SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
என்னுடன் என் தெய்வம்.1

என்னுடன் என் தெய்வம்.


-
.....
26-10-1870 அன்று நமது திரு அருட்பிரகாச வள்ளலார் ஓர் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையைப் படித்துப் பாருங்கள்.;
அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது:
ஒருவனைப்பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மை உண்டாம் என்பதை உண்மையாக நம்பி இருங்கள்.என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள்.நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன். அஞ்சவேண்டாம்.சாலையை இலகுவாய் நடத்துங்கள். திருச்சிற்றம்பலம்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறெலாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக
உத்தமனாகுக ஓங்குக என்றனை. (அகவல்)
எல்லார்க்கும் கடையாகி இருந்தேனுக்கு அருள் புரிந்து
எல்லார்க்கும் துணையாகி இருக்க வைத்தாய் எம்பெருமான்
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்றாய் இவ்வண்ணம்
எல்லார்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே.

இந்த மூன்றையும் ஊன்றிப் படித்தேன்,வள்ளலாரால் எனக்கு நன்மை கிடைக்கும் என்று சத்தியமாக நம்பினேன். எனக்கு வரக்கூடிய இடையூறுகளை எல்லாம் நீக்கும் அதிகாரம் வள்ளலாருக்கு இறைவனால் அளிக்கப் பட்டுள்ளதை உணர்ந்தேன்.இறைவனே தேடி வந்து கலந்துகொண்ட வள்ளலார் எனக்கும் துணையாய் இருப்பார் என்றும் நம்பினேன். இதுவரை சமயமே சார்ந்திருந்த நான் சமயச் சார்புகள் அனைத்தையும் அடியோடு விட்டேன். வள்ளலாரை மட்டும் ஏற்றேன். அவரை மட்டும் வணங்குவது என்று முடிவு செய்தேன். வணங்கினேன் . வணங்குகின்றேன். வணங்குவேன். இதனால் நான் அடைந்த அனுபவங்கள் ஏராளம் ஏராளம். அவற்றை வெளியிட்டால் தற்பெருமை ஆகுமோ என்ற அச்சத்தில் வெளிப்படுத்தாது இருந்தேன்.காஞ்சிபுரம் உதவிக் கருவூல அலுவலர் திரு பழனி ஐயா அவர்கள் , கும்பகோணம் கல்லூரி விரிவுரையாளர் திரு பாஸ்கர் அவர்கள் , மற்றும் மலேசியாவில் வாழும் திரு ஸ்ரீ போன்றோர் வற்புறுத்தலால் ஒரு சிலவற்றை எழுதத் துணிகின்றேன். இது வள்ளலாருக்குச் சம்மதமானால் அச்சில் வரும். இல்லையேல் வராது. சத்தியமாக இது என் தற்பெருமை அல்லவே அல்ல. உண்மைச் சம்பவங்கள்.நம்புவோர் நம்புங்கள் .அல்லாதோர் விட்டுவிடுங்கள்.

