தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா
குறிப்புரை விளக்கம்
சிறப்பொழுக்கம்
பதினோராம் அதிகாரம்
(பஞ்சேந்திரியங்களில்)
4. மூக்கு இந்திரிய ஒழுக்கம்.
1.
|
அகத்திலங் கீச னருளுயிர்நம் வாசி
முகத்துறக் காட்டிடும் மூக்கு.
|
101.
|
கு.வி – உடலினுள் இருக்கும் ஆன்மாவினின்று கடவுள் அருட்சக்தி தோன்றி உயிராய் விளங்கி, மூச்சுக் காற்றாகி இயங்குகின்றது.
இவ்வியக்கம் மூக்குத் துளை வழி நன்கு கண்டு கொள்ளப்படுகின்றது. தயா ஒழுக்க வாழ்க்கை மேற்கொண்டோர், மூக்கின் உயிர்ப்பியக்கத்தை நன்குணர்ந்து, சீவ விளக்கமும், தெய்வ அருள் விளக்கமும் கண்டு இன்ப ஒழுக்கத்தில் ஓங்குவார்கள். மற்றபடி சுகந்த மோப்ப புலன் இன்பானுபவத்திற்கோ, வாசி யோக சித்திக்கோ விருப்பம் கொள்ளார்கள்.
வாசி என்னும் சொல்லில், சிகரம் கடவுட் ஜோதியையும், வகரம் கடவுட் சக்தியாகிய திருவடியையும் குறிக்கும்.
ஆதலின், அகத்திருந்து வெளிப்படுவது சிவாகார கடவுள் தத்துவம். புறத்திருந்து உட்புகுகின்றது வாசி என்னும் சுவாச சீவ சக்தியாம்.
2.
|
கந்தமிக வேற்றுக் கருத்தழியா வண்ணமுடற்
பந்தமறு சுத்தநெறி பற்று.
|
102.
|
கு.வி –மூக்குக்குள்ள மோப்பமறியும் ஆற்றலைக் கொண்டு, சத்துவ குணம் பெருகும் வண்ணம் நற்பொருளை (திட, திரவ, வாயு, கலப்புப் பதார்த்தங்களள) நன்கு ஆய்ந்து அளவோடு ஏற்று உயிர் வாழ்ந்து, உயிர் உணர்வில் கடவுட் கருத்து வெளிப்பட்டு, பந்தமற்ற முத்தி நிலைக்கேற வேண்டும்.
சுகந்தம் மிக விரும்பி புலனின்பத்தில் அழுந்தினால், சுத்த மனம் பெற்று, மேனிலைக்கு ஏறுவதும், பேரின்பமுறுவதும் கூடாவாம்.
3.
|
வாசி வழிபயின்று மன்மனத் தேநின்று
ஓசி வயநமதி லொன்று.
|
103.
|
கு.வி – அருள் உணர்வோடு, வாசி வழியே மனத்தைச் செலுத்தி, மனமொடுங்கும் (புருவமத்தி) இடத்தே ஏறி நின்று, ‘ஓம் சிவாய நம’ என சொல்லாமற் சொல்லி (அதாவது, உள் உச்சரித்து நினைத்துக் கொண்டு) பதியுடன் இரண்டறக் கலந்து கொள்ள வேண்டும்.
‘சிவாய நம’ என்றால், ‘சிவனே உன்னை வணங்குகின்றேன்’ என்று பொருளாம்.
சிவத் திருவடியில் வீழ்ந்து வணங்கும்போது, தேகப்பற்றும், அகங்காரமும் வீழ்ந்தொழிய, சிவனோடு அவனருளாக ஒன்றி நிற்கும் அனுபவ லட்சியமே குறியாகக் கொள்ள வேண்டும்.
4.
|
சரக்கலை தேர்ந்து சகலவெற்றி பெற்றும்
இரக்கமின்றே லில்லை யிசை.
|
104.
|
கு.வி – மூச்சிலே அகவுயிர்ச் சக்தியின் ஆற்றல் வெளிப்படுகின்றது. அது, இட வல நாசி வழி, இடகலை பிங்கலை (சந்திர சூரிய கலை) யாகத் தோற்றி ஐம்பூத இயலொடு இயங்கி புறக் காரியங்களில் தடையும் வெற்றியும் உண்டு பண்ணுகின்றதாம்.
இரு கலையும் இயங்காது சூனியமுற்று நடு நாடியாகிய, சுழி முனையில், நின்று அகவிளக்கம் பெறலாகும். இவை யாவும் யோக சித்தியாம். இவற்றால் அகங்காரம் ஒழியாது. அருள் உண்டாகாது.
