SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
இன்றும் என்னுடன் வள்ளலார் 5

1 2..வள்ளலாரைக் கூப்பிடுங்கள். அவர் வருவார்.இதோ சான்று.

1980ம் ஆண்டு. ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் சென்னையிலிருந்து தைப்பூச ஜோதி காண வடலூருக்குப் பாத யாத்திரையாகச் செல்வதுண்டு. 1977,1978,1979 ஆகிய மூன்று ஆண்டுகள் M.G.R. நகர் திரு துரைராஜ் என்பவர் முன்னின்று நடத்திவந்தார். நான் மூன்று ஆண்டுகள் நடத்திவிட்டேன். இனி பாத யாத்திரை கிடையாது என்று சொல்லி விட்டார். வள்ளலார் விஷயமாக யாராவது நடத்தினால் நான் விட்டுக் கொடுத்து விடுவேன்.யாரும் செய்யாமல் விட்டு விட்டால் நான் அதை எடுத்துச் செய்வேன். அந்த முறையில் 1980ம் ஆண்டு பாதயாத்திரை ப் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். வடலூர் செல்லும் வழியில் ஓங்கூர் என்ற கிராமத்தில் தங்கி இருந்தோம். மறுநாள் காலை அங்கிருந்து புறப்படவேண்டும். காலையில் அந்த வீட்டு அம்மாள் காலை உணவு அளித்தார்கள். என்னுடன் வந்த அன்பர்களில் ஒருவர் நாம் ரயிலில் போகலாம், பேருந்தில் போகலாம். ஆனால் நடந்து போகிறோமே.நம்மீது இரக்கப்பட்டு அந்த வள்ளலார் நேரில் நம்மிடம் வரக்கூடாதா என்று கேட்டார்.எனக்கும் அவர் கேட்டது சரி என்று பட்டது. இறுக்கம் ரத்ன முதலியார் தினம் ஒருவேளை மட்டுமே உணவு கொண்டார் என்பதை அறிந்த நம் பெருமானார் அவர் விருப்பப்படி அருட்பா அச்சடிக்க அனுமதி அளித்தார் அல்லவா. அதுபோல் யார் யார் வள்ளலாரைப் பார்க்க ஆசைப்படுகிறீர்களோ அவர்கள் இன்று காலை உணவு கொள்ளவேண்டாம் என்றேன். சிலர் சரி என்று ஒப்புக் கொண்டார்கள்.வள்ளலாரை நாம் பார்த்ததில்லை. அவர் வந்தால் எப்படி நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அனேகம்பேர் வள்ளலார்போல முக்காடு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். முக்காடு போட்டதாலேயே வள்ளலார் என்று ஏற்றுக்கொள்ளமுடியாது அல்லவா. வள்ளலாருக்கு ஒரு நிபந்தனை விதித்தோம். அதாவது வள்ளலார் ஒரு துறவிக் கோலத்தில் வரவேண்டும். அதுவும் நாங்கள் அதுவரை பார்த்திராத துறவியாய் இருக்கவேண்டும். அவர் திடீரென்று வரவேண்டும்.நமக்கு அவரைத் தெரியாது.ஆனால் அவருக்கு நம்மைத் தெரியும் . அதனால் அவரே வலிய என்னிடம் வந்து பேசவேண்டும். இந்த நிபந்தனைகளைத் தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அவரை வேண்டினோம்.எங்கள் பாத யாத்திரை தொடர்ந்தது. பகல் சாரம் அருகே சென்றோம். மணி நான்கு ஆகிவிட்டது. இன்னும் ஐயா வரவில்லையே என்று ஆதங்கப்பட்டார்கள்.