SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்குவோம்
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி  தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.
திரு அருட்ப்ரகாச வள்ளலார் திருவடிகளே சரணம்.

கிடைத்தற்கு அரிதாகிய மானிட தேகத்தைப் பெற்றுக்கொண்ட நம்மவர்கட்கு அறிவிப்பது. வந்தனம்.

குறித்துரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணு மனக்குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது
மெய் வுரையைப் பொய் யுரையாய் வேறு நினையாதீர்
பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் காண்மின் -
செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்
சித்திஎலாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே.
கருத்து:
நான் உங்களைக் குறித்துத்தான் கூறுகின்றேன் . என் வார்த்தையைக் கேளுங்கள் .நேர் வழி இருக்கக் கோணல் வழி செல்லும் குரங்கு மனத்தின் வசப்பட்டுக்
கேவலமான சில காரியங்களைச் செய்து பிறகு வெட்கப்படுகின்ற உலகீர்,என்னுடைய உண்மையான வார்த்தைகளைக் கேண்மின் . நான் பொய் கூறுவதாக
எண்ணாதீர்கள். நூல்களில் எழுதி வைக்கப்பட்டிருக்கின்ற சமயங்களும், மதங்களும்,பொய்,பொய்,பொய்யே. அப்படிப் பொய்யான மதங்களிலும்,சமயங்களிலும்
நீங்கள் புகுந்து கொள்ளாதீர்கள். உலகத்தில் வாழுகின்ற அத்தனை பேரும் ஜாதி,மதம், சமயம், இனம், குலம், கோத்திரம், தேசம், மொழி முதலிய எந்தவித
பேதமும் இன்றி அனைத்துலக மக்களும் ,எல்லா ஜீவர்களும் அடையவேண்டிய செம்பொருள் சிவம் ஒன்றே ஆகும்."சிவம்" என்றவுடன் அது சைவ சமயம்
அல்லவா என்று எண்ணிவிடாதீர்கள். சிவம் என்பது, அன்பு-மங்களம்-பூரணம்-சத்து-சித்து-ஆனந்தம்-சச்சிதானந்த வஸ்து-எல்லோருக்கும் பொதுவாய் -எங்கும் உள்ளதுவாய்-எப்பொருளும் தானாய் -தனதாய்-தானல்லதுவாய்-கற்பனைக்கு எட்டாததாய்-வான் மறையும் துதிப்பதுவாய் உள்ள திவம் எதுவோ அதுவே சிவம்.
அது அருட்பெருஞ்சோதி. இந்த உண்மையை நன்கு கண்டுகொள்ளுங்கள். சிற்சபை நடம் எதுவென்று நன்கு அறிந்து துதி செய்யுங்கள் . எல்லாச் சித்திகளையும் இத்தினமே அடையலாம்.
அருட்பெருஞ்சோதி என்பது நமது உடம்பிலே அனுபவமாகத் தெரிவது. அனுபவம் என்பது சர்க்கரையை வாயில் போட்டால் இனிக்கும்.இனிப்புக்கு உருவம் எது?கிடையாது. அதைப் பாதாம் வரைந்து விளக்க முடியாது. அந்த இனிப்பை விளக்கவேண்டுமானால் அவர்கள் வாயிலும் சிறிது சர்க்கரையைப் போட்டுத்தான் இனிப்பை விளக்க முடியும். அது போல அருட்பெருஞ்சோதி என்பது இனிப்பு போல ஏற்படும் ஓர் அனுபவமே. இந்த மனித உடம்பினுள் ஏற்படும்
ஓர் அனுபவம். மனம்,புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு காரணங்களும் கடந்தபின் ஏற்படும் அனுபவம். இந்த உண்மையை நன்றாகச் சிந்தியுங்கள்
. தனு கரனாதிகள் தாம் கடந்து அறியும் ஓர் அனுபவமாகிய அருட்பெருஞ்சோதி என்பது அகவல்.
காரணங்களைக் கடக்க அறியாதவர் அருட்பெருஞ்சோதியை அறிய இயலாது. இது வள்ளலார் கருத்து. எனவே இனியாகிலும் ஒவ்வொருவரும் அறியவேண்டியது காரணங்களைக் கடக்கும் வழியேயாம்.
