Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.

அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்
சுவாமி சரவணானந்தா.
217. மணி
(1)
1291. அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள
1292. பண்டமுங் காட்டிய பரம்பர மணியே
(உ-வி) நமது அருட்பெருஞ்ஜோதியை ஈண்டு மணியாகக் கொண்டு போற்றிக் கொள்ளப்படுகின்றது, உலகில் விளங்கும் நவரத்தினங்களையும், பொன் முதலான உயர்தாதுப் பொருள்களையும், பாதரசக்கட்டையும் மணியாகப் போற்றிக்கொள்ளுவர் சிலர். அன்றியும், நவதானியங்களையும், தாமரை முதலியவற்றின் வித்துகளையும் சாதாரண மக்கள் மணியாகக் கூறுவர். ஆன்மாவும் அது உவமிக்கப்படும் கருநெல்லியும் மணியாகக் கொள்ளுவர் சித்த கணத்தார். அருளென்னும் பொருள்தரும் ஓமென்னும் பிரணவமே நவமணியாகத் திருவருளாலே கண்டு அடைந்தால், நவநவமான சித்திகளும், சுகானந்தப் பெரு வாழ்வும் சித்திக்கும். ஆதலின் நம் அருட்பெருஞ்ஜோதியையே லட்சியமணியாய்க் கொண்டு போற்றுவோம்.
நமது அருட்பேரொளி மணிக்கு இயல்பாகவே ஒளியுண்டு. அது அருளாளே விளங்கும் அருள் ஒளியாகும். புற வான்வெளியில் ஒளிவிடுகின்ற ஜோதி ஞாயிறும் ஒளியுடையதுதான். அதன் ஒளி, அருள் ஒளி அல்ல, பூத ஒளியேயாம். அவ்விண்மணியொளியால் இவ்வண்ட உலகப்பொருள்களை ஒருவாறு காணமுடிகின்றது. இந்த உலகத்தைப் பூராவுமோ, இதன் பொருள்களை அனைத்தையுமோ இந்த ஞாயிற்று ஜோதியால் முழுமையாகக் கண்டுகொள்ள முடிகின்றதில்லையாம். ஆனால் நமது அருட்ஜோதி மணியோ பர அம்பர அல்லது பரமாகாசத் திலங்குகின்ற ஒன்றாக இருக்கின்றது. இந்த அருண்மணி ஒளிதான் இந்த பூமி ஆகிய அண்டம் முழுவதையும், இதுபோல் அகல்வான் வெளியில் உள்ள அண்டங்கள் யாவையும், இதிலும், அவற்றிலும் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் கண்டு கொள்ளச் செய்கின்றதாம் இந்த நம் அருள் ஒளி மணி. இது பரம்பர மணி ஆகும்.
(2)
1293. பிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள
1294. பண்டமுங் காட்டிய பராபர மணியே
(உ-வி) மேலே, பரம்பரம் என்றது பர + அம்பரம் அதாவது பரமாகாசம் எனவும், அது பரமாகாசக் கடவுள் வடிவாகவும் கண்டு கொண்டோம். அதனால் அண்டக்காட்சி அதற்கு உரியதாய்க் கண்டு கொண்டோம். இப்போது இங்கு குறிக்கப்படுவது: பராபர மணியாம். இது, பரம் + அபரம் எனப் பிரித்தறியப்படும் போது, பரம்-கடவுளாகவும், அபரம்-ஆன்மாவாகவும் இருப்பதால், பராபரம் என்பது கடவுளான்மாவாகவே கொள்ளலாகின்றது. நமது ஆன்மாவே இந்தப் பராபரமணியாக உள்ளதாம். அகண்டநிறை கடவுள் ஒளியிலிருந்து பிள்ளப்பட்டது பிண்ட ஆன்மாவாகும்.
அண்டத்திலுள்ளவாறு இந்த மனிதனிலும் (பிண்டத்திலும்) உண்டு என்பர். இப் பிண்டாதார ஒளியே நம் கடவுளான்மாவாக இருக்கின்றது. நாம் ஆன்மாவாகிய பராபர மணி நிலையில் இருந்து நோக்கும்போது, இந்த தேகமாகிய பிண்டத்தின் இரகசியம் எல்லாம் கண்டு கொள்ளப்படுகின்றதாம். இவ்வுடலின் தலைப்பாகம் அண்டமென்றும், தலைக்குக் கீழ்ப்பாகம் பிண்டமென்றும் கூறுவர். இந்தப் பிண்டத்தில் பிண்டமாகிய பகுதியில் உட்கருவி கரணங்கள், ஆறாதாரங்கள் ஆகியவை யுளவாம். இவைகளையே பண்டங்கள் என்கின்றார் இங்கு. இவற்றை எல்லாம் விளக்கமாக, இரகசியமெல்லாம் வெளியுறக் காட்டி, அவற்றின் பெறலரும் பயன்களை எல்லாம் மேலான பராபரமணி நிலையிலிருந்து பெற்று ஆனந்திக்கும்படி செய்துவிடுகின்றதாம். சுத்த சன்மார்க்க அனுபவமெல்லாம் கழுத்துக்கு மேல் என்பதை மறக்கக்கூடாது. அருளாலே பராபர மணிமயமாய் நின்று பூரணமான பிண்டாதார சித்திகளையெல்லாம் பூரணமாய்ப் பெற்றுக்கொள்ளலாகும். இப்படிப் பெறாது, யோக ஞானியர் கீ்ழ் ஆதாரங்களில் ஒவ்வொன்றிலும் பல பல நாட்கள் சாதனை புரிந்து, ஏகதேச சித்திகளைப் பெற்று மேலேறிக் கொண்டிருப்பர்; முடிவில் மேனிலையில் ஒடுங்கி மடிந்துபோய் விடுவர். ஆதலின் அந்த யோகநெறி தவறேயாம். ஹடயோக சாதகர்கள் பெரும்பாடு பட்டுக் குண்டலியைக் கீழிருந்து எழுப்பி மேற்செலுத்திச் சித்திகள் பல புரிந்தும், முடிவில் நிராதார நிலையுறும்போது, தன் உணர்வு முற்றும் அழிந்து, உள்ளொளியில் உறைந்து பரவசத்தே மறைந்துபோகின்றனர். சன்மார்க்கியோ அருள் விசாரத்தால் நேரடியாகப் பதிமயமாய் இருந்து அருள் வாழ்வு வாழும்போது, சூரியன் உதயமானால் தாமரைகள் மலர்ந்து விளங்குவனபோல் அருட்ஜோதி அகத்தில் அனுபவப்படும்போது, ஆறாதார நிராதார கமலங்கள் எல்லாம் தாமே மலர்ந்து, அவற்றின் நிறை அனுபவத்தையும் வழங்கி வாழ்விப்பதாம். இப்படி இயற்கையில் மலர்ந்து சக்தி வழங்கப் பெறுதலை விட்டு, அங்கங்கு மன ஒளியை ஏற்றித் தவ அனலை மூட்டினால், ஆதார கமலங்கள் இயற்கையாக மலருமா? அவற்றின் நற்பயன் தான் கிடைக்கப்பெறுமா? அருளுடையார் இந்த யோகநெறி செல்லார் என்று அறிய வேண்டும்.
நம் பெருமான் இந்த அருள் ஒளி மணியை அகத்தில் கண்டு அதன் மயமாய் இருந்துகொண்டு, அருட்பெருஞ்சித்திகள் எல்லாம் தனக்குரியதாய்க் கொண்டு திகழ்கின்றார்.
இங்கு குறிக்கப்படுகின்ற அருட்பெருஞ்ஜோதிமணி ஒன்றே தான் உண்மையில் இருப்பது. இந்தமணியின் இயலும் செயலும் பயனும் பலவாய் அனுபவப் படுவதாயுள்ளன. அப்படிக் கண்டு கொள்ளப்படும் அனுபவத்தால், ஓர் ஒரு காரண கற்பனைப் பெயர் வழங்கியுள்ளனர். முதலில், பரம்பர மணி எனக் குறித்து அதுகொண்டு அண்டவெளியில் கறங்குகின்ற அண்டங்களின் இரகசியத்தையும் அவ்வண்டங்கள் தோறும் உள்ள பண்டங்களையும் கண்டுகொள்ள முடிகின்றது என்றார். இந்த அடிகளில் அதே அருள் மணியைத்தான், பராபர மணியாகக் காண்கிறார். இது ஆன்ம வண்ணமாய்க் கண்டுகொள்ளப்படுவதோடு, இதுவே எங்கெங்கும் இருக்கின்ற ஆன்மாக்களின் பிண்ட தேக இரகசியங்களையும் அவ்வுடலில் அகமிருக்கும் கருவி கரணாதிகளையும், ஆதார விளக்க அனுபவ உண்மையும் வழங்குவதாய் அறியப்பட்டதாம். ஆகவே, இது இரண்டாவதாகக் குறிக்கப் பெற்ற பராபரமணியாக வுள்ளதாம்.
(3)
1295. நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
1296. அனைத்தையும் தருமோ ரரும்பெறன் மணியே
(உ-வி) மூன்றாவதாக நம் அருள் மணியே இங்கு, அரும்பெறன் மணியாக அணிந்து கூறப்பெற்றுள்ளதாம். என்ன காரணத்தால் நம்பதி அரும் பெறன் மணியாகப் புனைந்து கூறப்படுகின்றார் என்பதைச் சற்று ஆராய்வோம். ஒருவன் சுத்த சன்மார்க்க முறையில் அகநிலையில் அருள் ஒளிப்பதியோடு அத்துவிதமாய் இருத்தலை சத் விசாரத்தால் உணர்ந்து அதுவாகி நிற்கின்றான். அப்போது அவன் தன்னை முற்றிலும் பதிமயமாக்கிக் கொண்டு அப்பதியின் செயலே தன் மூலம் வெளிப்படக் கண்டு கொள்ளுகின்றான். கடவுளே எதையும் நினைக்கவோ வேண்டவோ செய்யும்போது, அதையே, அந்நிலை நிற்கும் இவன், நினைக்கின்றான்; வேண்டுகின்றான். இப்படி நினைக்கப்பட்ட உடன், திருவருளால் அதனை ஒரு நொடியில் வரவழைத்து வழங்கப்பெற்று விடுகின்றான். எல்லாம் செய்யும் ஆற்றலுடைய ஆண்டவர், வேண்டிய எதையும் உடனுக்குடன் வருவித்துக் கொடுக்கும் செயல், அவர்க்கு இயல்பு தானே; இவ்வுண்மை கொண்ட நம் அருள் ஒளிமணியைத்தான் இங்கு, “நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற அனைத்தையும் தருமோர் அரும் பெறன் மணியே,” என்றுள்ளார்.
ஆன்ம அறிவாம் பாற்கடலில் கடைந்து எடுக்கப்பெற்ற தேவாமிர்தத்திற்குப் பின் வெளிப்பட்டதாம் சிந்தாமணி. இதுவும் ஒருவர்க்கு சிந்தித்ததை வேண்டினதை எல்லாம் கொடுப்பதாகக் கூறியுள்ளனர். இது, ஆன்ம சக்தி விளக்கக் கற்பனையே அன்றி வேறல்லவாம். கடவுளுக்கும் இவ்வருஞ் செயல் தன்மை உண்மையால், “வேண்டுவோர் வேண்டுவதை யீவான் கண்டாய்,” என்கின்றனர். மெய்யருள் அறிவால், நம் அரும்பெறன் மணியை அடையப் பெறாமல், மருள் விளக்கம் கொண்ட மாந்தர் சிலர், மந்திர தந்திர உபாசனா முறையால், சிறிதளவு தெய்வ சக்தி துணையைக் கொண்டு, உண்மையை அறியா உலகவர் பலரும் வியக்கும்படி ஏதேதோ பண்டங்களை வருவித்துக் கொடுக்கின்றனர். இவர்களின் இச்செயலைக் கண்டு, மிக மதித்துக் கொண்டாடுகின்றனர் சிலர். இவர்களும் தம்மை ஏதோ கடவுள் அருளால் பெரிய சக்தியைப் பெற்றுவிட்டுள்ளதாகத் தற்பெருமை பட்டுக்கொண்டு, அகங்கரித்து அழிவுறுகின்றனர். அகங்காரம் ஒழித்து அருள்மயமானால், தம்மைக் காட்டிக் கொள்ளாரே அவ்வருளாளர்! விளம்பரப்படுத்தச் சற்றும் இசையார். திருவருள் தானே இவர்களில் பூரணமாய் வெளிப்பட்டுப் பேரின்ப சித்திச் செயலோடு என்றென்றும் விளங்க வைப்பது சத்தியம்.