பாத யாத்திரை ரதத்தை எடுத்துக்கொண்டு மற்றவர்கள் புறப்பட்டு விட்டார்கள். நாங்கள் ஒரு சிலர் தயங்கி நின்றோம். ரதமோ சிறிது தூரம் சென்றுவிட்டது. அதனுடன் சென்றுகொண்டிருந்த முனுசாமி என்பவர் எங்களை நோக்கி ஓடிவந்தார். எங்களைப் பார்த்து அண்ணா ஐயா வந்து விட்டார் என்று கத்தினார்.காவி உடை அணிந்த ஒரு துறவி, நல்ல உயரம், அழகிய தோற்றம் ,வசீகரமான முகம். கையில் ஒரு துணிப்பையுடன் நடந்து கொண்டிருந்தார். நாங்கள் விதித்த மூன்று நிபந்தனைகள் நிறைவேறிவிட்டன. அவர் என்னிடம் தானாக வந்து பேசவேண்டிய ஒரே ஒரு நிபந்தனை மட்டும் மீதம் இருந்தது. நடந்து கொண்டிருந்த அந்தத் துறவி நின்றார். எங்களை நோக்கி வர ஆரம்பித்தார். நீங்கள் யாரும் என்னைக் கண்டு கொள்ளாதீர்கள் என்று என்னுடன் வந்தவர்களிடம் சொன்னேன். . அவரும் நேராக என்னிடம் வந்து வள்ளலாரைப் பற்றி நாலு வார்த்தை சொல்லேன் என்றார். நான் என்ன செய்திருக்கவேண்டும்?அவர் காலில் விழுந்து வணங்கி இருக்கவேண்டும். ஆனால் என்னுடைய துற்புத்தி அவர் வள்ளலாராய் இருந்தால் அவர் தேகத்தின் நிழல் கீழே விழாதே. அவர் நிழல் கீழே விழுகிறதா என்று பார்த்தேன்.அந்த நேரத்தில் சூரிய ஒளி ஒரு சிறிதும் இல்லாததால் எந்த நிழலும் இல்லை. நான் வள்ளலாரைப் பற்றிச் சொல்லுவேன் என்று உங்களிடம் யார் சொன்னது என்று கேட்டேன். ஆந்திரா சாமி சொன்னார் என்றார். நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன். மைசூர் சாந்தி ஆசிரமத்திலிருந்து வருகிறேன் என்றார். என்னுடை ய பலப்பலக் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே வந்தார். நாங்கள் வள்ளலாரைப் பார்க்க ஆவல் கொண்டிருந்தோம் நீங்கள் வந்தீர்கள் என்று சொன்னேன்.ஏன் என்னையே வள்ளலாராக நினையுங்களேன் என்றார்.நாங்கள் அப்படி எல்லாம் நினைக்க முடியாது. நான்தான் வள்ளலார் என்று அவர் நிரூபிக்கவேண்டும் என்றேன்.அப்படி நிரூபிக்கவேண்டிய அவசியம் அவருக்கு என்ன என்று கேட்டார். அவருடைய உண்மையான குழந்தைகளின் ஆசையை அப்பா பூர்த்தி செய்யவேண்டாமா என்று கேட்டேன். உனக்கு இன்னும் சில கடமைகள் இருக்கின்றன. அவை முடியும்போது வள்ளலார் வந்து நிரூபிப்பார் என்றார்.
நாங்கள் யாரோ. இன்று ஒருவர் துறவியாக,அதுவும் நாங்கள் இதுவரை கண்டிராத ஒருவராய் ,திடீரென்று வரவேண்டும் வந்து அவராக என்னிடம் பேசவேண்டும் என்று நிபந்தனை போட்டால் அதன்படி அன்று ஒருவர் வருகிறார் என்பதை எண்ணிப் பார்த்தால்தான் வந்தவர் வள்ளலார்தான் என்பது புரியும். எங்கள் நிபந்தனையின்படி ஒருவர் ஏன் வரவேண்டும்?. சற்று எண்ணிப்பாருங்கள். வந்தவர் வள்ளலார்தான். நம்முடைய எண்ணங்களை அவர் அறிகிறார். நல்ல எண்ணங்களை அவர் நிறைவேற்றியும் வைக்கிறார்.எங்கள் கோரிக்கையை ஏற்று அவர் வந்ததை இன்றும் எண்ணி எண்ணிப் பூரிக்கிறோம்.
.