முபா

1 வள்ளலார் என்னை ஆட்கொண்டார்: 1958

என் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் குடி இருந்த சுப்பு ஐயர் என்பவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அந்தப் புத்தகத்தைப் படிக்கப் படிக்க என்னையே நான் மறந்தேன்.ஒரு தாய் தந்தையருக்கு மகனாகப் பிறந்த ஒருவர் உலகமே வியக்கும் அளவிற்கு உயர்ந்தாரே என்று அறிந்தேன். அவருடைய ஜீவகாருண்யம், தெய்வ பக்தி,ஒழுக்கம்,ஏட்டளவில் மட்டும் நில்லாது செயல்பாட்டிலும் இருந்தது சிறப்பானதே. அனைவரும் ஒன்றுகூடி கலந்துரையாடல் செய்து அறிவு விளக்கம் பெறுவதற்கு ஓர் சங்கமும், ஜீவகாருண்யம் நிலை பெற்று விளங்க தருமச்சாளையும், பக்தியும் ஞானமும் ஒன்றென எடுத்துக்காட்ட ஓர் ஞான சபையும் அவர் நிறுவியது அவருக்கு இணை வேறு யாரும் இல்லை என நிரூபித்தது.எல்லாவற்றிற்கும் மேலாக இதுவரை யாரும் சொல்லாத ஓர் அற்புதமான சொல் அதாவது மரணமிலாப் பெருவாழ்வு என்ற சொல் வெளிப்பட்டது வள்ளலாரிடமிருந்துதான்.மரணத்தையும் வெல்லலாமா அப்படி ஒரு மார்க்கம் உள்ளதா. அப்படியானால் வேறு மார்க்கம் நமக்கு ஏன் என்ற உறுதி ஏற்பட்டது.சன்மார்க்க சங்கம் சார்ந்தேன். அருட்பா படித்தேன். பெரியோர்களை அண்டினேன். அவர்களுடன் கூடி சத்விசாரத்தில் கலந்து கொண்டேன். சிறு வயதிலேயே மகாபாரதம்,ராமாயணம், பெரிய புராணம், கந்த புராணம் போன்ற ஆன்மீக நூல்களை என் தாயாருக்குப் படித்துக் காட்டியதால் அந்த நூல்களில் ஓரளவிற்கு நான் தெளிவு பெற்றிருந்தாலும் அருட்பா போல விளக்கம் கிடைக்கவில்லை. பாரதம் ராமாயணம் எல்லாம் படித்த காலத்தில் அவைகளில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் எல்லாம் என்றோ நடந்தவை என்றுதான் உணரமுடிந்தது. அருட்பா படித்த பிறகுதான் அவைகள் எல்லாம் கற்பனையாக எழுதப்பட்டவை என்றும் நீதி போதனைகளை நமக்குச் சொல்லவே எழுதப்பட்டன என்றும் புரிந்தது.இன்னமும் கோடிக்கணக்கான மக்கள் ஒரு காலத்தில் நடந்தவைகள்தான் பாரதமும் ராமாயணமும் என்றுதான் இன்றும் நினைத்துக்கொண்டு உள்ளார்கள். உண்மை தெரிவித்த வள்ளலார் வாழ்க. எந்தப் பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ வள்ளலார் என்னை ஆட்கொண்டார்.
ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லது அதன் ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மீது இச்சை போகாது என்றார் வள்ளலார். நானோ வள்ளலாரை முழுமையாக ஏற்றுக்கொண்டேன். அவரை அவருடைய கருணையை அனுபவிக்கிறேன்.எவ்வளவோ அனுபவங்கள். ஒரு சிலவற்றை வெளிப்படுத்துகிறேன். நீங்களும் அனுபவிக்கலாம். வள்ளலாரிடம் சரண் அடையுங்கள்.

2.வள்ளலார் எங்களுக்கும் அன்னம் அளித்துப் பசியாற்றினார்.
அடுத்த ஆண்டு நானும், எனது அலுவலக நண்பர் திரு தி த தணிகாசலம் (தற்பொழுது சிங்கபெருமாள் கோவிலில் வசித்து வருகிறார்)திரு கோ பூபதி ஆகிய மூவரும் தைப்பூச தரிசனம் காண வடலூர் சென்றோம்.காலையில் ஜோதி தரிசனம் முடிந்தது. பகல் உணவிற்காக என்ன செய்யலாம் என்று பார்த்தோம்.அப்போதெல்லாம் ஒரு சில சத்திரங்களே உணவு அளித்தன. மக்கள் கூட்டமோ அலை மோதியது. ஒவ்வொருவரும் முட்டி மோதிக்கொண்டு உள்ளே செல்ல முயன்றனர்.அங்கிருந்த பணியாட்களோ தடி கொண்டு அவர்களைத் தாக்கிக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். நாங்கள் பார்த்தோம். இப்படி அடி வாங்கிக்கொண்டா சாப்பிடவேண்டும். ஏதாவது ஒரு ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிடலாம் என்று தீர்மானித்தோம்.ஞான சபை அருகே வந்தபோது வடலூரில் வள்ளலார் எல்லோருக்கும் உணவளித்தார்.நமக்கு ஏன் அளிக்காமல் ஓட்டலுக்கு அனுப்புகிறார் என்றேன்.உடனே அங்கே ஒரு குடிசை இருந்தது.வாசலில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.ஐயா மெட்ராஸ்காரங்களே சாப்பிட இங்கே வாருங்கள் என்றார். எங்களுக்கு மகிழ்ச்சி தாளமுடியவில்லை. உள்ளே போனோம் .அருமையான சாப்பாடு. சாம்பார் சாதம் அவ்வளவு ருசி
தயிர் சாதம் சாப்பிட்ட பிறகும் சாம்பார் ருசி என்னை விடவில்லை.சாப்பாடு போட்டவர் நான் கேளாமலேயே சாதம் போட்டு சாம்பார் ஊற்றினார் .நான் கேளாமலேயே என் மனதை அவர் அறிந்தாரோ. ?சந்தோஷமாக எழுந்து வெளியே வந்தோம். அன்று இரவு சாப்பாட்டிற்கு என்ன கவலை. அந்தக் குடிசைக்குப் போனோம். அங்கே எந்தக் குடிசையும் இல்லை. அங்கிருந்தவர்களிடம் அந்தக் குடிசை என்ன ஆயிற்று என்று கேட்டோம்.தைப்பூசம். எவ்வளவு ஜனக்கூட்டம்.ஞானசபை அருகே எவன் குடிசை போடுவான் என்று கேட்டார்கள். நாங்கள் சாப்பிட்டவர்கள் ஆயிற்றே. சிங்கபெருமாள் கோவிலில் வசித்துவரும் திரு தி த தணிகாசலம் அவர்கள் சாட்சியாய் இன்றும் இருக்கின்றார்கள்அவருடைய மொபைல் நம்பர் இதோ. 9884354471. ஒவ்வொரு பூசத்திற்கும் இன்றும் வடலூர் வருகிறார்.அவர் சாட்சி.வள்ளலாரை நாங்கள் அனுபவித்தோம். இன்றும் அனுபவிக்கின்றோம்.வள்ளலார் இன்றும் இருக்கின்றார் தன்னுடைய உடம்போடு.