ஆகவே கடவுள் மனிதனுக்குக் கொடுத்துள்ள அன்பும் அறிவும் ஆற்றலும் கொண்டு காலமுள்ளபோதே திருவருளின் உண்மையைக் கண்டு அடைந்திடல் வேண்டும். காலதாமதம் செய்துகொண்டிருந்தால், வாய்ப்பு ஏற்படாமல் போகும். மெய்யன்பு நிறையாத அறிவாற்றலால் பெறப்படுகின்ற அற்ப சக்தி சித்திகளினால் அகங்களித்தும் அகங்கரித்தும் வீண்போய்விடக் கூடாது. அன்பறிவைப் பெருக்கி, அகங்கரிப்பை யொழித்து அகநெகிழும் சமயம் அருள் ஒளியுள்ளிருந்து பெருகும். அது கொண்டு அருள் அனுபவம் ஓங்க வாழ்தல் வேண்டும். அருள்நிலை பெற்றுவிட்டால், அருளின்பச் செயல் புரிந்துகொண்டு ஆனந்தமாய் என்றும் வாழலாம்.
(4)
1297. விண்பத மனைத்து மேற்பத முழுதும்
1298. கண்பெற நடத்துங் ககனமா மணியே
(உ-வி) இதில் குறிக்கப்பட்டுள்ளது, ககனமாமணியாம். ககனம், வான், விண், ஆகாசம், அம்பரம், மாகம் என்பன வெல்லாம் ஒருபொருட் சொற்களேயாம். ஒவ்வொன்றும் வெவ்வேறு கருத்தைக்கொண்டு வான்பொருளையே சுட்டுவதாம். விண்மணி என்றால் சூரிய ஜோதியாம். இதுவே ககனமணி என்றும் கூறப்படுவது. இந்த ஞாயிறு வான்நின்று ஒளி செய்து இவ்வுலகுயிர்ப்பொருள்களை யெல்லாம் தோற்றுவித்தும், வளர்த்தும், அழித்துப் புத்துரு கொள்ள உதவியும் வருகின்றதாம். இவை எல்லாம் இந்த நிலவுலகில் நிகழும் செய்கைகளும் அனுபவங்களுமாம். இப்படி அகண்ட பெரும் பிரபஞ்சத்தில் எவ்வளவோ உலகங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு விண்மணி இருந்து பக்குவப்படுத்தி வருகின்றதாம். இப்படிப்பட்ட கோடி சூரியர்களையும் தோற்றுவித்து விளங்கச்செய்து, வான் பதத்திருக்கும் முழு உயிர்த் திரள்களையும், கண்ணாரக் கண்டு, அவைகள் மெய்யறிவுக் கண் பெற, அதாவது அவைகளுக்கு மெய்ஞ்ஞானானுபவம் அருள்செய்து நிலவுவது. இந்த அகஞானக் ககனமணி புற விண்மணி பலவற்றின் முழு ஆற்றலையுங் கொண்டு விளங்குவதாம். இதன் பேரருளாற்றல் பிற எதற்கும் இல்லையாகும். இந்த அருட் பேராற்றலால், எவ்வுலகத் தெவ்வுயிர்களையும் கண்டு, அவைகளைக் கண்காணித்து வந்து முடிவில் தன்னையே அவர்களுக்கு வழங்கிச் சுத்த சன்மார்க்க வழிக்குத் திருப்புதல் முறையாக இருக்கின்றதாம். ஆகையால் இந்த நம் அகமொளிர் ஜோதி மணியின் பெருமை எல்லாம் குறித்திடும் வண்ணம் ககனமாமணி என்று விசேடித்துரைக்கப்பட்டுள்ளதாம். இதுதான் முழுமையான விண்பதத்தையும், அவைகளுக்கு எல்லாம் மேலான பதங்கள் முழுவதையும், கண் பெற நேர்முகமாகத்தானே பொருந்தி நின்று செயல்படுத்துகின்றதாம். இக் காரணத்தால்தான் நம் அருளொளிமணி, ககனமா மணி என்று குறிக்கப்பட்டுள்ளதாம்.
இந்நாள்வரை, ஆன்மாக்கள் ஒவ்வொரு உயிரிலும் குடி கொண்டிருந்தும் செயலற்றதாய் அனுபவத்தில் வெளிப்படாததாய்ப் புதையுண்டிருந்தனவாம். இந்நிலையிற் கிடக்கும் ஆன்மாக்கள் சாகாதே செத்துக் கிடந்தனவாய்க் கொள்ளப்படும். அப்படிப்பட்ட ஆன்மாக்களை எழுப்பி, விண்பதமும், மேற் பதமும் முழுமையாகக் காணக்கூடிய அருட்கண்ணைப் பெறச் செய்து விட்டுள்ளதாம். இந்தக் கண்ணைக் கொண்டு இருந்த இடத்திருந்தே உலகங்களை எல்லாம் ஆளும் ஆற்றல் சுத்த சன்மார்க்கி அடைந்துவிடுகின்றானாம். விண்பதம் என்பதைத் தேவர்களின் பதவி என்றும், மேற்பதம் என்பதை அத் தேவப் பதவிக்கு மேற்பட்ட மக்களிற் சிறந்த அருளாளர்களின் பக்குவநிலை அனுபவங்களைக் குறிப்பதாயும் கொள்ளலாம்.
(5)
1299. பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்
1300. சார்புற நடத்துஞ் சரவொளி மணியே
(உ-வி) விண்ணின்று விரிந்து விளைந்துள்ளது இம் மண்ணுலகம். ஆகாசம் முடிநிலையாகக் கொள்ளும்போது, இந்தப் பூமி அடிநிலையாக உள்ளதாம். இந்த நிலவுலகில்தான், எத்தனை எத்தனை உயிர்கள், எத்தனை எத்தனை பொருள்கள், எத்தனை எத்தனை ஆற்றல்களும் செயல்களும் தோன்றி விளங்கி மறைந்து கொண்டேயுள்ளன. இவைகள் எல்லாவற்றிற்கும் துணைக் காரணமாகி உண்ணின்று இயக்குகின்றதுதான் அருட்பெருஞ்ஜோதியாகும். இந்த உலக நிலைகளையும், இவற்றின் ஆதார நிலைகளையும் இடையறாது இயக்கி இயக்கிப்பக்குவப்படுத்தி, மேனிலை அடையச்செய்கின்ற நம் அருண்மணியைச் சரவொளிமணி என்கின்றார்.
சரவொளி என்பது இடையறாது வரிசையாக வந்துகொண்டேயிருக்கும் ஒளிக்கதிர்களைக் குறிப்பதாம். சூரியனிடத்திருந்து வெளிப்படுகின்ற ஒளிக்கதிர்களில், உயிர்கள் சதா தோன்றுவதும், வளர்வதும், அழிந்து மறுபடி தோன்றுவதுமாய் இருந்து கொண்டே இருக்கின்றனவாம். இதனால் இம்மண்ணுலகுயிர்களும் பொருள்களும், முடிவிலாத இந்த ஒளிமாலையால் இயக்கப்பட்டு மேனிலைக்குச் செலுத்தப்படுகின்றனவாய் அறிவோம்.
மின்சார அலைகள் எங்கும் நிரம்பிப் பாய்ந்துகொண்டேயிருக்கின்றன. அதனைக் கம்பிகள் மூலம் கட்டுப்படுத்திக் குமிழ்கள் பொருத்தி எரியச் செய்வதை இன்று யாவரும் அறிவர். கம்பியின் உதவி இல்லாமலே, மின்சாரத்தை ஈர்த்துக்கொண்டு ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் மின் விளக்குகள், விரைவில் வெளியாக்கப்படும். இதற்கு ஆதாரம் நம் அருள்ஒளியின், இந்தச் சரவொளி சக்திச்செயலே யாம். நம் சரவொளி உண்மையில் அருட்பெருஞ்ஜோதியின் வெளிநிறை நிலையை யுணர்த்துவதேயாகும். இவ்வொளிதான் எல்லா ஆன்ம அணுக்களிலும் இருந்து கொண்டு, பல வேறு வடிவேற்று ஒன்றன்பின் ஒன்றாய்த் தொடர்ந்து விளங்கிக்கொண்டே யுள்ளதாம். இடையறா விளங்கும் ஆன்மத்தீப வரிசையைக் குறிப்பதுதான், தீபாவளி ஆகும். தீப + ஆவளி = தீப வரிசை ஆகும். நம் ஆன்ம தீபம் தொடர்ந்து வந்து எரிந்துகொண்டே யிருப்பது அருள்வாழ்வில் மரணமில்லா நிலையில்தான் அனுபவமாம்.
தீபாவளியின் தத்துவ விளக்கம்:
புரட்டாசி மாதம் வரும் அமாவாசை, மாளய அமாவாசை எனப்படும். இது அகநிலையில் (தை முதல்) ஒன்பதாவது மாதம் (உதயமுதல்) பதினெட்டாவது மணியில் அதாவது இரவு பன்னிரண்டு மணி அளவில் உண்டாகும் மன ஓர்மைநிலையைக் குறிப்பது. இவ்வோர்மையினின்று நவசக்திகளை நவராத்திரிகளில் வழிபட்டு விஜயதசமி நாளில் பெறப்படுவது அக ஆன்ம நிலையாம். அதிலிருந்து அருள்செயல் வெளிப்பட வாழ்ந்து முழுநிலவு நாளில் ஆன்மானுபவத்தில் நிற்றல் வேண்டும். அந்நிலை அனுபவம் பெருகப்பெருக, தேகப்பற்று படிப்படியாகக் குறைந்து அமரபட்சம் போல் கழிந்து கொண்டே வருகின்றதாம். அமாவாசை வரும் நாள், தேகப் பற்றுநிலை முற்றும் ஒழிந்து விடுகின்றதும், அக ஞான ஜோதி வடிவம் சித்திக்கின்றதுமாம். இதுதான் தீபாவளி நாளாம். இது அந்த அமாவாசைக்குமுன் உள்ள சதுர்தசியின் கடைக்கூறு ஆன பிராதகாலம் அல்லது அமுதகால நேரத்தில் அனுபவப்படுவதாம். இத் தீபஒளி அனுபவம் ஏற்படும்போது இன்பம் நிலை கொள்ளுவதாம். தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் என்று குறித்துள்ளார் நம் வள்ளலார். இந்த அருள் ஒளித் தீபத்தை அகத்தே கண்டு நிற்கும் ஒருவன் எங்கும் எவரையும் தீபவரிசையாகக் காண்கின்றான்.
ஆகவே, நம் அருட்பெருஞ்ஜோதியையே அருளாலே கண்டு நின்று உலக நிலைகளையும், உயிர்களின் செயல்முறைகளையும் உயரின்பநிலைக்கு ஏற்றும் பணி மேற்கொள்ளுவது இச்சரவொளி மணியின் செயலாகக் கொள்ளலாகும்.
(6)
1301. அண்டகோடி களெலா மரைக்கணத் தேகிக்
1302. கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
(உ-வி) உலகில், தீ, ஞாயிறு, திங்கள், உடு, இவைகளின் கலைகள் முறையே, 64, 12, 16, 4 ஆகக்கூடி 96 கலைகள் ஆம். இப்படி ஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் ஒளிநிலை உண்டாம். இது பெரும் பிரபஞ்சத்தின் சிறுகூறேயாம். இதுபோல பல பகுதிகள் கூடியதே இந்த மா பிரபஞ்சமாகும். இந்தப் பலவாகிய பிரபஞ்சக்கூறுகளையும், அதன்கண் விளங்கும் பலவாகிய அண்டங்களையும் காண்பது கண்ணால் மட்டும் ஆகாது. கருவிகளாலும் கூடாது. ஒளிவேகத்தில் பரவும் மின்காந்த அலைகளால் புலனாக்கப்படவே பலநூறு ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிடும். அதுவும் ஓரளவுக்குத்தான் அண்டநிலையை அறிய முடியுமாம். ஆகையால், இப்படி அறியக் கன பாடு பட்டும் பயன்படாது போவதால், யாவையும் முழுமையாகக் காண வல்லதும், அரைக்கணத்தில் கண்டுவந்து விளக்கவல்லதுமான அருள்ஒளியைத் துணை கொள்ளுதலே அறிவுடைமையாம்.
நமது அருட்பெருஞ்ஜோதி மணியோ கோடிசூரிய, சந்திர, நட்சத்திர ஜோதி ஒளிக்கு மேம்பட்டதாயுள்ளதாம். இதற்குக் கலை இவ்வளவு என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாதாம். இதனால், இங்கு, இம்மணியைக் கலைநிறைமணி என்று கூறுகின்றார். இந்த நிறைகலைமணி நிலை பெற்றவன் அதுவாகி விளங்குகின்றான் நிறையருளாலே. இதன் ஒளியின் வேகம் உலகம் அறியாத ஒன்றாம். உலகம் இன்று ஒளி வேகத்தைத் தான், அதிகமான வேகம் என சோதித்து அறிந்து தெளிந்து கொண்டுள்ளதாம். அவ்வொளி வேகம் ஒரு (விநாடிக்கு) செகண்டிற்கு 1,86,000 மைல் அல்லது 300,000 கிலோமீட்டராகும். ஒரு விநாடிக்கு 1,86,000 மைல் செல்லக் கூடிய ஒளி, ஓராண்டில் செல்லும் தூரம், 186000 x 60 x 60 x 24 x 365 மைல்களாம். இதுவே ஒளிவருடம் எனப்படுவது. இப்படிப் பல நூறு, ஆயிரம் ஒளி வருடங்களுக்கு அப்பால் எத்தனையோ ஜோதி அண்டங்கள் உள்ளனவாம். இதனால் மனிதனி்ன் முயற்சியால் எந்த அளவுக்கு அண்டங்களைக் கண்டுகொள்ள முடியும் என்று சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். ஆனால் நிறையருளாலே நிறைகலைமணிநிலை யுற்று உணர்ந்தால் காண்பரிய அண்டகோடிகளை அறிதல் எளிதாம். அதுவும் அரைக்கண நேரத்தில் கண்டுகொள்ள முடியும் என்றால், இந்த ஒளியின் வேகம் யாதென்பது! இந்த உண்மையைத்தான் நம்பெருமான் மெய்யருள் வியப்பில் இங்ஙனம் கூறுகின்றார்.
