SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
vallalaar is child of god
இராமலிங்க அபயம் துணை
பேருற்ற உலகிலுறு சமய மத நெறி எலாம் பேய் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென உணர்ந்திடாது உயிர்கள் பல பேதமுற்று அங்கும் இங்கும்
போருற்று இறந்து வீண் போயினார் இன்னும் வீண் போகாதபடி விரைந்தே
புனிதமுறு சுத்த சன்மார்க்கக நெறிகாட்டி மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏருற்ற சுக நிலை அடைந்திடப் புரிதி நீ என் பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிக என்றிட்டனம் மனதில் வேறு எண்ணற்க என்ற குருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிற்குனானந்தபரநாதாந்த வரை ஓங்கு நீதி நடராஜ பதியே .......1368

கட்டமும் கழன்றேன் கவலை விட்டொழிந்தேன் கலக்கமும் தீர்ந்தனன்பிறவிச்
சட்ட மும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன்
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வ மெய்ப்பிள்ளை என்றொரு பேர்ப்
பட்டமும் தரித்தேன் எனக்கு இது போதும் பண்ணிய தவம் பலித்ததுவே........1003

தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாய் உடன் அணைப்பள் தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித் திருமேனி அம்பலத்தாடும் புனித நீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மை அப்பா இனி ஆற்றேன் .........189

கொள்ளை இன்பம் கொடுத்தாய் நினது செல்வப்
பிள்ளை என எற்குப் பெயரிட்டாய் –தெள்ளமுதம்
தந்தாய் சமரச சன்மார்க்க சங்கத்தே வைத்தாய்
எந்தாய் கருணை இது ..............985

நீயே என் பிள்ளை இங்கு நின்பாட்டில் குற்றம் ஒன்றும்
ஆயேம் என்றந்தோ அணிந்துகொண்டான் –நாயேன் செய்
புண்ணியம் இவ்வானிற் புவியின் மிகப்பெரிதால்
எண்ணிய எல்லாம் புரிகின்றேன் ........................1252

இவ்வுலகத்தார் அனைவராலும் போற்றப்பட்டும் வணங்கப்பட்டும் வருகின்ற வள்ளலார் 1823ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐந்தாம் நாள் சிதம்பரத்தை அடுத்த மருதூர் என்ற கிராமத்தில் வசித்து வந்த ராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதிகட்கு மகனாகப் பிறந்தார்.இப்படித்தான் வரலாறு எழுதப்பட்டுள்ளது. வள்ளலாரோ நான் ஆண்டவனால் அனுப்பப்பட்டு இவ்வுலகிற்கு வந்தேன் என்கிறார்.
அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்தி சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே ..........................1273