3.எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே இரங்கி ஈந்தருளும் பதம் 1 9 7 0

தற்போது நான் குடி இருக்கும் வீடு 1969ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆயிரம் மனைகள் கொண்ட அந்தக் காலி இடத்தில் வெகு தூரத்தில் ஒருவர் மட்டுமே வீடு கட்டி இருந்தார். என் வீடு தனியாக இருந்தது. மின்சார வசதியும் அப்போது இல்லை. ஒரே இருள்.வேறு யாரும் அருகில் இல்லை.என் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.ஒரு நாள் நான் வேலூர் சென்று இரவு ஒரு மணிக்குப் பூந்தமல்லியில் வந்து இறங்கினேன்.அங்கிருந்து என் வீடு பத்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பேருந்து வசதிகள் அப்போது இல்லை. நான் நடந்துதான் போகவேண்டும். மிகவும் பயமாகவும் இருந்தது. எனக்குத் துணையாக வாக்கூடாதா என்று நம் பெருமானாரை வேண்டினேன். சற்று நேரத்தில் இரண்டு பேர் என்னருகே வந்தார்கள். வா போகலாம் என்று அவர்களாகவே என்னை அழைத்தார்கள். நீங்கள் எங்கே போகவேண்டும் என்று கேட்டேன். பிராட்வே என்று சொன்னார்கள். அதற்கு அமிஞ்சிகரை வழியாகத்தானே போகவேண்டும் என்றேன். பரவாயில்லை .நாங்கள் போரூர் வழியாகவே செல்லுகிறோம் என்றார்கள். அந்த இருவரில் ஒருவர் உனக்குத் தெரியாத ஒன்றை நான் சொல்லவா என்று கேட்டார்.எனக்கு எது தெரியாது என்று அவருக்கு எப்படித் தெரியும் என்று எண்ணினேன்.சொல்லுங்கள் என்றேன். யாராவது பால் கொடுத்தால் அதைக் கையில் வாங்கிக் குடிக்கக்கூடாது. தரையில் வைத்துவிடுங்கள் என்றுதான் சொல்லவேண்டும். நாம் தரையிலிருந்து எடுத்துக் குடிக்கலாம் என்றார். ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்று கேட்டேன்.எப்போதாவது நமக்குப் பால் கொடுத்தவர்கட்குத் தீங்கு செய்ய நேர்ந்தால் அதுவரை அவர்கள் செய்த அத்தனை பாவங்களும் நம்மை வந்து சேரும் என்றார். நாங்கள் பேசியது இவ்வளவுதான். அதற்குள் என் வீடு வந்துவிட்டது. எனக்கு ஒரே ஆச்சார்யம். கொஞ்சம் இருங்கள் என்று சொல்லிவிட்டு என் மனைவியை அழைத்து அவர்கள் இருவருக்கும் பால் கொடு என்றேன். அவளும் கொண்டு வந்து கொடுத்தாள். அவர்கள் சாப்பிட்ட காலி டம்ளரை உள்ளே வைத்துவிட்டு வெளியே வந்தேன். அவர்கள் இருவரையும் காணவில்லை. பௌர்ணமி இரவு. நல்ல வெளிச்சம். அவர்கள் காணவில்லை. எனக்குத் துணையாக நான் கேட்டவுடன் வந்தது யார்? வள்ளலாரைத் தவிர வேறு யாருக்கு கருணை இருக்கின்றது?உனக்குத் தெரியாததை நான் சொல்கிறேன் என்று சொன்னபோதே நான் அவரைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.எனக்குத் தெரியாதது என்று அவர் எப்படிச் சொன்னார்.?

