Maha Mandhirapeedam
மெய்ஞானத்தை அடையும் வழி-பகுதி-36


மெய்ஞானத்தை அடையும் வழி-36


சன்மார்க்க இரசாயனம்


வள்ளல் பெருமான் அவர்களின் வாழ்வியல் அனுபவங்களை சன்மார்க்க நெறிமுறைகளாக ஏற்றுக்கொண்டு உலகெங்கும் கடைப்பிடித்துவரும் உண்மை மெய்யன்பர்கள் பல நாடுகளில் பல்கி பெருகி வருகிறார்கள். நாமும் முடிந்தவரை சன்மார்க்க நெறிமுறைகளை வாழ்வில் கடைப்பிடித்து மற்றவர்களையும் கடைப்பிடிக்க ஊக்கப்படுத்தி வருகிறோம். எம்மால் முடிந்தவரை வள்ளல்பெருமானின் அருள் கட்டளைகளை வாழ்வியல் அனுபவமாகவும், ஆதாரமாகவும் கொண்டு இந்த கட்டுரை தொடரை தொடர்ந்து எழுதி வருகிறோம்.

இந்த நிலையில் முடிந்தவரை எளிமையாக தேவையான விஷயங்களை மட்டும் சுட்டிக்காட்டி இதுகாறும் எழுதிவந்த கட்டுரையில் புறநிலையில் புரிந்துகொள்ளக்கூடிய விஷயங்களையே வெளிப்படுத்தி வந்துள்ளோம். இனிவரும் கட்டுரை கருத்துக்கள் அகநிலை அனுபவத்தையும் உள்ளடக்கிய தன்மையுடையது என்பதால் சிறிது கடினநிலையாகவும் தோன்றக்கூடும். எனவே அவற்றில் கருத்துக்களை மேலோட்டமாக கூறி எளிமை படுத்த முயற்சிக்கிறோம்.அதை உள்வாங்கி புரிந்து செயல்படுவது அவரவர் அனுபவத்தை பொறுத்தது எனக் கொள்க.

ஒரு கருத்தை எடுத்துக் கொண்டால் பல்வேறு துறைகள் மூலம் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்யலாம். அந்த வகையில் ஒரு ஜீவாத்மாவின் தன்மையையும் அதன் பயண நிலைகளையும் ஏற்கனவே பொதுவான நிலையில் சன்மார்க்க கோணத்தில் ஆய்வு செய்து "ஜீவாத்மாக்களின் ஜீவித உரிமை" என்ற தலைப்பில் இந்த கட்டுரை தொடரில் எழுதினோம். தற்போது ஜீவாத்மாவின் மனித தேகபயணத்தில் அது கடக்க வேண்டிய நிலைகளை இரசாயனம் எனும் வேதியல் துறையை அடிப்படையாகக் கொண்டு அணுகி ஆய்வு செய்வோம். இதை சத்விசாரமாக நினைத்து ஆய்வு கருத்துகளை அணுகவும்.

ஒரு ஜீவாத்மாவானது தமது பயணத்தில் 91வது படிநிலையான மனித பிறவி எடுத்தபின் இறைவனிடம் தற்சுதந்திரம் பெறுகிறது. அதுசமயம் அந்த ஆன்மாவானது முதலில் ஸ்தூல தேகம் பிறகு சூக்கும தேகம் அதன்பின் காரண தேகம் என்ற மூன்று உடல்களை வரிசைகிரமமாக அடைகிறது.

அந்த ஆன்மாவின் பிறப்பு அதற்கு ஸ்தூல தேகத்தை தமது பெற்றோர் மூலம் கிடைக்கப் பெறுகின்றது.அடுத்ததாக சூக்கும தேகம் அமைவது பெரும்பாலான மனிதர்களுக்கு இறப்புக்கு பின்னரே நடைபெறுகிறது. இறப்புக்குப் பின் சூக்கும தேகம் பெற்ற ஆன்மா காரண தேகம் பெற வாய்ப்பில்லாமலேயே சென்று மீண்டும் பிறவிநிலைக்கு ஆட்படுகிறது.

அருளாளர்களும் ஞானிகளும் யோகிகளும் இறப்புக்கு முன்னரே சூக்கும தேகத்தை அடைய செய்யும் முயற்சியே தவமாகவும் அருளியல் வாழ்க்கையாகவும் துறவறமாகவும் அமைகிறது.

