Padiyanallur Vinothkumar
‼️தயவுத்திரு சிதம்பர இராமலிங்க வள்ளல் என்கின்ற திருவருட்பிரகாச வள்ளல் பெருமானிற்கு தனிப்பெருங்கருணை ஆண்டவர் தரிசனம் தந்தபோது நடந்த அனுபவங்களும் அற்புதங்களும்‼️
சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க
நாகா திபர்சூழ் நடராஜா - ஏகா
பவனே பரனே பராபரனே எங்கள்ச
சிவனே கதவைத் திற - சிவயோகநிலை, திருவருட்பா

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்படுதல்:
தனிப்பெருந்தயவு சொரூபமாகிய இடப வாகனத்தின் மேல் சர்வ மங்கல அருட்சித்தியே திருமேனியாகக் கொண்ட தனித்தலைமை தனிப்பெரும்பதியாக எழுந்தருளினார்! அவருடன்

பதமூர்த்திகள்:
அப்பொழுது ஸ்ரீகண்டர், அனந்தேசர், காலச்செந்தி
யுருத்திரர், துவாதச ருத்திரர், ஏகாதச ருத்திரர், புத்தி யட்டகர், கூஷ்மாண்டர், ஆடகர் சத வருத்திரர், அஷ்ட மூர்த்திகள், நீலலோகிதர், கங்காள கபாலர், அசுவா ரோகணர், அஷ்ட பைரவர், வீரபத்திரர், சக்கரதரர், நான்முகர் முதலான

பதத்தலைவர்கள்:
கபாலிகன், அசன், புதன், வச்சிர தேகன்,
பிநாகி, கிருதசாதிபன், உருத்திரன், பிங்கலன், சாந்தன், க்ஷயாந்தகன், பலவான், அதிபலவான், பாசாத்தன், மகாபலவான், சுவேதன், ஜயபக்திரன், தீர்க்கபாகு, ஜலாந்தகன், மேகவாகனன், சௌமிகேசன், சடாதரன் லக்ஷ்மீதரன், ரத்நந்திரன், ஸ்ரீதரன், பிரசாதன், பிரகாசன், வித்தியாதிபன்,
ஈசன், சர்வஞ்ஞன், பலிப்பிரியன், சம்பு, விபு, கணாத்தியக்ஷன், கிரியக்ஷன், திரிலோசனன் முதலான

தேவர்கள்:
இந்திரர், சந்திரர், சூரியர் முதலான

முனிவர்கள்:
வசிட்டர், அகத்தியர், புலத்தியர், பராசரர், வியாசர் முதலான

இருடிகள்:
கண்ணுவர், கருக்கர், சதானந்தர் முதலான

கணங்கள்:
அசுரர், அந்தரர், ஆகாய வாசிகள், விஞ்சையர்,
வித்தியாதரர், கருடர், காந்தர்வர், இயக்கர், கின்னரர்,
கிம்புருடர்,சித்தர், நிருதர், பூதர், பைசாசர், போகபூமியா, உரகர் முதலான

பிரமத கணங்கள்:
நந்தி, பிங்கிருடி, சண்டன்,
பிரசண்டன், சங்கு கண்ணன், வாணன், அந்தகன்,
கும்போதரன், விருபாக்ஷன், முதலான
சூழ்ந்து துதித்து வரவும்!

வாத்தியங்கள்:
பேரிகை, மத்தளம், தாளம், சங்கம், சச்சரி, தடாரி முதலான முழங்கி வரவும்:

மேற்கண்ட அனைவரும் துதிக்கும் பாடல்:

எல்லாம்வல்ல இறைவன் வந்தான்!
நல்லோர்க்கருளும் நாயகன் வந்தான்!
முப்புர மெரித்த முன்னோன் வந்தான்!
தப்பிலார்க் கருள்செயுந் தயாநிதி வந்தான்!
வள்ளல் வந்தான் மகாதேவன் வந்தான்!
எண்ணில் லெண்ணெய்போ லிருப்பவன் வந்தான்!
அன்பர்க் கருளும் ஐயன் வந்தான்!
இன்பங் கொடுக்கும் இறைவன் வந்தான்!
ஐந்தொழில் நடத்தும் முதல்வன் வந்தான்!
பக்தர்கள் புகழும் பதத்தோன் வந்தான்!
தேவர்கள் போற்றுந் தியாகன் வந்தான்!
மூவர்கள் வாழ்த்தும் முக்கணன் வந்தான்!
என்று சின்னங்கள் பிடித்து வரவும்

