் கொண்டு அடுத்தக் கட்ட ஆய்வை மேற்கொள்கிறார். அவர்பின் வருபவர்களும் அந்த வெற்றிகரமான கண்டுபிடிப்பை ஆதாரமாகக் கொண்டு மேலும் ஆய்வு செய்து அந்த துறையில் மேலும் பல வெற்றிகளை சாதிக்கின்றனர்.
உதாரணமாக தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் சுமார் 1200 புதிய பொருட்களை கண்டுபிடித்தார். அவற்றில் ஒன்றுதான் மின்விளக்கு. மின்விளக்கு கண்டுபிடிக்கும் ஆய்வில் சாதாரண நூலிழை உட்பட சுமார் ஐநூறு வகையான பொருட்களை மின்விளக்கு இழையாக பயன் படுத்தி கடைசியில்தான் டங்ஸ்டன் எனும் உலோகம் மின்னிழைக்கு உகந்தது என்ற வெற்றிகரமான கண்டுபிடிப்பை நிறுவினார். அதற்குப்பின் பல்வேறுவகையான மின்விளக்குகள் கண்டுபிடிக்கப் பட்டு நாம் அவற்றை உபயோகித்து வருகிறோம். அவருக்கு பின்னால் வந்தவர்கள் டங்ஸ்டன் உலோகத்தை பயன்படுத்தலாம் என்பதை புரிந்துகொண்டு மேற்கொண்டு ஆய்வுகளை தொடர்ந்தார்கள். எந்த ஒரு விஞ்ஞானியும் அவரது ஆய்வின் விவரங்களை படித்துவிட்டு, டங்ஸ்டன் கண்டுபிடிப்பதற்கு முன் பயன் படுத்தப் பட்ட நூலிழை போன்ற ஐநூறுவகையான பொருட்களை பயன் படுத்தி பார்த்து காலவிரையம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதைப் பற்றி வாத,பிரதிவாதம் செய்யவில்லை.
மேலும் ஒரு மொழிக்கு வளமை சேர்க்க இலக்கியங்கள் உருவாகும் பல்வேறு வகையான இலக்கியங்கள் உருவான பின்னர் அவற்றை முறைப்படுத்தவும், அந்த இலக்கியங்களில் உள்ள யதார்த்தமான தவறுகளும் அனுபவங்களும் இனிவரும் இலக்கியங்களில் வராமல் பார்த்துக்கொள்ளும் பொருட்டும் அந்த மொழிக்கான இலக்கணங்கள் உருவாக்கப்படும். மொழிக்கு இலக்கணம் உருவாக்கப்பட்டபின் பிறகு உருவாகும் இலக்கியங்கள் அனைத்தும் அந்த இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்படும். இலக்கணம் ஏற்பட்டபின் இலக்கணத்திற்கு முற்பட்ட இலக்கியங்களை வழிகாட்டியாக மொழிக்கு 'ஏற்றுக்கொள்வதில்லை. அதற்காக அந்த இலக்கியங்களை அழித்து விடுவதுமில்லை அதற்குரிய மரியாதை மட்டும் வழங்கப்படும். அதே சமயம் ஆய்வுக்காக அந்த இலக்கியங்களை படிப்பதை தடை செய்வது மில்லை அந்த இலக்கியங்களில் இருந்தே இலக்கண ஆதாரங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் தாக்கம் மாறு பட்டிருக்கும். அதை நெறிப்படுத்தவே இலக்கணம் உருவாக்கப்பட்டிருக்கும்.
இந்த வகையான தன்மையை அடியொற்றி பார்க்கையில் வள்ளல்பெருமானின் ஞான வாழ்க்கை அனுபவத்தில் பேருபதேசம் என்பது சன்மார்க்க இலக்கணம் அவரது கண்டுபிடிப்பின் வெளிப்பாடு. பக்தியை வெளிப்படுத்தும் கர்த்தாக்களை அடிப்படையாக கொண்ட திருவருட்பா பாடல்கள் அனைத்தும் இலக்கணம் உருவாக காரணமாக இருந்த பல வகையான இலக்கியங்களை போன்ற இலக்கணத்திற்கு முற்பட்ட இலக்கியங்கள். ஞானத்தை வெளிப்படுத்தும் உருவமற்ற ஒளி வடிவ இறைவனை நோக்கி பாடும் பாடல்கள் பேருபதேசம் எனும் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய வகையை சார்ந்தவை.
