SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa
சன்மார்கத்தில் என்னதான் நடக்கிறது


சன்மார்கத்தில் என்னதான் நடக்கிறது

சன்மார்க்கம் பேசுகின்ற பெரியவர்கள் சன்மார்கத்தில் உள்ளவர்கள் திருநீறு பூசினாலோ ,வள்ளலார் உருவமோ படமோ வைத்து வணங்கினாலோ அவர்களைச் சாடுவதே நோக்கமாக இருக்கின்றார்கள். சமீபத்தில் வெளியாகின்ற அறிக்கைகள் அவ்வாறே உள்ளன. ஞான சபையிலே முதன் முதலாகப் பூஜை செய்த அன்பர் திரு ரத்னம் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதிலே ஞான சபையிலே என்றைக்கும் திரையை நீக்கி ஜோதி காட்டியதே இல்லை என்றும் மக்கள் தரிசித்தது திரைக்கு வெளியே செய்த கற்பூர தரிசனம் மட்டுமே என்றும் பூஜை முடிந்தவுடன் அங்கே வந்திருந்த மக்களுக்குத் திருநீறு தரப்பட்டது என்றும் கூறியுள்ளார்கள். வள்ளலார் தோன்றும் துணையாக அப்போது இருந்தார். ஞான சபையில் பூஜை முடிந்து திருநீறு தரப்பட்டதை அவர் அறியாரா? வள்ளலார் திருநீற்றை சமயச் சின்னமாக உபயோகிக்கவில்லை. பாலு ரெட்டியாரின் குஷ்டம் போக்க திருநீறு அளித்தார். ரெட்டியார் குணமடைந்தார்.திருநீறு அங்கே சமயச் சின்னமல்ல. அருளைச் செலுத்தும் ஒரு கருவி , அவ்வளவே. சைவ சமயத்திற்கு வக்காலத்து வாங்கவில்லை நான். நான் சிவனையோ,கணபதியையோ,முருகனை யோ,அல்லது உமாதேவியையோ வணங்குபவன் அல்ல. நான் வள்ளலாரை மட்டுமே வணங்குபவன். ஏன் எனில் அவர்தான் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று இன்றும் தன் உடம்புடன் நமக்கெல்லாம் துணையாக இருக்கின்றவர்.அருட்பெருஞ்சோதி என்பது ஓர் அனுபவமே. இது அகவல் தரும் விளக்கம். அருட்பெருஞ்சோதியை வள்ளலாருக்கு ஒருவர் அதாவது கடவுள் என்றே வைத்துக்கொள்ளலாம் அளித்திருக்கின்றார். அஞ்சலை நீ ஒரு சிறிதும் என் மகனே என்ற பாடலைப் பாருங்கள். இந்திரியங்களும் கரணங்களும் கடந்து அறியக்கூடிய ஓர் அனுபவத்தை அடைய முயற்சி செய்யாமல் தவம் வேண்டாம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் வள்ளலார் பாடிய பாடியுள்ள பாடல்களை எல்லாம் என்ன செய்வது. அருட்பெருஞ்சோதி நடராஜ பதியே என்றாரே வள்ளலார். அருவுடைய பெரு வெளியாய் அது விளங்கு வெளியாய் அப்பாலுமாய் நிறைந்த அருட்பெருன்ஜோதியனே மருவுடையாள் சிவகாம வல்லி மணவாளா என்ற பாடலில் வரும் அருட்பெருஞ்சோதி யார். ஞானசபைக்கு வருவார் அழைத்து வாடி என்று யாரை அழைத்திருக்கின்றார். ஆறாம் திருமுறை அனுபவமாலையிலே வள்ளலார் காட்டியுள்ள அனுபவங்கள் நாம் அடையவேண்டாமா. தன்னை வணங்கவேண்டாம் என்று வள்ளலார் சொன்னதாக ஓர் அன்பர்தாம் குறித்து வைத்திருக்கின்றார். ஆனால் இகத்தும் பரத்தும் பெரும் என்ற பாடலில் ஜகத்துள்ளவர்கள் மிகத் துதிக்கத் தக்கோன் என எனை வைத்து என்று பாடியுள்ளார்
.இகத்தும் பரத்தும் பெறும் பலன்கள் எல்லாம் பெறுவித்து இம்மையிலே
முகத்தும் உளத்தும் களி துளும்ப மூவா இன்ப நிலை அமர்த்திச்
ஜகத்துள்ளவர்கள் மிகத் துதிப்பத் தக்கோன் என வைத்து என்னுடைய
அகத்தும் புறத்தும் விளங்குகின்றோய் அடியேன் உந்தன் அடைக்கலமே.