“அண்டகோடி முழுதுங் காணும் கண்கள் எய்தியே
அங்கை கனிபோல அறிந்தேன் அவற்றின் உள்ள செய்தியே
பிண்டகோடி முழுதுங் காணப் பெற்று நின்னையே
பேசிப்பேசி வியக்கின்றேனிப் பிறவி தன்னையே.”
என்றதால் உண்மை அறியலாகும்.
உலகிலுள்ள ஒளிக்கதிர்கள் புறப்பட்ட இடத்திலிருந்து நெடுந்தூரம் செல்லச்செல்ல, விரிந்து சிதறிப்போவதால், ஒளியும் சூடும் குறைந்து மறைந்து விடுவதால் நெடுந்தொலைவில் ஒளிரும் விண்மீன்கள் புலனாகாதுள்ளனவாம். இப்பொழுது அறிவியல் கண்டுள்ள “லாசர்” (LASER) ஒளிக்கதிர், சிதறுறாது நெடுந்தொலைவு பாய்கின்றது. இதனால் இவ்வொளி கொண்டு தொலை தூரத்திலுள்ளவைகளை ஒருவாறு சுத்தமாகப் படம் பிடித்துக் காட்ட முடிகின்றதாம். ஆனால், இதன் வேகம் முன் கண்ட 1,86,000 மைலேதான். ஆகையால் ஆயிரக்கணக்கான ஒளி வருடத் தூரத்துள்ளவற்றைக் கண்டுகொள்ள முடியாதது முடியாததுதான்.
(7)
1303. சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்
1304. விராவியுள் விளங்கும் வித்தக மணியே.
(உ-வி) உயிர் வர்க்கம் இருவகைப்படும். அவை, இயங்கியலுயிர் (சரம்), நிலையியலுயிர் (அசரம்) என்னும் இரண்டு வகையாம். இவ்வுயிரினங்களும், மற்ற பலவாகிய சடப்பொருள்களும் இப்பிரபஞ்சத்தில் எங்கும் தோன்றி விளங்குகின்றனவாம். எல்லா உயிரினவடிவங்களும் சரி, உயிரற்ற சடப்பொருள்களும் சரி, அகம், புறம் என்னும் இருநிலை கொண்டு விளங்குகின்றனவாம். நம் அருட்ஜோதியே, எல்லாம் ஆனது. அதாவது, எல்லா உயிர் வடிவங்களும், பொருள் வடிவங்களும் அருட்ஜோதியே ஆம். இதில் அகத்தே அருளும், புறத்தே ஒளியும் இருந்து, எத்தோற்றத்தையும் விளங்கச்செய்து கொண்டுள்ளனவாம். அகத்திருக்கும் அருட்சக்தியின் ஆற்றலால் ஆணையால் சூழ் ஒளியே எந்த வடிவமும் ஆவதாம். அகமிருக்கும் அருட்சக்தியின் ஆற்றலால் அணுமுதற்பொருள்கள் யாவும் தோற்றுகின்றன. ஆனால் சடபூத அணு நிலையில், அகமிருப்பது, அருட்சத்தியாக விளங்குகின்றதில்லை. அவ்வருளில் விளைந்த கிரியா சக்திச் செயலாக ஒவ்வொரு சிற்றணுவகத்தும் இருக்கும் ஆற்றல் அவ்வணு வடிவத்தை நிலைக்கச்செய்யவும், பல பல அணுக்கள் சேர்ந்து வேறுவேறு பொருள்களாக உருப்பெற்று விளங்கவும், அப் பொருள்களின் சத்துக்கள் பல வித மாற்றத்தால் உயிரினங்களின் புறவடிவங்களாகத் தோற்றித் திகழ்கின்றனவாம். இதனால்தான் அருள் ஒளியே எல்லா வடிவமுமாய் விளங்குகின்றது என அறிகின்றோம்.
எவ்வுயிர் வடிவும், எப்பொருள் வடிவும் அருள்ஒளியே எனக் கண்டோம். இவ்வடிவங்கள் மட்டுமல்ல, இவற்றின் அகத்தும், ஊடும், புறத்தும் அருள் ஒளியே நிரம்பி, அகண்ட வெளி முழுதும் அருட்பெருஞ்ஜோதியாய் விளங்குகின்றது உண்மையாம். இக் குறிப்பே, “சராசர வுயிர்தொறும், சாற்றிய பொருள் தொறும் விராவியுள் விளங்கும்,” நிலை சுட்டப்பட்டுள்ளதாம். இந்த நிறை அருள் ஒளியை, அருட்பெருஞ்ஜோதி மணியின் விளக்கமாக அறிகிறோம். ஆனால், அது ஈண்டு வித்தகமணி விளக்கமாக விளம்பப்படுகின்றது. வித்தகம் என்றால், தெளிந்த ஞானமாகும்.
வித்தகமணி எனக் குறிக்கப்பட்டதன் உண்மை யாதென உள்ளூன்றி விசாரித்துணர்வாம். நம் அருள் ஒளியைத்தான் யாவுமாய் விளங்கக் காண்கின்றபோது, அகத்திருக்கும் அருள், புறம் சூழ்ந்த ஒளியையே பல்வேறு உயிரின வடிவங்களாகத் தோற்றுவித்து விளங்கச் செய்கின்றதாய் அறிந்தோம். உயிரற்ற பொருள் வடிவில், அருளேதான் கிரியாசக்தியாய் இருந்து இயக்குகின்றதாயும், உயிரின வடிவங்களில் அவ்வருளே உயிருணர்வாய் உணரப்படுகின்றதாயும், அவ்வுயிருணர்வு மனிதனில் மன அறிவாய் விளங்கி, ஆன்ம உண்மை அறியப்படும்போது அந்த அருளே ஆன்மஞானமாய்த் திகழ்கின்றதாம். மேலும் அந்த அருள்தானே ஆன்மசக்தியாய் வெளியுற்று அற்புத சித்திகள் செய்யவல்ல ஆற்றலாயும் விளங்குகின்றதாம். கடைசியாக அவ்வருள், அருளனுபவமாகவே வெளிப்பட்டு நித்தியானந்த வாழ்வு கொண்டு நிறைமனித சுத்த சன்மார்க்கியாய் நிலவுவதாம். முடிவான இந்நிலை அனுபவம் வெளியாக்கப்படவே, அந்த அக மன்னிய அருள் தன் நிறைஞானத்தால் உள்விளக்கம் அதிகரிக்க அதிகரிக்க புறவடிவத் தோற்றத்தைச் சடநிலையிலிருந்து, ஓரறி வுயிர் வடிவங்களாயும் அதிற் பல மாற்ற தோற்ற வடிவங்கள் கடந்து ஈரறி வடிவங்கள் பலவும், பின் படிப்படியாக உயர் பிறப்பு வடிவங்கள் பலவும், அவ்வக அருளின் நிறைஞான ஏற்பாட்டின் படியே வந்து வந்து சூழ்ந்து அனுபவங்கொள்ளச் செய்கின்றனவாம். இந்த ஞானத்தின் செயல், எவ்வளவு நுணுக்கமாகத் திறமையாக ஒவ்வொரு ஆன்மாவுக்கும் தேவையான உயிர் உடம்பு தடையுறாது வழங்கப்பட்டு வருகிறது என உணர்த்துகின்றதாம். இந்த ஞானச் செயல்முறைகண்டே நம் அருள் ஒளியை, வித்தகமணி யொளியாகக் குறித்துள்ளார் என உள்ளுணர்ந்து தெளிவாம்.
(8)
1305. மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்
1306. தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே
(உ-வி) அயன், அரி, அரன், ஆகியமூவர், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரிதல் அவரவர்களின் இயல்பாக இருக்கின்றனவாம். முனிவர்களும், முக்த ஆன்மாக்களும், சித்த கணங்களும், விரித்துக் கூறப்படும் முப்பத்து முக்கோடி தேவர்களும் தத்தம் அருந்தவ முயற்சிகளால் ஓரளவு விசேட சக்தி பெற்று சித்தியோடு விளங்கிவிட்டு மறைகின்றனர். இவர்களுக்கெல்லாம் இவர்கள் இச்சித்த சித்திகளை அளித்தது நம் அருட்பெருஞ்ஜோதிமணியே.
வேண்டினர்க்கு, இச்சித்து வேண்டினர்க்கு, வேண்டியதை மட்டும் கொடுக்கும் இந்த மணி, ஏதும் வேண்டாது அருள்மயமானார்க்குத் தன்னையே தந்து, தன் மயமாக்கிவிடுகின்றதாம். இப்படி அருள் நிலையைச் சார்ந்து கொண்டு, அருள் ஒளி மணியாகித் திகழ்கின்றவரே நம் திருவருட்பிரகாச வள்ளல் ஆவர். இதனால் இவர் எவ்வெவர் சித்தியும் தன்னகம் கொண்டு திகழ்கின்றார். இவர் போற்றிக் கொண்டுள்ள அருட்பெருஞ்ஜோதியே, இன்று அனைத்து சித்தியும் புரியவல்ல சித்திசெய்மணியாகத் திகழ்கின்றதாம்.
(9)
1307. தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை அழியா
1308. வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
(உ-வி) ஒன்பதாவதாக நம் அருட்பெருஞ்ஜோதியே வளர்ஒளி மணியென வழுத்தப்படுகின்றது. வளரொளி மணியாவது, நித்திய நிறைவோடு குன்றாது ஒளிரும் தீபச்சுடர் போன்ற தெய்வமணியாகும். இறையருள் ஒளியே, இப்படித்தான் அகண்டவெளி முற்றும் நிரம்பி, மங்குதலும் மறைதலும் இல்லாது தன் ஒளிக்கதிர்களைச் சதா பரப்பிக் கொண்டேயிருக்கின்றதாம். அவ்வொளிக்கதிர் வீச்சே ஐந்தியற் பிரபஞ்சம் எல்லாமாய்க் காரியப்பட்டுக்கொண்டே யிருக்கின்றதாம். இவ்வொளிப்பரவலால், ஆன்மாவைச் சூழ தேகங்கள் உருவாகி வளர்வதும், நீங்கி அழிந்து போவதுமாய் இருக்கின்றனவாம்.
ஒருவன் இவ்வுலகில் தேகப்பற்று நீங்காது, கீழான புலனிச்சை வாழ்வில் உழன்றுகொண்டிருக்கும் வரையும், பலவேறு அவத்தைகள் அடைந்தும், மேலும் மேலும் பிறவிகள் வருவதும் போவதுமாய் இருக்கும். இப்படி சகமிசை தோன்றுவதும் அழிவதுமாய் இருக்கும் தொல்லையைத் தவிர்த்துக் கொள்ளுவதற்கு உள் விளங்குகின்ற அருள்சேர் வாழ்வு பெறப்பட வேண்டும்.
அருள் உணர்விலே வருவதுதான் உண்மையான இன்பமாம். அக அருள் ஒளி என்றும் ஒளிவீசிக் கொண்டே யிருத்தலான், இந்நிலையை அனுபவபூர்வமாகப் பெற்றுக் கொள்ளுகின்றவன் கூட எப்போதும் விளங்கிக் கொண்டேயிருப்பது இயற்கையாம். இத்தோடு இவ்வனுபவி, சகல நன்மைகளும் பெற்று, என்றும் எவ்வகையிலும் தாழ்வுறாமலும், அழிந்து படாமலும் விளங்கிக்கொண்டேயிருப்பவனாகின்றான். இப்படியான உயர் சிறப்புடைய வாழ்வு நம் வள்ளலுக்கு அருளிய அருட்பெருஞ்ஜோதியை வளர் ஒளி மணியே என்கின்றார். “தாழ்வு எலாம் தவிர்த்துச் சகமிசை அழியா வாழ்வு எனக்கு அளித்தது” என்கின்றார்.