ஆகையால் சரக்கலை கற்றாய்ந்து ஒழுகலினும், இரக்கத்தோடு உயிர் விளக்கப் பணி செய்தல் நன்றாம்.
5.
|
மூச்சடக்கி மெய்ம்மறந்து மூவாச் சமாதிருந்தும்
ஏச்சடக்கார்க் கீசனரு ளில்.
|
105.
|
கு.வி – ஏச்சு = பழிப்பு, வசை.
“உலகம் பழிப்பது ஒழித்துவிடின் (தலையை) மழித்தலும், நீட்டலும் வேண்டுவதில்லை” என்பது திருவள்ளுவர் வாசகம்.
தயா நெறியால் கடவுள் அருள் பெற வேண்டியதை விட்டு, உடலை மறந்து, உண்மையை மறந்து, மூச்சடக்கி யோக சமாதியில் இருப்பதால் பயனில்லை என்பதாம்.
மூவா = அழியாத, மூச்சடக்கி பன்னெடுங்காலம் அழியாது உட்புதைந்து கிடத்தல் மூவாச் சமாதியாக மொழியப்படுவது.
6.
|
அகத்தொளி ரான்ம அருட்சுடரே மூன்றாய்ப்
பகுத்தறிந்து வாசிக்கால் பார்.
|
106.
|
கு.வி – அருட் ஜோதியாய் உள்ள ஆன்மாவின் சக்தியே, தூல, சூக்கும, காரண தேக ஆதாரமாய், சோம, சூரிய, அக்கினி தத்துவ கலைகளாய் மூக்கின் வழி, வாசிக்கால் (சுவாசக் காற்று) ஆகத் தோற்றி இயங்குவதாம்.
அருளால் இத்திரி சுடர் உண்மையை யோர்ந்து, ஆன்மானந்த சித்தியாகிய (சுத்த, பிரணவ, ஞான) திரிதேகத்துவம் பெற வேண்டுவதே சுத்த சன்மார்க்க லட்சியம்.
7.
|
மூன்று மடக்குடை மூரிப்பாம் பாட்டலினும்
ஏன்றவுயிர் காத்தல் இனிது.
|
107.
|
கு.வி – மூரிப்பாம்பு = வலிமை மிக்க பாம்பு, இங்கு சீவ சுவாசமாகிய வாசியைக் குறிப்பது. இவ்வாசியைப் பிராணாயாமப் பழக்கத்தினால், இரேசக, பூரக, கும்பகம் என்னும் முந்நிலையில் இச்சைப்படி இயக்குவதே மூரிப்பாம்பாட்டல் எனப்படும்.
பிராணாயாம சாதைனையால், உடல் வாழ்வை ஓரளவுக்கு மேல் நீடிக்கச் செய்தல்தான். மூன்று மடக்குடைய மூரிப்பாம்பாட்டிப் பிழைத்தல், என்றது.
இப்படி வாழ்வதைக் காட்டிலும், ஏற்றுள்ள உயிரைத் தயவினாலே காத்து, அன்பு செய்து வாழ்வித்தலால், திருவருளைப் பெற்று, நீடு வாழலாம் என்பது சன்மார்க்க முடிவு.
8.
|
ஆன்மகலை பத்தே அநிலவுயிர்ப் பாயியங்கல்
ஊன்மே வுடலி னுணர்.
|
108.
|
கு.வி – சீவ தேகத்தில் இயங்குகின்ற உயிர்க்காற்று, உச்சுவாசம் (உட்செல்லுதல்), நிச்சுவாசம் (வெளியேறுதல்) சேர்ந்து ஒரு மூச்சாக விளங்குவது. இப்படி ஒரு தினத்தில் 21,600 மூச்சு நாம் விடுகின்றோம். இம் மூச்சு ஒவ்வொன்றிலும் ஆன்ம சக்திக் கலை (அ+உ = ய) பத்தும் கலந்து வெளிப்பட்டுக் கொண்டே உள்ளதாம். ஆகையால் நாளொன்றுக்கு வெளிப்படுவது, (21,600 X 10 )= 216000 ஆன்ம சக்திக் கலைகளாம்.
அருளொலி வீசும் ஆன்மா (அ-உ-ம்=) ஓம் என்றும் அதில் அவும் (8) உவும் (2) சேர்ந்து பத்தாக, ம் – ஆறாக உள்ளது. இதில் 10 நாதமாகவும் 6 விந்தாகவும் கூறப்படும். இதன் கலப்பு (10 X 6) = 60 நாத விந்து கலையாகவும் கூறப்படும்.