4.. கனவில் தியானப் பயிற்சி 1972

முதன் முதலில் திரு கன்னியப்ப செட்டியார் என்ற வள்ளலாரின் பக்தர்தான் எனக்குத் தியானம் செய்யும் முறையைச் சொல்லிக் கொடுத்தார்.பிறகு பலருடன் பழகும் வாய்ப்புப் பெற்றபோது திருச்சி ராமசாமி தேசிகர் கண் பயிற்சிதான் செய்யவேண்டும் என்றார். சென்னையில் ஞானாசிரியர் என்று பலராலும் பாராட்டப்பட்ட ராமச்சந்திரனார் வாசி யோகப் பயிற்சிதான் அவசியம் என்றார். இன்னும் சிலர் இன்னும் வேறு வேறு வகைகளைச் சொன்னார்கள். எனக்கு ஒரே குழப்பமாகிவிட்டது. என் குழப்பத்தைத் தீர்த்து வையுங்கள் என்று வள்ளலாரை வேண்டினேன். ஒரு நாள் இரவு நான் கண்ட கனவு .
நானும் என் மனைவியும் கோயிலுக்குச் சென்றிருக்கிறோம். நடராஜர் சந்நிதி முன் நாங்கள் நிற்கிறோம். என்காலில் பாதரட்சையைக் காண்கிறேன். ஐயோ இதைக் கழற்றாமல் கோவிலுக்குள் வந்துவிட்டோமே என்று வருந்தி அதைக் கழற்றி என் மனைவிடம் கொடுத்து இதை வெளியே போட்டுவிட்டு வா என்று அனுப்பினேன்.பின் நடராஜர் சிலையைப் பார்த்துக்கொண்டே நிற்கிறேன். அது என்னைப்பார்த்துச் சிரிக்கிறது. நாம் கனவு கண்டுகொண்டிருக்கிறோம் என்று நான் உணர்கிறேன். ஏன் எனில் கனவில்தான் இப்படி எல்லாம் சிலைகள் சிரிக்கக்கூடும்.அந்த உருவம் என்னை நோக்கி வருகிறது. என் எதிரே நின்று நான் எப்படித் தியானம் செய்யவேண்டும் என்று செய்து காட்டுகிறது. இது கனவுதானே விழித்துக்கொண்டால் இந்தக் கனவு மறந்துவிடுமோ என்று அஞ்சுகிறேன். மறக்காது என்றது அந்தச் சிலை. . நான் வெளியே வருகிறேன்.அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் என்ற பாடல் வெளியே கேட்கிறது. கனவில் எனக்குச் சொல்லிக்கொடுத்தது பின்னர் திரு அருட்பாவில் உறுதி ஆயிற்று. எந்தத் தகுதியும் இல்லாத எனக்கு இப்படிப்பட்ட அனுபவம் தந்த பெருமானாருக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன். இது நடந்த நாள் 21-8-1972
.5. september 1976
எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது.நாம் ஏன் ஒவ்வொருவர் வீட்டிலும் வள்ளலார் விழா கொண்டாடக்கூடாது என்று.இந்த என் எண்ணத்தை எனது நண்பர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.அரசாங்க விடுமுறை நாட்களை வள்ளலார் விழா நாட்களாக மாற்றலாம் என்று முடிவு செய்தோம். அந்த முடிவு இதுதான்.
மகாத்மா காந்தி பிறந்த நாள் அக்டோபர் இரண்டாம் நாள் முபா வீடு.
கிறிஸ்துமஸ் டிசம்பர் இருபத்து ஐந்து சிவ தட்சிணாமூர்த்தி வீடு.
தூய வெள்ளி மார்ச் அல்லது ஏப்ரல் ஏகாம்பரம் வீடு.
மே மே முதல் நாள் சம்பத் வீடு.
இந்த ஏற்பாட்டின்படி இன்றுவரை விழாக்கள் நடந்து வருகின்றன.