(10)
1309. நவமணி முதலிய நலமெலாந் தருமொரு
1310. சிவமணி யெனுமருட் செல்வமா மணியே
(உ-வி) மேலே கூறப்பட்ட பரம்பர மணிமுதல், வளரொளி மணி வரையுமான நவமணி இயல்கொண்டு விளங்குவது நம் அருட்பெருஞ்ஜோதிமணியே ஆம். இதுவே, நமக்கு எல்லா நன்மையும் தருகின்ற ஒப்பற்ற சிவமணி என்று கூறப்படும் அருட்செல்வமாமணியும் ஆகும். இந்த நவமணி உண்மை கொண்ட செம்பொருளை (கடவுளை)த்தான் செந்தமிழ் கண்ட சித்தர்கள் சிவமணி என கற்பித்தனர் முன்பு. இவ்வருட் செல்வமணிக்கு ஒப்பாக எவ்விடத்தும் எக்காலத்தும் வேறொரு நன்மணி இல்லையாம். சங்கநிதி, பதுமநிதி முதலிய நவநிதிகளும், கற்பகதருவும், காமதேனுவும், சிந்தாமணியும், தேவாமிர்தமும் நம் அருட்பெருஞ் ஜோதிமணிக்கு நிகராகாவாம். இன்னும் உலகறிந்த நவரத்தினக்கற்களையும் நவமணி என்பர். இது விண்ணின்றொளிரும் நவக்கிரகங்களின் சாரத்தால் வரும் வாழ்வில் விசாரதோஷங்களை எல்லாம் போக்கி நலம் தரும் என்பது சோதிட நூலார் கூற்று. இக்கூற்றினை நம்பி, நவரத்தின மோதிரமும், நவகண்டி மாலையும் பொருளுடையோர் செய்தணிந்து பார்க்கின்றனர். இவ்வகை நவக்கிரக அனுக்கிரகம் பெறுவோர் நவநிதியம் பெற்று நவகண்டம் ஆள்வார்கள் என்று புனைந்து கூறியுள்ளனர். பொருள் உடையார்க்கே இந்த நலம் கிடைக்கும் போலும்! ஏழையர்க்கு இந்நலம் எப்படிக் கிடைக்கும்? கிடைக்காது போலும்! ஆனால் நம் இறைவன் ஏழைபங்காளனாய் இருத்தலின், இந்த ஏழையர்க்குத்தான் அருட்செல்வ நலம் எல்லாம் தருவானேயன்றி, மருட்பொருட்செல்வர்க்கு அருள்நலம் அருளான் என்பது உண்மையாகும்.
நமது கடவுள் சிற்றுருவம்தான், ஆன்மாவாகிப் பிரணவாகார சிற்சபையாய் விளங்குகின்றது. இங்குதான் கடவுள் அனுபவமெல்லாம் பெறப்படுவதாம். ஓங்காரத்தின் உட்பொருளாய் விளங்கும் அருள் தானே இந் நவமணி யுண்மை கொண்டு விளங்கி அதற்கதற்குரிய சித்தி நலங்களை எல்லாம் வழங்குகின்றதாம். இவ்வுண்மை விளக்கமே இதற்கு முன்னுள்ள ஒன்பது இணை அடிகளில் வைத்து ஓதப்பட்டுள்ளதாம். இப்பத்தாம் இணையடியில் முழுக்கருத்தையும் தொகுத்து வழங்கிவிட்டுள்ளார்.
அருட்பெருஞ்ஜோதியே அருட்செல்வ மாமணியாகக் கொள்ளப்படும். ஒருவனுக்கு எல்லா நன்மையும் இன்ப வாழ்வும் உண்டாக வேண்டுமானால், அருளும் பொருளும் வேண்டும் என்கின்றனர். அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், இன்றைய உலகம், உலகில் உள்ள மந்த மதி உடைய மாந்தர்கள் மருளறிவால் உண்மையைச் சிறிதும் அறியாது, எது மெய்யான அருள், எது மெய்யான பொருள், என்பதைச் சிறிதும் புரிந்து கொள்ளாமல்தான், ஆவல் மயக்கோடு, புலனிச்சைப் பெருக்கோடு எந்த வகையிலும் பெரும் பொருள் தேடி அழிவுறுகின்றனர். அந்த அழிபொருளைக் கொண்டுதான் அருளல்லாத அருளைப் பெறவும், அந்தப் பொருளை அள்ளி வீசுகின்றனர். அதனால் கிடைப்பது அருள் இன்பமல்ல, மருள் மயக்கமேயாம். ஆனால் நம் சுத்த சன்மார்க்க ஒளியில் அருட்பெருஞ்ஜோதி வெளிப்பட்டிருக்கின்றது. இது ஒன்றே அருளும் பொருளும் நிரம்பிய ஒன்றாக இருக்கின்றதாம். இதனை அருள் விசாரத்தால் அறியவும், அறிந்து அகநின்று வாழத் தொடங்குங்கால், அவ்வருளின் இயல் உரிமையாக வேண்டும். எல்லாப் பொருளும் வந்து உதவிக்கொண்டே யிருக்கும். ஆகவே, அருட்பெருஞ்ஜோதியே மெய்யருளாயும், பொருளாயும் சன்மார்க்கிக்குக் கிடைக்கப்பெற்று அவ்வுலகிலும், இவ்வுலகிலும் மற்ற எவ்வுலகிலும் எக்காலும் பெருஞ்சுக வாழ்வில் விளங்குவான் என்பது உண்மையாம். அருட்செல்வம் என்பதும், அருட்பெருஞ்ஜோதி என்பதும் ஒன்றே என இன்று தெளியலாகின்றது.
218. மந்திரம்
(1)
1311. வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
1312. நான்பெற வளித்த நாதமந் திரமே
(உ-வி) அனாதி நித்தியமாய் உள்ளது அகண்டவெளி. அவ்வெளியில் நிரம்பியுள்ளது ஆகாசம். அந்த ஆகாசம் தன்னில் பிரியாது இரண்டறக் கொண்டுள்ளது மின் இயக்க சக்தியாம். ஆகவே, அகண்டவெளி முற்றும், மின்காந்த அலைகளினால், நிரம்பியிருந்துகொண்டு, இந்த மா பிரபஞ்சத்தின் எல்லாப் பொருள்களையும், உயிரினங்களையும் தோற்றுவித்து, விளங்கச்செய்து கொண்டிருக்கின்றதாம். இதில், ஆகாசநிலை, அகரமாகவும் இயக்க ஆற்றல் உகரமாகவும், மின்காந்த ஒளிநிலை மகரமாகவும் கூடி (அ + உ + ம்) ஓம் ஓம்.... என ஒலி ஒளி மயமாய் நிறைந்துள்ளதாம். இது தான் பரநாதநிலைமேல் திகழ் பெருஞ்ஜோதி மலையாக விருக்கின்றது. இது அக அனுபவத்தில் கண்டு கொள்ளப்படுவதாம். இந்த ஓம் என்னும் இயற்கை ஒலியே மந்திரமாக, மூல மந்திரமாக உள்ளதாம். இதுவே, பிரணவம், முளை எழுத்து எனவும், பீஜமந்திரம் எனவும் கூறப்படும். இந்தப் பிரணவமாகிய ஓங்காரத்திற்கு அடிப்படை ஆதாரமாயுள்ளது ஆகாசத்தை யுணர்த்தும் அகர எழுத்து-மூலாங்க பிரணவம் என்று மொழியப்படுகின்றது. ஆகாசமாகிய வானம், மாதிரம் என்றும், இதில் உருவாகி நிறைந்து நிலைத்து விளங்கிக்கொண்டுள்ள ஓம் மந்திரம் என்றும் கூறப்படுகின்றன. அகண்ட வான்பெரு நிலை கடவுட் பேரம்பலமாகவும், ஓம் மந்திர ஆன்ம சிற்றணுநிலை கடவுட்சிற்றம்பலமாகவும் விளங்குகின்றனவாம். “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப” இது மந்திரத்தின் தொல் இலக்கண விளக்கம்.
வான்வெளியிலே, மேற்படி ஓங்கார நாதஜோதியாம் மின்காந்த இயக்கம் இயற்கையில் விளங்கிக்கொண்டேயிருந்து வருகின்றது. இதனால்தான் இந்தப் பிரபஞ்சத் தோற்றமும் இதன் கண் அனைத்து உயிர்ப்பொருள்களின் தோற்றமும் வெளியாகிச் செயல்பட்டு வருகின்றனவாம். இந்த இயற்கைச் செயலால் இந்த உலகம் உதித்து, இதில் உயிர்களில் மேம்பட்ட மக்களினம் தோன்றி, இம் மக்களிலே ஆன்மக் கடவுள் ஞானம் தோன்றிட எத்தனை கோடி ஆண்டுகள் ஆகியுள்ளனவோ யாரே அறிவர்! இந்த ஆன்மஞானம் பெறப்பட்டபோதுதான் மறை பொருள் உண்மையும், ஓங்கார ரகசியமும் ஆற்றலும் தவமுயற்சிகளால் பெற்ற ஆன்றோர் மந்திர சாத்திரங்களையும், மறையாகமங்களையும், தந்திர கலைகளையும் ஆக்கி வழங்கினர். இவைகளைக் கொண்டு மக்கள் சமுதாயம் சமய மதங்களாலும், கொள்கை கோட்பாடுகளாலும், பிற பல சாதனைகளாலும் சில நன்மைகளை அடைந்துள்ளது என்றாலும், எல்லாவற்றிற்கும் மேலான, மூலமான தனித் தலைமைப் பெரும்பதி ஆகிய ஒன்றான எல்லாம் வல்ல அருட்கடவுளை அறிந்து ஏற்காததினால், பல கேடுகளும், துன்பங்களும் அழிவுகளும் அதிகம் விளைந்துள்ளனவாம். மக்கள் எல்லோரும் அருள் ஒளியில் ஒத்துவாழற்கான சுத்த சன்மார்க்கம் தோன்ற வேண்டியிருந்தது. இப்பொழுதுதான் அது வெளியாகியுள்ளதாம்.
உலகிற்குப் புத்தருள் மார்க்கத்தைக் கொண்டுவந்துள்ளவர் நம் திருவருட்பிரகாச வள்ளலாரே. முன்னெறி எதனாலும், எவ்வகையினாலும் அறிந்து அடைதற்கரிய அழிவில்லாப் பேரின்ப சித்திப் பெருவாழ்வை, இவர்மூலமாக உலகமெல்லாம் பெற உள்ளதாம். இவர் சுத்த சத் விசாரத்தால் தம் உளத்தே கண்டு கொண்டது, அருட்பெருஞ்ஜோதியாம் உண்மைக்கடவுளை. இந்தக் கடவுட் ஜோதியைத்தான், பிரணவநாத ஜோதியாகவும், வான்நிறைந்த இயற்கை மின்னொளிச்செறிவாகவும், அருந்திறல் சக்தி தரும் ஆன்ம சிற்ஜோதியாகவும் கண்டும் ஒருவாறு அடைந்தும், சித்திகள் பல புரிந்து களித்திருந்தும் மறைந்துவிட்டனர் முன்னோர். இவை எல்லாம் வான் அருளிய பேறுகளாம். இன்று திருவருளால் உள்ளொளி நிலையிலே, தான் அவ்வொளிமயமாகி நின்று நிறையருளாலே சர்வசித்தி வல்லபத்தோடு வாழும்நிலை அடைந்துள்ளார் நம் பெருமான். அருட் பெருஞ்ஜோதியை நாதமந்திரமாகக் குறிக்கின்றார்.
நாதமந்திரமாவது, உள்விளங்கும் கடவுட்ஜோதியின் உண்மையை விளக்கும் சொற்பெருக்காம். உள்ளொளியினை ஊமை எழுத்து என்றும், மௌன மந்திரம் என்றும் கூறுவர். அவ்வொளியை விளக்க வரும் ஒலிமொழியைப் பேசும் மந்திரம் என்பர். வள்ளல் அனுபவத்திற்கண்ட உள்ளொளியைத்தான் ஒளி மந்திர வடிவாகப் பெற்று, அதனையே புறத்தில் அருட்பெருஞ் ஜோதியெனத் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார். பன்னெடுங்காலமாக வான்இயலால் பெறற்கு அரிதான அழியாப் பெருவாழ்வும் அனந்தானந்த சித்தி அனுபவமும் வழங்கிவிட்டுள்ளதாம் இந்த அருட்பெருஞ்ஜோதி நாதமந்திரம்.
பிரணவமே மந்திரங்கட்கு மூலமாக இயற்கை வான்வெளியில் ஒலித்துக்கொண்டுள்ளதால், புற உலகத்தில், அழகு, பெருமை, சிறப்பு, நலம் ஆகியவற்றிற்குக் காரணமாம். மழை முதலான யாவையும், பிரபஞ்சம் நிறைந்த இம் மந்திர சக்தியால் உண்டாகின்றனவாம். இதனால் வான் என்பதற்கு இந்த அழகு, பெருமை, சிறப்பு, நலம், மழை, முதலிய பொருள் குறிக்கப்பட்டுள்ளன. இவைகளை முழுவதும், இவற்றிற்கு மேலேயுள்ள நிறையருள் அனுபவத்தை மிக விரைவில் கொடுப்பது இந்த நாத மந்திரமாம் அருட்பெருஞ்ஜோதி. அருட்பெருஞ்ஜோதியை உளம் கொண்டு, அருட்செயலோடு வாழ்ந்தால் எல்லா நலமும் இன்பமும் பெறலாம். மற்றபடி அருள்நிலை பெறாது உலகநலம் கோரிப் புற வேள்வி பல புரிந்தும் பெறப்படுவது அற்பப் பயனாகும். உள்ளொளி விளக்கம் செய்வதற்கான முறையில் வாழ்தலே சாலச் சிறந்ததாம். நாதமந்திரத்திற்கு அடிப்படையான ஜோதிமந்திரத்தை விந்து விளக்கத்தைக் கண்டு கொள்ளவேண்டும்.