இது கொண்டு, ஆன்மானுபவ ஞானிகள், தினம் வெளிப்படுகின்ற 216000 ஆன்ம சக்திக் கலைகளை, 60 ஆகிய நாத விந்து ஆன்ம கலையாற் பகுத்து, காலக் கணக்கு கண்டுள்ளனர்.
அதாவது 60 கலை ஒரு வினாடி என்றும், 60 விநாடி (60 X 60 = 3600 கலை) ஒரு நாழிகை ஆகவும், 60 நாழிகை (60 X 60 X 60 = 216000 கலை ஒரு நாளாகவும் விளங்குகின்றதாம்.
அநிலம் = காற்று.
9.
|
நாகம் உயிர்ப்புக்கு நம்பன் அருளொக்கும்
மோகமறக் காண்க முனைந்து.
|
109.
|
கு.வி – நாகம் உயிர்ப்பு – நம்பன் அருள். அதாவது நம்பன் என்பது நமது பதி ஆகிய கடவுள். இக் கடவுளின் திருவருளே நாகம் உயிர்ப்பாக உவமிக்கப்படுகின்றது.
இதன் விளக்கம் : 1. நாகம் = ஆகாசம், உயிர்ப்பு = காற்று. ஆகாசத்தில் வாயு சக்தி பிரிவறக் கலந்திருந்து பிரபஞ்ச தோற்ற இயற்கைக் காரணமாகின்றது. அது போல் பரமாகாச சொரூபியாகிய கடவுளிடத்தில் பிரிவறக் கலந்துள்ள அருட் சக்தியும் உலகெலாம் தோன்றி விளங்கக் காரணமாய் உள்ளதாம்.
2. நாகம் = பாம்பு ; உயிர்ப்பு = மூச்சுக்காற்று. பாம்பு தன் சுவாசக் காற்றை உள்ளடக்கி நெடுநாவாற்றடை செய்து நெடுங்காலம் வாழும். இது போல் வாசி யோகியும், மூச்சடக்கி சமாதி இருப்பதாம். சுத்த சன்மார்க்கனோ பாம்பாம் உயிர்ச் சக்தியைக் கடவுள் அருட் சக்தியாக மாற்றிக் கொண்டு நித்தியானந்த வாழ்வு பெற உள்ளான்.
3. நாகம் = யானை. யானைத் துதிக்கையில் கந்தமறியும் உயிர்ப்புச் சக்தியும் தொட்டறியும் பரிச சக்தியும் கலந்து நின்று உதவுவது போல், நமது உயிர்ச்சக்தியும், கடவுள் திருவருட் சக்தியும் கலந்துள்ளது நமது ஆன்மக் கடவுள் வடிவம்.
இதனால், இகபரமிரண்டும் அனுபவிக்குந் தன்மையை நாம் அடைந்துள்ளோம். யானை தன் ஒரே கருவியால் பரிசமும் கந்தமும் அனுபவிப்பது போல்.
4. நாகம் = மலை. மலையின் மீது சுத்தக் காற்றும், நன் மூலிகைகளின் சத்தும், நன்னீரும் இருப்பதால் அவ்விடத்தில் சுக வாழ்வு பெறலாம். சுற்றுப்புற கவின் காட்சி காணலாம்.
இது போன்றே நம் பதியும் மேரு மலையாக உவமிக்கப்படுவதால், அவணுற்ற நாமும் அருளமுதாம் மாமருந்துண்டு நீடு வாழலாம். அகண்ட பிரபஞ்ச புறக்கவின் காட்சியெல்லாம் கண்டு மகிழலாம்.
ஆகவே, உயிர் வாழ்வில் அருளுண்மை கண்டு அடைய மோகமற்ற தயா நெறியில் ஒழுகுதல் வேண்டும்.
10.
|
மூக்கு முனையிலிருந்து மூளைநடுச் சோதிகண்டு
ஏற்க தயாவொழுக்க மீண்டு.
|
110.
|
கு.வி – பார்வை எங்கு செல்கிறதோ அங்கு மனம் செல்லும். மனம் சென்ற இடம் சுவாசமும் சென்றடையும். ஆகையால் இரு கண்ணின் நடுவிடமும், மூக்கின் உச்சி முனையும் கூடுமிடத்தில் பார்வையைச் செலுத்தி, ஓர்மையுடன் இருந்தால், மனம் எளிதில் நிலைக்கும்.
உலக இச்சையற்று, தயா ஒழுக்கத்தோடு அக நோக்கி நின்றால் அருட்சோதி அனுபவம் உண்டாகும். எனவே, இந்த மூக்குக் கண்ணாடியில் கடவுட் சோதிக்காட்சி கண்டு களிக்கலாகும்.
Write a comment