Vallalar Universal Mission Trust   ramnad......
மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது
மனித தேகத்தில் கடவுள் காரியப்படுவது

இந்த மனிததேகத்தில் புருவ முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றி நெற்றி முதலாகிய இடங்களில் உரோமம் தோன்றா திருப்பதற்கு நியாயம் யாதெனில்: இத்தேகம் பாதாதி பிரமாந்திர பரியந்தம் வாயுவாலாகிய தேகம். மேற்படி வாயுவினுடைய பிருதிவி காரியமே தேக வடிவம். ஆதலால், வாயுவின் வர்ணம் செம்மை, கருமை நிற உரோமம் பிருதிவியின் கூறு. தேகத்தில் பிருதிவி வாயு இரண்டும் முக்கிய காரணமானதால், செம்மையும் கருமையுமாகிய உரோமம் உண்டாயிற்று. இது நிற்க. நரை உண்டாவது தத்துவக் கெடுதியால். இத்தேகத்தில் 27 இடங்களில் வாயுவில் பிருதிவி தங்கும். அவசியம் மேற்படி இடங்களில் ஆண்பாலுக்கு உரோமம் தோன்றும். மேற்படி இடங்கள் எவை எனில்:- கபாலம் 1, புருவம் 2, கண்கீழ் இமை 2, மேலிமை 2, நாசிக்கு உட்புறம் 2, மீசை 1, மோவாய் கன்னம் 2, காதுக்குட்புறம் 1, இருதயம் 1, கைம்மூலம் 2, உந்தியின் மேல் ரேகை 1, அடிவயிறு 1, லிங்கத்தடி 1, புட்டத்தின் கீழ்ப்புறம் 1, தொடை 2, முழந்தாள் 1, பாதத்தின் மேலிடம் ஒன்று, மேற்படி விரலின் மேலிடம் பலவும் 1, முதுகு 2, விலாப்புறம் 2, முழங்கைக்குங் கீழ் 2, கைவிரலின் மேற்புறம் 1 ஆக 27. இவை அல்லாது மற்ற இடங்களில் தோன்றுவது தத்துவக் கெடுதி. தத்துவங்களின் உட்புற மலங்களே வாயுவின் பிருதிவி. ஆதலால், மேற்குறித்த இடங்களில் அக்கினியின் காரிய மில்லாததினால் உரோமம் உண்டாகின்றது. அக்கினி காரியப்பட்ட இடங்களில் தோன்றியும் தோன்றாமல் அருகியிருக்கின்றது.

நெற்றியில் தோன்றா திருப்பது மேற்படி இடத்தில் ஆன்ம விளக்கம் விசேஷ முள்ளது. அதைப் பற்றி மேற்படி இடத்திற்கு விந்துஸ்தானம் என்றும், அறிவிடம் என்றும், லலாடம் என்றும், முச்சுடரிடம் என்றும், முச்சந்திமூலம் என்றும், நெற்றிக்கண் என்றும், மஹாமேரு என்றும் புருவமத்தி என்றும், சித்சபா அங்கம் என்றும் பெயர். ஆதலால், விந்து என்பதே ஆன்மா. விந்துவின் பீடம் அக்கினி. இந்த இரண்டினது காரியமே பிரகாசமாகிய அறிவின் விளக்கம் ஆதலால், உரோமம் அருகி யிருக்கின்றது. பூர்வத்தில் விந்துவும், உத்தரத்தில் நாதமும் இருக்கின்றன. விந்து ஆன்மா, நாதம் பரமான்மா. நாதத்தோடு விந்து சேர்தலால், விந்து சத்தியும், நாதம் சிவமும் ஆகின்றன. விந்துவுக்சூ உத்தர நியாயம் பூர்வ நியாயமாவது எல்லாத் தத்துவங்களுக்கும் புறத்தும் அகத்தும் மற்றும் விளங்கி, தத்துவங்களைத் தன்வசப்படுத்தியும் தொழில்களைச் செய்வித்தும் தனித்து நின்றும் தன்னோடு தத்துவங்களைச் சேர்க்கின்ற படியால், விந்து சத்தனாயும் தத்துவங்கள் சத்தியாயும் இருக்கும். மேலும் ஆன்மாவுக்குச் சகல விளக்கமாகிய சாக்கிர ஸ்தானம் லலாடம், ஆதலால், விசேடம் சிறந்தது லலாடத்தில் மூக்குநுனியாகிய புருவமத்தி. இதற்கு அனுபவ சித்திகள் திரயோதசாந்தம் வரையிலு முண்டு.