அருட்பெருஞ்ஜோதி அகவல்
உயிர் வளம்
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி
ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி
ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி 10
உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி
ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி
எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி
ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
ஐயமு நீக்கிய வருட்பெருஞ்ஜோதி 20
ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி
ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி
ஒளவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி
சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 30
சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனும்
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி
தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்
ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி 40
சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
அத்தனிச் சி்ற்சபை யருட்பெருஞ் ஜோதி
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி
தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி 50
சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி
காரண காரியங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
என்றா தியசுடர்க் கியனிலை யாயது
வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி 60
சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி
முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி 70
சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
அபயசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி
சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி 80
மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
வாரமு மழியா வரமுந் தருந்திரு
வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
கற்பம் பலபல கழியினு மழிவுறா
அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி 90
எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய
வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி
பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி
தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி 100
வாடுத னீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி
நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே
ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி
கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி
இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி 110
எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா
தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி
பிறிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்
னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி
சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி
தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்
அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி
உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
அநுபவா தீத வருட்பெருஞ்ஜோதி 120
பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி
உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி
என்னையும் பணிகொண்டிறவா வரமளித்
தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி
ஓதியோ தாம லுறவெனக் களித்த
ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி 130
பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி
திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்
அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி
மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்
அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி
எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி
வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் ஜோதி 140
எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்
அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி
தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத்
தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி 150
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி
காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்
றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி
நானந்த மில்லா நலம்பெற வெனக்கே
ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி 160
எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழில்
ஐந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
எங்கெங் கிருந்துயி ரேதேது வேண்டினும்
அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி 170
சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்
அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி
சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
உபரச வேதியி னுபயமும் பரமும்
அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
மந்தண மிதுவென மறுவிலா மதியால்
அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய
வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி 180
செடியறுத் தேதிட தேகமும் போகமும்
அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை
அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
பொதுவது சிறப்பது புதியது பழயதென்
றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி
சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை
யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி
ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்
காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி 190
எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்
கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி
எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்
கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி
இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்
கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி
பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்
ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி
தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென
தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி 200
எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி
சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி
சத்திய மாஞ்சிவ சக்தியை யீந்தெனக்
கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி
சாவா நிலையிது தந்தன முனக்கே
ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி 210
சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்
அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி
காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்
ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி
எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா
றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி 220
எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
கூறிய கருநிலை குலவிய கீ்ழ்மேல்
ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி
எண்டர முடியா திலங்கிய பற்பல
அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை
யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி
வாழிநீ டூழி வாழியென் றோங்குபே
ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி 230
மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி
எச்சநி னக்கில்லை யெல்லாம் பெறுகவென்று
அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி
நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்
றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி 240
கருமசித் திகளின் கலைபல கோடியும்
அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்
ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி 250
சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்
அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி
ஏகசிற் சித்தியே யியலுற வனேகம்
ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
இன்பசித் தியினிய லேக மனேகம்
அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி
எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி
இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி 260
படிமுடி கடந்தனை பாரிது பாரென
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி
ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி
யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி 270
கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே
அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே
அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி
பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே
அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி 280
ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்
ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி
பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்
மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி
எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி 290
பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்
ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி
எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி
நவையிலா வுளத்தி னாடிய நாடிய
வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி 300
கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்
டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி
நன்றறி வறியா நாயினேன் றனையும்
அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி
நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி
எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி 310
ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்
டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி
தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா
ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி
உருவமு மருவமு முபயமு மாகிய
அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி
இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி
அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி 320
தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்து
அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய
அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி
உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி
வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள்
அருள்விளக்கேற்றிய வருட்பெருஞ் ஜோதி
சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே
அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி 330
விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே
அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி
அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட
அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி
உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே
அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி
ஐம்பூதவியல் வகை
விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி
விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி 340
காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி
காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
அனலினு ளனலா யனைடு வனலாய்
அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
அனலுறு மனலா யனனிலை யனலாய்
அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி
புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி 350
புனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்
அனையெனப் பெருகு மருட்பெருஞ் ஜோதி
புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி
புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி
விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 360
நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணியல் வகை
மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை
யண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 370
மண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை
அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்
அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 380
மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்
டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணியற் சக்திகள் மண்செயற் சக்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சக்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணொளிச் சத்திகள் மன்கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
அண்கொள் வமைத்த வருட்பெருஞ் ஜோதி 390
மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே
நண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
மண்கரு வுயிர்த்தொகை வமைவிரி பலவா
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 400
மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீரியல் விரி
நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் பசுமையை நிறுததிய றதிற்பல
வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரினிற் சுவைநிலை நிரைத்திற் பல்வகை
ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி 410
நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை யடிநடு நிலையுற வகுத்தன
லார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி 420
நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல
ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நீரியல் பலபல நிறைந்ததிற் பிறவும்
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி 430
தீயியல் விரி
தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயினில் வெண்மைத் திகழியல் பலவா
வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 440
தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்
ஆயுறு வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சக்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி 450
தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி 460
காற்றியல் விரி
காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினி லூறியல் காட்டுறு பலபல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி 470
காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சக்திகள் கணக்கில வுலப்பில
ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி 480
காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடை யுணரியல் கருதிய லாதிய
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் செயலெலொங் கருதிய பயனெலாம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்
தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி 490
காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியியல் விரி
வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை
அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி 500
வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை யொன்றே விரித்திற் பற்பல
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல
அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்
அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 510
வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புற விரி
புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி 520
கருதக நடுவொடு கடையணைந் தகமுதல்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தணியக நடுவொடு தலையணைந் தகக்கடை
அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு புறந்தலை யணைந்தகப் புறக்கடை
அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகநடு வதனா லகப்புற நடுவை
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 530
அகப்புற நடுவா லணிபுற நடுவை
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
புறநடு வதனாற் புறப்புற நடுவை
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புகலரு வகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி 540
அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்
அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஐம்பூதக் கலப்பின் விரி
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 550
புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெளிவகை விரி
உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த
அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி 560
சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரம்பர வெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 570
குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி 580
அண்டப்பகுதி விரி
ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை
அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை
ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை
அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி 590
தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஓங்கார சக்திக ளுற்றவண் டங்களை
ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நாதமாம் பிரமமும் நாதவண் டங்களும்
ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி 600
பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களை
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை
அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 610
கடல் வகை
களவில கடல்வகை கங்கில கரையில்
அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி
கடல்களு மலைகளு கதிகளு நதிகளும்
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மலைவளம்
மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்
அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 620
எண் வகை
ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்
அன்றற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்
ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
கோடியி லனந்த கோடிபல் கோடி
ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வித்தும் விளைவும்
வித்திய லொன்றா விளைவியல் பலவா
அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி 630
விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க
அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்தும் பதமும் விளையுப கரிப்பும்
அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்திடை முளையும் முளையிடை விளைவும்
அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி 640
முளையதின் முளையும் முளையினுண் முளையும்
அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஒற்றுமை வேற்றுமை யுரிமைகள னைத்தும்
அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய
அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி 650
உறவினி லுறவும் உறவினிற் பகையும்
அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பகையினிற் பகையும் பகையினி லுறவும்
அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்
ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஒற்றுமை வேற்றுமை இயல்
துணையு நி்மித்தமுந் துலங்கதி னதுவும்
அணையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 660
அருவினுள் ளருவும் மருவதி லருவும்
அருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி
கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்
அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