காரண ஒழுக்கத்தில் வள்ளலார் கூறியுள்ள வாசகம் "எந்தவித ஆபாசத்திலும் செல்லவொட்டாமல் மனதை இழுத்துப் புருவ மத்தியின்கண்ணே நிறுத்துதல் என்பதாகும். அருட்பெருஞ்சோதியை ஓர் உளவினால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.உளவு என்பது பிறர் அறியாமல் தெரிந்து செயல்படுவது.
உளவினால் அறிந்தால் ஒழிய மற்றளக்கின் அளவினில் அளவா அருட்பெருஞ்சோதி.(அகவல்) உளவு தவிர வேறு எந்த வழியிலும் ,அளவுகளிலும் அளந்து
காணமுடியாது என்று திட்டவட்டமாக வள்ளலார் அறிவித்த பிறகும் அருட்பெருஞ்சோதி அகவலை வேதம் போலப் போற்றும் நாம் உலவித் தெரிந்து கொள்ளாமல் அறிந்து செயல்பட முயற்சி எடுக்காமல் இருக்கலாமா?வேறு அளவைகளில் அகப்படாது என்று சந்தேகத்திற்கு இடங்கொடாது வள்ளலார் கூறுகின்றாரே.
பொது என்பது சபை.-சபை என்பது உள்ளம்-அங்கே இறைவன் நடம் செய்கின்றான்.அந்தச் சபைதான் சிற்சபை.அதுவே சிற்றம்பலம்-லலாடம்-முச்சந்தி-முப்பாழ்-மகாமேரு -புருவ மத்தி .எல்லா வார்த்தைகளும் புருவமத்தி ஒன்றினையே குறிக்கும்.அந்தப் பொதுவை யார் உணர்கின்றார்களோ அவர்கட்கு மட்டுந்தான் அருட்பெருஞ்சோதி தோன்றும்.இது தவிர ஆன்மீகத் துறையில் சிற்சபை அனுபவம் இல்லாது வேறு வகையில் அதோ என்று பிரித்துச் சுட்டிக் காட்ட அருட்பெருஞ்சோதி தோன்றாது.
பொது உணர் உணரும்போதலால் பிரித்தே அதுவெனில் தோன்றா அருட்பெருஞ்சோதி"(அகவல்)
இது தொடங்கியாவது பொதுவை உணரவேண்டும். ஆண்டவனை நம்மால் வெளியில் காணமுடியாது என்று வள்ளலார் கூறியுள்ளதை நாம் நன்கு ஆய்வு செய்யவேண்டும்.
உன்னைப் பார்த்து உன்னுள்ளே என்னைப் பாராமல் ஊரைப்
பார்த்தோடி உழல்கின்ற பெண்ணே -உன்னைப் பார் உன்னுள்ளே
என்னைப் பார் என்கின்றார் என்னடியம்மா "(அருட்பா)
ஊரைப் பார்த்து ஓடி உழலாமல் ஓரிடத்தில் இருந்து தன்னை அறியவேண்டும்.தன்னை அறிந்தால்தான் தலைவனைக் காணமுடியும்.இதற்கொரு தந்திரம் உண்டு. அந்தத் தந்திரத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும். நெற்றிக்கண்ணைத் திறந்து கொண்டவற்குத்தான் எல்லாம் பட்டப்பகல் போல விளங்கும்.
நல் யோக ஞானம் எனினும் புரிதலின்றி நாளிதழ் அழகோ எழுந்தே ஈட்டுக நின் எண்ணம் பலிக்க அருளமுதம் உண்டு இன்புறுக என்று இறைவனே வள்ளலாருக்குச் சொன்னான். (ஆதாரம் நடராஜபதி மாலை)
புருவமத்தியை அறிவதே --அறிந்து நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்றுக்கொண்டு அங்கே கனல் எழுப்பி மனம்-புத்தி-சித்தம்-அகங்காரம் ஆகிய கரணங்களைக்
கடந்து துரிய நிலையில் இறை அனுபவம் பெற்று வாழ்வதே -தவம்-தவத்தின் பயன்.தவமே புரிகின்றார் எல்லாரும் காணத் தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி (ஆடேடி பந்து அருட்பா)
தவமே என்று ஏகாரமிட்டு அழுத்திச் சொல்கின்றார்- தவமே புரிதல் -அவர்கள் காண்பதே அருட்பெருஞ்சோதி.எனவே இறைவனைக் காணத் தவம் செய்ய வேண்டும்.வேறு வழியில் இறை அனுபவம் தோன்றாது.திரு அருட்பாவை ஆழ்ந்து படித்தால் இந்த உண்மை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரியும்.