தும்புருநாரதர் யாழிசை பாடிவரவும்
உருத்திர கணிகையர் நடனஞ் செய்துவரவும்

ஒற்றை வெண்குடை, சாமரம் முதலான மங்கல
விருதுகள் நெருங்கி வரவும்

ஆனைமுகக்கடவுளும், ஆறுமுகக்கடவுளும் இருபக்கங்களிலும் இசைந்து வரவும்

தனிப்பெருங்கருணை சொரூபமாகிய இடப வாகனத்தின் மேல் அகில உலகமாதாவாகிய சர்வ ஜீவதயாபரி சர்வ காருண்ய சர்வ மங்கல திருவருட்சத்தி இடது பக்கத்திலிருக்க

ஜடாமகுட திரிநேத்திரகாளகண்ட சதுர்ப்புஜம் முதலானவை விளங்க

தனிப்பெருந்தயவு சொரூபமாகிய இடப வாகனத்தின் மேல் சர்வ மங்கல திருவருட்சித்தியே திருமேனியாகக் கொண்ட தனித்தலைமை தனிப்பெரும்பதியாகிய சர்வ ஜீவதயாபர சர்வ காருண்யர் இராஜாதி இராஜ தியாகராஜப் பெருமான் எழுந்தருளினார்!

வள்ளல் பெருமான் முன் தரிசனங் கொடுத்தருளி, குளிர்ந்த நிலவு துளம்பி வீசுகின்ற புன்னகை காட்டி ஜீவர்கனுக்கு ஜில்லென்றும் உடம்பும், உள்ளமும், உயிரும் குளிரும்படி செய்வித்து கருணையென்னும் வெள்ளம் நிறைந்து, பொங்கித்ததும்பி, பெருக்கெடுத்து, ஒளி கொண்டோங்கி மடைதிறந்
தோடுகின்ற மலர் போன்ற திருக்கண்களால் அருள்
நோக்கஞ்செய்து, வள்ளல் பெருமானுக்கு உண்டா யிருந்த விடாய் முழுதுந்தீர்த்து, நம்மிடத்து நம்பிக்கையும் பேரன்பும் வைத்து, தயாமூலத் தர்மம் தவறாது ஆன்மநேயத்தோடு வாழுகின்ற உத்தமனே! நீ ஒழுகுகின்ற உயிர் இரக்கமே உண்மையான கடவுள் வழிபாடு உன்னதமான சுத்த சன்மார்க்க அருள்நெறியின் பெருமையை உலகத்தவர் செவ்வையாகத் தெரிந்து கொள்ளும்படி நாமே இவ்வாறு சோதித்தோம் ! இனி
ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம் என்று திருவாய் மலர்ந்தருளி கடாக்ஷித்தருளினார்.

ஆண்டவரை காண்கின்ற தருணத்தில் வள்ளல் பெருமானின் அனுபவநிலை:
கங்கையும், இளம்பிறையும் விளங்குகின்ற சடா
மகுடத்தையும், திரிபுண்டரமுந் திலகமும் திருநோக்கும் விளங்குகின்ற நெற்றியையும், அருள்ததும்பி வழிகின்ற திருநோக்கங்களையும், சங்கு குண்டலமணிந்து தாழ்ந்த செவிகளையும், நறுங்குமிழ் போன்று விளங்குகின்ற நாசியையும், வேதமாகிய தெள்ளமுதத்தைக் கொள்ளை கொண்டுண்ணும் படி அன்பர்களுக்கு அருளிச் செய்கின்ற செம்பவளம் போன்ற திருவாய் மலரையும், வானவர்க்கு உயிர் கொடுத்த மணிகண்டத்தையும், கொன்றை மாலையணிந்து குலவரைகள் போலுயர்ந்த திருத்தோள்களையும், மானும் மழுவும், வரதமும் அபயமுங் கொண்ட மலர்க்கரங்களையும் சிவந்து மெல்லென்று திருவருள் பழுத்து ஆனந்தமொழுகிப் பத்தர்கள் மனத்தில் தித்தித்திருக்கும் பாத மலர்களையும், செம்பவள மலைபோன்ற திருமேனியையும், பச்சைக் கொடி படர்ந்தது போன்று
பார்வதியார் மகிழ்ந்து விளங்கு கின்ற பாதத்தையுங் கண்குளிரக் கண்டு, களிப்படைந்து, ஆனந்த நீர்ஊற்று நீர்போல சுரந்து சுரந்து, மார்பினிடத்து
விழுந்து விழுந்து வண்டலாடவும், உடல் குழைந்துபட விதிர் விதிர்த்துச் சிலிர்சிலிர்த்து, மயிர்க் கூச்செறிந்து என்பு நெக்கு விட்டுருகியும், மனங்கனிந்து கனிந்து கசிந்து கசிந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து படபடவென்று பதறிப்பதறி உருகியுருகி ஆனந்த வெள்ளத்திலழுந்தி யழுந்திப் பரவசமாகியும், இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும்,
இயற்கை இன்பினரென்றும், நிர்க்குணரென்றும்,
சிற்குணரென்றும், நித்தியெரென்றும்,சத்தியரென்றும்,
ஏகரென்றும்,அநேகரென்றும், ஆதியரென்றும், அனாதியரென்றும், அமலரென்றும், அருட்பெருஞ்ஜோதியரென்றும், அற்புதரென்றும்,
நிரதிசயரென்றும், எல்லாமான வரென்றும், எல்லாமுடைய வரென்றும், எல்லாம் வல்லவரென்றும்,
குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த திருக்குறிப்புத் திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும், அனுபவிக்க விளங்குகின்ற தனித்தலைமைப் பெரும் பதியாகிய பெருங்கருணைக் கடவுளே! என்ற வாய்நீர் சுரந்து பாடிப்பாடி நாக்குழறித் தழும்பேறியும், சிவ சங்கர சிவசங்கர சிவசங்கர சிவசங்கர சிற்பர தற்பர சிற்குண சின்மய சிவ சிவ ஹரஹர என்று ஆனந்தக் கூத்தாடியும், தண்டுபோல் அனந்த முறை கீழே விழுந்து விழுந்து வணங்கி உடம்பிற் புழுதியாடியும், குளிர்ச்சி பொருந்திய சந்திர பிம்பம் போன்ற
முகத்தின்கண் முத்துமாலையணிந்ததுபோல வியர்வை அரும்பி இளநகை தோன்றி மலர்ந்து விளங்கக் கைகளைக் கூப்பிச் சிரசின் மேல் வைத்துக் கொண்டு, அன்பே வடிவமாகி் நின்று, பிரமன் முதலாகிய பெரிய தேவர்களும், சுத்த சன்மார்க்க ஞானிகளும்:
1. சுத்த யோகாந்தர்களும்.
2. சுத்த போதாந்தர்களும்.
3. சுத்த நாதாந்தர்களும்.
4. சுத்தவேதாந்தர்களும்.
5. சுத்த கலாந்தர்களும்.
6. சுத்த சித்தாந்தர்களும்