உருவதி லருவும் மருவதி லுருவும்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
வண்ணமு வடிவு மயங்கிய வகைபல
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி 670
பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்
அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்
அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
மென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும்
அன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி
அடியினுள் ளடியு மடியிடை யடியும்
அடியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்
அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 680
முடியினுண் முடியும் முடியினின் முடியும்
அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புறப்பூ
அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை
அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட
அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற
அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி 690
நால்வகை தோற்ற விரி
பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்
ஆருயி ரமைக்கு வருட்பெருஞ் ஜோதி
ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
அலசற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
அறிவொரு வகைமுத லைவகை யறுவகை
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி 700
சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஆண்பெண் இயல்
பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி 710
பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்
அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல்
அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
காத்தருள் விரி
உனற்கரு முயிருள வுடலுள வுலகுள
வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும்
ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி 720
பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்
ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை
ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
அகலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி 730
உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை
அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை
அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
உயிருறு முடலையு முடலுறு முயிரையும்
அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை
ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி 740
வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர்
ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
இன்புறு சத்தியா லெழின்மழை பொழிவித்
தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்
அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்
அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்
தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி 750
அகப்புற வமுதளித் தைவரா திகளை
அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
தருமக வமுதாற் சத்திசத் தர்களை
அருளினற் காக்கு மருட்பெருஞ் ஜோதி
காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்
ஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
விச்சையை யிச்சையை விளைவித் துயிர்களை
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி 760
கலையறி வளித்துக் களிப்பினி லுயிரெலாம்
அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்
அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
அன்புறக் காத்ரு ளருட்பெருஞ் ஜோதி
கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை
அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி 770
எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன
ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி
சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி 780
எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின
அவையெலாந் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
அடக்கியருள் விரி
அண்டத் துரிசையு மகிலத் துரிசையும்
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்
அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும்
அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி 790
காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை
ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
பொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம்
அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்
கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்
அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
அத்தகைய யடக்கு மருட்பெருஞ் ஜோதி 800
நால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில்
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி
மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி
தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி 810
சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
திரை விளக்கம்
கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை யதனால்
ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையாற் பரவெளி யதனை
அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி 820
பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திரையாற் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி 830
திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
தோற்றமா மாயைத் தொடர்பறுத தருளி
னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி
விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி 840
சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை
அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி
மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி 850
சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க்கின்பம்
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி
காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி
அட்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்
அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை
அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி 860
தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை
அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
ஐந்தொழி லாதிசெய்யருட்பெருஞ் ஜோதி
இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்
அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி
செத்தவ ரெல்லாஞ் சி்ரித்தாங் கெழுதிறல்
அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி 870
செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட
அத்திற் லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
சித்தெல்லாம் வல்ல திறலளித் தெனக்கே
அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி
ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது
ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே
ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல
ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே
ஒன்றினு லொன்றுள வொன்றினி லொன்றில
ஒன்றுற வொன்றிய வொன்றெனு மொன்றே 880
மெய்ப்பொருள்
களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி
விளங்கவென் னுளளே விளங்குமெய்ப் பொருளே
மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே
எழுநிலை மிசையே யின்புரு வாகி
வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே
நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே
ஏகா தசநிலை யாததி னடுவே
ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே 890
திரையோ தசநிலை சிவவெளி நடுவே
வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே
ஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற்
பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே
எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே
எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே
மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே
தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே 900
அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா
உயலுற விளங்கு மொருதனிப் பொருளே
அருவினு ளருவா யருவரு வருவாய்
உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே
அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்
உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே
பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா
யொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே 910
ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே
கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே
அறிவுறு சி்த்திக ளனந்தகோ டிகளும்
பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே
வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க
ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே
பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க
உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே 920
பராபர இயல்
பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே
பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே
பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே
பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே
பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே
பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே
தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே
வரம்பரா பரமே வணம்பரா பரமே
பரம்பரா பரமே பதம்பரா பரமே 930
பதவியல்
சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே
தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே சிற்சுக பதமே
தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
