SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
வள்ளலாரை வணங்குவது சரியா?

வள்ளலார் படத்தை வைத்தோ அல்லது அவருடைய சிலையை வைத்தோ மற்ற சமயத் தெய்வங்களை வணங்குவது போல் மாலை சாற்றி, பிரசாதம் வைத்து ,கற்பூரம் ஏற்றி வணங்குவது சரியல்ல. தீபத்தை வைத்தே அருட்பெருஞ்சோதி ஆண்டவரைத்தான் வணங்கவேண்டும் என்று ஆணித்தரமாக சிலர் பேசுகின்றார்கள். வள்ளலாரே தன்னை வணங்கவேண்டாம் என்று சொன்னதற்குப் பின் அவரை வணங்குவது தவறு என்றும் கூறுகின்றார்கள். இதுபற்றி ஒரு ஆய்வு .தயவு செய்து பொறுமையாகப் படித்துப் பார்க்கவேண்டும் என வேண்டப்படுகிறது.

வள்ளலாரைப் பற்றிய உண்மையை நாம் முதலில் அறிந்துகொள்வோமாக
வள்ளலார் நாம் பிறந்ததுபோல் ஒரு தாய் தந்தையர்க்கு ஐந்தாவது மகனாகத்தான் பிறந்தார்; இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அவர் வாழ்ந்த வாழ்கை நாம் வாழ்கின்ற வாழ்க்கையா? அவர் எந்த ஆசிரியரித்தும் கல்வி பயிலாமல் தானே அனைத்தையும் அறிந்தவராக விளங்கினார்; தொல்காப்பியம் ,பாணிநீயம் போன்ற இலக்கண நூல்களையும் சிறு வயதிலேயே மனப்பாடமாகச் சொல்லக்கூடிய நாவளத்தை வள்ளலார் பெற்றிருந்தார் என்று அவரது மாணாக்கராகிய தொழுவூர் வேலாயுத முதலியார் கூறியுள்ளார்.
2 சிறு வயதிலேயே அவரிடம் தரப்பட்ட பணத்தைக் கேணியிலும், குளத்திலும், கூரை மேலும் எறிந்தவர். பொருள் மீது ஆசை அற்றவராக அவர் இருந்தார்.
3 உடையின்மீதோ ,உணவின்மீதோ எதனிலும் பற்றற்றவராக அவர் விளங்கினார்.
4 தனது ஒன்பதாவது வயதிலேயே இறைவன்மீது பாக்கள் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார்.
5 .பன்னிரண்டாவது வயதிலேயே தவம் செய்யத் தொடங்கினார்.
6 தனக்கென ஒரு மனைவி இருந்தும் காமத்தை வென்றவராக விளங்கினார்;
7 வடலூரிலே நூறு ஏக்கரா நிலம் அவருக்குத் தானமாக வழங்கப்பட்டது. அதைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் மேட்டுக்குப்பம் போய்விட்டார் .மண்ணாசை என்பதும் அவரிடம் சிறிதும் இல்லை.
8 அவர் எழுதிய பாடல்களை அச்சிட அவரது சீடர்கள் முயன்றபோது பத்து ஆண்டுகளுக்கு மேல் அனுமதி தரவில்லை. இறுக்கம் இரத்தின முதலியாரின் உண்ணா விரதத்தின் உறுதியைக்கண்டு அனுமதி அளித்தார். ஆனாலும் இராமலிங்கசாமி என்று போடலாமா என்று கேட்டதற்கு அது ஆரவாரத்திற்கு அடுத்தது என்று மறுத்துவிட்டார். புகழ் ஆசையும் அவரிடம் இல்லை.
9 எல்லையற்ற அவருடைய ஜீவகாருண்யம் ஏழைகளின் பசியைப்போக்கி வருகிறது. அவர் செய்த தவத்தின் முழுப் பலனைத் தருமச் சாலையிலே தான் பெற்றதாக அறிவித்துள்ளார்.
10 இதுவரை வந்த அருளாளர்கள் அத்துணை பேரும் ஆண்டவனைத் தேடி ஊர் ஊராக அலைந்தார்கள். ஆனால் இறைவனோ வள்ளலார் இருந்த அந்தக் குடிசையினுள் நுழைந்து அவரோடு இரண்டறக் கலந்துவிட்டான். .இறைவன் வேறு தான் வேறு என்ற நிலை மாறி அவரே இறைவனாக இருக்கின்றார்.
11 வள்ளலார் ஒருவரே முத்தேக சித்தி பெற்றுஇறவா நிலை அடைந்து இன்றும் என்றும் தனது தேகம் அழியாதவகை செய்து கொண்டு இருக்கின்றவர்.
12 மக்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை எல்லாம் வில க்க வேண்டும் என்ற உத்தரவை வள்ளலாருக்கே இறைவன் அளித்திருக்கின்றான். மேலும் நமக்கெல்லாம் துணையாக இருக்கும்படி வள்ளலாரை இறைவன் வைத்திருக்கின்றான்.
13 அடக்கமே உருவானவர் தன்னை வணங்க வேண்டாம் என்று சொன்னதை மட்டும் நாம் எடுத்துக்கொண்டு அவர் காட்டிய தயவு ஒழுக்கம் முதலியவற்றைப் பின் பற்றாமல் அவரை வணங்கினால் எப்படி அவர் அருள் செய்வார்.
14 அருட்பெருஞ்சோதி அகவலில் தந்தை என்ற பகுதியில் இறைவன் தனக்கு என்னென்ன அளித்தான் என்பதை நன்கு விளக்கியுள்ளார்.தனது செங்கோலையே இறைவன் வள்ளலாருக்கு அளித்திருக்கின்றான் .செங்கோல் என்பது என்ன? ஆட்சி செய்யும் உரிமை அல்லவா?
15 அகவலில் வள்ளலார் கூறியுள்ளதைச் சற்று நினைவு கூறுவோம்.
தங்கோல் அளவது தந்து அருட்சோதிச் செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே.
தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில் என் பொருள் ஆக்கிய என் தனித் தந்தையே
தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில் என் வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே.
தன் சித்தனைத்தையும் தன் சமுகத்தினில் என் சித்தாக்கிய என் தனித் தந்தையே
தன் வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும் என் வசம் ஆக்கிய என் தனித் தந்தையே
தன் கையில் பிடித்த தனி அருட்ஜோதியை என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே
தன்னையும் தன்னருள் சக்தியின் வடிவையும் என்னையும் ஒன்றென இயற்றிய என் தனித் தந்தையே.
தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல் என்ன இயற்றிய என் தனித் தந்தையே
தன் உரு என் உரு தன் உரை என் உரை என்ன இயற்றிய என் தனித் தந்தையே.(அகவல் வரிகள் 1133 முதல் 1150 வரை)
இந்த வரிகளில் வள்ளலார் கூறியுள்ளது உண்மை என்றால் வள்ளலார் இறைவன் என்று நிச்சயமாக உணரலாம்.
வள்ளலாரை வணங்குவது சரி என திரு அருட்பாவில் பலப்பலப் பாடல்கள் சான்றாக உள்ளன. அவற்றுள் ஒன்று இரண்டைப் பார்ப்போமாக.

இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே
முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்திச்
ஜகத்துள்ளவர்கள் மிகத் துதிப்பத் தக்கோன் என எனை வைத்து என்னுடைய அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உன்றன் அடைக்கலமே.

இந்த உலகத்தில் உள்ள மக்களால் துதிக்கத் தக்கவனாகவே என்னை இறைவன் வைத்துள்ளான் என்றாரே வள்ளலார் இதைப் படிக்கவில்லையா?

இந்த உலகத்து மக்கள் மட்டுமல்ல வான் செய்த தேவர் எலாம் வந்து ஏவல் செய்யுமாறு வள்ளலாரிடம் இறைவன் வந்து கலந்தானாம்.

நான் செய்த நற்றவம்தான் யாதோ நவிற்றரிது
வான் செய்த தேவரெலாம் வந்தேவல்-தான் செய்து
தம்பலம் என்றே மதிக்கத் தான் வந்தென்னுட் கலந்தான்
அம்பலவன் தன்னருளினால்.

சமயத் தெய்வங்கள் எல்லாம் கற்பனையே என்று வள்ளலார் கூறிய பிறகு அவற்றை வணங்க வேண்டிய அவசியம் இல்லை. அதனையும் வள்ளலாரே கூறி விட்டார்..அருட்பெருஞ்சோதி ஆண்டவரை எப்படி வணங்குவது?அகவலில் அருட்பெருஞ்சோதி என்பது இந்திரியங்களும் கரணங்களும் கடந்து அறியக்கூடிய ஓர் அனுபவமே என்றால் அனுபவத்தை எப்படி வணங்கமுடியும்?
மேலும் உருவாய் அருவாய் உருஅருவாய் இவை ஒன்றும் அல்லீர் வாரீர் என்று கீர்த்தனையில் பாடியுள்ளார்.இந்த உலகில் உள்ள எல்லாச் சமயத் தெய்வங்களையும் உணர முயற்சி செய்தால் சமயம் சார்ந்த தெய்வங்கள் இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றில் அடங்கவே செய்யும். அடங்காதது அனுபவம் ஒன்றே .
தெய்வ மணி மாலையில் பதி பூஜை முதலிய நற்கிரியையால் மனம் எனும் பசு கரணம் அசுத்த பாவனை நீங்கிச் சுத்த பாவனையில் வரும் என்று பாடியுள்ளார். பதி பூஜை முதலியவை நாம் செய்யவேண்டும்.இறைவன் வள்ளலாருடன் கலந்து இருவரும் ஒன்றானதால் வள்ளலார் இறைவனாக விளங்குகிறார்.வள்ளலாரை வணங்கலாம்.
சம்பேடு ஸ்ரீதர நாயக்கருடன் வாதம் செய்தபோது விக்கிரகம் விஷேச தேகம் என்றும் அவற்றை முறையோடு வழிபாடு செய்தால் பிரம்மப் பிரகாசம் வெளிப்பட்டு அனுக்கிரகம் செய்யும் என்றும் முற்காலத்தில் நக்கீரர் அருணகிரிநாதர்,குமர குருபரர் போன்றோர் விக்கிரக வழிபாடு செய்து தீராத நோய்களை எல்லாம் .தீர்த்து வைத்திருக்கின்றார்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.மற்ற எந்த உருவத்தையும் வழிபட முடியாத நிலையில் வள்ளலாரை வழிபடுவது தவிர வேறு வழி இல்லை. வள்ளலாரை வணங்கலாம்