சடாந்த சமரச சுத்த சன்மார்க்க ஞானிகளும் (சர்வ சுதந்தரராய சத்தியர்களும்):
எல்லாத் தத்துவங்களையும் எல்லாத் தத்துவிகளையும் தோற்றுவித்தலும் இயக்குவித்தலும் அடக்குவித்தலும் மயக்குவித்தலும் தெளிவித்தலுமாகிய தொழில்களை எளிதிற் கொடுத்தற்குரிய பூரண சுதந்தரத்தவர்களாய், இயற்கைச் சத்திய ஞான சுகானுபவ பூரண சொரூப
சாத்தியர்களாய் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத நித்திய சுத்த ஞானதேகிகளாய், பூதசித்தி, கரணசித்தி, இந்திரிய சித்தி, குணசித்தி, பிரகிருதிசித்தி, புருடசித்தி, விந்து சித்தி, பரசித்தி, சுத்தசித்தி, காலசித்தி, கலாசித்தி, விசுவசித்தி, வியோமசித்தி, பிரமசித்தி, சிவசித்தி
முதலிய பிண்டசித்தி, அண்ட சித்தி, பகிரண்டசித்தி,
அண்டாண்டசித்தி என்கின்ற அந்தரங்க பகிரங்க தத்துவ தத்துவி சித்திகளெல்லா வற்றையும் திருக்கடைக்கணிப்பாற் செய்ய வல்லவராய்.

அரியதவஞ்செய்தும் கனவினுங் காண்பதற்கு அருமையாகிய கடவுளே! அன்பு அணுவளவு மில்லாத அடியேனுக்கு அருமை யாகிய திருமேனியை நனவிலே எளிதாகக் காட்டியருளிய தேவரீர் பெருங்கருணையை என்னென்று துதிப்பேன்! பொய்யுலகத்தை
மெய்யென்று நம்பிப் புன்மையாகிய போகத்தை விரும்பி, புவியாண்டு, மீளா நரகில் விழத் துணிந்திருந்த அஞ்ஞானத்தையுடைய அடியேனையும் ஒரு பொருளாகத் திருவுள்ளத்திற் கிருபா நோக்கஞ் செய்யப்பெற்று உடல் பூரித்தேன்- உள்ளங்
குளிர்ந்தேன்! - உயிர் தழைத்தேன்! வாழ்வடைந்தேன்! துக்க மெல்லாம் நீங்கினேன்,- சுகப் இனி அடியேனுக்குத் தேவரீர் திருவடியினிடத்துத் தவறாத
பட்டேன்!. மனத்துக்கு அடங்காத மகிழ்ச்சி கொண்டு நின்றேன், தியானமும், - சலியாத அன்பும் தந்தருளி என்னை அடிமைகொள்ள வேண்டும், - குற்றம் செய்தாலும் குணமாகக் கொள்கின்ற குணக்குன்றே! - பன்றிக்குட்டிக்கு முலைகொடுத்த பரம்பொருளே!- புலி முலையைப் புல்வாய்க்கு ஊட்டிய புண்ணிய
மூர்த்தியே!- கல்லடிக்கும் வில்லடிக்குங் கருணை புரிந்தகருத்தனே! திருவாரூர்ப் பூங்கோயிலில் எழுந்தருளிய இராஜாதி இராஜ தியாகராஜப் பிரபுவே! போற்றி! போற்றி!! என்று தோத்திரஞ்
செய்து தொழுது நின்றார்.

