இறையருளால் 1941 முதல் 1950 வரை வடலூர் சத்திய ஞான சபைத் திருப்பணி செய்து கொண்டிருந்தேன்.
ஒரு மாதம் வேளையாட்களுக்கு சம்பளம் தரப் பணம் இன்றி நகைகளை அடகு வைத்து 3500 ரூபாய் கடன் வாங்கிச் சம்பளம் தந்தேன். 'வள்ளல் பெருமானே! அணிகலன்களை அடகு வைக்கும் நிலை வந்ததே', என்று எண்ணி உள்ளத்தில் ஆழ்ந்த வருத்தம் ஏற்பட்டது.
ஒரு நாள் வடலூரில் என் அன்பார்ந்த மூர்த்தியாகிய வடலூர் முருகனை வேண்டிக்கொண்டிருந்தேன். ஒரு கணவனும் மனைவியும் வந்து வணங்கினார்கள்.
அருகில் இருந்த ஒருவர், 'இவர் தனமும், மனமும் படைத்தவர்', என்று என் செவியில் கூறினார்.
நான் அந்த தம்பதிகளைப் பார்த்து, 'எந்த ஊர்?' என்று வினவினேன்.
'தெம்மூர், இராஜமாணிக்கம் பிள்ளை', என்று அவர் கூறினார்.
'உங்கள் ஊரில் ஒரு விரிவுரை புரிவேன். சத்திய ஞான சபைத் திருப்பணிக்கு பொருளுதவி புரியுங்கள்' என்றேன்.
அவர் அகமும், முகமும் மலர்ந்து, 'சரி என்றார்'. ஒரு நாள் குறிப்பிட்டு, சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தெம்மூருக்குச் சென்றேன். அன்று ஒரே மழை கொட்டியது. வீதியெல்லாம் வெள்ளம். எனக்கு வருந்தியது உள்ளம். 'மழையினால் மக்கள் கூடி விரிவுரையைக் கேட்டு மகிழமுடியாது. மக்கள் திரண்டு நிகழ்ச்சி நன்கு நடைபெற்றால்தானே, உடையவர் உள்ளம் உவந்து, திருப்பணிக்குக் கனிசமாகப் பொருள் தருவார். இப்படியாயிற்றே!' என்று வருந்தினேன்.
மழை நின்றது, வீதியெல்லாம் சேறு. தென்னை ஓலைக் கீற்றுகளையும், வைக்கோலையும் பரப்பினார்கள். மிக்க ஆர்வம் உள்ள அன்பர்கள் ஈரத்தை பொருட்படுத்தாது அமர்ந்தார்கள்.
வள்ளலார் வரலாற்றைக் கூறினேன். நிகழ்ச்சி ஒருவாறு நிரைவேறியது. இராஜமாணிக்கம் பிள்ளை 500 தருவார், நாம் 1000 கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
பிள்ளையவர்கள் மனைவியாருடன் வந்து வணங்கினார், ஒரு பெரிய தட்டு நிரைய ஆறு ஏழு பேயன் பழச்சீப்புகள், ஒரு கட்டு வெற்றிலை நிறையப் பாக்கு இவைகளை கொணர்ந்தார்.
அதைப்பார்த்தவுடன் என் மனம் திகைத்தது. சில நவராத்திரி விழா, ஆண்டு விழாக்களில் விரிவுரை செய்தால் பழங்கள் நிரைய இருக்கும். பழத்திற்கு அடியில் 25 ரூபாய் நோட்டு மட்டும் இருக்கும். இது எனது அனுபவம்.
இப்போது இங்கே நிரைய பழம் இருக்கின்றதே, திருப்பணிக்கு நோட்டு குறையுமே என்று எண்ணினேன்.
இதற்கு நேர்மாறாக, பழத்தட்டுக்கு மேல் 100 ரூபாய் நோட்டுகள் 35 இருந்தன. நான் நகைகளை அடகு வைத்து 3500 ரூபாய் கடன் பட்டிருப்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. என்ன கடன் பட்டுள்ளதோ அந்த அளவில் பணம் இருந்தது. 3000 தந்திருக்கலாம், அல்லது 2500 தந்திருக்கலாம். இந்த அற்புத நிகழ்ச்சி என் மனத்தை உருக்கியது. ரசீது தந்துவிட்டு அவரிடம் விடை பெற்று புறப்பட்டேன். அன்றிரவு எனக்கு உறக்கம் வரவில்லை. வள்ளலாரின் வான் அருளை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்தது.
Vaariyaar.jpg
ella uyirkalum inbutru vazhga!!
vallal malaradi vazhga!!!