அவரைத் துதிப்பது தவறா. மக்கள் துதிக்கத் தக்கவனாக என்னை இறைவன் வைத்துள்ளான் என்று வள்ளலாரே பாடியுள்ளார்.அவரை வணங்கவேண்டாம் என்றால் அவர் வாக்கு பொய்யா. இறைவனாக விளங்கும் வள்ளலாரை வணங்காமல் வேறு யாரை வணங்குவது. விளக்கை வைத்து வணங்கவேண்டும் என்று வள்ளலார் எங்கே கூறியுள்ளார். அல்லது அவர் தருமச்சாளையிலோ அல்லது வேறு எங்காவது விளக்கு பூஜை செய்தாரா
.
தீப முன்னிலையில் கடவுள் விளங்குவதாகப் பாவிக்கத்தான் சொன்னார் என்பதை மறந்து விடக்கூடாது. முன்னிலை என்று சொன்னால் முந்நிலை வேறு தீபம் வேறு. ஒருவர் முன்னிலையில் ஒருவர் பேசுகின்றார் என்றால் முன்னிலை வகிப்பவர் வேறு பேசுபவர் வேறு என்பது குழந்தைக்கும் தெரியும். அனுபவமாலையிலே காலை விளக்கேற்றிட வேண்டுவதோ என்னாதே மங்கலமாய் ஏற்றுதலே என்றார். விளக்கு மங்கலச் சின்னமே தவிர கடவுள் ஆகாதே
என் மீதும் என் எழுத்தின் மீதும் வெறுப்பு கொள்ளாதீர்கள். இஸ்லாம்,கிறித்துவம், போன்ற சமயங்கள் உலக முழுதும் பரவி உள்ளான. சன்மார்க்கம் இப்போதுதான் வளரத் தொடங்கி உள்ளது. நெய்வேலியில் உள்ள ஒருவன் நாங்கள் பாத யாத்திரையாக வடலூர் வந்தபோது இந்த அம்மாள் யார் என்று வள்ளலார் படத்தைக் காட்டிக் கேட்டதை நாங்கள் மறக்கவில்லை. வள்ளலாரை நாம் அறிமுகம் செய்கின்ற நிலையில்தான் உள்ளோம் என்பதை மறந்து விடக்கூடாது. ஆரம்பத்திலேயே வள்ளலார் உருவத்தை மறைத்துவிட்டால் காலப்போக்கில் வள்ளலார் யார் என்றே தெரியாமல் போய்விடும். வள்ளலாரின் உண்மை உருவம் கிடைக்கவில்லை என்று வாதம் பேசலாம்.. சிவனுக்கும்,முருகனுக்கும் உண்மை உருவமா கிடைத்திருக்கின்றது.முக்காடிட்ட உருவத்தைக் காட்டி மக்ககளுக்கு வள்ளலார் இவ்வாறுதான் எளிமையாக இருந்தார் என்று காட்டினால் போதும். மக்கள் மத்தியில் வள்ளலாரை மறைத்துவிடாதீர்கள்.உங்கள் அறிவு விளக்கத்திற்கு நாங்கள் குறைந்தவர்கள்தான். மறுக்கவில்லை எங்களையும் சன்மார்கத்தில் இருக்க விடுங்கள். எங்களை சாடுவதே உங்கள் தொழிலாக இருக்கவேண்டாம். மரணமிலாப் பெரு வாழ்வு பெற வழி காட்டுங்கள்.


பிரசாதம் வேண்டாம் என்கிறீர்கள். வள்ளலாரே பிரசாத சாமான் வாங்க ஏழு ரூபாய் கொடுத்து சந்தைக்கு அனுப்பியதை அன்பரது கடிதத்தைப் பாருங்கள். மேட்டுக்குப்பத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் போனபோது பிரசாத சாமான் வைத்திருந்த பானையையே நான் பார்த்திருக்கின்றேன்.இவை எல்லாம் உண்மை. நாங்கள் எல்லாம் சமயம் சார்ந்து உள்ளவர்கள் என்று எள்ளி நகையாட வேண்டாம். எங்கள் வீட்டில் எந்த சமயத் தெய்வத்தின் படமும் கிடையாது. ஜாதி மதம் சமயம்பொய் என்று வள்ளலார் கூறியுள்ளதை நம்புபவன். என் மகனுக்கு வேறு மதம் சார்ந்த பெண்ணையே திருமணம் செய்துவைத்தவன் நான். இதை என் பெருமைக்கு எழுதவில்லை. இன்னும் எவ்வளவோ உண்டு.வள்ளலாரை மட்டுமே வணங்கி அவர் அருளை அனுபவித்துக் கொண்டு இருப்பவன் நான். என் அனுபவங்களை எழுதினால் நீங்கள் அதிசயித்துபோவீர்கள். ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லது அதன் மீது இச்சை போகாது என்றார். வள்ளலார் . நான் வள்ளலாரை மட்டும் வணங்கி எவ்வளவோ அனுபவங்களை அடைந்தவன்.உலகமே வள்ளலாரை வணங்கக் கூடாது என்றாலும் நான் ஒருவன் மட்டும் வள்ளலாரை வணங்குவேன். இதை விட வேறு வேலை எனக்கு இல்லை. உலகமே வள்ளலாரை ஏற்றுக்கொண்டு வணங்குகின்ற காலம் வரும். பார்ப்பீர்கள். இதை யாருடைய மனதையும் புண் படுத்தும் நோக்கத்தில் நான் எழுதவில்லை. வள்ளலாரை வணங்காமல் மக்கள் ஏமாந்து போகின்றார்களே என்ற இரக்கத்தினால் மட்டுமே இதை எழுதியுள்ளேன். மன்னித்து விடுங்கள். நன்றி.