அம்பரம் பதமே யருட்பரம் பதமே
தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே
நவந்தரு பதமே நடந்தரு பதமே
சிவந்தரு பதமே சிவசிவ பதமே 940
சிவரகசியம்
பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே
பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
பரமமே பரம பதந்தருஞ் சிவமே
அவனோ டவளா யதுவா யலவாய்
நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்
செம்பொரு ளாகிய சிவமே சிவமே
ஒருநிலை யிதுவே வுயிர்நிலை யெனுமொரு
திருநிலை மேவிய சிவமே சிவமே 950
மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே
புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே
கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்
செல்வமு மளித்த சிவமே சிவமே
அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாயத்
தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே 960
எங்கே கருணை யியற்கையி னுள்ளன
அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே
யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே
பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே 970
பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே
உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்றுரைத்தமெய்ச் சிவமே
இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச்சிவமே
அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே 980
அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கிளம்பிய சிவமே
அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே
அறிளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்த மெய்ச் சிவமே
அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றருக்குமென் றியம்பிய சிவமே 990
அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென்ற சிவமே 1000
அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே
அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென்ற சிவமே
அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்ற சிவமே
அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென்ற சிவமே
அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே 1010
அருளே நங்குல மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே
அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே
சிவபதி
உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள்
வள்ளல்சிற் றம்பலம வளர்சிவ பதியே 1020
நிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனத்
தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே
சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்
சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே
ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்
கைவரப் புரிந்த கதியே பதியே
துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த
இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே
சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே 1030
கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே
இன்புறச் சிறியே னெண்ணுதோ றென்ணுதோ
றன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே
பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே
உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
அருட்குரு
பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத்
திரமுற வருளிய திருவருட் குருவே 1040
மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
திதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே
கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே 1050
சிவரக சியமெலாந்த தெரிவித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே
சத்திய லனத்துஞ் சித்தியன் முழுதும்
அத்தகை தெரித்த வருட்சிவ குருவே
அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
கேட்பவை மெல்லாங் கேட்பித் தெனுள்ளே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
மாண்பத மளித்து வயங்குசற் குருவே 1060
செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே 1070
உயிர்த்தாய்
சீருற வருளாந் தேசுற வழியாப்
பேருற வென்னைப் பெற்றநற் றாயே
பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே
ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
ஈன்றமு தளித்த வினியநற் றாயே
பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்
வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே
தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை
உளந்தெளி வித்த வொருமைநற் றாயே 1080
அருளமு தேமுத லைவகை யமுதமும்
தெருளுற வெனக்கருள் செல்வநற் றாயே
இயலுமு தேமுத லெழுவகை யமுதமும்
உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே
நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே
மற்றுள வமுத வகையெலா மெனக்கே
உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே
கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே
அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே 1090
துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்
கெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே
சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே
சத்தியை யளித்த தயவுடைத் தாயே
சத்திநி பாதந் தனையளித் தெனைமேல்
வைத்தமு தளித்த மரபுடைத் தாயே
சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்
சித்தியை யளித்த தெய்வநற் றாயே
தன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே
என்னைமே லேற்றிய வினியநற் றாயே 1100
வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே
யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே
எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்
கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே
இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந்
தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே
என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்
தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே
தெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத்
தரியா தணைத்த தயவுடைத் தாயே 1110
சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்
கனவினும் பிரியாக் கருணைநற் றாயே
தூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்
ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே
உயிர்த் தந்தை
துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே
எல்லா நன்மையு மென்றெனக் களித்த
எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே
நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய
தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே 1120
அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே
புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த
தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே
அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி
சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே
இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே
துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே
ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே 1130
எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்த மெய்த் தந்தையே
தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே
தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே
தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே
தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்
என்சித் தாக்கிய என்றனித் தந்தையே 1140
தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே
தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை
என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே
தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்
என்னையு மொன்றென வியற்றிய தந்தையே
தன்னிய லென்னியல் தன்செய லென்செயல்
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே 1150
சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே
மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே
உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே 1160
எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்
அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே
இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே
உயிர்த் தணை
பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே
துறையிது வழியிது துணிவிது நீசெயும்
முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே 1170
எங்குறு தீமையு மென த்தொட ராவகை
கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே
வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே
யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே
இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே
உயிர் நட்பு
அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்
னுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே
அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே
இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே 1180
நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே
வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே
உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்
டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே
செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த
குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே
குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே 1190
சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும்
கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே
உயிர் உறவு
களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்
கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே
தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா
வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே
மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
எனக்குற வாகிய என்னுயி ருறவே
துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
தென்னுற வாகிய வென்னுயி ருறவே 1200
இயற்கை உண்மை
என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய்
என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே
அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்
இனைத்தென வறியா வென்றனிச் சத்தே
பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
இதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே
ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்
ஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே
சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே
இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே 1210
துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
அன்றத னப்பா லதன்பரத் ததுதான்
என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே
இயற்கை விளக்கம்
என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்
என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே
சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே 1220
படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்
இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே
உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே
அறிவவை பலவா யறிவன பலவாய்
எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே
நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே 1230
காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே
செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்
எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே
அண்ட சராசர மனைத்தையும் பிறவையும்
எண்டற விளக்கு மென்றனிச் சித்தே
எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
எல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே
இயற்கை இன்பம்
ஒன்றதி லொன்றென் றுரைக்கவும் படாதாய்
என்றுமோர் படித்தா மென்றனி யின்பே 1240
இதுவது வென்னா வியலுடை யதுவாய்
எதிரற நிறைந்த வென்றனி யின்பே
ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்
ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே
அறிவுக் கறிவினி லதுவது வதுவாய்
எறிவற் றோங்கிய வென்றனி யின்பே
விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை
யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே
இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும்
எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே 1250
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே
எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்
எல்லா வின்புமா மென்றனி யின்பே
அருளமுதம்
கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்
விரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்
குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி
மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய
உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா
வணமுறு மின்ப மயமே யதுவாய்க் 1260
கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்
நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்
உள்ளதா யென்று முள்ளதா யென்னுள்
உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்
எல்லா மினிப்ப வியலுறு சுவையளித்
தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்
சாகா வரமுந் தனித்தபே ரறிவும்
மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்
செயற்கரு மனந்த சித்தியு மின்பமும்
மயக்கறத் தருந்திறல் வண்மையை தாகிப் 1270
பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி
ஆரண முடியுட னாகம முடியுங்
கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
நடந்திகழ் கின்றமெய்ஞ் ஞானவா ரமுதே
சத்திய வமுதே தனித்திரு வமுதே
நித்திய வமுதே நிறைசிவ வமுதே
சச்சிதா னந்தத் தனிமுத லமுதே
மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே
ஆனந்த வமுதே யருளொளி யமுதே
தானந்த மில்லாத் தத்துவ வமுதே 1280
நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே
சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே
அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்
உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே
பனிமுத னீக்கிய பரம்பர வமுதே
தனிமுத லாய சிதம்பர வமுதே
உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே
அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே 1290
மணி
அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள
பண்டமுங் காட்டிய பரம்பர மணியே
பிண்டமுங் மதிலுறு பிண்டமு மவற்றுள
பண்டமுங் காட்டிய பராபர மணியே
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே
விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
கண்பெற நடத்துங் ககனமா மணியே
பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்
சார்புற நடத்துஞ் சரவொளி மணியே 1300
அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்
கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்
விராவியுள் விளங்கும் வித்தக மணியே
மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்
தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே
தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா
வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
நவமணி முதலிய நலமெலாந் தருமொரு
சிவமணி யெனுமருட் செல்வமா மணியே 1310
மந்திரம்
வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
நான்பெற வளித்த நாதமந் திரமே
கற்பம் பலபல கழியினு மழியாப்
பொற்புற வளித்த புனிதமந் திரமே
அகரமு முகரமு மழியாச் சிகரமும்
வகரமு மாகிய வாய்மைமந் திரமே
ஐந்தென வெட்டென வாறென நான்கென
முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
ஓதநின் றுலவா தோங்குமந் திரமே 1320
மருந்து
உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
இறந்தவரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே 1330
என்றே யெனினு மிளமையோ டிருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே
மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
சிற்சபை நடுவே திருநடம் புரியும்
அற்புத மருந்தெனு மானந்த மருந்தே
மாற்றறியாப் பொன்
இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்
தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்
மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்
ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க் 1340
காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
ஆட்சிக் குரியபன் மாட்சி முடைத்தாய்
கைதவர் கனவினுங் காண்டற் கரியதாய்ச்
செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்
உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே
மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்
இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே 1350
எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா
தடுத்தடுத் தோங்குமெய் யருளுடையப் பொன்னே
தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக்
கிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே
எண்ணிய தோறுமியற்றுக வென்றெனை
யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே
நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்
போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே
எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்
பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே 1360
விண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப்
புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே
நால்வகை நெறியினு நாட்டுக வெனவே
பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே
எழுவகை நெறியினு மியற்றுக வெனவே
முழுவகை காட்டி முயங்கிய பொன்னே
நல்நிதி
எண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப்
புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே
ஊழிதோ றூழி யுலப்புறா தோங்கி
வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே 1370
இதமுறு வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
குதவினு முலவா தோங்குநன் னிதியே
இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்
றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே
எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை
அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே
அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே
கற்பனை கடந்த கருணைமா நிதியே
நற்குண நிதியே சற்குண நிதியே
நிற்குண நிதியே சிற்குண நிதியே 1380
சோதிமலை
பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
வளமெலா நிறைந்த மாணிக்க மலையே
மதியுற விளங்கு மரகத மலையே
வதிதரு பேரொளி வச்சிர மலையே
உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே
இயற்கைப் பொருண்மை
புற்பதந் திரைநுரை புரைமுத லிலதோர்
அற்புதக் கடலே யமுதத்தண் கடலே
இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய
அருட்பெருங் கடலே யானந்தக் கடலே 1390
பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே
என்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள
நன்றுற விளங்கிய நந்தனக் காவே
சேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர்
ஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே
கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே
மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே
களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே
இளைப்பற வாய்த்த வின்சுவை யுணவே 1400
தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே
தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே
நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே
வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே
கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே
புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே
கனியெலாங் கூட்டிக் கலந்தீஞ் சுவையே
இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே
பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே 1410
சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே
ஏலவே நாவுக் கினியகற் கண்டே
உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே
கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே
நவையிலா தெனக்கு நண்ணிய நறவே
சுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே
பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே
உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி
மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே 1420
இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்
உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே
யாழுறு மிசையே யினியவின் னிசையே
ஏழுறு மிசையே யியலரு ளிசையே
திவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே
அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே
நாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே
வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே
நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே 1430
நம்புறு மாகம நவிற்றிய பாட்டே
எம்பல மாகிய வம்பலப் பாட்டே
என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
என்னிரு கண்ணே யென்கணுண் மணியே
என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே
என்பெருந் திறலே யென்பெருஞ் செயலே
என்பெருந் தவமே என்றவப் பலனே
என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே
என்பெரு வாழ்வே யென்றன்வாழ் முதலே
என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே 1440
என்பெரு நலமே யென்பெருங் குலமே
என்பெரு வலமே யென்பெரும் புலமே
என்பெரு வரமே யென்பெருந் தரமே
என்பெரு நெறியே யென்பெரு நிலையே
என்பெருங் குணமே என்பெருங் கருத்தே
என்பெருந் தயவே யென்பெருங் கதியே
என்பெரும் பதியே யென்னுயி ரியலே
என்பெரு நிறைவே யென்றனி யறிவே
அமுத சித்தி
தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட 1450
என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட
இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிரளாயிட
மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட
உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட 1460
வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட
மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட
மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்த மியைந்து களித்திட
அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட
அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத் 1470
தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட
உலகெலாம் விட முளவெலா மறைந்திட
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே
பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
என்னுறத் தெழுந்த வென்னுடை யன்பே
தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்
என்னைவே தித்த என்றனி யன்பே 1480
என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடைய யன்பே
என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
என்னுளே கனிந்த வென்னுடைய யன்பே
தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
என்னுளே நிறைந்த என்றனி யன்பே
துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
யின்புறு வாக்கிய என்னுடை யன்பே
பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
என்னுளங் கலந்த என்றனி யன்பே 1490
தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
என்வசங் கடந்த என்னுடை யன்பே
தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே
என்னுளே பொங்கிய என்றனி யன்பே
நித்திய விளக்கு
அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே
துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்
லின்புற வென்னுறத் தேற்றிய விளக்கே
மயலற வழியா வாழ்வுமேன் மேலும்
இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே 1500
இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே
தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
ஏற்றிய ஞான வியலொளி விளக்கே
ஆகம முடிமே லருளொளி விளங்கிட
வேகம தறவே விளங்கொளி விளக்கே
ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி
காரியம் விளக்குமோர் காரண விளக்கே 1510
நிறைவழி
தண்ணிய வமுதே தந்தென துளத்தே
புண்ணியம் பலித்த பூரண மதியே
உய்தர வமுத முதவியென் னுளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே
பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத
நிதியெலா மளித்த நிறைதிரு மதியே
பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
கருணைமழை
உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
வயங்கிய கருணை மழைமொழி மழையே 1520
என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப
மன்னிய கருணை மழைபொழி மழையே
உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
நலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே
தூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல்
வாயமையாற் கருணை மழைபொழி மழையே
அருட்பெருஞ்ஜோதி
வெம்மல விரவது விடிதரு ணந்தனிற்
செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே 1530
திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே
வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே
அலகிலாத் தலைவர் களரசுசெய் தத்துவ
உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே
முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே
ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே
உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே 1540
நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
வேதமு மகாம விரிவும் பரம்பர
நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே
எண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள்
நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே
வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே
இரவொடு பகலிலா வியல்பொது நடமிடு
பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே 1550
வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி
பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே
சமரச சத்தியச் சபையி னடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே
சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி
மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி
வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி 1560
என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்
அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும் 1570
ஓருரு வாக்கிய னுன்னிய படியெலாஞ்
சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா
அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி 1580
மூவரும் தேவரு முத்தருஞ் சித்தரும்
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க 1590
சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி 1596
திருச்சிற்றம்பலம்
*****
அருட்பெருஞ்ஜோதி அகவல்
உரை விளக்கம்
முன்னுரை
1. எல்லாம் வல்ல கடவுள் உண்மையை, உள்ளபடி கண்டு அடைந்து அனுபவித்த அருட்பேரின்பத்தை, அன்பர் உலகம் ஏற்றுப் பெரும் பயனுற நம் திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளியுள்ள அருட்பெருஞ் செய்யுள் இதுவாகும். இந்தப் பெருஞ் செய்யுளின் ஒப்பற்ற மெய்ப்பொருள் அந்த அருட்பெருஞ் ஜோதியன்றி வேறன்றாம். ஆகையால், அருட்பெருஞ்ஜோதிக் கடவுளின் உண்மை விளக்கத்தையும், போற்றிப் பெறும் அருளின்ப வாழ்வையும் கூட்டி வைப்பதுதான் இவ் அகவலின் அனுபவப் பொருளாகும். இதற்கெல்லாம் அருள் ஒளியின் துணையே முக்கியமானது; புறத்துணைக் கருவிகள், அதாவது, இலக்கண இலக்கிய ஆதரவுகள் இன்றியமையாதன வல்ல: எனினும் கூட அவைகள் தாமே முன்னுற்றுப் பொருந்தலும் திருவருட் சம்மதமேயாம்.
2. கடவுள் உண்மையை உள்ளுற யோகிருந்து கண்டவன் பழந்தமிழன். அவ்வுண்மையை அடிப்படையாய் வைத்தே தமிழ் மொழியையே உருவாக்கிவிட்டான். அவன் செய்த தமிழ்க் கற்பனைக் கடவுள்தான் சிவம் ஆம். இச் சிவம் என்னும் பெயர் பெறாத அக் கடவுளின் விளக்கம், முதலில் எங்கும் நிறை அகண்ட பெருஞ்ஜோதியாகக் காணப்பட்டிருந்தது. அந்தப் பேரொளியைக் கந்தழி (அடிமுடி காணவொண்ணா அழல் வடிவம்) என்று புருவநடுக் கண்ணின்று கண்டிருந்தான் அப்பழையோன். இக் காட்சியைக் கண்டது, அந்நெற்றி நடுக் கண்ணுக்கு மெய்யொளி கொடுக்கும் சிரநடுதிகழ் ஒரு சிற்றணு ஆகும். இந்த அணு ஒளி, கந்தழி ஜோதியின் சிறு கூறேயாம். இக் கடவுட் ஜோதி அணுதான், இம் மனிதனின் உடலையும் உயிரையும், மெய்யறிவையும் ஏற்று, யாவையும் கண்டு அனுபவகிக்கின்றதாம். எங்கும் பரிபூரணமாயுள்ள கடவுள், ஒவ்வொரு சிற்றான்ம அணுவிலும் நீக்கமற இருந்து, பக்குவ மனித நிலையில் தன் உண்மையைக் கண்டிருப்பதாய் அறிகின்றோம். இதுதான் கற்பனையற்ற கடவுள் நிலையும், இந்த மனிதன் நிலையுமாகும். இதுவே அருட்பெருஞ்ஜோதி நிலை.
3. இதுவரையும் கடவுள் நிலையை அதற்கு அயலான இடத்திலிருந்து கண்டுவந்த மனிதன், தான் வேறு, அது (கடவுள்) வேறு என எண்ணி, அத்தோடு ஒன்றுபட முயன்று ஒழிந்தான். இக் கடவுள் அனுபவம் பெறுவதற்கே சிவமாதி தெய்வக் கற்பனைகளும், வேதாந்த சித்தாந்தங்களும் தோற்றுவிக்கப்பட்டனவாம். திருமந்திர சாத்திரத்தும், திருவாசக தோத்திரத்தும் சிவபதியைச் சார்ந்து கொள்ளும் உபாயம் தெளிவிக்கப்பட்டுள்ளனவாம். இவற்றின் முடிவு, கடவுட் ஜோதியைக் காட்டி அதிலே கலந்து மறையச் செய்வதாய் இருப்பது. இந்நிலையில் மனிதனுக்கு உலகியல் வாழ்வு இல்லாது போய்விடுகின்றது. இம் மனிதனாக விளங்கின கடவுளோ, தன் அருளால் என்றென்றும் வாழ்ந்து கொண்டும் உலகை எல்லாம் ஆண்டு கொண்டும் இருக்கின்றார். ஆகையால், அகத்தில் ஒடுங்கியொழியாது, அந்நிலையினின்று அருள்மய வாழ்வு வாழ்கின்ற மனிதன்கூட என்றென்றும் அக் கடவுள்மய அருள் இன்ப வாழ்வில் விளங்கக்கூடியவனாகி விடுகின்றான் என்பதுதான் நம் வள்ளல் கண்ட அக அனகநெறி முறையாம். இதுவே சுத்த சன்மார்க்கமாகும்.