2-10-1976 அன்று ஆழ்வார் திருநகர் எங்கள் வீட்டில் முதல் விழா நடத்துவது என்று தீர்மானித்தேன்.இந்தத் தீர்மானம் எடுத்த நாள் செப்டெம்பர் 2 0 .நான் அந்த சமயத்தில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்தேன். சுமார் இருபது பேருக்குக் கடிதம் எழுதிப்போட்டேன் மருத்துவத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பதவி உயர்வு கிடைப்பதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிய வந்தது. கருவூலக் கணக்குத் துறையில் இளநிலைக் கணக்கு அலுவலர் பதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தேன்.செப்டெம்பர் 2 6 ம் நாள் நான் தேர்வு செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது.2 8 ம் நாள் புதிய அலுவலகத்தில் சேரும்படி உத்தரவு வந்தது.2 9 ம் நாள் நான் மருத்துவத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டேன்.3 0 ம் நாள் நான் புதிய அலுவலகத்தில் பணியில் சேரப்போனேன்.ஐயா இன்று அஷ்டமி அதனால் இன்று சேரவேண்டாம் நாளைக்கும் நவமி அதனால் 2 ம் தேதி வந்து சேருங்கள் என்றனர். இன்று பதவியில் சேர்ந்தால் அடுத்த ஊதிய உயர்வு ஜூலை மாதத்திலேயே வரும். ஒருநாள் தள்ளி சேர்ந்தாலும் ஊதிய உயர்வு அக்டோபருக்குத் தள்ளிப் போகும். எனக்கு அஷ்டமி நவமி என்றெல்லாம் நம்பிக்கை கிடையாது. என் வள்ளலார் என்னைக் காப்பாற்றுவார் என்று சொல்லி நவம்பர் முப்பதாம் தேதியன்றே புதிய பதவியில் சேர்ந்தேன். எல்லோரும் மலைத்துப் போனார்கள். இந்தச் செய்தியில் அப்படி என்ன அதிசயம் என்று வினவலாம். செப்டம்பர் மாதம் இருபத்து ஆறாம் தேதி ஐயா விழாவை அக்டோபர் இரண்டாம் நாள் நடத்தலாம் என்று முடிவு எடுத்தேன். அப்போது நான் கண்காணிப்பாளர்தான். அக்டோபர் இரண்டாம் நாள் நான் ஐயா விழா நடத்தும் முன்பே எனக்குப் பதவி உயர்வு கொடுத்து விழாவன்று கணக்கு அலுவலராக விழா நடத்தும்படி செய்தாரே வள்ளலார்.எனக்கு நன்மை செய்வதில் அவர் முந்திக்கொண்டார்.நான் வள்ளலார் மீது கொண்டிருக்கும் பக்திக்குக் காரணம் புரியுமே

4 Comments
venkatachalapathi baskar
"தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
சன்மார்க்க சங்கத் தவர்களே வென்றனர் அற்புதம்"....

"பெருங்கருணை அப்பனே அம்மையே
நண்பனே துணைவனேஎன்
ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே
ஒருவனே அருவனேஉள்
ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலே
ஓங்குநட ராஜபதியே".
Thursday, December 26, 2019 at 15:20 pm by venkatachalapathi baskar
manohar kuppusamy
Iyya you have mentioned many history why you left the August 15th day
Please explain
Friday, December 27, 2019 at 03:17 am by manohar kuppusamy
manohar kuppusamy
What about the athma or anma and our present body age etc
Friday, December 27, 2019 at 08:14 am by manohar kuppusamy
Muthukumaaraswamy Balasubramanian
how can i leave Auguest 15?Every year it will come.I am 84.that is the reason pl.
.
Sunday, June 7, 2020 at 12:39 pm by Muthukumaaraswamy Balasubramanian