Vallalar Universal Mission Trust   ramnad......
எல்லா உயிர்களிடத்தும் சீவ காருணியம் வேண்டுமென்று கடவுளால் ஆணைசெய்ததென் றறியவேண்டும்.
சீவகாருணியம் எல்லாச் சீவர்களுக்கும் பொதுவென்று முதலில் குறிக்கப்பட்டது என்ன எனில்:- சீவகாருணிய ஒழுக்கத்தில் முக்கியமாக எல்லா மனிதர்களுக்கும் பொதுவில் பசியினால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்து ஆகாரத்தினால் திருப்தி இன்பத்தை உண்டுபண்ண வேண்டு மென்றும், பசியைப்போல் வேறு வகையினால் சீவகொலை நேரிடுவதானால் அந்தச் சீவகொலையைத் தம்மாற் கூடிய வரையில் எவ்விதத்திலாயினும் தடை செய்து உயிர் பெறுவித்துச் சந்தோஷ’ப்பிக்க வேண்டுமென்றும், பிணி பயம் முதலிய மற்ற ஏதுக்களால் சீவர்களுக்குத் துன்பம் நேரிடில் அத்துன்பங்கள் தங்களால் நீக்கத்தக்கவை களாகில் நீக்கவேண்டுமென்றும், மிருகம் பறவை ஊர்வன தாவரம் முதலியன சீவர்களிடத்துப் பயத்தினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந் துன்பத்தையும் எவ்விதத்தும் நிவர்த்தி செய்ய வேண்டுமென்றும், அவற்றுள் துஷ்ட சீவர்களிடத்தும் சிறிது பயத்தினால் வருந் துன்பம் மாத்திரமே யல்லது கொலையினால் வருந்துன்பங்களைச் செய்யப்படாதென்றும், இவ்வகை முழுதும் சீவ காருணியமேயாதலால் எல்லா உயிர்களிடத்தும் சீவ காருணியம் வேண்டுமென்று கடவுளால் ஆணைசெய்ததென் றறியவேண்டும்.