ஆண்டவன் வள்ளலாரை இந்த உலகிற்கு ஏன் அனுப்பவேண்டும்?
முற்காலத்தில் நாகரிகம் தோன்ற ஆரம்பித்தபோது மக்களுக்குத் தேவைகள் அதிகரித்தன/. தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக மக்கள் தங்களையே சிறு சிறு கூட்டங்களாகப் பிரித்துக் கொண்டனர்.ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒவ்வொரு வேலை அளிக்கப்பட்டது.பயிர் வேலை செய்த கூட்டம் வேளாளர் என்றும் பாண்டங்கள் செய்தோர் குயவர் என்றும் மரவேலை செய்தோர் தச்சர் என்றும் நகை வேலை செய்தோர் ஆச்சாரி என்றும் இப்படி ஒவ்வொரு கூட்டத்திற்கும் தொழிலை வைத்துப் பெயர் வைக்கப்பட்டது.இந்தத் தொழில் நிமித்தமாக வைக்கப்பட்ட பெயர்களே தற்காலத்தில் ஜாதி எனப்பட்டது.
தெய்வ விளக்கம் பற்றியே சமயங்கள் ஏற்படுத்தப்பட்டன .நாகரிகம் வளர வளரக் கல்வி வளர்ந்தது.ஆனால் ஜாதி சமயம் பற்றிய அறிவு விளக்கம் வளரவில்லை.மாறாக அவைகள்மீது பற்று வளர்ந்தது இக்காலத்தில் பற்றானது வெறியாக மாறியுள்ளதைத்தான் நாம் இப்போது காண்கிறோம்
ஜாதிப் பற்றாலும் சமயப் பற்றாலும் பல ஆயிரக் கணக்கான மக்கள் மாண்டு போவதைக் கண்டு மக்களைத் திருத்தவே வள்ளலாரை இந்த உலகிற்கு அனுப்ப வேண்டிய அவசியம் இறைவனுக்கு ஏற்பட்டது.
இறைவனும் தன்னால் முடிந்தவரை அருளாளர்கள்.பலரை அனுப்பினான்.அவர்கள் ஜாதி சமயம் முதலியவற்றை அழிப்பதற்குப் பதிலாக வளர்த்துவிட்டார்கள். இறுதியாகத் தன் மகனையே அனுப்பத் தீர்மானித்துத் தன் மகனாகிய .வள்ளலாரை அனுப்பினான் .நான் இறைவனால்தான் அனுப்பப் பட்டேன் என்று வள்ளலார் சொல்லியும் அவரது பெருமையைஇருக்கிறோம்.
மேலே உள்ள பாடலைச் கவனித்தால் வள்ளலார் நம்மை எல்லாம் திருத்தவே வந்தார் என்பது புரியும் .அவர் ஆசிரியராகத்தான் வந்தார் என்று புரிந்துகொள்ளவேண்டும்
தன் மகன் ஒருவனால் மட்டுமே உண்மையை எடுத்துக் கூறமுடியும் என்றுதான் தன் மகனாகிய வள்ளலாரை இறைவன் அனுப்பியுள்ளான்.
வள்ளலார் யார்?
இறைவனுடைய மகனே வள்ளலார்
.சைவ சமயத்தில் சிவபெருமானுடைய மகனாகிய முருகனும் இறைவனே. கடவுளுடைய மகனும் கடவுளே.அருட்பெரும்ஜோதி என்ற கடவுளின் மகனாகிய வள்ளலாரும் கடவுள்தான்.கடவுளின் குழந்தைதான் வள்ளலார்.
ஒவ்வொரு மன்னனும் தன் மகன் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் இனி தன் மகனே அரசனாகட்டும் என்று தன் மகனுக்கு மகுடம் சூட்டுவது வழக்கம். அதேபோல் இறைவனும் தன் மகனான வள்ளலாருக்கு ஆட்சி செய்ய மகுடம் சூட்டினான்.
ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில்
ஜோதி மா மகுடம் சூட்டிய தந்தையே (அகவல் வரி 1130)

அண்ட பகிரண்டம் முழுவதும் ஆட்சி செய்யும் இறைவன் தன் கையில் பிடித்திருந்த செங்கோலை தன் மகனாகிய வள்ளலாரிடம் தந்து இனி நீ ஆட்சி செய் என்று கூறினான்.
தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே (அகவல் வரி 1134)
அரசனுக்குக் கொடி வேண்டும் அல்லவா?
சேர மன்னனுக்கு வில் கொடி.சோழ மன்னனுக்கு புலிக் கொடி.பாண்டிய மன்னனுக்கு மச்சக் கொடி.சைவத்திலே ரிஷபக் கொடி. வைணவத்திலே கருடக் கொடி. வள்ளலாருக்கு சன்மார்க்கக் கொடி.
அரசன் மக்களுக்குக் கல்வி அறிவு தரவேண்டும் அல்லவா
வள்ளலார் என்ற அரசர் கல்விக்கூடம் அமைக்கிறார்.
கல்வி அறிவு இல்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்று குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தோர் வரை படிப்பதற்கு கல்விக்கூடம் அமைத்தார்.தமிழ் மொழி மட்டும் அல்லாது வட மொழியும் உலக மொழியாகிய ஆங்கில மொழியும் கற்கவேண்டும் என்று மும்மொழித் திட்டத்தையும் ஆரம்பித்தவர் வள்ளலாரே.முதியோர் கல்வியைத் தொடங்கியவரும் வள்ளலாரே.
உலக வாழ்விற்குத் திருக்குறள் அவசியம் என்று கருதிய வள்ளலார் திருக்குறள் வகுப்பு நடத்தவும் ஏற்பாடு செய்தார்.
தான் தொடங்கிய சன்மார்க்கப் பாட சாலையில் நன்றாகப் படிக்கின்ற மாணவர்கட்கு அவர்கள் படிப்பிற்குத் தக்கவாறும் அவர்கள் குடும்பத்திற்குத் தக்கவாறும் சன்மானம் அதாவது உதவித் தொகை தரப்படும் என்று அறிவித்தார். மாணவனின் குடும்பத்திற்கும் ஊதியம் தந்தவர் வள்ளலாரே.