ஸ்தூல தேகத்தில் இருந்தபடியே சூக்கும தேகம் பெற்ற அருளாளர்கள் தமது நெருங்கிய அன்பர்களுக்கும் இறைவனிடம் மெய்யன்பு கொண்ட மற்ற அருளாளர்களுக்கும் வாழ்வியல் குழப்பங்களும் சந்தேகங்களும் மாயைகளும் உருவாகும் சூழலில் அவர்கள் கனவில் வெளிப்பட்டு ஆறுதலளிக்கக்கூடும். சூக்குமதேகமும் பெற்று காரணதேகமும் பெற்ற அருளாளர்கள் கனவில் தோன்றி ஆறுதலளிப்பதுடன் அவர்கள் பிரச்சினைக்கு தீர்வையும் ஏற்படுத்தக் கூடும்.

சூக்குமதேகம் என்பது ஸ்தூல உடலின் பருமனிலேயே இருக்கும் தன்மையுடையது. காரண தேகம் பல்கி பெருகி மற்றவர்க்கு மிகப்பெரிய தோற்றத்தை வெளிப்படுத்தக்கூடியது. அதையே புராணங்கள் விஸ்வரூப தரிசனம் என்று உருவகப்படுத்துகின்றன. மேலும் காரண தேகம் பெற்ற தன்மையானது பிறரின் தியானத்திலும் ஒரு நொடிப்பொழுது நனவில் நேரிலும் வெளிப்படக்கூடும்.

ஸ்தூல உடலானது காலத்துக்கு உட்பட்டு இரசாயன மாற்றங்களால் மரணத்தை தழுவும்போது ஆன்மாவுக்கு வாகனமாக நிரந்தர தன்மையாக சூக்கும,காரண உடல்கள் செயல்படுகின்றன. இந்த செயல்பாடுகள் வழிவழியாக முற்கால ஞானிகள்,அருளாளர்கள்,யோகிகளால் அனுபவபூர்வமாக உணர்ந்த விஷயங்கள்.

இங்குதான் நமது ஞானகுரு கருணைமிகு வள்ளல் பெருமான் அவர்கள் தமது கருணை அடிப்படையிலான சாதனையை உருவாக்குகிறார். ஸ்தூல உடலானது காலத்துக்கு உட்பட்டு இரசாயன மாற்றங்களால் அழியாத தன்மை ஏற்பட என்ன செய்ய வேண்டும் என்பதை இறைவனிடம் சத்விசாரம் செய்து உண்மையை உணர்ந்து நமக்கும் வழங்கியுள்ளார்.

நமது ஸ்தூல உடலானது பல்வேறுவகையான தத்துவங்களின்,தனிமங்களின் கூட்டுக் கலவையாக உள்ளது. நமது உடலின் அழிவுக்கும் மரணத்திற்கும் அதிகப்படியான காரணமாயிருப்பது உடலில் ஏற்படும் விஷமும் கழிவுகளூம் ஆகும்.

ஸ்தூல உடலானது தமக்கு தேவையான ஜீவசக்திகள் அனைத்தையும் சுற்று சூழலில் கிரகித்துக்கொள்கிறது. தாமாகவும் தமது உறுப்புகளிலிருந்து உற்பத்தி செய்துக்கொள்கிறது.

இந்த சூழலில் உடலில் உற்பத்தியாகும் கழிவு கார்பன் எனும் மூலக்கூறை பிராணவாயு எனும் ஆக்ஸிஜன் என்ற வாயுவை துணையாகக் கொண்டு வினைபுரிந்து அணுக்கத்தன்மை ஏற்படுத்தி வெளியேற்றுகிறது.

ஆக்ஸிஜன் தாமாக உடலில் உற்பத்தியாவதில்லை சுற்று சூழலில் இருந்து நுரையீரலால் கிரகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் மனிதன் தனது இயற்கை நியதிக்கு மாறாக உண்ணும் புலால் உணவும் அவனது துர்க்குணங்களும் வினை புரிந்து உடலில் அதிகமான கார்பனை உற்பத்தி செய்கின்றன. அதனால் பிராணவாயுவின் பயன் பெரும்பாலும் கார்பனை வினைபுரிந்து வெளித்தள்ளுவதிலேயே செலவாகிறது.

மனிதன் தமது ஸ்தூல தேக வாழ்க்கையை நீட்டிக்க முடிந்தவரை கார்பன் கழிவு உற்பத்தியை குறைக்கும் பொருட்டு புலால் உணவை விடுத்து துர்க்குணங்களை குறைத்து சாத்வீக எண்ணங்களை மனதில் நிறுத்த வேண்டும்.

அடுத்ததாக சாதாரண மனிதனாக இருப்பவன் உயர்நிலையடைய வேண்டும் எனும்போது அவன் தமது உடலில் யோகத்தீயையோ அல்லது ஞானத்தீயையோ மூட்டவேண்டும். அதற்கு ஆக்ஸிஜன் தேவைப்படும். கார்பன் வெளியேற்ற தேவையான அளவு ஆக்ஸிஜன் செலவழித்து மேலும் அதிகப்படியாக ஆக்ஸிஜன் கிரகிக்கப்பட்டிருந்தால்தான் இது சாத்தியமாகும்.