4. திருவருட்பாவின் ஆறாம் திருமுறை சுத்த சன்மார்க்கத்தையே வழங்க வந்தது. சுத்த மனோ நிலையில் புருவமத்தி நின்று அருட்ஜோதிபதியைப் போற்றிப் போற்றி உட்கூடி, அன்பாற் கரைந்து கரைந்து அருள் ஒளி பொங்கி வழிந்து நிரம்பப்பெற்று வாழவைப்பது இந்த அகவல் துதிப்பாடல். சுத்த சன்மார்க்க அன்பர்கள் எல்லாம் இந்நெறி கண்டுகொண்டு உய்தல் வேண்டும்; பழையனவாகிய நெறிகளில் உழன்று கொண்டிருக்கக்கூடாது. அருட்பெருஞ்ஜோதி வாழ்க.
5. சத்திய ஞான சபையில் வளர் அருட்பெருஞ்ஜோதியைப் போற்றிப் போற்றி அதுவாகி நிற்கப் பழகுதல் வேண்டும். அப்படி இருந்து கொண்டு தான் அனுபவமுறை வாழத் ‘தயவு’ செய்து கொண்டு விளங்கவே, ஆணை செய்துள்ளார் நம் வள்ளற் பெருமான். ஆகவே, தயவுணர்வில் இருந்து உரையில் வெளிப்படுத்தப் பெறுகின்றது இவ்வுரை விளக்கநூல்.
6. இனி அருட்பெருஞ்ஜோதி அகவலின் விளக்கத்தைக் காண்போம். இரண்டிரண்டி அடிகளாக எடுத்துக்கொண்டு கருத்தினை விரித்துக் கூறுவோம்.
*****
1. அருட்பெருஞ்ஜோதி
1. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
2. அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
(உரை விளக்கம்) : அருட்பெருஞ் ஜோதி என்ற சொல், பொருள் விளங்காத ஒன்றாக இல்லைபோல் தோன்றுகிறது. ஆனால் அதன் உண்மை விளக்கம் பெரிதும் பெருமையுடைத்தாகும். ஜோதி என்றால், நிறையொளியாம். பெருஞ் ஜோதியாவது, மிகப் பெரிதாய் நிறைவுற்றதாய் உள்ள பேரொளியாம். உலகம் கண்ட பெரிய ஜோதி விண்மணியாம் சூரியனே. வான் விளங்கு விண்மீன் ஒவ்வொன்றும் பெரிய பெரிய ஜோதி என்பது அறிவியல் அனுபவம். ஆனால் இந்த ஜோதிகள் எல்லாம் தோற்றக் காரணமான நிறைபெருஞ் ஜோதியை “கேலக்ஸ்சி” (galaxy) என்கின்றனர். இந்நிறை ஜோதிக்கும் இதுபோன்ற பல பேரொளி நிலைகட்கும் இடம் கொடுத்துள்ள அகண்ட பெருவெளி முற்றும் நீக்கமற நிறைந்து நின்று எல்லா ஜோதிகளின் தோற்ற ஒடுக்கங்களுக்கும் காரணமாயுள்ளதுதான் நமது அருட்பெருஞ் ஜோதி ஆகும். இந்த அருட்பெருஞ் ஜோதியாம் இறை ஒளி அளப்பரிய அகண்ட பெருவெளி எல்லாம் செறிந்து இயற்கையுண்மையாய் இருந்துகொண்டும், இயற்கை விளக்கத் தோற்றங்களாய் வெளிக்காட்டி மறைந்துகொண்டும், இயற்கை இன்பத்தை, முடிவில், நிறைமனித வடிவில் அனுபவ பூர்வமாய் வழங்கிக் கொண்டும் இருக்கின்றதாம். இவனது அனுபவத்தில் தான் இந்த அருடபெருஞ்ஜோதியின் நிறை உண்மை விளக்கம் கண்டு கொள்ளப்படுகின்றது.
மேற்படி அருட்பெருஞ்ஜோதி நான்கு நிலை கொண்டதாய்க் குறிக்கப்படுகின்றது.
(புறத்தே)
1. வான் வெளி நிறை மின் காந்த ஒளி நிலை.
(வான் கலந்த பெருஞ்ஜோதி அக்கினி நிலை)
2. விண்மணியாம் ஞாயிறு ஜோதி நிலை.