1 1. ஆபத்தை நீக்கி வளர்த்தே

.ஒருமுறை மாத பூசத்தின் போது வன்னியர் போராட்டம் சாலை மறியல் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் ஐந்து ஆண்களும் இரண்டு பெண்களும் ஆக ஏழு பேர் பூசத்தை முன்னிட்டு வடலூர் கிளம்பினோம்.வாணியம்பாளயம் சென்றபோது பேருந்தின்மீது கல் எறிந்தார்கள்.பேருந்துவின் முன் கண்ணாடி உடைந்து போகவே பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது. அருகிலிருந்த ரயில் நிலையம் சென்றோம். ஒரு ரயில் இப்போது வரும் ஆனால் அது இங்கே நிற்காது என்று சொல்லிவிட்டார்கள். வடலூர் போகவேண்டுமே என்று வள்ளலாரை வேண்டினோம். வந்த ரயில் எதிர்பாராதவிதமாக நின்றது . நாங்களும் ஏறிக்கொண்டோம். பண்ருட்டியில் இறங்கிவிட்டோம். அங்கிருந்து வடலூர் செல்ல வண்டி ஏதும் இல்லை. சைக்கிள் வண்டியில் போகலாம் என்று வாடகை சைக்கிள் கேட்டோம். ஒரு கடையில் தர மறுத்துவிட்டார்கள். மற்றொரு கடையில் நாங்கள் தவறாமல் வடலூர் போகிறோம் என்று சொன்னதும் நீங்களே போகிறீர்கள் வண்டி போனால் என்ன எடுத்துச் செல்லுங்கள் என்று சைக்கிள் தந்தார்கள். நாங்களும் சைக்கிளில் வடலூர் கிளம்பினோம். சிறிது தூரம் வந்ததும் இரண்டு பேர் இரண்டு சைக்கிளில் வந்தார்கள். எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம்.எங்களில் ஒருவர் முன்னே செல்லுகிறோம்.மற்றவர் உங்கள் பின்னே வருவார்.அஞ்சவேண்டாம் என்றார்கள். அதேபோல் ஒருவர் எங்களுக்கு முன்னே சென்றார். வழியில் குறுக்கே கட்டியிருந்த தொலைபேசிக் கம்பிகளைத் தூக்கிவிட்டு நாங்கள் அதைக் கடந்ததும் கம்பியை விட்டுவிட்டு எங்களுக்கு முன்னே வந்துவிடுவார். அப்படியே போய்க் கொண்டிருந்தோம். கொஞ்ச நேர த்தில் முந்திரிக் காட்டுக்குள்ளே இருந்து சுமார் பத்து பேர் கைகளில் கம்பும்,கத்தியும் கொண்டு இதோ வருகிறார்கள் பார் விடாதே என்று கத்திக் கொண்டே எங்களை நோக்கி வந்தார்கள். நாங்கள் நடுங்கிப்போனோம்.ஆனால் முன்னே சென்றவர் அவர்களை நோக்கி இவர்கள் நம்மவர்கள் தாம் என்றார்.உடனே அவர்கள் பின் சென்றுவிட்டனர். அதேபோல் மீண்டும் காடாம்புலியூர் அருகே சுமார் பத்து பேர் கழிகளு டன் வந்தார்கள். முன்னே சென்றவர் நம்ம ஆட்கள் தான் என்றவுடன் அவர்களும் எங்களைத் தாக்காமல் தோப்புக்குள்ளே சென்றுவிட்டார்கள். நெய்வேலி வளைவு வந்தவுடன் எங்களுக்குக் காவலாக வந்த இருவரும் இனி பயமில்லாமல் நீங்கள் செல்லலாம் என்று கூறி நெய்வேலி வழியாக சென்றுவிட்டார்கள். வழியில் உள்ள மரங்கள் எல்லாம் எரிக்கப்பட்டதால் ஜோதி தரிசனம் காண வடலூர் மக்கள் கூட வரவில்லை. அன்று ஜோதி பார்த்தது நாங்கள் ஏழு பேர் மட்டும்தான். இரண்டு பேர் சைக்கிளில் எங்களுக்குக் காவலாக யார் வரச்சொன்னது. ஏன் வரவேண்டும். வந்தவர் எங்களை நம்ம ஆட்கள் என்றாரே ஏன்?
எங்களுக்கு எந்த ஆபத்தும் வராத வகையில் காத்தது வள்ளலார் தவிர வேறு யார்?
வள்ளலாரை வணங்காமல் நான் வேறு யாரை வணங்குவது 

3 Comments
venkatachalapathi baskar
அற்புதம் அற்புதம் அதி அற்புதமே...!
Wednesday, December 25, 2019 at 14:12 pm by venkatachalapathi baskar
venkatachalapathi baskar
அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியர்
இன்பம் அளித்திடுவார்
கடியாக் கருணைப் பெருங்கடலார்....
Wednesday, December 25, 2019 at 14:16 pm by venkatachalapathi baskar
manohar kuppusamy
The true knowledge and god diven power or energy can be differ from person to person
Friday, December 27, 2019 at 07:57 am by manohar kuppusamy