வறுமையில் வாடிய மக்களுக்கு மன்னன் உணவு அளிக்க வேண்டும் அல்லவா
வள்ளலார் உணவு அளிக்கிறார்.
தன்னைச் சார்ந்த மக்கள் பசிப்பிணியினால் வருந்தக்கூடாது என்றுதான் வள்ளலார் தருமச்சாலை நிறுவி ஜாதி,மத,சமய பேதம் ஏதும் இன்றி அனைவருக்கும் உணவு (சம பந்தி போஜனம்) அளித்தார்
1867ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்தத் தருமச் சாலையில் அன்று தொடங்கி இன்றுவரை தினமும் ஒரு வேளைக்கு முன்னூறு பேருக்குக் குறையாமல் மூன்று வேளையும் பசி தீர உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

மன்னர்கள் ஆலயம் கட்டினார்கள் வள்ளலாரும் கூட ஆலயம் நிறுவினார்
ஒரு குறிப்பிட்ட சமயத்தார் மட்டுமின்றி எல்லோரும் வந்து வணங்கக்கூடிய ஆலயமாக ஞான சபை ஒன்றை நிறுவினார்.ஓர் உயிரைக் கொன்று மாமிசம் உண்பவர்கள் இரக்கம் இல்லாதவர்கள் ..இரக்கம்இல்லாமல் வாழ்வோர்களுக்கு இறைவனின் அருள் கிட்டாது என்பது வள்ளலார் கருத்து..எனவே தான் நிறுவிய ஞானசபையில் மாமிசம் உண்போர் உள்ளே நுழையக் கூடாது என்று கட்டளை இட்டார்.
மன்னர்கள் நீதி வழங்க நீதி மன்றம் ஏற்படுத்தினார்கள்.
வள்ளலாரும் நீதி மன்றம் அமைத்தார்.
.வேட்டவலம் ஜமீன்தாரை நீதிபதியாக வைத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
குற்றம் புரிதல் மக்கள் இயல்பே. தவறு செய்கின்ற மக்களைத் திருத்தவும் தண்டிக்கவும் ஒரு நீதி மன்றம் வேட்டவலம் ஜமீன்தாரை அக்ராசனராக வைத்து நீதி வழங்க ஏற்பாடு செய்தார்.
மக்கள் ஞானம் பெற ஞான நூல்களை வெளியிட்டார்.
ஒழிவில் ஒடுக்கம்,சின்மய தீபிகை போன்ற ஞான நூல்களையும் பதிப்பித்தார்.
எந்த அரசனும் செய்யாத ஒன்றை வள்ளலார் செய்தார்.
மனித தேகம் எடுத்த யாரும் இறந்து போகக்கூடாது .எப்படி வாழ்ந்தால் இறவாமை பெறமுடியும் என்ற அறிவை மக்கள் பெறுவதற்காக ஒரு சன்மார்க்க சங்கம் அமைத்தார்.
அஞ்சுகின்ற மக்களுக்கு என்னால் உங்களுக்கு நன்மை கிடைக்கும் யாரும் அஞ்சவேண்டா ம் என்று உறுதி அளித்தது மட்டுமின்றி உங்கள் அனைவருக்கும் நான் துணையாக இருக்கிறேன் என்று கூறினார் . அதேபோல் நமக்குத் துணையாக இன்றும் இருக்கிறார். இதுவரை வந்த எந்த அருளாளரும் நான் உங்களுக்குத் துணையாக இருக்கிறேன் என்று சொல்லவில்லை.வள்ளலார் துணை இருக்க நமக்கு எந்தப் பயமும் தேவை இல்லை
.வள்ளலார் அன்று துணையாய் இருந்திருக்கலாம் இன்றும் இருக்கிறார் என்பதற்கு என்ன சான்று?
இதுவரை வந்த அருளாளர்கள் இறைவனைத் தேடி ஊர் ஊராக அலைந்தார்கள். ஆனால் அந்த இறைவனோ வள்ளலார் இருந்த குடிசையைத் தேடி வலிய வந்து அவருடன் கலந்தான் என்பதே உண்மை. ஆதாரம் அருட்பா.