அருள் ஒளியே, அக ஆன்ம உண்மைக் கோயிலாம். இது ஓங்காரமாய் இருத்தலின், மந்திரம் என்ற சொல்லுக்கும் கோயில் என்ற பொருள் குறிக்கப்படும். முடிவில் கடவுணிலையில் முழுதும் தோய்ந்தொன்றி சாயுச்சியானுபவம் கொண்டிலங்கும் சுத்த சன்மார்க்கி மந்திரவடிவில் விளங்குவதாய்க் கூறப்படும். இதுவே சுகானந்த வடிவமுமாம். இந்த மந்திர வடிவப்பேரின்ப வாழ்வைக் குறிக்கோளாய்க் கொண்டு அடைவதுதான் ஆண்டவர் ஆணையாகும். மற்ற அருள்நிலை சேரா, அரும்பெரும் மந்திரசித்தி பெற்று மந்திரேசுவரர் என்ற பட்டம் ஏற்றோரும் நிலை இன்ப வாழ்வு பெறாது வீண்போயினர் என்பது உண்மையே.
(2)
1313. கற்பம் பலபல கழியினு மழியாப்
1314. பொற்புற வளித்த புனிதமந் திரமே
(உ-வி) மந்திரங்கள் பலவாகக் கற்பிக்கப்பட்டுள்ளன. ஓம் என்னும் மூல மந்திரத்தைப் பிற மந்திரங்களுடன் கூட்டிச் சொல்லுவர் பலர். மந்திரங்களால் பல சக்தி சித்திகளை அடைவதுவே லட்சியமாம். மனதைச் சிதறவிடாது ஓர்மைப்படுத்துவதால் சக்தி அதிகரித்துப் பெருஞ்செயல்களை எளிதில் புரிந்து விட முடிகின்றதாம். இதனால் மனதைத் திடப்படுத்துவது மந்திரம் என்பர் சிலர். இந்த அக ஓர்மையில் நிலைத்துக்கொண்டிருப்பவனை பிற சக்திகள் எதுவும் தாக்கவோ, தாக்கி வெற்றிக்கொள்ளவோ மாட்டா. ஆகையால், மந்திரம், செபிப்போரைக் காப்பது என்றும் பொருளுரைப்பர். என்றும் எதனாலும் அழிவுறாது மன்னி (நிலைபெற்று) திரமாக சக்தி சித்தியோடு விளங்கச்செய்வது மந்திரம் எனச் சுத்த நெறியிற் கண்டுகொள்ளலாம். இதனையே நம் வள்ளலார் இங்கு விரித்து விளக்கிக் கூறுகின்றார். கற்பம் என்பது பல வருடங்களாம். அப்படிப் பல பல கற்பம் என்றால் எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிட்டுக் கூறுதல் கூடாதாம். இப்படி அளவுகடந்த நெடுங்காலம், அழியாப் பொற்பு(அழகு) கொண்டு விளங்கும்படி அருள்பாலித்து உள்ளதாம் இந்தப் புனித மந்திரம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி. புனிதம் என்ற சொல்லே, பரக மெய்யும் உகர வுயிரும் சேர்ந்து “பு” என்றாகி, அழகிய வடிவும், அருள் ஐந்தியல் ஆற்றலுங் கொண்டதாய், நிதமும் என்றென்றும் விளங்கும் உண்மையைச் சுடடுவதாம். பகரம் என்றாலே அழகு என்று பொருள்படும். ஆகையால், பகரமெய் எழில் தேகத்தையும் குறிப்பதாம். உள்வளர்ஒளியே நமக்குப் புனித மந்திரமாக என்றும் புகட்டப்பெற்றுள்ளோம். ஆனால், அதனைப் புரிந்துகொள்ளாமல்தான், பிற மந்திரங்களை நாடிச் செல்லுகின்றனர் உலகியலார். அவற்றால் பெறப்படுவதெல்லாம் விரைவில் அழிவுறுவனவேயாம். அருட்பெருஞ்ஜோதியாம் புனித மந்திரம் ஒன்றே அவனை நித்தியானந்த வாழ்வில் என்றும் விளங்கச்செய்ய வல்லதாம்.
இந்த அகவல் அடிகள் இரண்டும், அழியா இன்ப அனுபவ சித்தியைக் குறிக்கின்றதாகக் கொள்ளலாம். இதற்கு ஆதாரமாகிய கருத்து என்னும் வித்து முன் 89, 90-வது அடிகளில் ஊன்றப் பெற்றுள்ளதாம். அது,
“கற்பம் பல பல கழியினு மழிவுறா
அற்புதந் தருஞ்சபை அருட்பெருஞ் ஜோதி”
என்று ஓதப்பெற்றுள்ளதாம. இதில் கற்பம் பல சென்றாலும் அழிந்துபடாது விளங்கும் அற்புதத்தை அருட்பெருஞ்ஜோதி ஆகிய சபை வழங்க வல்லது என்ற குறிப்பை யுணர்த்தினார். இங்கோ, அந்த அருட்பெருஞ்ஜோதிபதி ஞான சபையே புனித மந்திரமாகி விளங்கி என்றும் அழியாத் திருவுருவை வழங்கி விட்டது என்று அனுபவ சித்தையே வெளிப்படையாகக் குறித்துள்ளார் என அறியலாகும். ஆகவே, இந்த அருட்பெருஞ்ஜோதியை மகா மந்திரமாகக் கொண்டு எவ்வுலகத்தவரும் உய்வார்களாக.
(3)
1315. அகரமு முகரமு மழியாச் சிகரமும்
1316. வகரமு மாகிய வாய்மைமந் திரமே
(உ-வி) இங்கு மந்திரம், வாய்மை மந்திரம் எனக் கூறப்படுகின்றது. மறைமொழிவாசகம்தான், மந்திரச் சொல்லாக வெளியாகின்றது. இப்படி வாய்மை மந்திரம் வெளியாகின்ற போது, அகத்தே உள்ள ஒளிநிலை உண்மை மந்திரமாகவும் புறஞ்சூழ்ந்த உடல், மெய் மந்திர வடிவாகவும் விளங்கும். இது சுத்த சன்மார்க்க அனுபவம்.
அகரமும், உகரமும் புறவான்நிலையில் இயற்கையில் விளங்குவன. இதே புற உண்மை, நம் புற ஜீவ தேகத்திலும் விளங்குகின்றதாம். இதில், அகரம்-எட்டாய், எண்சாண் உடலாய் இருப்பதையும், உகரம்-இரண்டாய் அநித்திய நித்திய உயிர் ஆற்றலாய் உள்ளனவாயும் அறிகின்றோம். ஓம் என்பதில் அகரமும் உகரமும், மகர மெய்யும் உள்ளன. இந்த மகரமெய்யே இந்த உயிர் உடம்புக்குள்ளிருக்கும் கடவுளான்ம அணுவைச் சுட்டுவதாம். மனிதனின் புற உயிருடம்பு அக ஆன்மாவின் விரிநிலைத் தோற்றமேயாம். ஆகையால், காயம் என்பது ஆகாயம் என்றே அறிய வேண்டும். ஆன்ம வடிவாய், ஓங்காரமயமாய் உள்ளது அழியாத மனித சொரூபமாம். இந்த ஆன்ம ஆகாய வடிவம் இயற்கையிலே அழியாது இருந்துவந்த போதிலும், மகர மெய்யுணர்வால் அவ்வுள் நிலையைச் சிதாகாசமாய்க் கண்டு நின்று வகரமாகிய அருட்பணி புரிந்துகொண்டேயிருத்தல் வேண்டும். இங்கு ஏற்படுகின்ற இன்பமே சிவானுபவமாகக் கண்டிருந்தனர் முன்னோர். அந்தச் சிவானுபவம், ஒருவனுக்கு உள்ளொன்றியநிலையில் வெளிப்பட்டு விளங்கினது உண்மை தான். ஆனால், அவ்வனுபவத்திலே ஆழ்ந்து மூழ்கினவன், அனுபவம் கெட்டு வாழ்வற்றுப் போனான்.
சிவானுபவம் மனிதனைத் தன்னில் ஐக்கியப்படுத்தி மறைந்திடச் செய்துவிட்டது. அந்தச் சிவமே இன்று அருட்பெருஞ்ஜோதியாக, அருளின் துணையால், சிவமயமாய், நாம் இருப்பதை யுணர்ந்து அந்நிலைநின்றே அருளாலே வாழும்போது, தான் மறைந்திடாது, தான் சிவஜோதியிற் கரைந்து மறைந்து போகாது, தன்னில் அச்சிவமே பூரணமாய்க் கலந்து கொண்டு வாழ்வே அழியாத சிவானந்தப் பேரின்பமாக என்றும் விளங்கச் செய்து விடுகின்றதாம். இதுதான் அருட்பெருஞ்ஜோதி என்னும் வாய்மை மந்திரத்தால் சித்திக்கப்பெற்றுள்ள நித்தியானந்த நிலையாகும்.
(4)
1317. ஐந்தென எட்டென ஆறென நான்கென
1318. முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
(உ-வி) அகவுண்மையை அறிவால் உள்ளொன்றிக் கண்டவர்கள் தாம் உலகுயிர்க்காரண இறையொளியையும், அதன் இயலும் செயலும், பயனும் ஓரளவு யூகித்தும், அருள் ஏகதேசத்தால் ஒருவாறு உணர்த்தப்பெற்றும் அறிந்தவைகளை எல்லாம் அக அனுபவத்திற்குத்தக ஒலிதரு மொழியால் வெளிப்படுத்த முனைந்தார்கள். அவர்களின் அரிய முயற்சியே கடவுள் உண்மையை அடிப்படையாய்க் கொண்ட தமிழ் மொழி யாகும். தமிழின் எழுத்து, சொல், பொருள், அணி, யாப்பு என்னும் ஐந்திலக்கணங்களும் கடவுளை யுணர்த்தவே ஆக்கப்பட்டன. இலக்கணம், இலக்கியம், இறையுண்மையை விளக்கவும், அதனைக் குறிக்கோளாய்க்கொண்டு அடையவும் என்றே இயற்றப்பட்டனவாம். இதற்குமேல் உள்ளொளியின் நேரடித் தொடர்பு ஏற்படவும், அதனால் அரிய ஆற்றல்கள் பெறவும், அதுகொண்டு அற்புத சித்திகளை அடைந்து ஆனந்திக்கவும் என்றே மந்திரங்களையும் துதிமுறைகளையும் ஆக்கிக் கொடுத்தனர். இம்மந்திர சித்திகளைத் தீவிர முயற்சியால் அறிவைக்கொண்டு அடைந்திட முடிந்தன. எனவே, பணிவும் அன்பும் இல்லாத அகங்கார சித்தமுடையோர்கள் பலர் இம் மந்திரசித்திகளைப் பெற்று, மக்கள் சமுதாயத்தை மயக்கி அருள்நெறியை ஏற்கச் செய்யாது அழிவுறவே செய்து விட்டனராம். அருள் ஒளியால் மந்திரங்களின் ரகசியத்தையும், அவற்றின் மூலம் பெறப்படும் அற்ப சித்திகளின் உண்மையையும் அறிந்து, பற்றாது விடுத்து, மேற் செல்ல வேண்டும் ஒவ்வொருவரும்.
மந்திரங்கள், திருவைந்தெழுத்து (பஞ்சாட்சரம்), எட்டெழுத்து (அஷ்டாச்சரம்), ஆறெழுத்து (ஷடாட்சரம்), நான்காகிய (ஐயுங், கிலியும், சௌவும், ரீம்) பீஜமந்திர ஒலியும் முக்கியமென்ப. இவை போக பலர் பல எழுத்துக்களைக் கூட்டி, அக அனுபவத்தைக் காணப் பல மந்திரங்களை ஆக்கித் தந்துள்ளனர். இம் மந்திரங்களின் உண்மை விளக்கமும், அனுபவ அடைவும் உலகியலில் சிறு சிறு சித்திகளைப் பெற உதவுவனவாம். பழைய மறைமொழிகளின் உண்மை அறிவது கடினம். அறிந்தாலும் அவற்றால் அடையப் பெறும் பெருஞ்சித்திகளும் பொதுச் சமுதாய வாழ்வுக்கு நலம் பயப்பதாய் இல்லையாம். ஆதலின், அவைகளை அதிகம் துருவிப்பார்த்து ஆகவேண்டியது ஏதுமில்லை. அருள் உண்மை அறிந்து ஏற்று வாழ்ந்தால் எல்லா நன்மையும் பெறலாம்.
