அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கம்.
சுவாமி சரவணானந்தா.
55. எண்ணியாங் கின்புறத் தருசபை
- இன்புறு நானுறத் தெண்ணியாங் கெண்ணியாங்
- கன்புறத் தருசபை அருட்பெருஞ்ஜோதி
(உ-வி) நமது அருட்பெருஞ்ஜோதி நமக்கு உண்மையான தேவை இன்னதுதான் என்பதும், அத்தேவையை எல்லாம் எப்படி எப்பொழுது நமக்கு வழங்கி வழங்கிப் பயன்கொள்ளச் செய்யவேண்டும் என்பதும் அவருக்கு நன்கு தெரியும். நமக்கு அந்த உண்மைத் தேவைதான் சரியாகப் புரிகின்றதில்லை; புலனின்பவேட்கையில் எழுந்த விருப்பு வெறுப்புக் காரணமாய் நாம் எதை எதையோ வேண்டும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டேயும், வேண்டாம் வேண்டாம் என்று மறுத்துக் கொண்டேயும் இருக்கின்றோம். ஆனால், அவர் திருவுள்ளப்படிதான் எதுவும் அடையப் பெறுகின்றதே அனுபவம். அகமுடையாளின் ஆணைப்படி வழங்கப் பெறுவன கொண்டு அன்புப் பணிக்கே உதவி வருதல்தான் திருவுளச் சம்மதமாம். அப்படி உதவிப் பிறர்க்குப் புற உயிர் விளக்கமும், அக ஆன்ம விளக்கமும் செய்து விட்டு, நம் உள்ளத்தே அருள் விளக்கமும், ஆனந்த அனுபவமும் அடைதல் வேண்டும். இவ்வானந்தம் தான் உண்மையான இன்பம் எனப்படுவது. மற்றபடி கிடைக்கப் பெறும் சிறு சிறு புலனின்பம் எதுவும் உண்மையான இன்பமாகாது.
நம் வள்ளற் பெருமானின் உள்ளத்தளியில் சுடர் விட்டிலங்குகிறது அருட்பெருஞ் ஜோதியே ஆம். அந்த ஜோதியோடு ஒன்றி நிற்கும் அவர் தான் என்ற அகங்கார போதம் அழிந்து சுத்த அருள் வண்ணமாய் இருக்கின்றார். அந் நிலையில் அந்த உள்ளத்தில் எழுகின்ற வண்ணம், அவருடையதா ஆண்டவருடையதா என்று பிரித்தறிய முடியாதபடி சுத்த அன்பு மயமாய்த்தான் இருக்கின்றதாகும். ஆகையால், அவ்வெண்ணம் தடையுறாது செயல்பட்டு இன்பப் பயன் தருவதாகும். எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின் என்கின்றனர். இங்கு அருள் இறை விளங்கும் உள்ளத்தின் திண்மை அளவிடலாகாதே ஆதலின், எண்ணியாங்கு எய்துவதில் தடையும் உண்டாகாது, தாமதமும் நேராது.
அன்பு, இன்பு என்ற இரு சொல்லின் அனுபவப் பொருள் இங்கு ஆய்ந்து கொள்ளுதல் பொருந்தும். புறத்தே ஜீவகாருண்ய அன்புச் செயல் புரியப் புரிய, அகத்தே கடவுட் கருணையின் இன்பானுபவம் ஓங்குகின்றதாம். நமது அருள் வள்ளல் தயவோடு எண்ணியதெல்லாம் உடனுக்குடன், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வழங்க வழங்க, அவற்றை அப்படியே அன்போடு பிறர்க்கு வழங்குகின்றார். அதே சமயம் அவரது உள்ளத்தில் இன்பம் பெருகுகின்றதாம். மெய்யன்பினாலே மெய்யின்பம் தழைக்கின்றது. ஜீவ தயவும், பரோபகாரமும் விளங்காது, தனக்கே யாவும் படைக்கப் பெற்றும், கிடைக்கப் பெற்றும் உள்ளனவாக எண்ணுதல் மருள் மயக்கச் செயலேயாகும். அதனால் உண்டாகும் புலன் இன்பம் நிலவாது பொய்த்துப்போம்.
கடவுள் உண்மை வடிவம் அன்புதான் என்பர். அது வெற்று அன்பு மட்டுமல்ல, அன்பு, அருள், இன்பம் ஆகிய மூன்றும் சத்து, சித்து, ஆனந்தம் என்றன ஒன்றாய்க் கூடி சச்சிதானந்த வண்ணமாய் உள்ளது என்பது ஆன்றோர் அனுபவமாம். இந்த உண்மை கொண்டிலங்கும் நமது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைப் பணிந்து போற்றி அன்பின்ப வாழ்வு பெற்றுள்ளளார் நம் அருட் பிரகாச வள்ளலார். நாமும் அப்படிப் போற்றி நிறையருளால் அன்பின்பில் நித்தம் நிலவ வேண்டும்.
Write a comment