1977ம் ஆண்டு தொடங்கி வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம் காணச் சென்னையிலிருந்து நாங்கள் பாத யாத்திரை மேற்கொண்டோம் . 1982ம் ஆண்டு.எங்கள் பாத யாத்திரைக்குழு காடாம் புலியூரில் இரவு தங்கி மறுநாள் காலை ஆறு மணிக்குப் புறப்பட்டது.அன்பர் ராஜமாணிக்கம் என்பவர் நாங்கள் புறப்படும்போது எங்களுக்குக் காரா பூந்தி வழங்கினார். அது எண்ணெய்ப் பண்டமாயிற்றே என்று நாங்கள் தயங்கினோம் .நான் பாத யாத்திரை நடத்துனர். எனவே என்னால் சாப்பிடாமல் தவிர்க்க முடியவில்லை. சாப்பிட்டேன். அவ்வளவுதான். சிறிது தூரமே நடந்தோம்.அந்த ஊர் எல்லையைத் தாண்டி சிறிது தூரம்தான் வந்தோம். எனக்குத் தாளமுடியாத அளவு மார்பில் எரிச்சல் கண்டது. என்னால் பாடவும் முடியவில்லை. நடக்கவும் முடியவில்லை. சாலையின் இரண்டு பக்கங்களிலும் முந்திரித் தோப்பு.என்னால் ஒன்றும் முடியாமல் போகவே அருகில் இருந்த பாறை மீது உட்கார்ந்து விட்டேன். மார்பின் எரிச்சல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்னுடைய இயலாமை கண்டு திரு வரதராஜன் என்ற அன்பர் மட்டும் என்னுடன் தங்கிவிட்டார். மற்ற அன்பர்கள் பாத யாத்திரையுடன் தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர்.என்ன செய்வது என்று தெரியாமல் நான் இருந்த அந்த சமயம் ஒரு பேருந்து வந்து நின்றது. ஒருவர் ஒரு பாத்திரத்தில் தயிர் கொண்டு வந்து கொடுத்தார். நானும் அந்தத் தயிரைக் குடித்தேன். பாத்திரத்தை வாங்கிக்கொண்டு அவர் பஸ் ஏறிப்போனார்.என்னுடைய மார்பு எரிச்சல் அப்படியே அடங்கிவிட்டது.நான் மார்பு எரிச்சலுடன் உட்கார்ந்து இருக்கின்றேன். அந்த பஸ் ஏன் அங்கே நின்றது.?தயிர் கொண்டு வந்தவர் யார்?.எனக்குத் தயிர் வேண்டும் என்று அவருக்கு எப்படித் தெரிந்தது?ஊரே இல்லாத அந்த நடுக் காட்டிலே எனக்கு உதவியது யார்?நான் யாரிடமும் எதுவும் கேட்காமலே எனக்குத் தயிர் வேண்டும் என்று அறிந்து நான் இருக்கும் இடம் அடைந்து கொடுத்துவிட்டுப் பேசாமல் பஸ் ஏறிப் போனாரே அவர் யார்?வள்ளலாரே தவிர வேறு யார்? யாருக்கு இந்தக் கருணை வரும்?வேண்டி வேண்டிக் கேட்டாலே எதுவும் கொடுக்காத தெய்வத்தின் மத்தியில் எதுவும் கேட்காமலே வேண்டுவதை அறிந்து வேண்டிய நேரத்தில் தானாக வலிய வந்து தந்த வள்ளலார் என்னோடேயே இருக்கிறார் என்று நான் சொல்வதில் என்ன தவறு? அவருடைய பார்வையில்தான் நான் இருக்கிறேன்;இதை நீங்கள் நம்பவில்லையா .திரு வரதராஜன் அவர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர் சென்னையில் கே கே நகரில்தான் இருக்கின்றார்.