மேலும் மனிதனுக்கு யோகத்தீயையும் ஞானத்தீயையும் மூட்டுவதற்கு நீர்மவாயுவான ஹைட்டிரஜனும் பிராணவாயுவான ஆக்ஸிஜனும் சம அளவில் சேர்ந்து வினைபுரிய வேண்டும்.

மனிதனுக்கு ஆக்ஸிஜன் சுற்று சூழலில் கிடைப்பது போல் ஹைட்டிரஜன் கிடைக்காது. ஹைட்டிரஜனை ஸ்தூல உடல்தான் உற்பத்தி செய்துக் கொள்ள வேண்டும்.

ஹைட்டிரஜன் உற்பத்தியாக மூலப்பொருளாக உடல் சுக்கிலத்தை பயன் படுத்துகிறது. சுக்கிலத்தில் அணுக்கத்தன்மை ஏற்படுத்தி ஹைட்டிரஜனாக மாற்றப்படுகிறது.

மேல்நிலை சுக்கிலம் அணுக்கத்தன்மை பெற்று ஹைட்டிரஜனாக மாறி ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து சஹஸ்ராகாரத்தில் ஞானத்தீயை மூட்டுகிறது.

கீழ்நிலை சுக்கிலம் கடின முயற்சி செய்து ஹைட்டிரஜனாக மாறி ஆக்நா சக்கரத்தில் யோகத்தீயை உருவாக்க முயற்சிக்கிறது.

மேல்நிலை சுக்கிலம் வினைபுரிய தயவு, கருணை ஆன்மநேயம் ஆகிய பண்புகள் இருந்தால் போதுமானது.

கீழ்நிலை சுக்கிலம் வினைபுரிய கடின முயற்சி தேவைப்படுகிறது என்பதுடன் கீழ்நிலை சுக்கிலமானது குறைந்தது ஒன்பது மாதங்கள் பரிபூரண சேமிப்பாக இருந்து அடர்த்தியுடையதாய் இருக்க வேண்டும். இயற்கை நியதிப்படி உடல் அதை அவ்வப்போது துர்க்குண செயல்பாடுகளால் வெளியேற்றும் தன்மையுடையதாய் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் சுக்கிலம் காமத்தால் வெளியேறும் என எண்ணுகிறார்கள் கோபத்தாலும் வெளியேறக்கூடியது. என அறிக கோபத்தால் நீர்த்து வெளியேறுவது சிறுநீர் மூலமாக என்பதால் சாதரணமாக உணரமுடியாது என அறிக. எந்த துர்க்குணமும் கீழ்நிலை சுக்கிலத்தை வெளியேற்றும் தன்மையுடையது என அறிக.கீழ் நிலை சுக்கிலம் செய்யும் வேலையை பெண்களாக இருப்பின் சுரொணிதம் செய்கிறது.

மேலும் இவ்வளவு சிரமங்களையும் கடந்து தன்முயற்சியால் சுக்கிலம் அணுக்கத்தன்மை பெற்று ஆக்ஞா சக்கரத்தையடைந்து ஆக்சிஜனுடன் வினைபுரிந்து யோகத்தீயை உருவாக்க முற்படும்போது புலால் உணவாலும், துர்க்குணங்களாலும் உற்பத்தியான மிகுதியான கார்பன் அதை இடைமறித்து வினை புரிந்து மீத்தேன் வாயு எனும் விஷத்தை உற்பத்தி செய்து உடல்முழுதும் பரவவிடுகின்றது. அதனால் யோகத்தீ உருவாக்கும் முயற்சியில் கோபத்தீயும், மோகத்தீயும் உருவாகி யோகத்தீயை வீஞ்சி நிற்கிறது.எனவேதான் யோகிகளுக்கு அதீத கோபம் உற்பத்தியாகின்றது. மேலும் துர்க்குணங்களும் இணைந்து அசுர சக்திகளாக மாறிப்போகின்றனர்.அதையும் கடந்து ஞானிகளாக மாறும் யோகிகளும் இருக்கின்றார்கள்.