(5)
1319. வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
1320. ஓதநின் றுலவா தோங்குமந் திரமே
(உ-வி) அருள்ஒளி நிறைவே எல்லாம் வல்ல கடவுள் உண்மையாக இருக்கின்றது. இந்த இறையுண்மை அருளால் தான் வெளியாக்கப்படவும், அனுபவத்தில் ஏற்கப்படவும் இருக்கின்றது. அப்படி இருக்க, அறிவாலும், பிற செயல்முறைகளாலும் அந்த மெய்ப்பொருள் அனுபவம் எப்படிப் பெறமுடியும்!
கடவுளை, வேதமந்திர சொரூபியாகத் துதிக்கின்றார்கள். “வேதமந்த்ர சொருபா நமோ நமோ”, என்று சொல்லிவிடுவதால் கடவுள் உண்மையைக் கண்டு கொள்ள முடியுமா? அதன் பொருள் என்ன எனப் பார்ப்போம். ஓங்கார உண்மையை அடிப்படையாகக் கொண்டுதான், அகர, உகர, மகரத்திற்காக ரிக், யசுர், சாமம் என்னும் மூவேதங்களையும், ஓங்காரமந்திர நாதவிந்து விளக்கப் பகுதியாக அதர்வணத்தையும் ஆக்கினர் என்ப. இவ்வேத முடிவை வைத்து வேதாந்தம் என்னும் உபநிடதங்களைக் கூறியுள்ளனர். வேதமெய்ப் பொருளை அனுபவத்திற்குக் கொண்டுவர உரை நூலாக ஆகமங்கள் பல இயற்றியுள்ளனராம். வேதங்கள் நான்கு எனவும், ஆகமங்கள் பல இயற்றியுள்ளனராம். வேதங்கள் நான்கு எனவும், ஆகமங்கள் (சைவ ஆகமங்கள்) இருபத்தெட்டு எனவும், அவற்றை மேலும் விரித்து விளக்கவே புராணங்கள், இதிகாசங்கள், பல பல இயற்றியுள்ளனர். இவைகளாலெல்லாம் கடவுள் மந்திரத்தைக் கண்டுரைக்க முடியாது என்பது உண்மை. அவைகளை ஓதினதால் அருட்பெருங்கடவுள் விளக்கம் அறிந்திட ஒருகாலும் சாத்தியப்படாது. எவ்வளவு காலம் வேதாகமங்களையும், பிற கலைகளையும் ஓதினாலும் காண்டற்கரிதாய், எட்டாத பொருளாய் விளங்குவது நம் அருட்பெருஞ்ஜோதி மந்திர சொரூபம். ஆகையால், அருளடையமுயன்று உள்ளத்தில் தயவு பெருகினால், அக அனுபவத்தில் விளங்கும் அம்மந்திரத்தின் அனுபவப்பொருள்.
இம் மந்திர உண்மையை விரித்து விளக்கம் தருவது, வள்ளலார் மகா உபதேசத்தில் காணப்படுகின்றது. அது,
“அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி”
என்பதாம். இதில் அருட்பெருங்கடவுள் உண்மை எப்படி விளங்குகிறது; அதனை எப்படி அடைவது? அதனால் அடையப்பெறும் பேரனுபவ நிலை யாது என்பனவெல்லாம் இம்மந்திர வாசகத்தில் வெளியாக்கப்பட்டுள்ளது. எனினும், இதனை எவ்வளவு முறை ஓதினாலும், ஆய்ந்தாலும் உண்மையைக் கண்டுகொள்ள முடியாது. சுத்த சத் விசாரத்தால் ஒருவாறு உண்மையுணர முடியும். அவ்வுண்மை கொண்டு அக நின்று வாழ்ந்தால்தான், இம் மகாமந்திரத்தின் அனுபவப் பொருள் கண்டடைய முடியும். சத் விசாரத்தாற் கண்ட மெய்ப்பொருளை ஈண்டு கூறமுடியும். யாதெனில் நம் அருட்பெருஞ்ஜோதியின் உண்மை நமது உள்ளத்தும், உயிரினும், உடலினும் நிரம்பியுள்ளதாம். இம்மூவிடத்தும் நிரம்பியுள்ளது அருட்பெருஞ்ஜோதிதான், என்றாலும் உள்ளத்தில் அருளாக மறைந்தும், உடலில் ஒளிசெய் வடிவாக நிறைந்தும் உயிருணர்வில் அருளும் ஒளியும் கூடிய ஒன்றாய்த் திகழ்வதாக உணரப்படுவதாயும் இருக்கின்றதாம். இக் கருத்தே, முன்னும் பின்னும் உள்ள அருட்பெருஞ்ஜோதி என்பதில், முன்னுள்ளது அருளாயும், பின்னுள்ளது ஒளியாயும் இருக்க நடுவுள்ள அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்பதுவே, அனுபவத்தில் விளங்கும் அருள் ஒளியின் நிலையாயும் உள்ளனவாம். இவை விசாரத்தால் தெளியப்படும். மேற்கொண்டு அருளனுபவ வாழ்வில் விளங்கும்போதுதான் இறைநிலை வாழ்வு சித்தித்ததாகும். ஆகவே இந்த மந்திரம் அருளனுபவத்தால் மட்டும் சித்திக்கின்ற ஒன்று என்று தெளிந்துகொள்ளலாகும்.
219. மருந்து
(1)
1321. உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையும்
1322. அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே
(உ-வி) மணி, மந்திரம், மருந்து இவை மூன்றும் மனித வாழ்வில் உண்டாம், பலவாகிய கேடுகளையும், குறைபாடுகளையும், தடைகளையும் தவிர்த்துக் கொண்டு மேலான இன்பநிலை எய்த உதவுவனவாம். இந்த மருந்தும், தூல, சூக்கும, காரண தேகங்களின் கேட்டை விலக்கும் பொருளாய் இருக்கவேண்டும். புறவுடற் பிணி தீர சுத்த (அருள்) சத்துவ உணவு மருந்தாம், சூக்கும உடற்கு அருள் உணர்வு மருந்தாம். காரண தேகத்திற்கு அருள் உறவு மருந்தாம். மருந்து என்ற சொல், ம் + அருந்து என விரிந்து விளக்கும்போது அறியப்படுவது மகரமெய் ஜோதியே அருட்ஜோதியாய் எங்கும் யாவுமாய் இருத்தலை யுணர்த்துவதாகும். அதனை உட்கொள்ளுதலே அருந்தலாகும். இதனால் தான், உடல் உணவிலும், உயிர் உணர்விலும், ஆன்ம உறவிலும் அருள் விளங்குவதால் எல்லாப்பிணியும் நீங்கி இணையில்லா இன்ப வாழ்வு பெறலாம் என்பது கருத்து.
உடற்பிணிக்கு காரணம், திரி தோஷம் என்னும் முக்குற்றமாகிய, வாத, பித்த, சிலேத்தும் அக்கிரம, அதிக்கிரமங்களால் ஏற்படும் நிலையே நோய்களுக்குக் காரணமாம். இவ்வுடற் பிணிகளைப் போக்கிக்கொள்ள திரிதோஷ சமனப் படுத்தும் சுத்த உண்டியே மருந்தாக அமைகின்றன. தாவர மூலிகைப் பொருள்களும், உலோக சத்துப்பொருள்களும், உப்பு வகைகளும் முறையோடு பக்குவப்படுத்தி ஏற்றபடி உண்பதால் பிணிகளை நீக்கிக் கொள்ள முடியும். இதனால் இம்மருந்து அருந்தி சுகம்பெறுதல் இயற்கையுணவு முறையிலேயே அமைந்திருத்தலின், பிணியே ஏற்படாது, அப்போதப்போது காத்துக்கொள்ளக்கூடும். இயற்கைக்கு மாறுபாடான உண்டிப்பழக்கத்தால் புதிய புதிய நோய்கள் தோன்றவும் வேறுவேறான மருந்துகளைக் கண்டுபிடித்தும், பல்வேறு வகையான மருத்துவமுறை உலகில் பரவி வளர்ந்துகொண்டு விருத்தியாகி வருகின்றனவாம். சித்த மருத்துவம், இயற்கையும், எளிமையும், சிறப்பும், திருவருள் அடைவதற்கு ஏற்றதுமாய் அமைந்திருக்கின்றது. மற்ற மருத்துவ முறைகளில் சில நல்ல பயன் ஏற்படுவதாயினும், அருள்நெறிக்குப் பொருத்தமாக இருக்கின்றனவல்லவாம்.
உடற்பிணிக்கு மேற்படி முக்குற்றம் காரணம் எனினும், அத்தோடு மனோகரணக் குற்றம் அதிகமாகப் பாதிக்கின்றதாகும். இம்மன நோய் புற மருந்தருந்துவதால் தீராது. வேண்டாத, கோபம், பகை, பொறாமை, பேராசை, தயவின்மை, தீயகுணம் (குற்றங்)களை யொழித்துவிட்டுசச் சுத்த தயாவுணர்வையே பெருக்கிக்கொண்டால் இந்த மனப்பிணி தானே நீங்கி, உடற்பிணியையும் யொழித்துவிடுவதும் கூடும்.
இதற்குமேல், ஆன்மாவிடத்து மும்மலப்பிணி இயல்பாகவே இருந்துவருகின்றது. இது மருந்தாலோ, மன உணர்வாலோ, மற்ற புறச் செயல் முறைகளாலோ நீக்கப்பட முடியாதாம். திருவருளின் சேர்க்கையால்தான் சுகவாழ்வு உள்ளிருந்து உயிருடம்பிலும் நிரம்புகின்றது. ஆகவே இந்த அருள்தானே எல்லாவற்றிற்கும் மேலான மருந்தாய் இருக்கின்றதென்று அறியலாகும். இதனால் மூவுடற்பிணிகளும் அறநீங்குவதோடு, அம்மூன்றுமே அழியாத சுத்த, பிரணவ, ஞான தேகமாய் மாறிப் பேரின்பவாழ்வோடு விளங்கவல்லதாகும். இந்த அருள் மருந்ததைத்தான் நம் வள்ளல் ஏற்றுக்கொண்டார். இதனால் உடற்பிணிகளையும், உயிர்ப்பிணிகளையும் அடர்ப்பற (சற்றும் நெருங்காதபடி) முற்றும் நீக்கி்க்கொண்டு விட்டார். இவர் ஏற்ற அருட்பெருஞ்ஜோதி மருந்துதான் இங்கு அருட்சிவமருந்து என்று போற்றப்படுகின்றது.
(2)
1323. சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
1324. தித்திக்கு ஞானத் திருவருள் மருந்தே
(உ-வி) சிவம் என்பதை, சச்சிதானந்தமான அருள் ஒளியாகவே இருக்கின்றது என அறிய வேண்டும். மற்றபடி, உலகறி சமயத் தெய்வமாக, மதச்சார்புடையதாகக் கொள்ளக் கூடாது. இந்த அருட்சிவ மருந்துதான் நம் உண்மைக் கடவுளான்ம வடிவமாக இருக்கின்றது. இதனால் இவ்வுள்ளொளி வடிவம், அருள்மருந்தின் உருவம் என்றால், உண்மையேயாம். இக்காரணத்தாலே நம் உண்மைக்கடவுள் தத்துவத்தை உருவாக்கி வழங்கவந்த ஞானசித்தர்கள் தெய்வ விக்கிரகத் திருவுருவத்தை மருந்துச் சரக்குகளாலும், நவ பாஷாண, நவரத்தின உருக்குகளாலும், பாதரசக் கட்டுகளாலும் அமைத்து மந்திரசக்தியைக் கூட்டி, மணி, மந்திர, மருந்து எல்லாமே கூடிய ஒன்றாய்ச் செய்துவைத்துள்ளனர். இதனால் நம் திருக்கோயில்கள், உடற்பிணி, உயிர்ப்பிணி யாவையும் தீர்த்து சுகநல்கும் மருத்துவத்தத்துவ இல்லங்களாகவும் கலைஞானக் கோவில்களாகவும் விளங்குகின்றனவாம்.
ஞானத்திருவருள் மருந்து, புறத்திலிருந்து வாய் மூலமாகவோ, ஊசியால் உட்செலுத்தப்படுவதோ, ஒளிக்கதிர்களால் பரப்பப்படுவதாகவோ, தொடுவருமம், படுவருமம் (With Contact or Without Contact) ஆகிய முறைகளாலோ, மற்ற வகைகளாலோ பெற முடியாதது இந்த அருட் பெரு மருந்து. இது எப்பொழுதும் உள்ளிருப்பதுதான். ஆனால், உயரிலோ, உணர்விலோ, உடலிலோ, சாராது உள் அந்தரத்திலே, எதனாலும் தீண்டப்படாது விளங்கிக் கொண்டுதான் யாவையும் புரிந்துகொண்டேயுள்ளதாம். இப்படியுள்ளதை அருள்விசாரத்தால் உணர்ந்துகொள்ளவும், அடைந்து அதுவாகி விளங்கவும் முடிவதாம். இப்படி அகமிருந்து விளங்கும் மருந்துருவாய் அருட்பெருஞ்ஜோதியை அனுபவத்திற்கொண்டு வாழ்வது என்பது, ஒருமையினால் அந்நிலை பொருந்திய எண்ணத்தோடு, புலனிச்சையில்லாது அன்புப்பணி புரிந்துகொண்டிருப்பதுதான் வழியாகும். இப்படிச் செய்துகொண்டிருந்தால் அகமிருந்த மருந்து அனகமாகி உயிரிலும், உடம்பிலும் கலந்து கொண்டு சுகம் அளிப்பதாம். இது உள்ளிருந்து சதா தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பதால், அதன் இன்சுவையும் சத்தும் பயனும் சதா அனுபவிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். சர்வசித்திகளுக்கும் இம் மருந்து காரணமாய் இருக்கின்றதாம். மற்றெந்தக் கற்ப மூலிகை மருந்தும் இத்திருவருள் மருந்துக்குச் சற்றும் ஒப்பாகாது.