3. தண்மதி நிறைகலைச் சந்திர ஜோதி நிலை
4. தீபச்சுடர் விளக்கின் ஒளி நிலை
இவை போன்று பக்குவ மனிதனின் அக அனுபவத்தே நான்காய் விளங்கும் ஜோதி நிலையுளவாம். அவையாவன; (புறமிருந்து அகம் நோக்கிச் செல்லும்போது)
1. தேகேந்திரிய விளக்க ஒளிநிலை
2. மனோகரண விளக்க ஒளிநிலை
3. ஜீவ உணர்வு விளக்க ஒளிநிலை
4. ஆன்ம ஞான விளக்க ஒளிநிலை
இந்த நானிலை அனுபவம் உண்டாகவேண்டி, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நெறிகளை வகுத்து, அவற்றின் அடைவாக, சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய பதவி விளக்கங்களையும் வழங்கினர் ஆன்றோர். இந் நானிலை முடிவே, நான்கு கால் ஒன்றாவது போல் முழு நிலை அனுபவத்தைக் கூட்டி வைப்பதாய்க் கொள்ளப்பட்டதாம். இதனையே முடிவாகக் கொண்டதால் இறையொளி கண்ட ஒருவன் அவ்வொளியில் நாட்டம் வைத்துக் கலந்து மறைந்தே போனான். அப்படி மறைந்து ஒழியாது, வாழ்வு பெற்று விளங்கவே நம் அக அனக சுத்த சன்மார்க்கம் திருவருளால் வெளியாக்கப்பட்டுள்ளது.
சுத்த சன்மார்க்கி, தயவோடு கூடிய சத்விசாரத்தால் அகம் விளங்கும் அருள் இறை ஒளியை ஆன்ம ஆலயமாகிய சத்திய ஞானசபையில் அருட்பெருஞ் ஜோதியாகக் கண்டு கலந்து அதுவாகி நின்று, அவ்வருட்பெருஞ் ஜோதியையே விரிவு செய்து ஜீவனிலும், கரணத்திலும், இந்திரிய தேகத்திலும் நிரம்பிடக் கொண்டு வாழ்வதால் அருட்பெருஞ் ஜோதியின் முழுநிலை அனுபவமும் பெற்று முடிவிலாதென்றும் விளங்கலாம் என்பது நம் வள்ளலார் கண்ட உண்மையாகும். ஆகவே இந்தக் கடவுட் பேறு எய்தும்படி திருவாய் மலர்ந்து அருளப்பெற்ற இவ் அருட்பெருஞ் ஜோதி அகவலின் தொடக்கத்தே இந்த நான்கு அருட்பெருஞ் ஜோதியைக் காண்கின்றோம். அடுத்து வரும் அடிகளின் விளக்கத்தை ஆய்ந்து கொள்ளுவோம்.
*****
2. அருட் சிவம்
3. அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ்
4. அருட்சிவ பதியாம் அருட்பெருஞ் ஜோதி
(உ-வி) பழந்தமிழ் மக்கள் கண்டு வழிபட்ட கடவுட் ஜோதியாம் கந்தழியே, பின்னர் சிவம் என்னும் செம்பொருளாகக் கற்பிக்கப்பட்டதாகும். சிவம்தானே செங்கதிர்ச் சோதியாம் வான் ஞாயிறு – இதனை மேனாட்டார் ‘சன்’ (SUN) எனவும், கீழ்நாட்டார் ‘சியீன்’ எனவும் குறிக்கின்றனர். தமிழன் வான் ஜோதியைப் புறத்தே கண்டு வணங்கினது அபக்குவ அறிவு நிலையாம். பக்குவத்தே அகத்தில் கடவுட் ஜோதியை ஞான சூரியனாகக் கண்டு போற்றினான். இவ் இறை ஒளியும் அது விளங்கும் இடமும் சிவக்குறியாம் இலிங்கமும் ஆவிடையும் போன்று இருக்கக் கண்டவன், புற ஞாயிற்றையும் அதன் கோட் பரிவாரத்தையும்கூட இலிங்க ஆவிடை வண்ணமாகவே கண்டு கொண்டான்.
கடவுட் ஜோதியால் உருவாகியுள்ள உலகை, ஐம்பூதச் சேர்க்கையால் தோன்றி ஐவண்ணமாய் விளங்கக் கண்டு பஞ்சபூத இலிங்க வடிவம் கடவுளுக்கு அமைந்துள்ளதாய்க் கொண்டு ‘நமசிவய’ எனுந் தூல ஐந்தெழுத்துருவம் சிவஜோதிபதிக்குப் புனைந்து கொள்ளப்பட்டதாம். அப்படியுள்ள அக்கடவுட் ஜோதிபதியை உள் ஒளிர் சிவமாக உணர்ந்தவன், அதனைச் சிவாயநம எனப் போற்றிக் கொள்ளலால் சார்ந்து ஒன்றி அதுவாகி விடலாம் என்று உணர்ந்தான். இச் சிவாயநம என்பதுதான் சிவபதியின் சூக்குமத் திருவைந்தெழுத்து எனவும், அதுவே மந்திரமாய் விளங்கி கடவுட் சார்பைக் கூட்டி வைக்குங் காரணத்தால் அதுவே கடவுளை அடையும் நெறியாகவும் கருதிக் கொண்டான். இந்தச் சிவ நெறி விளக்கமாகவே சைவச் சாத்திர தோத்திரங்களும், மறை ஆகமங்களும், மூர்த்திதல தீர்த்தங்களும் ஆக்கிக் கொடுத்தனர் சைவப் பெருமக்கள்.
இன்று நாம் அந்தச் சிவபரம் பொருளை அருட்பெருஞ் ஜோதியாக உள்ளவாறு காண்கின்றோம். அருள் உண்மை விளக்கத்தால் அருட்பெருஞ் ஜோதி நம் மெய்யறிவுத் தலத்தில் வெளிப்பட்டிலங்கும் நிலைய