கருணை,தயவு ஆகிய ஆன்மநேய நற்குணங்களுடன் கூடிய மனிதனின் மேல்நிலை சுக்கிலமானது அணுக்கத்தன்மை பெற்று ஹைடிரஜனாக மாறி ஆக்சிஜனுடன் கலந்து வினைபுரிந்து ஞானத்தீயாக மாறி ஆன்மாவை சூழ்ந்து நிற்கிறது. மேலும் சன்மார்க்க ஞானியானவர் பிரபஞ்சத்திலிருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருள்சக்தியை பெற்று சஹஸ்ரஹாரத்தில் கிரகிப்பதால் அருள்சக்தி மின்சக்தியாக மாறி ஹைடிரஜன் ஆக்சிஜன் இவைகளுடன் சேர்ந்து வினைபுரிந்து அருளமுதமாக நீர்ம உருவம் பெற்று சன்மார்க்கிகளுக்கு பஞ்ச அமுத ஸ்தானங்களில் சேகரிக்கப்படுகிறது.


எனவே சன்மார்க்க அன்பர்கள் கார்பன் கழிவு உற்பத்தியை குறைத்து, ஆக்சிஜனை போதுமான அளவு கிரகித்து, அருளமுதத்தின் கிரகிப்பை அதிகப்படுத்தி,விஷம் உற்பத்தியாவதை தடுத்து உடலை பாதுகாத்தால் சுத்த தேகம் பெறலாம்.


மேலும் சன்மார்க்க அன்பர்கள் மற்ற அன்பர்கள் மூலமாக வெளிப்படும் கருத்துக்களை சத்விசாரமாகவே அணுக வேண்டும். வாத பிரதிவாதமாகவோ,தர்க்க குதர்க்கவாதமாகவோ,விதண்டாவாதமாகவோ எதிர்கொள்ளும்பட்சத்தில் அதுமற்றவர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பைவிட அவரவர்க்கு ஏற்படுத்தும் பாதிப்பே அதிகம். சாதாரணமாக உடலில் உற்பத்தியாகும் விஷத்தை வெளியேற்றுவதற்கே மிகுந்த சிரமப்பட வேண்டும். இது போன்ற தாமாக வரவழைத்துக் கொள்ளும் விஷமானது அதிகமாகி வெளியேற்றமுடியாத அளவுக்கு கடினத்தன்மையை நிலைநிறுத்திவிடும் என அறிக.


உடலிலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி அருளமுதத்தை உடல்முழுதும் பரவவிட இந்த கட்டுரைத்தொடரில் உள்ள 31வது பகுதியிலுள்ள "ஞானத்தில் யோகம்" எனும் சாதக நிலையை கைகொள்க.


வள்ளல் பெருமானை பொருத்தவரை ஸ்தூல,சூக்கும,காரண தேகங்களையும் சுத்த,பிரணவ,ஞானதேகங்களையும் ஒருங்கே அமையப் பெற்றவர் என்பதுடன், அவருடைய செயல்பாடுகள் காரண,காரிய,இடம்,காலம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என்பதால் அவர் அவ்வப்போது அன்பர்கள் மூலம் வெளிப்படுத்தும் கருத்துக்களை கிரகித்து, அவர் கருத்துக்கு புறம்பான விஷயங்கள் இருக்கும்பட்சத்தில் அதை காணாத தன்மையாக விட்டுவிடுவதே சாலச்சிறந்தது.

சத்திசத்தர்களும் சூக்கும உலக தேவதைகளும் மனித நிலை செயல்பாட்டுக்காக சன்மார்க்க அன்பர்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். வள்ளல்பெருமானின் அருளரசாட்சியில் உலகை வழிநடத்தும் பொறுப்பு சன்மார்க்க அன்பர்களுக்கு உள்ளது. அதை முறையாக செயல்படுத்த வேண்டியது சன்மார்க்க அன்பர்களின் கடமை.






ஜோதிமைந்தன் சோ.பழநி
மகாமந்திரபீடம்,திரியம்பல விண்ணகர திருமாளிகை
14,எஸ்.ஆர்.பி. நகர்,காரை,இராணிப்பேட்டை,
வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு
பின் கோடு :632 404
ஈமெயில்: mahamandhirapeedam@yahoo.com
mahamandhirapeedam@gmail.com
jyothimaindhan@gmail.com
செல்:9942062598,

04172-275071.

KUMARESAN KRISHNAMURTHY
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஐயா,
ஞானத்தன்மையில் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் பங்கு என்று ஒரு அறிவியியலையும் புகுத்தி வள்ளல் பெருமானார் அடைந்த மரணமில்லா பெருவாழ்வை விளக்கியது அருமை.
வள்ளல் பெருமானாரின் அருளாசியால் ஒவ்வொரு கட்டுரையின் வெளிப்பாடும் மிக நன்றாக வருகிறது.
நன்றி
Monday, June 14, 2010 at 08:32 am by KUMARESAN KRISHNAMURTHY