ஜீவகாருண்யம் இல்லாமல் ஞானம், யோகம், தவம், விரதம்,ஜபம், தியானம் முதலியவைகளைச் செய்கின்றவர்கள் கடவுள் அருளுக்குச் சிறிதும் பாத்திரம் ஆகார்கள். அவர்களை ஆன்ம விளக்கம் உள்ளவர்களாகவும் நினைக்கப்படாது. ஜீவகாருண்யம் இல்லாது செய்யப்படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோஜனம் இல்லாத மாயா சாலச் செய்கைகளே ஆகுமென்று அறியவேண்டும். இந்த வாசகங்களை நன்கு கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். அதாவது தவம், தியானம் முதலிய செயல்களுக்கு வருவதன்முன் ஜீவகாருண்ய வழிக்கு ஒருவன் வரவேண்டும்.ஜீவகாருண்யம் இல்லாமல் செய்கின்ற எதையும் வள்ளலார் ஒப்புக்கொள்ளமாட்டார்.தவம், தியானம் என்பவற்றிற்கு முன்னாள் ஒருவன் பெறவேண்டியது இரக்கம்,கருணை, தயவு ஆகியவையே ஆகும்.
எனவே முதலில் இறக்கத்திற்கு வாருங்கள்.தயவை விருத்தி செய்து கொள்ளுங்கள் எவ்வுயிரையும் நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பிற உயிருக்கு வரக்கூடிய துன்பத்தை அல்லது வந்த துன்பத்தை நீங்கள் கண்ணால் கண்டபோதாகிலும்,கேட்ட போதாகிலும் , அறிந்த போதாகிலும்,சும்மா இராதீர்கள்.
எப்பாடுபட்டாவது அத்துன்பத்தை நீக்குங்கள். இதுவே முதல் தொண்டு. ஜீவகாருண்யமே முதல்படி. ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்..திறவு கோலைப் பெற்றுக்கொண்டவன் மட்டுமே கதவைத் திறந்து உள்ளே நுழைந்து ஆண்டவனைக் கலந்து பேசி ,உறவாடிப், பெறவேண்டியதைப் பெற்று ,மகிழ்ந்து எக்காலத்தும் நாசம் அடையாத ஸ்வர்ண தேகம் முதலிய தேகங்களை அடைந்து ஊழி தொரு ஊழி உலவாமல் வாழ இயலும்,.எனவே நாம் முதலில் பெறவேண்டியது ஜீவகாருண்யமே.
இதைச் சிலர் கூறி ஜீவகாருண்யம் ஒன்றே போதும் .தவம், தியானம் எதுவும் வேண்டாம் என்று பேசி வருகிறார்கள்.அவர்களுக்கு ஒரு வார்த்தை. ஜீவகாருண்யத்தைப் பெற்றவர்கள் அங்கேயே நின்று விடாதீர்கள். திறவு கோலைப் பெற்றுக்கொண்டவர்கள் வெளியிலேயே நின்றுகொண்டிருந்தாள் என்ன பயன்"அடுத்து நெற்றிக்கண்ணைத் தகுந்த ஆசிரியரித்துப் போய்த் திறந்துகொண்டு உள்ளே போனால் நாதம் கேட்கலாம், காணாத காட்சிஎலாம் காணலாம். கரண ஒழுக்கத்திற்கு முன் இந்திரிய ஒழுக்கம் தேவை.இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் ஆகிய நான்கும் அறிய ஒழுக்கங்கள் என்று வள்ளலார் கூறியுள்ளார். இவைகளை நாம் இலேசாக எண்ணிவிடக் கூடாது.தினமும் அவற்றை நன்கு வாசித்து, மனதிலே ஒவ்வொரு வார்த்தையையும் பசுமரத்து ஆணிபோல் பதிய வைத்துக்கொண்டு அவற்றைச் செயலிலே கொண்டு வரவேண்டும்.குணம் என்பது ஜீவகாருண்ய ஒழுக்கமே. குறி என்பது தவம் தியானமே.இவை இரண்டும் யாரிடம் கூடுகின்றதோ அவர்களையே இறைவன் அனைப்பானாம். (அகவலில் வள்ளலார்)
குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில் அணைவுற வகுத்த அருட்பெருஞ்சோதி.