வள்ளல் பெருமான் செய்த தோத்திரங்களைத் திருச்செவி ஏற்றுக்கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், நம்மிடத்தில் அன்புள்ள இராமலிங்க, நீ மரணமில்லா பெருவாழ்வு (பேரின்ப சித்தி பெருவாழ்வு) பெற்று சுத்த பிரணவ ஞான தேகத்தோடு உத்திர ஞான சித்தி வல்லபமும் பெற்று! நமது அருளே துணையாகக் கொண்டு, இவ்வுலகத்தை யெல்லாம் தயவு என்ற ஒரு குடையின்கீழ் சுத்த சன்மார்க்கத்தில் ஆண்டு, தயவும் மெய்யறிவு விளங்கி எல்லா உயிர்களும் இன்புற்று வாழக் கடவாய்! பின்பு எக்காலத்தும் மீளாத பேரானந்த போகத்தை நாம் தருவோம் என்று அருள் புரிந்து அந்தர்த் தானமாக எழுந்தருளினார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருட் சமூகமும் சித்தி வல்லபமும்:

இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய
ஞானசபைக்கண்ணே, இயற்கை உண்மை என்கின்ற சத்தியத் திருவுருவினராய், இயற்கை இன்ப மென்கின்ற சத்தியத் திருநடஞ் செய்தருள்கின்ற இயற்கைத் தனிப் பெருங் கருணைத்
தனிப்பெரும்பதியாய தனித்தலைமைக் கடவுளே !

தனித்தலைமை தனிப்பெரும்பதி சித்தி வல்லபம்:
அடிநிலைக் கரும ஞானசித்தி யனுபவங்களினும்,
முடிநிலைக் கரும ஞானசித்தி யனுபவங்களினும், அடிநிலை யோக ஞானசித்தி யனுப வங்களினும், முடிநிலை யோக ஞானசித்தி யனுபவங்களினும், அடிநிலைத் தத்துவ ஞானசித்தி அனுபவங்களினும், முடிநிலைத்தத்துவ ஞானசித்தி அனுபவங்களினும், அடிநிலை ஆன்ம ஞான சித்தி அனுபவங்களினும்,
முடிநிலை ஆன்ம ஞானசித்தி அனுபவங்களினும், சுத்த ஞானசித்தி அனுபவங்களினும், சமரச சுத்த ஞானசித்திஅனுபவங்களினும், அதுவதுவாகி நிறைந்தும், அதுவதுவாகி விளங்கியும், அதுவதுவாகி இனித்தும், ஆங்காங்கு அதீதமாகிக் கலந்தும் இவை அனைத்துமாகி ஒருமித்தும் அதீதாதீதமாகித் தனித்தும் வயங்குகின்ற பெருங் கருணைப் பெரும்பதியாய கடவுளே! எல்லாச் சத்திகளுக்கும் எல்லாச்சத்தர்களுக்கும், எல்லாமூர்த்திகளுக்கும், எல்லா மூர்த்தர்களுக்கும், எல்லாத்தேவிகளுக்கும், எல்லாத் தேவர்களுக்கும், எல்லாச் சாதனர்களுக்கும், எல்லாச் சாத்தியர்களுக்கும், எல்லா உயிர்களுக்கும், எல்லாத் தத்துவங்களுக்கும், எல்லாப் பொருள்களுக்கும், குணங்களுக்கும், எல்லாச் செயல்களுக்கும், அனுபவங்களுக்கும், மற்றெல்லாவற்றிற்கும் முதற்காரணமாயும், நிமித்த காரணமாயும், துணைக் காரணமாயும் இருந்தருள்பவர்! திருச்சிற்றம்பலம்

தயவு
வினோத்குமார் இராஜூ

#vallalar_telugu #vallalar_call_for_telugu_sisters_brothers #vallalar202 #saintramalinga #sanmarkam #UniversalBrotherhood #vallalar #Spirituality #compassion