ஞானதேக அடைவு எனும் முத்தேக சித்தியானது மின்விளக்கு என்றால் அருட்பெருஞ்ஜோதி எனும் ஏக இறைவன் தத்துவம் டங்ஸ்டன் போன்றது. நமது நோக்கம் மின்விளக்கு போன்ற ஞானதேக சித்தி எனும்போது டங்ஸ்டன் மின்னிழை போன்ற ஏக இறைவன் தத்துவத்திலிருந்து அனைத்தையும் தொடருவதே முறையான அணுகுமுறையாகவும் இருப்பதுடன் ஆய்வுக்கும் பரிணாம வளர்ச்சியை வழங்கும்.
யாம் ஏற்கனவே மொழிக்கு கூறிய வார்த்தைகள் இங்கும் பொருந்தும். திருவருட்பா பாடல்களில் உள்ள பக்தியை அடிப்படியாக கொண்ட பாடல்கள் அனைத்தும் நமது மரியாதைக்குரியன. ஞானத்தை அடிப்படையாக கொண்ட பாடல்கள் அனைத்தும் நமக்கு வழிகாட்டியாக இருந்து ஞான அனுபவத்தை பெற்று தரக் கூடிய பொக்கிஷங்கள். அவைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது பேருபதேசமும் அருட்பெருஞ்ஜோதி அகவலும் என்றால் மிகையில்லை.
மேலும் யாம் ஏற்கனவே வள்ளல்பெருமான் அருட்கட்டளை ஏற்று "சத்யயுகமும் சன்மார்க்கமும்" என்று பெயரில் புத்தகம் இரண்டுபதிப்புகள் வெளியிட்டோம். அதிலுள்ள கருத்துகளையே இணையதளத்தில் "மெய்ஞானத்தை அடையும் வழி" என்ற பெயரில் தொடர் கட்டுரையாக வெளியிட்டோம். இதுவரை வெளியான கருத்துக்கள் அனைத்தும் சாதக நிலையெனும் பயிற்சிநிலை கருத்துகளாக இருந்ததுடன் புறத்தாய்வு நிலையையே சுட்டுகின்ற தன்மையிருந்தது.
மேலும் வள்ளல்பெருமான் திருமுறைகளில் வெளியிட்ட கருத்துக்களுடன் காலத்தால் பெருமான் வெளிப்படுத்திய எழுதாமறை கருத்துகளும் இணைத்து கட்டுரை உருவாக்கப்பட்டிருந்தது. திருமுறைகளை படித்து விட்டு கட்டுரையை படித்தாலும் கட்டுரையை படித்துவிட்டு திருமுறைகளை படித்தாலும் அவரவர் அனுபவமும் விஞ்ஞான விளக்கமும் சேரும் போது அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய தன்மை கட்டுரைகளுக்கு இருந்தது. மேலும் சில கருத்துக்கள் எந்த சான்றும் சுட்டுதற்கு உரியதாய் இல்லாமல் எமது சன்மார்க்க இயல்பு மீது சன்மார்க்க அன்பர்கள் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிருந்தது.
யாம் மெய்ஞானத்தை அடையும் வழி என்ற தொடரை இன்னும் ஒரு பகுதியுடன் முடித்து விடலாம் என்று மனித நிலையில் நினைத்து பெருமானாருடன் சத்விசாரம் செய்கையில், மேலும் சில கருத்துக்களை வெளிப்படுத்தி அந்தக் கருத்துக்ளை 'மெய்ஞானத்தை அடையும் வழி' என்ற தலைப்பிலேயே வெளியிட அருட்கட்டளையிட்டதால் யாம் மேலும் தொடர இருக்கிறோம்.
இனிவரும் தொடர் பகுதியில் ஒவ்வொரு தனி மனிதனும் உள்நோக்கும் தன்மையுடையதாய் இருக்கும் என்பதாலும் அனுபவ ரீதீயில் செயல்பட்டாலன்றி புரிந்து கொள்ள கடினப்படும் என்பதாலும் புலமையின் அடிப்படையால் அணுகுவதற்கு இய்லாத தனமையுடன் புலமையை மனதிலிருந்து ஒதுக்கும் தன்மையுடையதாகவும் இருக்கும் என்பதாலும், அந்த கட்டுரைகளின் தன்மையை ஏற்கும் மனநிலைக்கு அவரவரை கண்ணோட்டம் கொள்ளும் தன்மையை வேண்டி இங்கு திருமுறைகளையும் பேருபதேசத்தையும் அணுகும் தன்மை உதாரணத்துடன் விளக்கப்பட்டது. மனித நிலையில் இங்கு ஒரு அனுபவ சான்று வெளியிட எண்ணியிருந்தோம் அது கட்டுரையுடன் தன்மையை மாற்றக்கூடும் என்பதாலும் இந்தக் கட்டுரை தனிதன்மையதாய் விளங்கவும் எண்ணியும் வெளியிடுவது தவிர்க்கப்பட்டது.