கருவிகள் என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவையே. இவைகள் சிதறி நில்லாது கூட வேண்டும்.
மனம் முதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை அனமுற வகுத்த அருட்பெருஞ்சோதி.(ஆகவல்)மனம் முதலியவற்றையே கருவிகள் என்றார் என்பதற்கு இந்த வரிகள் ஆதாரமாக நிற்கின்றன.ஜீவகாருண்யமும் தெய்வ வழிபாடும் இரண்டும் கொண்டுதான் நான் அருள் அடைந்தேன் என்று வள்ளலார் கூறியுள்ளார்.
ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன் (ஆடேடி பந்து ஆறாம் திருமுறை)
ஈரம் என்பது பிற ஜீவர்கள் மீது நாம் காட்டும் பரிவு-இரக்கம்-கருணை-தயவு ஆகியவை.
அன்பு என்பது இறைவன்மீது நாம் கொள்ளும் பக்தி நெகிழ்வு ஆகியவை.
கருணை, இரக்கம், தயவு, பரிவு, பாசம், ஈரம், இவை நாம் பிற உயிர்கள் மீது காட்டுவது.
அன்பு என்பது நாம் இறைவன் மீது கொள்ளும் பக்தியே.
அருள் என்பது இறைவன் நம்மீது காட்டுவது. அன்பு என்பதை நாம் தவறாகப் புரிந்துகொண்டுள்ளோம். நாற்றம் என்பது வாசனை ஒன்றையே குறிக்கும். மலர் நாற்றமுடைத்து என்பதே முன்னோர் வாக்கு,ஆனால் தற்காலத்தில் நாற்றம் என்ற சொல் துர் நாற்றத்தையே குறிப்பதாக வழக்கத்தில் வந்துவிட்டது .அதுபோல் அன்பு என்ற சொல்லும் நாம் பிற உயிர்கல்மீது காட்டும் இரக்கத்தைக் காட்டுவதாக எண்ணுகிறோம்.
வள்ளலார் இலக்கணப் பேரறிவு வாய்ந்தவர் அல்லவா?ஒன்று, இரண்டு, மூன்று என்ற சொற்களின் இறுதியில் உகர இறுதி வருவானேன் என்று கேட்டவர் அல்லவா.தமிழ் என்ற சொல்லுக்கு அரியதொரு விளக்கம் தந்தவர் அல்லவா?>அந்தப் பெருமான் அன்பு என்ற வார்த்தையை இறைவன் மீது நாம் கொள்ளும்
பக்திக்கும்,அருள் என்பதை இறைவன் நம்மீது காட்டும் பரிவிற்கும், இரக்கம்,தயவு,கருணை முதலிய வார்த்தைகளை நாம் பிற உயிர்மீது காட்டும் பாசத்திற்கும் உபயோகிக்கின்றார். "எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை" (சுத்த சன்மார்க்க சாதனம் என்ற தலைப்பில் வள்ளலார் கூறியது) ஜீவர்களிடத்துத் தயவும் ஆண்டவரிடத்தே அன்பும் கொண்டு வாழ்வோமாக.

2 Comments
manohar kuppusamy
It is possible for us ?¿??
Friday, December 27, 2019 at 09:03 am by manohar kuppusamy
Muthukumaaraswamy Balasubramanian
why not? that too people like you
Sunday, June 7, 2020 at 12:20 pm by Muthukumaaraswamy Balasubramanian