வானிருக்கும் பிரமர்களும் நாரணர்களும் பிறரும் மாதவம் பன்னாட் புரிந்து
மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையிநூடே திருவடி சேர்த்து அருள்க
எனச் செப்பி வருந்திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு அருளமுதம்
நல்கியதன்றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளமெனும் சிறு
குடிசையுள்ளும் நுழைந்தனையே ( திரு அருட்பா)
வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டதற்குச் சில ஆண்டுகட்கு முன்பே இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான்..
தான் என்றும் அழியாத தேகம் பெற்றுவிட்டதாக அறிவிக்கின்றார். உதாரணமாக:
காற்றாலே ,புவியாலே, ககனமதனாலே,கனலாலே,புனலாலே, கதிராதியாலே
கூற்றாலே,பிணியாலே, கொலைக் கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும்
செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான் றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்கவேண்டும் என்றேன்
விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்சோதி
இறைவனைச் சார்வீரே

தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எல்லாம் வல்ல சித்தியும் தந்தே
போகம் எல்லாம் எந்தன் போகமதாக்கிப் போதாந்த நாட்டைப் புரக்க மேலேற்றி
ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பளித்து என்னை
ஆகம வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் நீரே

வள்ளலார் அழியாத தேகம் பெற்றுவிட்டதைப்\ பல பாடல்களில் கூறியுள்ளார். அவர் இன்றும் இருக்கிறார்.
30-1-1874 அன்று வள்ளலார் அறைக்குள் நுழைந்த சமயம் கூறிய வார்த்தைகளை நாம் நன்கு உணரவேண்டும்.
"நான் உள்ளே பத்து பதினைந்து தினம் இருக்கப்போகிறேன்.பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்.ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக்கொடார்."
வள்ளலார் அறைக்குள்ளே நுழைந்ததை அங்கிருந்த அனைவரும் கண்டனர். திறந்து பார்த்தால் வெறும் வீடாக இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.என்னைக் காட்டிக் கொடார் என்றார். அதற்கு என்ன பொருள். நான் உள்ளே இருப்பேன்.ஆனாலும் என்னை ஆண்டவர் காட்டிக்கொடார்.திறந்து பார்ப்போர் கண்களுக்கு நான் தோன்றமாட்டேன். இதுதானே அவர் சொன்னதும் நடந்ததும்.. வள்ளலார் இன்றும் இருக்கிறார். .அவர் அன்று மட்டுமல்ல இன்றும் நமக்கெல்லாம் துணையாக இருக்கிறார்.
வள்ளலாருடைய தேகம் மண்ணில் புதைக்கப்படவில்லை,நெருப்பினால் தகனம் செய்யப் படவில்லை.எனவே வள்ளலார் இன்றும் தன் தேகத்துடன் இருக்கின்றார். அவருடைய ஞானதேகம் நம் கண்களுக்குப் புலப்படவில்லை. இதுவே உண்மை
வள்ளலார் இருக்கிறார் என்று நாம் அறிவதனால் நமக்கு என்ன நன்மை?
நாம் செய்த,செய்கின்ற வினையின் காரணமாக நமக்குத் துன்பம் நேரிடுகிறது.நாம் செய்த வினைக்குரிய பலனை இறைவன்தான் நமக்கு ஊ ட்டுகிறான்.தீவினை நல்வினை எனும் வன் கயிற்றால் இந்த ஜீவர்களை ஆட்டுகின்ற தேவே என்கிறது மகாதேவ மாலை.
மக்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை நீக்குவதற்கே வள்ளலாரை இறைவன் இந்த உலகிற்கு அனுப்பி இருக்கிறான்.இந்தச் செய்தியை வள்ளலார் தான் எழுதியுள்ள அகவலில் தெரிவிக்கின்றார். \
உலகினில் உயிர்களுக்குறும் இடையூ றெலாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக
உத்தமனாகுக ஓங்குக என்றனை
இந்த அகவல் வரிகளை ஊன்றி நோக்கினால் நமக்கு வரக்கூடிய இடையூறுகள் எல்லாவற்றையும் வள்ளலார் விலக்கவேண்டும் இது ஆண்டவன் வள்ளலாருக்கு இட்ட கட்டளை. இந்த உத்தரவு வேறு எந்த அருளாளருக்கும் தரப்படவில்லை .வள்ளலார் ஒருவர்தான் இந்த உத்தரவைப் பெற்றவர். இதை உணர்ந்து அவரிடம் போனால், அவரை வணங்கினால், நம்முடைய இடையூறுகள் விலகிப் போகும். இதை விட வேறு என்ன வேண்டும்?
வள்ளலாரைத் தெய்வமாக வணங்கி நாம் அனைவரும் இன்பமாக வாழ்வோ