(3)
1325. இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
1326. சிறந்தவல் லபமுறு திருவருள் மருந்தே
(உ-வி) உலக மருந்துகள் சாதாரணமான பிணிகளைத் தீர்த்து ஓரளவு வாழ்வளிக்கும் வல்லபமுடையனவாம். மூர்ச்சை மயக்கம், உயிர்த்தடை, இதயநிறுத்தம் முதலிய மரணத்திற்கு அடுத்த நோய்களை யொழித்து உயிர் விளக்கம் தரும் உயர் ரக மருந்துகளும், சஞ்சீவிகளும், அமிர்தங்களும், உண்டெனக் கேள்விப்படுகின்றோம். இவைகள் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பதும் பயன்படுவது என்பதும் உலகம் அறிந்துள்ளதே. நம் அருட்பெருஞ்ஜோதி மருந்து இறந்தாரை எல்லாம் எழுந்திடப்புரியும் பெருஞ்சக்தி வாய்ந்ததாம்.
இறந்தவரை எழுப்புதல் என்பது ஓர் அற்புத சித்தியாகக் கருதப்படுகின்றது. மணி மந்திர மருந்துகளால் அல்லது தீவிர பக்தி சக்தியால் மாண்டு போன ஒருவனை மீண்டும் உயிர்த்தெழச் செய்தல் ஓர் அற்புதமான செயல்தான். ஒருவனை உயிர்த்தெழச் செய்வதால் யாருக்கு என்ன நன்மை? அது கடவுள் விதிச் சட்டத்திற்கு மீறின செயலாகுமா? இதுபோன்ற வினாக்களுக்கு விடைகாணும் போது, திருவருளுக்கு எதுவும் செய்தல் கூடும் எனவும், அந்த அருளின் ஆற்றலை உலகம் அறிய இச்செயல் ஒரு சான்றாம் எனவும், ஆகையால், அவ்வருளைப் பெற முயல்வதற்கு இது உதவலாம். மற்றபடி ஒருவன் இறப்பதற்குக் காரணம், அவன் கடவுள் நிலையை அடையாததேயாகும். அந்தப் பிறப்பில் அப்படி அடைய வேண்டியதை அடையாததால்தான் இறக்க நேர்கின்றது எனவும், கடவுணிலை பெறும் வரையும் பிறவித் தொடர் அருளப்படும் என்பதும் உண்மையாம். ஆகையால் விதி முறைப்படி இறந்தவனை எழுப்புதல் அவ்வளவு சிறப்பு வாய்ந்த செயலாகக் கொள்ள முடியாது. பலவித பிணியாலும், தொல்லைகளாலும், வேதனைப்பட்டு மாண்டவர்களை எழுப்பினால், அவர்கள் முன்னிலும் அதிக வேதனைக்குள்ளாவார்களேயன்றி நல்வாழ்வுக்கு ஏற்றவர்களாகார். ஆகவே கடவுளே அவர்களுக்குப் புதுமுறை வாழ்வு தரவே, இறப்பைக் கொடுத்தார் என்று அறியலாகும்.
ஒருவர் இருவரை உயிர்த்தெழச் செய்தால் உலகம் அதிசயிக்கும், போற்றிக் கொள்ளவும் கூடும். இறந்தவர்களை எல்லாம் எழுப்பி விடுவதாயின் பெருந் தொல்லையும் தீராத பிரச்சினையும் ஆகிவிடும். ஆதலின் இறந்தவர்களையெல்லாம் எழுப்புதல் திருவருட் சம்மதமல்ல. உலகமே கொள்ளாது போம். உயிர்த்தெழுப்பப்படும் கொள்கையும், எழுப்பி நியாயத்தீர்ப்பு கூறப்படும் என்ற கொள்கையும் எவ்வளவு உண்மை என்று அருளறிவால் அறியலாகும்.
இங்கு குறிக்கப்படுகின்ற திருவருள் மருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பும் வல்லமை உடையது என்று உணர்த்தப் பெறுகின்றோம். உலகில் இதுகாறும் தோன்றி மறைந்த ஆன்மாக்கள் எத்தனையோ அவ்வளவும் இறந்தவர்களே. அவர்கள் பிறந்து பிறந்து இறந்துகொண்டேதான் இருக்கின்றார்கள். புறத்தேகம்தான் தோன்றுவதும் மறைவதும் ஆக இருக்கின்றதை அறிவோம். உண்மையில் ஆன்மாதான் வாழ்கின்றது, அனுபவிக்கின்றது, அடங்குகின்றது, மீண்டும் வேறு தோற்றங்கொண்டு வருகின்றது. ஆகையால் உடலையே மனிதனாகக் கருதுதலும், பிறப்பு இறப்பு அடைந்ததாக நினைத்தலும் அபக்குவ ஞான நிலையே. பக்குவமடைந்து ஆன்ம உண்மையைப் புரிந்து கொண்டு அதுவாக இவ்வுலகிடை வாழ்தலே, உண்மைப் பிறப்பும் வாழ்வுமாகும். இந்நிலை பெறாதவரை அவ்வான்மா உயிரொடு செத்த நிலையிலிருப்பதேயாம். ஆகவே, ஆன்மாவே உண்மை மனிதனாய், இறந்தநிலையில் இருப்பதாகக் கொள்ளப்படுகின்றது. இப்படி இறந்துள்ள ஆன்மாவைத்தான் திருவருள் எழுப்பப்படுகின்றது. வள்ளல் பெற்ற இந்தத் திருவருள் மருந்தால் செத்தவர்கள் (ஆன்மாக்கள்) எல்லாம் எழுப்பப்பட்டுவிட்டுள்ளனர். இனி மனிதன், அகவாழ்வில் அருள்உண்மை கொண்டு விளங்கவல்லவனாகியுள்ளான். இதுதான் அருள் மருந்தின் பேராற்றலாகும்.
அருட்பெருஞ்ஜோதி மருந்தால் மனிதன் தன் அக எழுச்சி பெற்று ஆனந்தவாழ்வில் வாழச் செய்வது சுத்த சன்மார்க்க முறை. மற்ற மார்க்கங்களில் உண்மை அறியாது வீண்போவது திருவருட் சம்மதமல்லவாம். இம்மருந்தால் மக்கள் இனம் முழுமையும் பெருநலம் பெறுவது திண்ணம்.
(4)
1327. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
1328. கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
(உ-வி) பிணி, ஒருவனைக் கட்டிப் போடுவது, அதனால் செயல்பட முடியாமல் போகும். அப்படிப் பட்டுச் செயல் முற்றும் கெட்டு உயிரும் கெட்டுப்போவதே மரணம் என்கின்றனர். மரணம் என்ற சொல், உயிர் உணர்வு மரத்து, உடலும் மரத்து மரம்போல் ஆகி விடும் நிலையாம். மற்ற பிணிகள் எல்லாம்கூட இலேசான மருந்துகளால் தீர்த்துவிட முடியும். அல்லது தந்திர உபாயங்களால் அப்பிணிகளை விலக்கிவிட முடியும். ஆனால், மரணம் உயிரை உடலினின்று பிரித்துவிடுகின்றதால், அம்மரணத்தைச் சாதாரணமான மனித முயற்சிகளால் தவிர்த்துக் கொள்ள முடியாததால் அதனை பெரும்பிணி என்கின்றனர். அம்மரணப் பெரும்பிணியை ஒழிக்கவல்லது அருட்ஜோதி மருந்து ஒன்றேயாகும். இம்மரணமாகிய பிணியின் முடிவு, உடலையே அழித்து விடுவதாம். அவ்வழிவேதான் மரணம். இந்த இறப்பு ஏற்பட்டபின், உயிர்த்து எழுப்புவது, பேராற்றல் கொண்ட அருள் மருந்து ஆம். மரணம் வந்தபின், உயிர்த்தெழுப்புதல் யாரால் முடியும்? ஒரு சில மகான்கள் எப்போதோ ஒரு சில இறந்தவர்களை எழுப்பிவிட்டிருக்கலாம். அப்படி எழுப்பப்பட்டிருந்தாலும்கூட, எழுந்தவர்கள் பின்னர் மடிந்தே போய்விடுகின்றனர். மேலும், அப்படி ஏதோ ஒரு சக்தி கொண்டு, பிறரை யெழுப்பி இருந்த போதிலும், அங்ஙனம், முன் பிறரை எழுப்பிய அவர்களே எப்படியோ அழிந்துபடுகின்றனர். அப்போது, தம்மை அவர்களும் எழச் செய்ய முடியாதவர்களாகின்ற தோடு, பிறர் துணையும் உதவாமல் போய்விடுகின்றதாம்.
இப்போது நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ள அருட்ஜோதி மருந்து, மரணப்பெரும்பிணியை வருமுன் தடுத்து வராமலே செய்து விடுகின்றதாம். இந்தப்பிணி ஒருவனில் பிறவிலேயே உடலில் வளரத்தொடங்கியிருப்பதாம். ஆனால் இது சாதாரணமாய்த் தெரிகின்றதில்லை, முதிர்ந்து, உறுத்தி, வருத்திடும்போது தெரிகின்றது. முடிவில் வெளிப்படுகின்றது அதாவது மரணம் சம்பவிக்கின்றதாம். ஆகவே, இந்த மரணம் என்னும் பிணி, “உடன் பிறந்தே கொல்லும் வியாதி, உடன்பிறவா மாமலையிலுள்ள மருந்தே பிணிதீர்க்கும், அம்மருந்து போல்வாரும் உண்டு,” என்று கூறப்பட்டுள்ளது. தோன்றுகின்ற உடலோடு தோன்றுகின்றது பணி. அப்படித் தோன்றியுள்ள பிணியை யொழிக்க வல்லது, தோற்றக்கேடில்லாத, நித்தியமான நம் கடவுளான்ம வடிவாகிய அருட்ஜோதிமலை தரும்மருந்து ஒன்றேயாம்.
அருட்ஜோதிமாமலை மருந்தை ஏற்றவர் நம் அடிகளார். அது அவருக்குப் பேராற்றலை வழங்கினது. அந்த ஆற்றல்தான் கரணப் பெருந்திறல் என்று கூறப்பட்டுள்ளது. கரணமாவது, அகம், புறம் என்னும் இருவகைப்படும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் நான்கும் அகக்கரணமாம். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் புறக் கரணமாம். இவ்விரு கரணங்களும் பொருந்திய ஒன்றே, இரண்டிற்கும் பொதுவான மனமாம். இம் மனத்திற்குத்தான் அம் மருந்து அருள் ஒளியை முதலில் தந்து விட்டதாம். உண்மையில் மனமே திருவருள் வண்ணமானதே. இப்படி அருள்ஒளிமயமான மனம்தான் பேராற்றல் கொண்டதாய் விளங்கலாயிற்று. அதுவே, மரணப் பெரும்பிணி வாரா வகை, செய்துவிட்டதாம். இதனையே இந்த அடிகளில் “மரணப் பெரும்பிணி வாரா வகை, கரண மிகு பெருந்திறலைக் காட்டி வாழ்வித்ததாகக்,” குறித்துள்ளார். எனவே, இந்த அருட்பெருஞ்ஜோதி மருந்தே மரணநோயைச் சமூலத்தோடு அழித்து, சகமீதென்றும் அழியாது வாழவைப்பதாம்.
(5)
1329. நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
1330. உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே
(உ-வி) மனிதப்பிறப்பு வடிவில் இயல்பாய், மும்மலப்பிணியோடு முக்குற்றமாகிய, வாத, பித்த, சிலேத்துமக் கேட்டால், மலம், சிறுநீர், இரத்தம், சுக்கிலம் இவைகளில் கேடுகள் உண்டாம்போது, பலவாகிய பிணிகள் தோன்றுகின்றனவாம். இப்பிணிகளின் விளைவால் உடலில் நரையும், திரையும், மூப்பும் தோன்றுகின்றனவாம். இப்பிணிகளையும் இவற்றால் வரும் கேடுகளையும் ஒழித்தற்பொருட்டு, பலவேறு மருந்துகள் கையாளப்பட்டு வருகின்றனவாம். மனிதன், அறியாமை இருளிலும் பொறிகரணச் சிற்றறிவு கொண்ட மருளிலும் சென்று கொண்டிருக்கும் வரை, நாளும் பிணிகள் பெருகுகின்றன, மருத்துவர்களும் பெருகின்றனர், அவர்களால் மருந்துகளும் பெருகுகின்றனவாம். என்று மனிதன் அருள் ஒளி நெறியில் பயின்று அன்பறிவோடு வாழத் தொடங்குகின்றானோ அன்று முதல் தான், பிணிகள் குன்றியொழியும்; சுகவாழ்வு நின்று வளர்ந்தோங்கும்.
பெருமையும் மிகு சிறப்பும் உடையது நல்ல அருள் மருந்து. உரைதரு பெருஞ்சீர் என்றது, பெருஞ்சிறப்புடையதாய்ச் சொல்லப்படுகின்றது என உரைப்பதைக் காட்டிலும், அந்த அருட்பெருஞ் சிறப்பைச் சொல் மூலமாக வெளிப்படுத்திப் பிறரும் அதனை ஏற்றுப் பெரும்பயன் அடைவார்கள் என்பது பொருத்தமான பொருளாகக் கொள்ளலாம். இந்த அருள் மருந்து, அகப்பிணியை முதலில் தீர்த்து விடுவதால், உள்ளத்தும் உயிரினும், உடலினும் நல்லின்பநிலை தோற்றுவது சகசம். இதனால், தத்துவங்களின் கேட்டால், உடலில் ஏற்படுகின்ற, ஏற்பட்டுள்ள நரையும், சுருக்கங்களும், தளர்ச்சி முதலியனவும் தவிர்க்கப்படவும், தடுத்து ஒழிக்கப்படவும் கூடும். வருமுன் காப்பாக சிறுபோதே அருள்நெறி பயின்று நல் வாழ்வில் தழைப்பது திருவருள் ஆணையாம்.
(6)
1331. என்றே யெனினு மிளமையோ டிருக்க
1332. நன்றே தருமொரு ஞானமா மருந்தே
(உ-வி) அருள் ஞானத்தால் விளைகின்ற நம் அருட்ஜோதி மருந்து பிற விடங்களில் காணப்படாத ஒன்றாம். மற் மருந்துகள், கற்பங்கள், அமிழ்தங்கள், யோகசித்தியால் அடையப்பெறும் ஜீவரசமாகிய சந்திரகலா அமிர்தம், சரீரசித்தி உபாய முறைகள், தத்துவசித்திக் கற்பனா முறைகள், பக்திசித்தி மார்க்கண்ட மார்க்கம் எல்லாம் அருள் இன்பப் பெருஞ்சித்தியோடு வாழ வகைசெய்வனவல்ல என்பது உண்மையாம். ஆகையால், அவைகளை அறிய விரும்பியும், அடைய முயன்றும் ஏதோ ஏகதேசம் பெற்றும் பெறாமலும் வீண் போய்விடுதல் கூடாதாம். நமது ஞான மாமருந்து, மெய்யறிவின்ப அருட்ஜோதிப் பெருமருந்து ஒன்றே என்றென்றும் மூப்புறாது, இளமையோடிருக்கவும், நலமெலாம்கொண்டு நன்கு மகிழ்ந்து வாழவும் உதவுவதாம். கடவுள் உண்மையை ஒருமையிற் கண்ட யோக ஞான சித்தர்கள் தாம், அக்கடவுள் உண்மையை நித்திய இளமையோடிருக்கும் வாலை என்றும், பால முருகன் என்றும, கன்னி குமரி என்றும், நித்திய கல்யாணி என்றும், இளம்பூரணன் என்றும் இன்னும் பலவாகவும் பெயரிட்டுச் சுட்டியதோடு, அமிர்தம் என்றும் மூவா மருந்தென்றும், சாவாநிலை என்றும் குறித்துள்ளனர். அதனைப் பெற்று வாழ்வில் சிறப்புற வேண்டி, எத்தனையோ தந்திர முறை வகுத்து, வழங்கியுள்ளனர் அந்த அகமுணர்ந்த பெரியோர். அம்முறைகளின்படி அறியாமலும், அறிந்தும் மிக முயன்றும் சிலர் ஓரளவு சித்தியும் பெற முடிந்தது. ஆனால், அவை எதனாலும் எவரும் சந்ததமும் இளமையாய் இருந்துகொண்டு சதானந்த வாழ்வில் திகழமுடியாதவர்களாய்ப் போயினர். ஆகவே, அந்நெறிமுறைகளுக்கு அப்பாலான அருட்பெருநெறியான சுத்த சன்மார்க்கத்தால், சுத்த சுகானந்த வாழ்வு பெற வள்ளலார் மூலம் இந்த ஒரு ஒப்பற்ற ஞானமாமருந்து கிடைக்கப் பெற்றுள்ளோம்.
இவ் அருட்பெருஞ்ஜோதி மருந்து, நம் உள் என்றும் ஒரு படித்தாய், எல்லாம் வல்லதாய், இருந்து அருளனுபவத்தில் வெளிப்பட்டு அழியாமையோடு, வாழச் செய்வதாம். தியான மயமானால் பொசிப்பு மாறும் என்றபடி அகத்தே அவ்வொளியை நினைந்து நினைந்து முடிவில் அதுவாகி நின்றால் உணர்வும், உயிரும், உடலும் அவ்வருள் ஒளிமயமாகி நித்தமாய் விளங்கத் தொடங்குவதாம். ஆகையால் இச் சுத்த சன்மார்க்க நெறியொன்றே மனிதனை என்றும் இளமையோடும், சர்வ சக்தி சித்திகளோடும் விளங்கச் செய்யவல்லதாம். ஆதலின், இந்த அருள் மருந்தை யாவரும் அறிந்து, அருள் வாழ்வு பெற, அகம் கொண்டு திருவருளால் உய்வோமாக.
(7)
1333. மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
1334. நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
(உ-வி) அருள் வலம் அல்லது அருளின் வெற்றி ஆற்றல் தான், எல்லா நன்மையும் நல்கும். மலப்பிணியைத் தவிர்த்துக் கொண்டால்தான் சுகமாக வாழ முடியும். உடல் வாழ்வில் உணவு முக்கியமாக ஆற்றலைத் தருகின்றது. ஆனால் அவ்வுணவின் சத்து அம்சமே நல்லாற்றலுக் குரியதாகும். சக்கையாகிய அசத்துப் பொருள் மலமாகக் கழிக்கப்பட்டு விடுகின்றது. அந்த மலம் ஒழுங்காகக் கழிக்கப்பட வில்லையானால் அதுவே சகல நோய்க்கும் காரணமாம். ஆதலின், மலப்பிணி அல்லது மலச்சிக்கல், பல சிக்கல்களுக்கும் பிணிகளுக்கும் காரணம் எனப்படுவது உண்மையே. உடற்சுகம் இருந்தால்தான், மனம் சாந்தியாக இருந்து உள் நிலைத்து உயிரிரக்கப் பணி புரிதல் கூடும். மனப் பிணிக்கு அவா வெகுளி மயக்கமே காரணம். மேல் அக ஆன்ம வடிவிற்கு ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மூன்றுமே மலப்பிணிகளாக உள்ளனவாம். இவற்றையொழிக்க அருள் விளக்க உண்மையே அருள் உணர்வாகத் தோன்றி நின்று உதவுகின்றதாம்.
மனிதன் உண்மையில் யார்? கடவுட்சிற்றணுவாகிய ஆன்ம நித்திய வடிவினனாய் இருக்கின்றான். பூத இருள், ஒருவனுடைய இருப்பை உணர்த்துவது இயல்பு. ஆனால் ஆணவமல இருள் ஒருவனின் இருப்பைக் கூட உணர முடியாதபடி செய்துள்ளதாம். ஆன்மாவோ உண்மையில் கடவுட் சிற்றுருவே ஆம். இது கடவுள் வடிவமே என்பதுதான் விளங்குகின்றதில்லை அந்த ஆன்மாவுக்கு. தான் வேறு, தனக்கு வேறாகக் கடவுள் இருந்து வருகின்றார் என்று கருதிடச் செய்வதுதான் ஆணவ மலப்பிணியால் ஏற்பட்டுள்ள நிலை. இம்மலப்பிணி வேறு எதனாலும் நீங்குவதே யில்லையாம்; திருவருள் ஒன்றினால் தான், இந்த ஆணவமலம் அடியோடு ஒழியும். அதாவது, கடவுள்தானே தனது திருவருளால், இந்த ஆன்ம அணுவாய்த் திகழ்ந்து நின்று விளங்குகின்றார். இப்படி எண்ணிலி கோடி ஆன்மாவாயும் இருப்பது ஒன்றான கடவுளேயாவர். இந்தக் கடவுள் சிற்றணுவின் இருப்பு, எப்பொழுது வெளியாகின்றது என்றால், இவ்வான்மா தன்னைத்தானே அறிகின்ற மனிதப் பிறப்பு வடிவாய் மலர்ந்து விளங்கும்போதுதான். இப்படித் தன்னைத்தானே அறிகின்ற ஆன்மா, தான் கடவுள்தான், என உணர்ந்துகொண்டுள்ளது. இதுவே அருள் அறிவால், மனிதன் கடவுளாய் இருப்பதை உணர்ந்துகொண்டுள்ள நிலையுமாம். இந்நிலையில், பக்குவமனித வடிவில் வெளிப்பட்டு விளங்கும் கடவுள் ஆன்மா ஒன்று, தன்னைக் கடவுள் வடிவாகத்தான் உணர்கின்றது. அதாவது அந்த மனிதனே தன்னை அக்கடவுள் ஆன்மாவாக அறிகின்றான். அந்தக் குறிப்பிட்ட மனிதவடிவிலிருந்து, தான் அக்கடவுள் ஆன்ம வடிவினன் என்பதை உணர்கின்றதோடு, அக்கடவுள் எங்கும் ஒவ்வொரு ஆன்மாவும் தானாய் இருப்பதையுணரும் அம்மனிதனும் எங்கும் தானாய் இருப்பதை, தன்னை யன்றி, அயலாய் பிறர் என்பதே இல்லாததாகவும் அறிகின்றான். தானே அருள் வாழ்வு நடத்த அப்படி வேறு வேறு மக்கள் வடிவிலும், உயிர்களின் வடிவி்லும், பொருள்களின் வடிவிலும், உள்ளிருந்து அவர்களாய், அவைகளாய்த் திகழ்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அறிகின்றான், இது மலப்பிணியற்ற அருள்வாழ்வு நிலையாம். இவ்வாழ்வுதான் நிறை இன்பமும் ஆற்றலும் கொண்டு விளங்குவது.
(8)
1335. சிற்சபை நடுவே திருநடம் புரியும்
1336. அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே
(உ-வி) சிற்சபை என்பது கடவுள் ஆன்ம வடிவமே. இதில் தான் கடவுள் நிறையுண்மையும் வெளியாகி அனுபவப்பட உள்ளதாம். ஓர் ஆன்மாவில்தான், கடவுள் எழுந்தருளி, ஆனந்தத் திருநடனம் என்னும் ஐந்தொழிற்செயல் புரிந்து கொண்டிருப்பதாகவும் அந்த ஆன்மாவே அருளால் அனுபவத்தால் உணர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த சிற்சபையில் ஏற்பட்டுள்ள அனுபவத்தைக் கொண்டுதான், இப்படியே ஒவ்வொரு சிற்சபையாம் ஆன்மாவினும் இருந்து ஐந்தொழில் விளங்க ஆடிக் கொண்டிருப்பதாக உணரப்படுகின்றது. ஆம் அப்படி உணரப்படுவதேயன்றி உடம்பால் அனுபவிக்கப்படுகின்றதல்லவாம்.
ஆகவே, ஆன்மாவயமாகிய சிற்சபையில், நம் அருட்பெருஞ்ஜோதிபதி, அற்புதானந்த மருந்துவடிவாய், இருந்துகொண்டு திருநடனமாம் ஐந்தொழிற்செயல் புரிந்து கொண்டிருக்கின்றார். இதனால் ஒவ்வொரு ஆன்மாவும் இந்த அருள் அனுபவம் அடைகின்றபோது ஆனந்த வாழ்வில் விளங்குவதாக அறியப்படுகின்றதாம். நாம் இந்தச் சிற்சபையில், அருட்ஜோதிவடிவில் இருந்து கொண்டு, இந்த உலகில் தயாசித்திச் செயல் புரிந்து கொண்டு வாழ்வதுதான் இந்த அற்புதானந்த மருந்தின் விளைந்த நிறை இன்ப வாழ்வு நிலையாகும். கடவுளே இச் சிற்றம்பலத்திலிருந்துதான் பண்டே தொட்டு அருள் ஆடல் புரிந்து கொண்டிருக்கின்றார். இன்று அருளாலே இவ்வுண்மை கண்டு, அதுவாகி நின்று, அருள் வாழ்வு வாழும் போது அதுதானாகிய அனுபவம் ஏற்பட்டு என்றும் நிலவுவதாம்.